தக்கயாகப் பரணி தொடர்ச்சி

This entry is part 10 of 11 in the series 5 ஜூலை 2020

    

                                     

மதிதுரந்து வரவொழிந்த மதம் நினைந்து சதமகன்

பதிதுரந்து படைஅயின்று சிறிதவிந்த பசியவே.          [131]

[மதி=சந்திரன்; சதமகன்=இந்திரன்; பதி=இந்திரலோகம்; அயின்று=உண்டு; அவிந்த-அடங்கின]

இந்திரன் சந்திரனை விரட்டுகிறான். அதனால் சந்திரன் வெளிவராமல் பாதுகாப்பாய் ஒளிந்து கொள்கிறான். இதைக் கண்ட பேய்கள். இந்திரலோகம் சென்று இந்திரனுடன் போர் செய்து அவனை விரட்டுகின்றன. அப்போரில் இறந்த தேவர்களின் உடல்களைத் தின்று சில பேய்கள் தம் பசி ஆறினவாம்.

=====================================================================================                      

            கருநிறம் கொடுஉருவு கொம்பு வெருவும் உம்பர் கழிவிடும்

            பரிபிளந்து தசைமிசைந்து சிறிதவிந்த பசியவே.           [132]  

[கொம்பு=எருமைக் கொம்பு; வெருவும்=போரிடும்; பரி=குதிரை; மிசந்து=உண்டு]

      கரிய நிறமும் கொம்பும் உடைய மகி‌ஷாசுரனுடன் இறைவி போரிட்டபோது, தேவர்கள் இறைவிக்கு எதிராக அனுப்பிய குதிரைப் படைகளைக் கொன்று அவற்றின் தசை உண்டு பேய்கள் சிறிதே பசி அடங்கின.

=====================================================================================

             இருவிசும்பு வறிதியம்ப இடிவிழுந்தென விழும்

            பெருவிலங்கல் அனபுயங்க பிசிதஉண்டி பெறுபவே.      [133] 

இருவிசும்பு=பெரிய ஆகாயம்; விலங்கல்=மலை; அன=அனைய; புயங்கம்=பாம்பு; பிசிதம்=சதை; உண்டி உணவு]

      பெரிய ஆகாயமானது வறண்டு போனதே என வாய்விட்டு அலறுவதைப் போல இடி இடிக்கிறது. அந்த இடியோசை கேட்டுப் பெரிய மலை போன்ற பாம்புகள் செத்து விழுகின்றன. அப்பாம்புகளின் தசைகளைச் சிலபேய்கள் உணவாக உட்கொள்கின்றனவாம்.

=====================================================================================

             வாரிஉண்டு மேகஇந்த்ர வாகனங்கள் வாய்விடும்

            சோரிஉண்டு சூல்முதிர்ந்த போல் மிகுந்த தோலவே.       [134]

[இந்திர வாகனம்=மேகம்; சோரி=ரத்தம்; சூல்=கருப்பம்; தோல்=வயிறு]

இந்திரனுடைய வாகனங்களான மேகங்கள் கடல் நீரை முகந்து எடுத்துக்கொண்டு போய் பெய்யும் ரத்த மழையைக் குடித்துச் சில பேய்களின் வயிறுகள் கர்ப்பம் அடைந்த வயிறு போலப் பெருத்துக் காணப்பட்டன.

=====================================================================================

                            தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                          மிசை பெறாது குறளான

                              விம்மி உள்ளதிசை செம்மியே

                        திசைபெறாது தடியாத பாரிடமும்

                              உயையள் உலகுடை செல்வியே.        [135]

[மிசை=மேலே; குறள்=குட்டையான; தடியாத=பருக்காத; பாரிடம்=பூதகணம்; உலகுடை செல்வி=உலகநாயகியான உமையம்மை]

      மேலே வளர இடம் இல்லாததால் சில பேய்கள் குள்ளமாயின. பக்கவாட்டில் வளர இடம் இல்லாததால் கூளிப் பேய்கள் பருக்க வில்லை. இப்படிப்பட்ட பூத கணங்களை உடையவர் இவ்வுலகைக் காக்கும் அன்னை துர்க்கையாவார்.

===========================நிறைவு==================================================                        6. கோயிலைப் பாடியது

தேவ மகளிர் இதுவரை தேவியைப் பாடினார்கள். தேவியின் படையில் உள்ள பேய்களைப் பாடினார்கள். இப்பொழுது தேவி எழுந்தருளி உள்ள கோயிலைப் பாடுகிறார்கள்.

