. இரட்ணேஸ்வரன் சுயாந்தன்
“சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்” என்ற முதுமொழியில் வரும் ‘சித்திரம்’ என்ற சொல்லுக்கு மலையாளத்தில் ‘திரைப்படம்’ என்று பொருள் கூறுவார்கள். ஏனென்றால் கேரளாவில் அவர்கள் உருவாக்கும் திரைப்படங்களில் பாதிக்குமேல் சமூக மட்டத்தில் உயரிய சிந்தனை நோக்கினைக் கொண்டதாகவும் சிறப்பான அறிவுத்தூரிகை கொண்டும் செதுக்கி எடுப்பது தான் இதற்கான காரண இடுகுறிப்பெயர் என்றும் கருதலாம். இது நமது உபகண்டத்தின் நிலைமை. ஆனால் தமிழ்ப் பிராந்திய நிலைமை வேறு. செந்தமிழை இந்த ஆய்வுப் பத்திக்கு மட்டும் ‘கவிதை’ என்று எடுத்தாளலாம். ஆகமொத்தத்தில் இவற்றின் ஒன்றிற்கொன்று ஆட்பட்ட தாற்பர்யத் தன்மையினைக் கீழ்வரும் பத்திகளில் இருந்து இனங்காணலாம்.
‘No Country For Old Men’ என்கின்ற 2007 இல் வெளியான மேற்கத்திய புதிய கருந்திரைப்படமும் (Western Neo-Noir) நவீன தமிழ்க் கவிஞர்களான தேவதச்சன் மற்றும் ரமேஷ்-பிரேம் ஆகிய இருவரின் கவிதைகளும் எங்ஙனம் ஒன்றோடொன்று சம்வாதம் கொள்கின்றன என்பதே இத்தொகுப்பின் நோக்கு.
ஜோயல்-கோகன் (Joel-Coen) சகோதர்களின் திரைப்படங்களில் இது வழக்கமான நையாண்டிப் போலி (Parody) கலந்த திரைப்படம். ஒரு பூனைக்கும் எலிக்கும் இடையிலான விளையாட்டை மையப்படுத்திய கருத்தமைவுத் திரைப்படம் என்றும் கூறலாம். கோமக் மஹர்தியின் புத்தகத் தழுவலாக இருந்தாலும், சில மாற்றங்களுடன் திரைக்கதை கோகன் சகோதர்களால் தான் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் உருவாக்கத்தை பல ஆங்கில இதழ்களும், விமர்சகர்களும் “Western classicism” என்ற கருத்தியலின் கீழ் நிறுவியிருந்தனர். அந்த அளவுக்குச் சமகால மேலைத்தேயத்தர (Contemporary Western) அமைப்புக் காணப்பட்டது. ஒரு திரில்லர் படத்துக்கு அவசியமான பின்னணி இசைக் கோர்ப்புக்கூட (Background Score) படத்தின் முக்கியமான கதைநிகழும் பகுதிகளில் குறைக்கப்பட்டிருந்தது அல்லது அறவே இல்லை என்றே கூறலாம். இந்த மகோன்னதப் படைப்பிற்கு உலக சினிமாவுக்காக 108 விருதுப் பரிந்துரைகளும் அவற்றில் 78 வெற்றி விருதுகளும் பெற்றிருந்தது மற்றொரு சிறப்பம்சமாகும். அதில் 4 ஒஸ்கார் விருதுகளும் உள்ளடங்கும். ஆகமொத்தத்தில் ஒரு உலகசினிமாவுக்கான முழு நடத்தையினையும் படம் நெடுகிலும் முடுக்கிவிடப்பட்டிருந்தது என்றால் அது மிகையல்ல.
இந்தப் பத்தியில் No Country For Old Men திரைப்படத்தின் முழுக் கதையினையும் கூறுவது ஏற்புடையதல்ல. திரைப்படத்தின் பாதிக்கு மேற்பட்ட கதையினை அல்லது கருவினை 2004 இல் வெளியான ரமேஷ்-பிரேமின் “கொலையின் கவிதையியல்” என்னும் கவிதை சொல்லும்.
