நூல் அறிமுகம் : பா. சேதுமாதவன் எழுதிய ‘ சொற்குவியம் ‘

This entry is part 5 of 13 in the series 3 மே 2020

            நண்பர் திரு.பா. சேதுமாதவன் கவிதை , சிறுகதை ஆகிய வடிவங்களைக் கையாண்டு வருகிறார். இவர்வரலாறு தொடர்பான நூலொன்று ம் எழுதியுள்ளார். ‘ சொற்குவியம் ‘ என்ற இந்நூல் ஆசிரியரின் ஒன்பதாவது நூலாகும். இதில் கட்டுரைகள் , உரைகள் , மதிப்புரைகள் , நூல் அணிந்துரைகள் , நேர்காணல்கள் என்னும் ஐந்து பகுதிகள் காணப்படுகின்றன.

     பசுவய்யா, விக்ரமாதித்யன், சுப்ரமணிய ராஜு, கல்யாண்ஜி, இங்குலாப், வாலி, பாலகுமாரன், த. பழமலய், சுயம்புலிங்கம், மனுஷ்யபுத்திரன், அனார், ஆகியவர்களின் கவிதைகளிலிருந்து சில வரிகளை

மேற்கோள் காட்டுகிறது ‘ புதுக்கவிதைகளில் மானுடச் சிந்தனைகள் ‘ என்ற கட்டுரை.

   ‘  உணவும் மருந்தும் ‘கட்டுரை உடல்நலம் சார்ந்தது. 14 – ஆம் நூற்றாண்டில் தமிழர் உணவில் கடலை

எண்ணெய் இடம் பிடித்திருந்தது என்ற தகவல் இக்கட்டுரையில் காணப்படுகிறது.

    புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் ‘ வாசிப்பை நேசிப்போம் ‘ என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளார் நூலாசிரியர். பயனுள்ள பேச்சு.

     ‘ கவிதைகளின் வழியே அன்பைக் கடத்தியவன் ‘ கட்டுரை நா.முத்துக்குமார் பற்றிப் பேசுகிறது. 1500

திரைப்படப் பாடல்கள் , 13 நூல்கள்  எழுதியவர் நா.மு.

காய்ந்த வறட்டியின்

உடம்பு முழுக்க அம்மாவின் விரல்கள்

   — என்ற வரிகளில் பாசம் ததும்புகிறது

    ” வள்ளலார் இராமலிங்க அடிகளார் ‘ மனிதனின் அன்றாடச் செயல்கள் பற்றிய அறிவுரை சிறப்பாக

இருக்கிறது. அவர் நமக்கு நல்லெண்ணைக் குளியலைச் சிபாரிசு செய்வதை நாம் பின்பற்ற வேண்டும்.

   என் மூன்று நூல்கள் பற்றி மதிப்புரை எழுதியுள்ளார். ‘ உரிய நேரம் ‘ தொகுப்பு பற்றிப் பேசும் போது…

” ஒப்பனைகள் ஏதுமற்ற எளிமையான கவிதைகளிலிருந்து அர்த்தங்கள் பலவற்றை அடைகாக்கும் நவீன

கவிதைகள் வரை, காதலைப் பாடும் கவிதைகளிருந்து சமூக அவலங்களைப் பாடும் கவிதைகள் வரை

பலவிதமான கவிதைகள் இத்தொகுப்பில் காணக்கிடக்கின்றன.” என்கிறார்.

    ‘ சொற்களின் காதலன் ‘ என்ற கட்டுரை என் ‘ அண்மையின் தோற்றப் பிழைகள்’ கவிதைத் தொகுப்பு

பற்றிப் பேசுகிறது.

மெல்லப் புன்னகைக் கின்றன

அர்த்தம் வடிந்து

நீர்த்துப் போன சொற்கள்

   — போன்ற சில நயங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.

   ‘  கவிதையும் என் பார்வையும் ‘ என்ற என் , கவிதை விமர்சனக் கட்டுரை பற்றிப் பேசியுள்ளார்.   இச்சிறு கட்டுரை விமர்சனப் பார்வையுடன் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் தமிழுக்கு ஓர் அரிய வரவு என்றும் , ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பயனுள்ள ஆவணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்

பார்வையில் குறை என்று தோன்றுவதையும் பதிவு செய்துள்ளார்.

    திருச்சி எழுத்தாளர் கி.நடராஜன் எழுதிய ‘ தேன் துளிகள் ‘ பற்றிப் பேசுகிறது ‘ மலரிதழ் வருடலும்

அறச்சீற்றக் கொந்தளிப்பும் ‘ என்ற கட்டுரை. இந்நூலில் 236 லிம்ரைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

எத்தனை வருடக் கர்ப்பம் ?

சிற்பியின் திறனால் வணங்கும் தெய்வமாய்க்

கல்லுக்குள் இருக்கும் சிற்பம் !

   — என்ற கவிதை வித்தியாசமான பார்வையை முன் வைக்கிறது.

     ஜெயசிவா கவிதைகளை அறிமுகப்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.

வெள்ளைக் கேணியில்

கறுப்பு நிலா

அவள் காந்தக் கண்கள்

   — என்ற புதிய உவமை ரசிக்கத் தக்கது. ‘ மௌனத்தின் மொழி பெயர்ப்பாளன் ‘ என்ற தொகுப்பில்

காணப்படுகிறது.

   — மாணவி கீதாலட்சுமியின் ‘ கடைசி உசிரு ‘ புதினம் பற்றி எழுதியுள்ளார் சேதுமாதவன். ” ஆமை

ஓடாய் சாதியைச் செல்லுமிடமெல்லாம் சுமந்து செல்லும் மனிதர்களையும் கீதாலட்சுமி வெளிச்சத்திற்குக்

கொண்டுவரத் தயங்கவில்லை ” என்று நயம்படப் பதிவு செய்கிறார்.

   நூலாசிரியர் சேதுமாதவனை முனைவர் பி. கரிகாலன் நேர்காணல் செய்துள்ளார். சுவாரஸ்யமான

கேள்விகளும் சுயசிந்தனை சார்ந்த தனித்துவ்மான  பதில்களும் நம்மை மகிழ்விக்கின்றன.

சடங்குகளைப் பின்பற்றும் பக்தியின் எதிர்கால்ம் குறித்து … என்கிறார் கேள்வியாளர். இதற்கான பதில்

சாதுர்யமாக இருக்கிறது. அப்படி என்னதான் சொல்லியிருப்பார் சேதுமாதவன். புத்தகத்தை வாங்கிப்

படித்துத்தான் பாருங்களேன் !

   [ வெளியீடு : உலா பதிப்பகம் , 132 , வங்கி ஊழியர் குடியிருப்பு, திருவானைக்காவல் , திருச்சி- 5

பக்கங்கள் 68, விலை ரூ 70 . செல் : 94438 15933. ]

Series Navigationஅஸ்திவீட்டில் இருப்போம்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *