புறவு என்பது முல்லை நிலக் காட்டைக் குறிக்கும். கார்காலத்தில் அந்நிலம் அழகாக விளங்கும். அவன் அரசர் பொருட்டு வினை மேற்கொண்டு அவளைப் பிரிந்தான். அப்பிரிவைப் பொறுக்க முடியாமல் அவள் வருந்துகிறாள். அவன் செல்லக்கூடிய வழி கொடுமையானதாயிற்றே என அவள் அஞ்சுகின்றாள். அப்பொழுது, “இல்லை காடு அழகாக விளங்குகிறது” என்று புறவின் அழகு நலங்களைச் சொல்வதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது.
===========
1.நன்றே, காதலர் சென்ற ஆறே
அணிநிறை இரும்பொறை மீமிசை
மணிநிற உருவின தோகையும் உடைத்தே.
[ஆறு=வழி; அணிநிறம்=அழகான நிறம்; மீமிசை=உச்சியில்; மணி=நீலமணி; தோகை=தீகை உடைய மயில்; பொறை=குன்று]
”அவன் ஒங்கிட்ட சொல்லிக்கிட்டுதான் போனான். அப்ப நீயும் சரின்னுதான் சொன்ன இப்ப நீயே வருந்தறயே” என்று தோழி சொல்ற பாட்டு இது.
”அழகான நெறத்துல இருக்கற பெரிய மலை உச்சியில நீலமணி போல மயிலெல்லாம் ஒக்காந்திட்டிருக்கு பாரு. அதால ஒன் காதலரும் நல்லாத்தான் இருப்பாரு”
================
2. நன்றே, காதலர் சென்ற ஆறே
சுடுபொன் அன்ன கொன்றை சூடிக்,
கடிபுகு வனர்போல் மள்ளரும் உடைத்தே.
[சுடுபொன்=சுட்டெடுத்த; கொன்றை=கொன்றை மலர்கள்; கடிபுகுதல்=மணமனையில் புகுதல்; மள்ளர்=வீர்ர்; கடிபுகுவனர்=வீட்டுக்குச் செல்வோர்]
போன பாட்டு மாதிரிதான் இதுவும். தோழி சொல்ற பாட்டுதான்.
”நம்ம தலைவரு போயிருக்கற வழியானது சுட்ட பொன் நெறத்துல இருக்கற கொன்றைப் பூவைத் தலையில வச்சுக்கிட்டு கல்யாண ஊட்டுக்குப் போற மாதிரி வீர்ருங்கள்ளாம் போற வழி. அதால போறதுக்கு ஒண்ணும் பயமில்ல.”
==================
3. நன்றே, காதலர் சென்ற ஆறே!
நீர்ப்பட எழிலி வீசும்
கார்ப்பெயற்கு எதிரிய கானமும் உடைத்தே.
[நீர்ப்பட=நீர் வளம் உண்டாக; எழிலி=மேகம்; கார்ப்பெயல்=கார்கால மழை; கானம்=காடு]
தோழி சொல்றா.
”ஒன் காதலரு போயிருக்கற வழியானது எல்லா எடத்துலயும் தண்ணி நெறய இருக்கற மாதிரி மேகமெல்லாம் கார்காலத்து மழையைப் பெய்யற காடு. அதால அந்த எடமெல்லாம் நல்லாவே இருக்கும். கவலப்படாத.
=========
4. நன்றே, காதலர் சென்ற ஆறே!
மறியுடை மான்பிணை உகளத்
தண்பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே.
[மறி=குட்டி; பிணை=பெண்மான்; உகள=துள்ளி விளையாட; தண்பெயல்=குளிர்ச்சி பொருந்திய மழை]
தோழி சொல்ற பாட்டுதான் இதுவும்.
”நம்ம தலைவரு போயிருக்கற வழியில, குட்டியோட பெண்மான் துள்ளி வெளயாடிக்கிட்டு இருக்கும். அங்க குளிர்ச்சியா கார்கால மழை பொழிஞ்சுக்கிட்டே இருக்கும். அதால அந்த எடமெல்லாம் நல்லாவே இருக்கும்.”
===========
5. நன்றே, காதலர் சென்ற ஆறே!
நிலன்அணி நெய்தல் மலரப்,
பொலன்அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே.
இதுவும் தோழி சொல்ற பாட்டுதான்.
”நம்ம தலைவரு போயிருக்கற வழி ரொம்ப நல்ல வழி. நெலத்த அழகாச் செய்யற நெய்தல் பூ பூத்திருக்கும். பொன்போல இருக்கற கொன்றைப் பூவும், பிடவமும் பூத்து இனிமையா இருக்கும். நீ கவலப்படாத.
==========
=6. நன்றே, காதலர் சென்ற ஆறே!
நன்பொன் அன்ன சுடர்இணர்க்
கொன்றையொடு மலர்ந்த குருந்துமார் உடைத்தே.
[சுடர் இணர்=ஒளி பொருந்திய; குருந்து=குருந்த மரம்]
இதுவும் தோழி சொல்ற பாட்டுதான்.
“நம்ம தலைவரு போயிருக்கற வழியில நல்ல பொன்னைப் போல பூத்திருக்கற கொன்றை மரங்களோட வாசனையா இருக்கற குருந்த மரங்களும் இருக்கும் அதால நீ கவலப்படாத.”
==============
7. நன்றே, காதலர் சென்ற ஆறே!
ஆலித் தண்மழை தலைஇய,
வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே.
”நம்ம தலைவரு போயிருக்கற வழியில, குளிர்ச்சியான ஆலங்கட்டி மழை பொழிஞ்சிருக்கு. அதால வெள்ளையான முல்லைப் பூவெல்லம் பூத்திருக்கு.”
================
8. நன்றே, காதலர் சென்ற ஆறே!
பைம்புதல் பல்பூ மலர,
இன்புறத் தகுந பண்புமார் உடைத்தே.
[பைம்புதல்=பசுமையான புதர்; தலைஇய=பெய்தமையால்; வாலிய=வெண்மை]
இதுவும் தோழி சொல்ற பாட்டுதான்.
“நம்ம தலைவரு போயிருக்கற வழி நல்ல வழி. நல்ல பச்சையான பொதர்ல பல நெறத்துல பூவெல்லாம் பூத்திருக்கும்.இன்பமா இருக்கும். நீ கவலப்படாத.”
==========
==9. நன்றே, காதலர் சென்ற ஆறே!
குருந்தம் கண்ணிக் கோவலர்,
பெருந்தண் நிலைய பாக்கமும் உடைத்தே.
இதுவும் தோழி சொல்றதுதான்.
”நம்ம தலைவரு போயிருக்கற வழி நல்ல வழி. குருந்தப் பூவைத் தலையில மாலையா வச்சிருக்கற கோவலருங்க வாழற ஊருங்க அங்க இருக்கு. அதால நீ கவலப்படாத.
=====================================================================================10.நன்றே, காதலர் சென்ற ஆறே!
தண்பெயல் அளித்த பொழுதின்,
ஒண்சுடர்த் தோன்றியும தளவமும் உடைத்தே.
[தண்பெயல்=குளிர்ச்சி பொருந்திய மழை; தோன்றி=கொடிவகை]
இதுவும் தோழி சொல்ற பாட்டுதான்.
”நம்ம தலைவரு போற வழி நல்ல வழி. அங்க குளிர்ச்சியா கார்கால மழை பெஞ்சிருக்கு. அதால நல்ல ஒளியா இருக்கற செம்முல்லைப் பூக்களும், தோன்றிப் பூக்களும் பூத்திருக்கு. நீ கவலப்படாத. ==============