            இக்கணங்கள் வந்துசூழும்யோக யாமளத்தினாள்

            மெய்க்கணங்களே விரும்பு கோயில் யாம்விளம்புவாம்.     [136]

[யோகம்=நிட்டை[தியானம்]; யாமளம்=இளமை; கணம்=கூட்டம்;மெய்=உயர்வு; விளம்புதல்=சொல்லுதல்]

      பேய்க்கணங்களும், பூத கணங்களும் வந்து சூழ்ந்திருக்கும் தியானசக்தி கொண்ட  மற்றும்  என்றும்  இளமையாய் உள்ள காளி தேவி குடிகொண்ட, உயர்வான தேவகணங்களும் வந்து விரும்பும் கோயில் பற்றி இனி சொல்லுவாம்.

=====================================================================================

                   கீழும் ஏழுநிலை மேலும் ஏழுநிலை

                        கோயில் வாயில் இருகிரியுமே;

                  சூழும் ஏழ்கடலும் அகழி; சக்ரகிரி

                        புரிசை; காவல் ஒருசூலமே.                 [137]

[கீழே உள்ள ஏழு உலகங்கள்: அதல, விதல, சுதல, தராதல, இரசாதல, மகாதல. பாதாளம்,  மேல் ஏழு உலகங்கள்: பூலோகம், புவர்லோகம், சுவர்க்கலோகம், சனலோகம், மகலோகம், தவலோகம், சத்திய லோகம். அகழி=நீர் அரண்; புரிசை=மதில்]

      இத்தேவியின் திருக்கோயிலின் மாடக்கோபுரத்தின் அடியானது கீழே உள்ள ஏழு லோகங்களாகும். அதேபோல் அக்கோபுரத்தின் முடியானது மேலே உள்ள ஏழு லோகங்களாகும். இரு பெரிய மலைகளே இக்கோயிலின் கிழக்கு மேற்கு வாசல்களாகும். ஏழு கடல்களே கோயிலைச்  சுற்றியுள்ள அகழிகளாகும். கோயிலின் சுற்று மதிலோ சக்கரவாளகிரி என்னும் மலையாகும். இப்படி எல்லாம் காவலாக இருந்தாலும் அக்கோயிலைக் காப்பது தேவியின் கையிலிருக்கும் சூலமேயாகும்

=====================================================================================

                   பூத நாயகர் மகோத ராதிகள்

                        புரக்க வாயில்முறை புகுதுவார்

                  வேத நாயகி விமான பீட

                           அநேக கோடி வடமேருவே.             [138]

[நாயகர் =தலைவர்; பீடிகை=பலிபீடம்]

      ஐம்பூதங்களுக்கும் அதிபதியாய் இருக்கும் கடவுளர்கள் கூட தேவியின் கோயிலில் நுழைய வேண்டுமானால் அங்குக் காவல் காக்கும் பூத  கணங்களின் அனுமதி பெற்றுத்தான் உள்ளே செல்வர். மேலும் வேதங்களுக்கெல்லாம் தலைவியாக விளங்கும் தேவியின் திருக்கோயில் முன்னால் இருக்கும் பலபீடமானது பலகோடி மேருமலைகள் போலக் காட்சி தரும்.

=====================================================================================                               

                   அப்பெரும் பழைய கோயிலூடு அகில

                        லோக நாயகி அமர்ந்ததோர்

                  ஒப்பருள் கடவுள் ஆலம்உண்டு அதனை

                        உள்ளவா சிறிது உரைத்துமே.              [139]     

[ஒப்பரும்=இணையற்ற; ஆலம்=ஆலமரம்]

            மிகவும் தொன்மையான இந்தத் திருக்கோயிலின் உள்ளே இறைவி எழுந்தருளி இருக்கும் ஓர் ஒப்பற்ற ஆலமரம் இருக்கிறது. அதன் சிறப்பை இனி கூறுவோம்.

=====================================================================================

                  முடுகிய பறம்பு நீர் நலிய

                        முகடுபடும் அண்டகோளகையை

                  நெடுகிய வரம்பிலாத பணை

                        நிரைகொடு சுமந்த நேமியது               [140]

[முடுகுதல் பெருகுதல்; நலிவு=வருத்தம்; முகடு=வான உச்சி; வரம்பிலாத=எண்ணற்ற; பணை=கிளை]

      ஊழிக் காலத்தின் முடிவில் எல்லாக் கடல்களும் பொங்கி எழும்; அதனால் நீர் பெருகி எல்லா உலகங்களும் வருத்தம் அடையும். அந்த அண்ட கோளங்களை எல்லாம் நீண்டு வளர்ந்த தன் எண்ணற்ற கிளைகளால் வட்டவடிவமாக நின்று அந்த ஆலமரம் தன் கைகளால் தாங்கி நிற்கும்.

Series Navigationமாத்தி யோசிசாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – ஒன்று
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *