காசியபன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பேசாத மரங்கள் ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 11 of 23 in the series 24 ஜூலை 2016

” தத்துவ ஆராய்ச்சிக்காக ரவிவர்மா தங்கப் பதக்கம் பெற்ற காசியபன் 1919 – இல் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இன்ஸுரன்ஸ் கம்பெனியில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தொழிலாளர் சங்கப் பணியில் தீவிரமாக ஈடுபட்டவர். ‘ அசடு ‘ , ‘ கிரகங்கள் ‘ ஆகிய இரு நாவல்களின் ஆசிரியர்.

பயம் , நிச்சயமின்மை , சலிப்பு  ஆகியவை இவரது கவிதைகளில் மேல் தூக்கலாகத் தெரியும் உணர்வுகள். மாணவனாக இருந்த போது மார்க்ஸாக உலகத்தைப் பார்த்தவர் 63 வயதில் முட்டாக்கிட்ட சங்கரனாகப் பார்க்கிறார். எல்லாம் பலன் ஒன்றுதான் என்பது இவர் கருத்து. ” என்கிறது அன்னம் வெளியீட்டகம்.

இவரது கவிதைகளில் தொன்மக் குறிப்புகள் காணப்படுகின்றன. சில கவிதைகளில் தத்துவப் பூச்சு , பூடகத்தன்மையுடன் பதிவகியுள்ளது.

‘ கோணலாகப் பார்க்கும் காக்கைக்கு ‘ என்றொரு கவிதை !

கோணலாகப் பார்க்கும் காக்கைக்கு

ஒன்றும் நேராகத் தெரிய முடியாது

மாணவனாக இருந்த காலத்தில்

மார்க்ஸாக உலகத்தைப் பார்த்தேன்

முதுமை அடைந்த இப்போது

முட்டாக்கிட்ட சங்கரனாகப் பார்க்கிறேன்

ஆனால் தோன்றுகிறது , எல்லாம்

பயன் ஒன்றுதான் என்று

—- நாத்திகத்திலிருந்து ஆத்திகத்திற்குத் திரும்பியுள்ளார். பாரதிதாசன் ஆத்திகராக இருந்து நாத்திகரானவர். மன மாற்றம் இயல்பானதுதான்.

‘ சும்மா நீ சொல்லு ‘ என்றொரு கவிதை . சோம்பி இருக்கலாகாது என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

சும்மா நீ சொல்லு

சொல்லிக் கொண்டே இரு

—- என்று தொடங்குகிறது கவிதை. அடுத்த பத்தி காத்திரமாக அமைந்துள்ளது.

சொல் மூச்சு

மூச்சு உயிர்

சொல்லிலிருந்து

முயற்சி பிறக்கும்

முயற்சி செய்கையாகும்

செய்கை ?

அதைப் பற்றிக்

கவலைப் படாதே

வேணுமானால்

ஆயற் குலத்துதித்த

மாயவனைக் கேள் !

—- இதைத் தொடர்கிறது ஓர் எச்சரிக்கை .

சொல் ஓர் அடையாளம்

அடையாளத்துக்கு

அடிமைப் படாதே

ஏமாந்து போவாய்

—- இயக்கத்தின் பலனை இயக்கமே நமக்கு உணர்த்தும் என்பது உட்கருத்தாக அமைந்துள்ளது.

‘ பேசுகிறோம் நாம் ‘ என்ற கவிதை சமுதாயச் சாடலை முன் வைக்கிறது. மனிதம் விமர்சிக்கப்படுகிறது.

பழைய குடுமியும்

பூணூலும் மலையேற

புதிய குடுமியும்

கயிறும் தண்டும்

ஆட்சி புரிய வந்தன

 

சர்க்கஸ் பஃபூன் வேஷம்

தினசரியாச்சு.

—- என்கிறார் காசியபன் .

‘ ஜன்னல் வழியாகப் பார் ‘ என்ற கவிதை எளிய மெட்டில் அமைந்த , தனிச் சீர் உள்ள மரபுக் கவிதை .

வாழ்க்கை பற்றிய தத்துவப் பார்வை கொண்டது. சிறுவன் , காதல் ஜோடி , இறந்த பெண் ஆகியோரைப்

பற்றிப் பேசுகிறது. சிறுவன் விளையாடுவதை ரசிக்கிறார் காசியபன் .

 

இன்னல் கவலையே தேனும் — பிஞ்சு

முகத்தில் தெரியுதா பாரு

— என்பதில் , மீண்டும் பிள்ளைப் பருவம் அவாவும் ஏக்கம் தெரிகிறது.

என்னென்ன கனவுகள் கண்டு — அந்த

காதலர்கள் போகிறார்கள் பாரு

என்னவரும் நாளையென்று — அவர்

நினையாமல் போவதைப் பாரு

— என்று காதலர்களின் எதிர்காலம் பற்றிக் கவலைப்படுகிறார்.

இறந்த பெண் ஒருத்தியின் இறுதி ஊர்வலம் போகிறது.

என்ன மணம் வீசுகின்றன — அவள்

மேலே கிடக்கும் மலர்கள் !

‘ மடியில் ‘ என்ற கவிதை ஒரு குயிலின் தனிமையைப் பற்றிப் பேசுகிறது.

‘ அனுபவங்கள்  ஞாபகங்கள் ‘ என்ற கவிதையில் தன் காதலைப் பற்றிப் பேசுகிறார் காசியபன்.

காற்றின் அசைவு வேகங்களில் , மேகச் சுருள்களின் நீலத்தில் தன் காதலை உணர்கிறார்.

நான் அன்று காதலித்த

நயனங்கள் மின்னும்

— என்றவர் ,

பாயாய் விரியும்

சோகத்தின் நிழல் நீள

திறந்த வெளியிலே

மௌனத்தின் சலசலப்பு

என்று முடிக்கிறார் கவிதையை. எளிய கவிதை என்பதால் விளக்கம் சொல்ல ஏதுமில்லை.

‘ ஆசிரமம் ‘ என்ற கவிதையில் தன் மகளைப் பற்றிப் பேசுகிறார். ” பூவைப் பற்றிக் கவிதை

எழுதுவாயா ? ” என்கிறாள் கடைசி மகள் . ” உன்னைப் பாடுவேன் . ” என்கிறார் தந்தை.  அந்தப் பெண்

வெளியில் விளையாட ஓடுகிறாள்.

மேசையும் பேனாவும்

காகிதமும் நாற்காலியும்

நானும்

ஆச்சரிய ஆசிரமத்தில்

மூழ்கிப் போனோம்

— என்று கவிதை முடிகிறது.

‘ காற்றடித்த பை ” வாழ்க்கையின் நிலையாமை பற்றிப் பேசுகிறது.

வாழ்க்கை விளையாட்டில்

என் முடிவான தோல்வி கண்டு

நகர தேவதைகள் நகைத்தார்கள்

இப்போது

தைத்தும் கிழிந்தும்

தொங்கி ஊசலாடும்

பழங்கந்தல் உடம்பை

வெறுங்காற்று

உலர்த்துகிறது

— என முதுமை பற்றி விளக்குகிறார் காசியபன்.

1982 – இல் அன்னம் வெளியீடாக வந்துள்ளது இத்தொகுப்பு. உரைநடைப் பாங்கில் சராசரிக் கவிதைகளாகவே இவை அமைந்துள்ளன.  உரைநடை எழுதுபவர்கள் எழுதும் கவிதைகளுக்கு ஏற்படும் விபத்துதான் இக்கவிதைகளிலும் தெரிகிறது.

Series Navigationசூலை – 21. நடிகர் தில்கம் சிவாஜி கணேசன் நினைவு தினம்.ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் கதிர்பாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *