அலைமகன்
01
ராமேஸ்வரத்தில் அது கோடை காலத்தின் தொடக்கம். அதிகாலை இன்னும் முழுதாக மாறிவிடவில்லை. சூரிய வெளிச்சம் அப்போதுதான் படர தொடங்கியிருந்தது. கிழவருக்கு எப்போதோ விழிப்பு வந்துவிட்டது. என்றாலும் அவர் படுக்கையை விட்டு இன்னும் எழுந்திருக்கவில்லை. இப்போதெல்லாம் அவருக்கு வெள்ளனவே விழிப்பு வந்துவிடுகிறது. இரவிலும் அவர் நன்றாக தூங்குவது இல்லை. எல்லாவற்றையும் போல நித்திரையும் அவரது கைகளை விட்டு மெல்ல மெல்ல சென்றுகொண்டு இருக்கிறது. முன்பெல்லாம் அவர் அதிகாலையில் எழுந்து கடலை வெறித்து பார்த்துக்கொண்டு இருப்பார். கடலில் மிதந்து வரும் சாமான்கள் மீது அவருக்கு ஒருவித திகிலுடன் கூடிய ஆர்வம். எங்கும் தேடி அலைந்தும் காணக்கிடையாத சாமான்கள் கடலில் அதிகாலை வேளையில் தான் தென்படும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. இப்பிடித்தான் ஒருமுறை நள்ளிரவு கனவில் யாரோ ஒருவர் வெகு தொலைவில் இருந்து கூப்பிடுவது போல கேட்டார். சந்தேகமே இல்லை. அது இரண்டாவது மகள் செல்வியுடைய குரல்தான். அவருக்கு தனது கனவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை. இப்பிடித்தான் மூத்த மகள் பிறந்த பின் நீண்ட காலமாக பிள்ளை இல்லை. ஒரு இரவில் அவரது குலதெய்வம் அம்மாளாச்சி திடீர் என்று கனவில் வெளிப்பட்டார்.
“நான் வடக்கே ஒரு காட்டில் இருக்கிறேன். எனக்கு பொங்கல் வை. உனக்கு இரண்டாவது வாரிசு வரும்”.
இதுதான் அவருக்கு கேட்ட குரல். இவர் காட்டில் இருக்கும் அம்மாளாச்சியை தேடி யாழ்ப்பாணம் முழுவதும் அலைந்தார். இறுதியில் சாவகச்சேரியில் இருக்கும் சோலையம்மன் தான் அது என்று இவரும் மனுசியும் திட்டமாக நம்பினர். சோலையம்மனுக்கு ஏன் இவர் பொங்கல் வைக்கிறார் என்று ஊரவனுக்கும் புரியவில்லை. தென்மராட்சியாருக்கும் புரியவில்லை. ஆனால் இவரோ தனது கனவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். அதைவிட அம்மாளாச்சியில் மிகுந்த பட்சம். சொன்னது போலவே ஒரு வருடத்தில் செல்வி பிறந்தாள். தொடர்ந்து மகனும் பிறந்தது தனிக்கதை. சொல்லி வைத்தது போல கனவில் செல்வியின் குரல் வர நான்கு மணிக்கே கடலின் அருகே தொலைதூரம் பார்வையை அலைய விட்டபடி காத்திருந்தார். அங்கே செல்வி வரவில்லை. யாரோ ஒரு இளம் பெடியனின் பிணம் துவக்கு சூட்டு காயத்துடன் அழுகி மிதந்து வந்தது. அதன் பிறகு பதினைந்து வருசமாக எந்த கனவும் அவருக்கு வந்ததில்லை.
சிறுதீவு சுப்பையர் என்றால் ஊரில் தெரியாதவன் இருக்க முடியாது. நல்ல சுழியான கமக்காரன். அந்த காலத்தில் கமக்காரன் என்றால் நல்ல சீதனம் கேட்பார்கள். காற்சட்டை போடும் பியூன் வேலை ஒரு அரசாங்க வேலை என்று அவர்களுக்கு அப்போது தெரியாது. வருடத்தில் நாலு மாசம் மட்டுமே மழையை காணும் பூமி என்றாலும் மண்ணுக்கும் தண்ணிக்கும் அம்மாளாச்சி குறை வைக்கவில்லை.
“டேய் தம்பி நம்ம ஊரு சிரட்டை போல இருக்குடா. சிரட்டையை நிமிர்த்தி வைச்சு தண்ணியை ஊத்தினா சிரட்டைக்குள்ள தண்ணி சேருகிற மாதிரி நம்ம ஊரிலையும் மண்ணுக்க நிரம்பின பிறகுதான் மிச்ச தண்ணி கடலுக்கு போகும்”. இது இவருக்கு இவற்ற ஐயா சின்ன வயதில சொன்னது.
ஒரு கல்வீடும், பத்தாயிரம் ரூபாவும், இருபது பவுன் நகையும் போட்டு அப்ப தடல்புடலாக கலியாணம் நடந்தது. வீட்டு முற்றத்திலே நின்ற கறுத்த கொழும்பான் மாம்பழத்துக்கும், அடர்ந்து விரிந்த வேம்புக்கும் வீட்டுக்கு பின்னால இருந்த பெரிய பனம் கூடலுக்கும் ஆசைப்பட்டு ஐயா பெம்பிளை பார்க்க, இவரோ பாக்கியத்தின் சின்ன வயசில ஒருக்கா பார்த்த வடிவான கண்ணையும் ரெட்டை சடை பின்னலையும் கற்பனையில் நினைத்து கொண்டு கலியாணம் பண்ணிக்கொண்டார்.
ஊருக்குள்ள பெரிய இடத்து பெடியன் எண்டதால நல்ல மட்டு மரியாதை. கோவில் திருவிழா கூட்டத்துக்கு யாரை தலைவரா போடுறது, செயலாளரா போடுறது எண்டது தொடங்கி மீன்சந்தையை எந்த சந்தியில் வைப்பது எண்டது வரைக்கும் சுப்பையற்ற வார்த்தைகளுக்கு அப்பீல் இல்லை. ஆனால் ஏனோ அவருக்கு பொறுப்புகள்ல இருக்கிறது மட்டும் விருப்பம் இல்லை. ஊருக்கு புதுசா பனிஷ்மென்ட் ட்ரான்ஸபெர்ல வாற விதானமாருக்கும் சுப்பையர் தான் நம்பகமான கிராமத்து மனுஷன். ஏனோ ஊர்காவல்துறை போலீஸோட கதைக்க மட்டும் சனம் சிதம்பரத்தானை கூட்டிக்கொண்டு போகேக்க ஐயாவிலே கொஞ்சம் கோவம் கோவமாக வரும்.
எல்லாம் ஒழுங்காக தான் போய்க்கொண்டு இருந்தது. பெடியல் ஊருக்க வரேக்க இந்தியன் ஆமிக்கு முந்தி ரான்சிலேசன் செய்த சிதம்பரத்தான் மனுசி பிள்ளைகளோடு கனடாவுக்கு போய் விட்டான். ஊருக்குள்ள பெரிய தலைக்கட்டு எண்டு சனம் எல்லாம் சேர்ந்து சுப்பையரை பெடியளின்ட பிரசைகள் குழுவுக்கு தலைவரா போட்டு விட்டுதுகள். இரவு முழுவதும் ஊரை சுற்றி விழித்து இருந்து எங்கேயாவது படகுகள் வருகிறதா என்று பார்த்து பெடியளுக்கு ரிப்போர்ட் பண்ண வேணும். இதுதான் பிரசைகள் குழுவுக்கு தந்த வேலை. சுப்பய்யருக்கு இந்த கண்விழித்து இருக்கிற வேலை எல்லாம் சுத்தமாக ஆகாது. சின்ன வயசு முதலே அம்மாளாச்சி கோயில்ல நடக்கிற காத்தவராயன் கூத்த எப்பிடியாவது விடிய விடிய இருந்து பார்க்க வேண்டும் என்று ஒரே ஆசை. இன்றைவரைக்கும் அது நடக்கவே இல்ல. எண்டாலும் தலைவர் எண்ட படியால் நன்றாக கடற்கரை படித்துறையில விடிய விடிய உறங்கிக்கொண்டு கடமைகளை செவ்வனே செய்தார். முதலும் கடைசியுமா ஊரில சுப்பையர் வகித்த பதவி அதுதான். பெடியள் ஊரைவிட்டு போனதோடு பிரச்சினை தொடங்கியது.
