‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கவிதையா ?கட்டாயம் நான் திறனாய்வு செய்தாக வேண்டும். இப்போதே.
கதையா? அதே யதே – சபாபதே.
கட்டுரையா? என்னை விட்டால் யாருண்டிங்கே
மதிப்புரை யெழுத ?
பதவுரை பத்திகளிலில்லாமல் குறைந்தபட்சம் ஏ4 அளவிலான
மொத்தம் 500 போல் வெள்ளைத்தாள்களில்
விரைவோவிரைவில் வெளியாகிவிடும்
கெட்டி அட்டையிட்ட
புத்தம்புதிய புத்தகமாய்.
விமர்சனம் செய்வதென்றால் எனக்கு ஏற்படும் பரவசம்
சொல்லிமாளாது.
நாட்கணக்காய் எழுதுவேன், யாரும் கேட்கா விட்டாலும்.
யார் சொல்லி வீசுகிறது காற்று?
நேற்றும் இன்றும் நாளையும்
ஊற்றெனப் பொழிந்துகொண்டேயிருப்பேன்
ஊத்தை கர்வத்தில் ஊதிப்புடைத்த என்
நாத்தம்பிடித்த அரைவேக்காட்டுக் கருத்துரைகளை.
நாடகமா
ஆடிப்பாடுவேன் அத்தனை பாத்திரமாகவும்.
சூத்திரம் இதுவே நான் சகலகலாவல்லவனாக
நான் எழுதுவதில் எதுவும் தேறாதா?
வாராயென் தோழி வாராயோ எனவழைத்தால்
பேர் பேராகப் போற்றப் பலர் உண்டு
போரூரிலிருந்து ரோமாபுரி வரை
ஊரூராகப் போய்ப் புதுப்புதுப் பட்டியல்களை வினியோகித்து
காரசாரமாய்ப் பேசுவேன் உங்கள் எழுத்து
உரமற்றது; கண்றாவி யென்று
கன்றுகுட்டியாகவே இருக்கவேண்டும் நீங்கள்
காலமெல்லாம் நானே தாய்ப்பசுவாம்
பேர் சொல்ல ஒரேயொரு பிள்ளை நான்
_ இலக்கியத்திற்கு. அப்போதும் எப்போதும்
புரிந்துகொண்டால் நல்லது. அல்லது
புல்லுருவிப் படைப்பாளி என்ற பட்டத்தைச்
சுமக்கத் தயாராக இருங்கள். சொல்லிவிட்டேன்.
கலங்கி நிற்கக் கற்றுக்கொள்ளாமலிருந்தால் எப்படி?
கருங்கல் இதயமா உங்களுக்கு?
வித்தகன் நானென்று இன்னும் எத்தனை முறை
சத்தமாய்ச் சொன்னால் ஒப்புக்கொள்வீர்கள்?
சத்தியமாய் தலையசைக்கமாட்டீர்களா ஆமென்று?
சிரிப்பை வேறு அடக்கிக்கொள்கிறீர்களா?
பொறுங்கள் –
உங்களைப் பழித்துக் கிழிகிழித்து
இதோ ஒரு தரவிமர்சனம் தயாராகிக்கொண்டிருக் கிறது.
- கூண்டு
- அம்மாவுக்கு எப்படி நன்றிசொல்வது…..?
- உயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதை
- பிரசவித்துச் சென்ற அக்காவின் அறை
- “ கோலமும் புள்ளியும் “
- தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் சூரிய வெப்ப நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்
- கதைச்சக்ரவர்த்தி கு.அழகிரிசாமி – நிகழ்வு
- ஆணவம் பெரிதா?
- சமூக விழிப்புணர்வின் மூலம் வரும் அரசியல் தலையீடு இளைஞர்கள் மத்தியில் வளர வேண்டும்
- பிம்பம்
- நாஞ்சில் நாடனின் “சதுரங்கக் குதிரை”
- இலங்கையில் அகதிகள்