ஒரு எதேச்சையான தொடுகையினை மேற்படி திரைப்படமும், கீழ்வரும் கவிதையும் சொல்லிப்போவதை காலத்தொடுகை என்றோ Creation Of Dualism என்றோ தான் கூறவேண்டும்.
அக்கவிதையாவது;
“”நான் உன்னைக் கொல்ல விரும்புகிறேன்.
இது நானுனக்குச் சொல்லும் முதல் வாக்கியமா அல்லது இறுதியா எனத் தெரியவில்லை.
எப்படிக் கொல்வது என்பது பற்றிய முழு அறிவு எனக்குண்டு.
கொலையின் கவிதையியல் குறித்து எந்தப் பல்கலைக்கழகத்திலும் வகுப்பெடுப்பேன்.
என்னால் உன்னைக் கொல்ல முடியும் என்பதில்
நீ கொள்ளும் நம்பிக்கை
உனக்கு மனநிறைவைத் தரும்வரை காத்திருக்கத் தயார்.
நீ சாகும்போது இதுவொரு அரைகுறைக் கொலையெனக் கருதுவாயெனில்
அது உனது மரணத்தையும்
எனது கொலைத் தொழில்நுட்பத்தையும் குறைபட்டதாக்கிவிடும்.
பிறகு இக்குறையை நிவர்த்தி செய்யவியலாது.
உன்னைக் கொல்ல
எனக்குப் பல வழிகள் தெரியும்
இருந்தாலும் எனக்குப்
பிடித்த வழி
உன் முன்னே என்னைப்
பிணமாகக் கிடத்துவது.””
என்று அந்தக் கவிதை நிறைவுறும். இந்தக் கவிதைக்கும் திரைப்படத்துக்கும் உள்ள ஒரேயொரு கருத்தியல் சாராத ஒற்றுமை இரண்டையும் படைத்தவர்கள் வெவ்வேறு “இனக்குழும இரட்டையர்கள்”.
கருத்தியல் ரீதியில் ஆராயும் போது திரைப்படத்தின் குறியீடுகள் பல இக்கவிதையுடன் தொடர்புறும். அதாவது “உன்னைக் கொல்லமுடியும்” என்ற ஒரு அபத்தமான நம்பிக்கை. திரைப்படத்தில் Javier Bardem இன் Anton Chigurh என்ற பாத்திரம் அரைகுறைக் கொலையினை எங்ஙனம் நிராகரித்து கூடவே சிலிண்டர் துப்பாக்கியை ஏந்திச் செல்கிறதோ அதே மறைமுகத் தன்மை இக்கவிதையின் ஆழமான ஆராய்ச்சியில் புலனாகும் (சிலிண்டர் துப்பாக்கி அல்ல).
“உன் முன்னே என்னைப் பிணமாகக் கிடத்துவது” என்பது யதார்த்தக் கவிதையியல் ரீதியில் எதிராளியின் அதீத பாசப் பிணைப்பைப் கூறும் அதேவேளை, இத்திரைப்படத்தின் தன்மையியலுடன் ஒப்பிடும் போது Anton Chigurh இன் மனநிலைக்கோளாறு (Psychopath Personality) எங்ஙனம் அவன் நிஜமாகவே கொல்ல எத்தணிப்பவனுக்கு சாவை வழங்கும் என்பதை இங்கு தெளிவுபடுத்தலாம்.
இதேபோல தேவதச்சனின் கவிதையானது No Country For Old Men திரைப்படத்தின் ஒட்டுமொத்த சாராம்சாத்தையும் கூறுவது போன்ற தன்மையை ஒத்தது. தேவதச்சனின் கவிதை உலகம், படிமம், நயம் மிகவும் மாறுபட்டது. சப்தம்-நிசப்தம் என்ற இரு கொள்கைகளுக்கு இடையில் வார்த்தைகளால் கால்கோள் விழா செய்யும் அளவுக்கு அபரிமிதமானது. 2004 இல் வெளியான “கடைசி டைனோசர்” எனும் தொகுப்பிலுள்ள ‘இன்றுவரை’ எனும் கவிதையே இது;
“”ஆறு குளங்களைப் பழமைவாதிகள் என்னும்
கிணறு ஆற்றைக் கூச்சலில் முடிவோரெனப் பேசும்.
கடல் குட்டையைக் குழப்பவாதி என்னும்
குளம் கண்மாயை சந்தர்ப்பவாதி எனக்கூறும்.
கடல் கிணற்றை அகநோய் பீடித்ததாய்ச் சொல்லும்.
கண்மாய் கிணற்றின் சுயமின்மையைப் பேசும்.
மேகத்தோடு நடக்கும் சில பறவைகள்
ஏதாவது ஒரு நீருக்கு வரும், இன்றுவரை…..””
இதில் வரும் ‘இன்றுவரை’ என்கிற குறியீடு வயதானவர்களுக்கு இந்நாடு சொந்தமல்ல என்ற அகவிபரிப்பைத் தருகிறது. பழமைவாதிகளும், குழப்பவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும் எங்ஙனம் அகநோய் பீடித்துள்ளனர் என்ற தன்மையைத் திரையிலும் துலாம்பரமாகக் காட்டியிருந்தனர் கோகன் சகோதரர்கள்.
“மேகத்தோடு நடக்கும் பறவைகள் ஏதாவது ஒரு நீருக்கு வரும்” என்பதில் தேவதச்சனின் மகோன்னதக் கவியாளுமை வெளிப்பட்டு நிற்கக் காணலாம். மேல்தட்டுச் சிந்தனாவாதிகள் (பறவைகள்) குறைகளைக் கூறாது அல்லது கண்டுகொள்ளாது இருப்பதும் அதைத் தாண்டாதவர்கள் (நிலம்) அதற்கு மறுதலித்த கருத்திடுவதும் கவிதையில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
2004 இல் உருவான தமிழ்க்கவிதைகளில் உள்ள சில சாராம்சங்கள் 2007 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படத்தில் இருக்கின்றது என்பது இரு சிந்தனைவாதிகளின் Copy & Paste என்று நிச்சயமாகக் கூறமுடியாது. ஆனால் அவற்றை விமர்சன ரீதியில் திறன் காண்பது என்பது தான் அவ்விரு படைப்புகளுக்கும்/படைப்பாளிகட்
Joel-Coen சகோதரர்களின் திரைப்படைப்புக்களில் பின்வரும் Cinematic கலைப்படைப்புக்கள் கட்டாயம் பார்க்கப்பட வேண்டியவையாகும்.
Blood Simple (1984)
Raising Arizona (1987)
Miller’s Crossing (1990)
Barton Fink (1991)
The Hudsucker Proxy (1994)
Fargo (1996)
The Big Lebowski (1998)
O Brother, Where Art Thou? (2000)
The Man Who Wasn’t There (2001) No Country for Old Men (2007)
Burn After Reading (2008)
True Grit (2010)
Hail, Caesar! (2016).
இவர்களின் இந்தப்படைப்புக்களை அவதானிப்பதன் மூலம் தமிழ் சினிமாவின் தற்போதைய பிற்போக்குத் தன்மையினையும், புதிதாக உள்வாங்கவேண்டிய மூலகங்களையும் பெருமளவில் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் இலக்கியவாதிகளுக்கு முற்போக்குச் சிந்தனைகளை அடைவதற்கான முகாந்திரம் இங்கு அதிகமுள்ளது எனலாம்.
●
இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.
- நோய்வாய்ப்பட்ட ” சுமங்கலிகள் “
- மிளிர் கொன்றை
- திரையிலும் மறைவிலும் பாதி உண்மையாகிப்போன கலைஞர் ஓம்புரி
- எனது மூன்றாவது நாவல் “உங்கள் எண் என்ன?”
- கொதிக்கிறது மக்கள் வெள்ளம்
- திருப்பூர் திரைப்படவிழா :சுப்ரபாரதிமணியன்
- ஏ.ஆர்.ரஹ்மானின் கலைக்கூட விளக்குகள்
- நெகிழன் கவிதைகள்
- இதுவரைக் காணாத புதுவித இரட்டை வளையம் பூண்ட அபூர்வ வட்ட ஒளிமந்தை
- தொடுவானம் 152. இதயத்தை இரவல் கேட்ட கலைஞர்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -13, 14, 15
- இரண்டு கவிதைகளும்; ஒரு திரைப்படமும்