02
ஒவ்வொரு வருசமும் மே மாதத்தில வாற முதலாவது சனிக்கிழமையை ஒருபோதும் என்னால மறக்கவே முடியாது. அன்றைக்கு பின்னேரம் தான் தம்பி இயக்கத்துக்கு ஓடிப்போனான். எங்களுக்கு இந்த செய்தியை முதல்ல தெற்கு கல்வீட்டு முத்தையாவின்ட கடைசி மகன் தான் சைக்கிள்ல மூச்சு வாங்க வாங்க வலித்துக்கொண்டு வந்து சொன்னான். செய்தியை முதல் கேட்டது நானும் அப்பாவும் தான். எனக்கு மூச்சு நின்று போனது. அப்பா எதுவும் பேசாமல் வெறித்தபடி நின்றுகொண்டு இருந்தார். சுப்பய்யருக்கு மூளை பிசகி விட்டது என்று சிலர் ரோட்டில கதைச்சுக்கொண்டு போய்ச்சினும். எனக்கும் தம்பிக்கும் ஒரு வயசு தான் வித்தியாசம். அக்காவை விட இவன் தான் எனக்கு பயங்கர நெருக்கம். அக்கா நான் எப்பிடியாவது கனடாவுக்கு போய் உழைச்சு கொழும்பில உத்தியோக மாப்பிளையை உனக்கு கட்டி வைப்பன் என்று பன்னிரண்டு வயசிலேயே சொல்ல துவங்கினவன். இந்த கதையை கேட்டு அம்மாவுக்கு கொள்ளை பெருமை. அடியே தம்பி உள்ளவள் படைக்கு அஞ்சமாட்டாள் எண்டு புது மொழியை சொல்லி சந்தோசப்படுவா. செய்தியை கேட்டு அம்மா அழுத அழுகையை என்னால் இப்பயும் மறக்க முடியாது. சனங்கள் வீட்டுக்கு வரத்துவங்கி விட்டுதுகள். அப்பா அன்றைக்கு எதுவும் கதைத்த மாதிரி எனக்கு நினைவில்லை. அம்மாவும் நாங்களும் தான் அழுதுகொண்டு இருந்தோம். அழுகை அடங்கி ஓய்ந்த பிறகு பின்னேரம் ஐந்தரை மணிக்கு வீட்டுக்கு முருங்கை காய் பறிக்க வந்த தெய்வானை ஆச்சியிடம் அம்மா சொன்னார்.
“இனி என்ன இருந்தாலும் நான் ஒரு வீரத்தாய் ஆச்சி”.
ஊர் சனம் லோஞ்சியால ஊரைவிட்டு இந்தியாவுக்கு ஓடுறது எனக்கு சுத்தமா பிடிக்கேல்ல. அம்மாவுக்கும் தான். அந்த காலத்தில இந்த லோஞ்சியால இந்தியாவுக்கு போறது பெரிய சாதனை பயணம் போல பேசப்பட்டது.
“இந்திய போட் காரன் பெரிய சிங்கனாம். ஆமியிட்ட சிக்காம கொண்டு போய் சேர்ப்பானாம்”
“எந்த அலைக்கும் சிக்காம வெட்டி வெட்டி ஓடுவானாம்”
“கரைக்கு கிட்ட வந்து ஆட்களை ஏத்திறாங்களாம் “
இவ்வாறாக இந்திய மீன்பிடி படகுகளின் சாகசங்கள் ஊருக்குள்ள பரவி இருந்தன. இந்தியாவுக்கு போன ஒரு மாசத்தில் வெளிநாட்டுக்கு போகலாமாம் என்றும் கதைகள் பரவி இருந்தன. அத்துடன் இடைக்கிடை சில பிணங்களுக்கு கரை ஒதுங்கிக்கொண்டு இருந்தன. எனக்கு என்னோவோ சிறு வயதில் படித்த ராபின்சன் குரூஸோவின் சாசக பயணங்கள் ஞாபகம் வந்தது.
தம்பி இயக்கத்துக்கு போன இரண்டாம் நாள் அப்பா அம்மாவிட்ட வந்து நெருக்க தொடங்கினார்.
“இஞ்ச பாரு பெடியனும் இயக்கத்துக்கு போய்ட்டான்; நானும் தலைவரா வேற இருத்திட்டன்; இனி இங்க இருந்தால் நாம எல்லாரும் சாக வேண்டியதுதான்; போற சனத்தோட இந்தியாவுக்கு போய்ட்டா எதோ தப்பி பிழைத்து இருக்கலாம். மூத்தவளுக்கும் வயசாகுது. எனக்கு இந்த ரெண்டு குமரையும் கட்டி கொடுத்துட்டா பிறகு நிலைமை சீரான பிறகு ரெண்டு பேரும் இங்க வந்து அம்மாளாச்சியோட கிடக்கலாம்”.
அம்மாவுக்கு இந்த ஐயா தந்த வீட்டை விட்டு போக விருப்பம் இல்லை. எனக்கு நான் வளர்த்த ஜிம்மியை விட்டு போக விருப்பம் இல்ல. அப்பாட ஊருலக அரசியல் வாதத்துக்கு முன்னால வீடும் ஜிம்மியும் நிக்க முடியேல்ல.
ஒரு வழியா எல்லோரும் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வெளிக்கிட்டம். அம்மா நெல் வித்து சேமிப்பில் வைச்ச காசு இருபதினாயிரம் ரூபாவை படகு செலவுக்கும் வேறு செலவுக்கும் பத்திரமா வைத்திருந்தா. ஐயாவுக்கு போறத பற்றி ஒரு கவலையும் இருந்ததா தெரியேல்ல. அம்மாவுக்கும் எனக்கும் தான் ஒரே துக்கம். அக்காவுக்கு விடுப்பு பார்கிறதோட நேரம் போய்க்கொண்டு இருந்தது. நாங்கள் வெளிக்கிடும்போது ஜிம்மி ஊளையிட்டது. அம்மா அதை அபசகுனமா சொல்லி பிறகு போவம் எண்டு சொல்லி பார்த்தா. எப்போதும் சகுனம் பார்க்கிற அப்பா அண்டைக்கு அநியாயத்துக்கு பகுத்தறிவு பேசினார். நான் பிரியும் போது ஜிம்மி ஓரக்கண்ணால விட்ட கண்ணீரை இப்ப நினைச்சாலும் உடம்பெல்லாம் எனக்கு என்னவோ செய்யும்.
படகு கொள்ள முடியாத சனம். எனக்கு என்னவோ ஐம்பது பேர் கொள்ளக்கூடிய படகு போலத்தான் தெரிந்தது. ஆனால் கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல் இருந்தார்கள். படகுக்காரன் அடிக்கடி ஊக்கம் கொடுத்துக்கொண்டு இருந்தான். நானும் அக்காவும் அம்மாவும் படகுக்கு உள்ளே இருந்தம். அப்பா மேல் தட்டிலே இருந்து தனது தலைவர் பதவியை பற்றி பலருக்கும் சொல்லி பெருமைப்பட்டு கொண்டார். போராட்டத்துக்கு பெரிய பணியை செய்துவிட்டு தலைமறைவாகும் பெடியன்களிண்ட மனோநிலையில் அவர் இருந்திருக்க வேண்டும். எல்லாம் இரவு ஒரு மணி வரைதான்.
படகில் ஓட்டை விழுந்து ஒரு குடம் நீரை எறும்பு புற்றுக்குள் ஊற்றியது போல தண்ணி பாய்ந்தது. எல்லோரும் எங்கெங்கோ வீசப்பட்டது, அப்பாவும் நானும் எதிரெதிர் திசையில் சென்றது, அப்பா நீந்த முயற்சி செய்தது வரைக்கும் தான் எனக்கு தெரியும். நினைவு திரும்பிய போது நான் மூன்று நாள் கழித்து ஊர்காவல்துறை ஆஸ்பத்திரியில் இருந்தேன். எப்பிடி தப்பினேன் என்று இன்று வரை சத்தியமாக தெரியாது. மற்ற எல்லோருடைய உடலையும் தேடி ஒரு ஐந்து வருடம் கடற்கரைக்கு அலைந்ததுதான் மிச்சம். நான் அம்மாட வீட்டில ஒண்டிப்போனன். அப்பாவும் தம்பியும் மட்டும் இப்பவும் அடிக்கடி கனவிலே வந்து போவினும்.
03
சுப்பய்யருக்கு உலகத்தில பிடிக்காத ஒரு இடம் இருக்கும் என்றால் அது ராமேஸ்வரம்தான். கடந்த பதினைந்து வருடமா இந்த இடத்தில வெறுப்பு கூடிக்கொண்டு தான் வருகுது. எல்லாரையும் பறிகொடுத்தெட்டு வந்து அடைந்த இடம் எண்டதாலேயோ தெரியேல்ல. இங்க வந்து ஒரு மூணு வருஷம் கிட்டத்தட்ட மூளை குழம்பி திரிந்தார். இங்கே உருப்படியான ஒரு சின்ன வீட்டை தன்னும் கட்டிக்கொள்ளவில்லை. வெய்யிலிலும் மழையிலும் அந்த கொட்டகைக்குள் வதங்கி வாடினார். தனக்கு வந்த துன்பங்கள் எல்லாம் தான் குடும்பத்துக்கு செய்த வினை என்று நம்ப தலைப்பட்டார். பிறகு இந்தியா முழுக்க பயணம் செய்தார். அகதிகளுக்கு உதவுறது என்று அதே ஊர் வேலைய இங்கே அதிகாரமோ அங்கீகாரமோ இல்லாமல் செய்துகொண்டு திரிந்தார். இவருடைய தலைவர் பதவி பற்றின கதைகளை கேட்க இங்கே யாரும் இல்லை என்பதுதான் சோகம். அகதியா வாற எல்லாரட்டையும் யாரவது தப்பி இருக்கினமா என்று கேட்பதுதான் ஒரே தொழிலா வச்சிருந்தார். சனத்திரள்களுக்கு மத்தியில, சிவனை கும்பிட வாற ஆட்களுக்கு மத்தியில, எங்கையாவது இலங்கை தமிழ் கதைக்கினமா என்று காதை கூராக வைத்துக்கொண்டு எல்லா இடமும் அலைந்தார். யாரவது இலங்கை தமிழனை கண்டால் ஒரு நம்பிக்கை வெளிச்சம் ஒளிவிட தொடங்கும். யாரையும் விருப்பம் இல்லாம தான் வற்புறுத்தி கூட்டிக்கொண்டு வந்தது அவருக்கு இப்பயும் குற்ற உணர்ச்சியாத்தான் இருக்கு. இரண்டு குமரையும் கொண்டு போட்டனே என்று இரவில் திடுக்கிட்டு எழும்பி சில வேளைகளில் அழுவார். அதுவும் செல்வி அப்பா அப்பா என்று காலை சுத்தி சுத்தி வருவாள். கோயிலுக்கு பொங்கல் வைச்சு பிறந்த பிள்ளை. அதுதான் அவருக்கு தீராத கவலையாக இருந்தது. சில கூலி வேலைகளையும் செய்துகொண்டு, அரசாங்கம் கொடுக்கிற காசையும் வைச்சுக்கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தார்.
இங்க வந்த உடனே சுப்பய்யருக்கு தோன்றின ஒரே ஆசை திரும்பவும் ஊருக்கு போகோணும், அதுவும் இந்த ஊரை விட்டு உடனே போகோணும் எண்டதுதான். கடந்த பத்து வருசமா இந்த ஆசை பயங்கரமா கொழுந்து விட்டு எரிந்துகொண்டு இருக்குது. அதோட இந்த எண்ணம் இரவில நித்திரையையும் குழப்புது. இப்போ அவருக்கு ஒரே எண்ணம்தான். ஊருக்கு போக வேணும். அம்மாளாச்சியிட்ட மனம் விட்டு அழ வேணும். சீதன வீட்டிலேயே கிடந்து அங்கேயே சாக வேணும். வேற ஒண்டும் வேணாம். என்ன நடந்தாலும் சரி. படாத பாடு பட்டு இலங்கை தூதரகத்துக்கு அகதிகளை திரும்ப அழைக்கிற செயல்திட்டத்துக்கு விண்ணப்பித்தார். இவ்வளவு காலமும் சேர்த்து வைச்ச காசும் கொஞ்சம் கிடந்தது. அதையும் பத்திரப்படுத்தி வைத்து கொண்டார்.
கடவுச்சீட்டு கைக்கு வந்ததும் அவருக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு புத்துணர்ச்சி வந்தது. குடும்பத்தை வள்ளத்தில் ஏந்திக்கொண்டு வரும்போது இருந்த அதே புத்துணர்ச்சி. முதல் முறையாக அன்று நிம்மதியாக தூங்கினார். கனவில் கன வருடங்களுக்கு பிறகு ஒரு குரல்.
“வடக்கே என்னை வந்து பார்”.
எப்போதோ படங்களில் பார்த்த காசி விஸ்வநாதர் கோவில் கோபுரம். சந்தேகமே இல்லை. அம்மாளாச்சி காசிக்கு தான் கூப்பிடுகிறாள். தன்னை சோலையம்மன் கோவிலுக்கு கூப்பிட்ட அதே ஆச்சி. எனது செல்வியை எனக்கு கொடுத்த ஆச்சி. நள்ளிரவில் சுப்பய்யருக்கு நித்திரை குழம்பிப்போனது. நீண்ட காலத்துக்கு பிறகு மனம் விட்டு நெடு நேரம் அழுதார். விடிந்ததும் காசிக்கு போகும் ஏற்பாடுகளை கவனிக்க தொடங்கினார்.
இதற்கு இடையே இவருக்கு தனது சிறுவயதில் அம்மா எப்பயோ சொன்ன கதை ஞாபகம் வந்தது. அம்மாவின் மாமியும் மாமாவும் முதல் முதலில் காசிக்கு போனார்களாம். அவர்களுக்கு பிள்ளை இல்லாததால் தங்களுக்கு தாங்களே பிண்டம் போட்டு கொண்டார்களாம். பிறகு திரும்பும்போது காசியிலே மாமா வாழைப்பழ தோல் வழுக்கி இறந்து போனாராம். மாமி மட்டுமே திரும்பினாராம். மாமா சொர்க்கம் செல்லும் பாக்கியம் பெற்றார் என்று அம்மா அடிக்கடி வியந்து சொல்வதுண்டு. சுப்பய்யருக்கு சொர்க்கம் செல்லும் எண்ணம் எல்லாம் அறவே இல்லை. சிறுதீவுக்கு சென்று எனது வீட்டில் செத்தால்தான் சொர்க்கம் என்பதில் அவருக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. கூடவே கறுத்தக்கொழும்பான் மரமும் பனங்கூடல் நுங்கும் நிழலாடின. வீடு இப்போது எப்பிடி இருக்குமோ? எப்பிடி இருந்தாலும் பரவாயில்லை.
பணப்பிரச்சினை பெரிதாக இல்லாததால் காசிக்கு கிளம்பினார். நமது ஊருக்கு போக முதல் இங்குள்ள ஆச்சி கூப்பிடுகிறாள் என்று நினைத்து கொண்டார். ஆனால் விதி வேறுவிதமாக நினைத்திருந்தது.
காசியில் வெயிலும் குளிரும் வாட்டி எடுத்தது. கிழவருக்கு எதுவும் தோற்றவில்லை. காசியில் வழிபாடுகளை முடித்தார். முன்னோருக்கு பிண்டம் குடுத்தார். தனக்கோ மனைவி பிள்ளைகளுக்கோ பிண்டம் கொடுக்கவில்லை. நாளை சென்னைக்கு கிளம்ப வேண்டும். அடுத்த நாள் கொழும்புக்கு விமானம். ஊருக்கு போகும் நினைவே மனதுக்கு இதுவரை கண்டு அறியாத தெம்பை கொடுத்தது. எவ்வளவு கால தவிப்பு. இப்போதுதான் எனக்கு காலம் கூடி வந்திருக்கிறது என்று நினைத்து கொண்டார்.
உணர்ச்சிப்பெருக்கில் கங்கை படித்துறையில் நீராடிவிட்டு படியேறியவருக்கு படியில் ஒட்டியிருந்த பாசி கண்ணுக்கு தெரியவில்லை. அடுத்த நொடி பிடரி அடிபட கீழே விழுந்தார்.
04
வாரணாசியில் அரச மருத்துவமனை எப்போதும்போல நிரம்பி வழிந்தது. சுப்பையர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தார். தலையில் இருந்து பெருமளவு ரத்தம் போயிருந்தது. அங்கிருந்த இளம் வட இந்திய மருத்துவருக்கு இவரை காப்பாற்ற முடியும் என்று தோன்றவில்லை. இரத்த இழப்புடன் பிடரி சேதம் என்பது எழுபத்து ஐந்து வயதில் எவ்வளவு சிக்கலானது என்பது அவருக்கு தெரியும். அத்தோடு கிழவர் அரைகுறையாக பினாத்திக்கொண்டு இருந்தார். நினைவு இன்னும் முழுமையாக தப்பவில்லை. இவர் கதைத்ததும் அவருக்கு விளங்கவில்லை. உடனடியாக அங்கே புதிதாக சேர்ந்த தமிழ் நேர்சை அழைத்தார். டில்லியில் படித்தவள். பெருமளவு ஹிந்திக்காரர்களையே கவனித்து வந்த அவளுக்கு தமிழ் நோயாளி என்றதும் ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டது.
“சுசீலா இவர் பேசுவது உங்கள் பாஷை போல இருக்கிறது. இதை எனக்கு விளக்கி கூறு”
சுசீலா குனிந்து கிழவரின் வார்த்தைகளை மிக கவனமாக கேட்டு திருத்தமாக ஹிந்தியில் மொழிபெயர்த்தாள்.
“என்னை உடனே ராமேஸ்வரம் கொண்டு செல்லுங்கள். எனது உயிர் கடைசியில் அங்கேதான் போக வேண்டும்”. (முடிந்தது)
Annotations:
- சாமான்கள்- பொருட்கள்
- சிரட்டை-Coconut Shell
- விதானை -ஒரு கிராமத்துக்கு உரிய அரச அலுவலர்
- குமர்- இளம் பெண்
- விடுப்பு -வேடிக்கை
- இரங்கற்பா
- கனடாவைப் பற்றி எனது தமிழ்ப் பாடல்கள்
- அருங் காட்சியகத்தில்
- மொழிப்போர்
- கானல் நீர்
- கவிஞர் இளம்பிறைதேர்ந்தெடுத்த கவிதைகள் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில்!
- எறும்புகளின் சேனை – பூமா ஈஸ்வரமூர்த்தியின் புதிய கவிதைத்தொகுப்பு
- சென்னையில் மாபெரும் மூன்றாம் உப்பு நீக்கி குடிநீர் அனுப்பு நிலையம் நிறுவிடத் திட்டம்