(02.02.1969 ஆனந்த விகடனில் வெளியானது. கவிதா பப்ளிகேஷன்ஸின் “கோபுரமும் பொம்மைகளும்” எனும் என் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)
ஜோதிர்லதா கிரிஜா
நிர்மலாவின் இமைகள் தாழ்ந்திருந்தன. ‘டைப்’ அடித்தது சரியாக இருந்ததா என்பதை அவள் படித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த சாரங்கன் தன்னையும் அவளையும் தவிர வேறு யாருமில்லை என்கிற நிலையில், துணிவுற்று – அவள் குனிந்துகொண்டிருந்தாள் என்பதால் தயக்கமற்று – கண்கொட்டாது அவளைக் கவனித்தான்.
அடர்த்தியான கூந்தல் அலை அலையாய் நெளிந்து கிடந்த தலையில், நட்ட நடுவில் மெல்லிய கோடாக வெள்ளை வெளேரென்று, விளங்கிய நேர்வகிட்டை விட்டுக் கண்களை எடுக்க மனமின்றி, அவன், ‘இவள் கூந்தல்தான் எவ்வளவு அழகா யிருக்கிறது!’ என்று வியந்தான். வகிட்டுக்குக் கீழே சற்றே மேடிட்ட நெற்றியின் மீது அடுத்தபடியாக அவன் பார்வை படிந்த போது, தலையைப் போன்றே அடர்த்தியாயிருந்த புருவங்களுக்கிடையே பொட்டின்றிப் பாழாக அது காணப்பட்டதைப் பார்த்து அவன் மனம் சாம்பியது. ‘இந்தப் பெரிய நெற்றியில் ஒரு குங்குமப்பொட்டு வைத்தால் இவளுக்கு இருக்கிற அழகுக்கு இவள் முகம்தான் எவ்வளவு மங்கலமாக விளங்கும்!’ என்பதைக் கற்பனை செய்து பார்த்த போது, இளம் பெண்களாக இருந்தாலும் முகம் மறந்து போன கணவனையே நினைத்துக்கொண்டு, ஆண்துணை யின்மையால் ஏற்படக்கூடிய எண்ணிறந்த இடர்களை யெல்லாம் சகித்துக்கொண்டு காலமெல்லாம் அவர்கள் வாழ்ந்துவிட வேண்டுமென்று சமுதாயம் இயற்றிவைத்திருக்கிற ஒருதலைப்பட்சமான ஈவிரக்கமற்ற சட்டத்தின் மீதும், அந்தச் சட்டத்தை மீறுகிற ஓரிரு பெண்களைச் சாடுகிற சமுதாயத்தின் ஈரப்பசையற்ற நெஞ்சத்தின் மீதும் அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
பின்புறம் நின்றுகொண்டிருக்கும் ஒருவரால் தான் கவனிக்கப்படுவதைக்கூட உணர்ந்துவிடும் பெண்மையின் உள்ளுணர்வோடு நிர்மலா சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். சாரங்கனின் முகம் சிவந்தது. அவன் தன் பார்வையைத் தாழ்த்திக்கொண்டான்.
அவன் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்ததைத் தெரிந்துகொண்டு விட்டதால் ஏற்பட்ட திகைப்போடும், அவன் பார்வையில் ததும்பிய இரக்கத்தைப் பார்த்துவிட்டதால் விளைந்த அவமானத்தோடும் அவள் தன் வேலையில் மறுபடியும் ஈடுபட்டாள். பல ஆண்பிள்ளைகளின் இம்மாதிரியான பார்வையை அவள் சந்தித்திருக்கிறாள். வாழ்க்கையை இழந்த கைம்பெண் இவள் என்கிற இரக்கம் தோன்ற யாரும் – குறிப்பாக ஆண்கள் – தன்னைப் பார்ப்பதை அவள் விரும்பியதில்லை. பிறரின் இரக்கத்துக்கு ஆளாவதில் இம்மாதிரி நிலையில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் திருப்திக்கு அவள் என்றும் ஆளானதில்லை. மாறாக, பிறரின் இரக்கத்தை அவள் வெறுத்தாள்.
ஆயினும் மற்ற ஆண்பிள்ளைகளின் நோக்கில் இல்லாத ஏதோ ஒன்று சாரங்கனின் நோக்கில் தென்பட்டதைப் புரிந்துகொண்டு அவள் இதயம் இரைந்து துடித்தது. தாளைப் பற்றியிருந்த கைகள் சற்றே நடுங்கின. மேற்கொண்டு ஒரு வரிகூடப் படிக்க முடியாத வாறு அவளை ஒரு வகைக் குழப்பம் ஆட்கொண்டது. அவள் மறுபடியும் தற்செயலாக நிமிர்வது போல் நிமிர்ந்து அவனைக் கவனித்த போது அவன் தலை தாழ்ந்தே இருந்தது. ஆயினும் அவள் தன் செய்கையைக் கவனித்துவிட்டதால் மாறிப்போன அவன் முகம் அந்த மாறுதலில் இம்மியும் குறையாமல் அப்படியே இருந்ததை அவள் கண்டாள்.
மதுரைக் கிளை அலுவலகத்திலிருந்து சென்னைத் தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டு வந்திருந்த நிர்மலாவைக் கடந்த ஒரு மாதமாகத்தான் சாரங்கனுக்குத் தெரியும். அவள் கணவனை இழந்தவள் என்பதையும், பெண்களின் விடுதி ஒன்றில் அவள் தங்கி யிருக்கிறாள் என்பதையும் தவிர, அவளைப் பற்றிய மற்ற விவரங்கள் அவனுக்குத் தெரியா. தன்னைப் பற்றிய விவரங்கள் யாருக்கும் தெரிவதை அவள் தவிர்த்தாள் என்பதை அவள் யாருடனும் பேசாமல் ஒதுங்கி இருந்த தினுசிலிருந்து அவன் புரிந்துகொண்டு அதற்காக அவளை உள்ளூரப் பாராட்டவும் செய்தான். அந்த அலுவலகத்தில் இன்னொரு பிரிவில் வேலை செய்துவந்த காந்திமதியோடு கூட நேருங்கிப் பழகாமல் பார்க்கிற போது ஒரு புன்னகையுடனோ அல்லது ஓரிரு சொற்களுடனோ அவள் நிறுத்திக்கொண்டாள் என்பதும் அவன் கவனத்துக்குத் தப்பவில்லை.
அவள் வயசு, அவளுக்கு எப்போது திருமணம் ஆயிற்று, அவள் கணவன் எப்போது தவறிப்போனான் ஆகிய சேதிகளை எல்லாம் அறிந்துகொள்ள அவன் துடித்தான். அவளது தனிப்பட்ட விவரத்தொகுப்பு மதுரை அலுவலகத்திலிருந்து இன்னும் வந்து சேராததால் இவற்றை யெலாம் தெரிந்துகொள்ளுகிற வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை.
அந்தப் பிரிவில் வேறு யாரும் இல்லாத வேளையில் தலை குனிந்தவாறு வேலை செய்துகொண்டிருந்த அவளைத் தான் அப்படிப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்துவிட்ட அவள் தன்னைப்பற்றி என்ன நினைத்துக்கொள்ளுவாளோ என்று அவன் அஞ்சினான். ஓரிரு தடவைகள் சாடையாக அவளைக் கவனித்த போது, வழக்கம் போல் அமைதியாகவும் மாறுதலற்றும் காணப்பட்ட அவள் முகத்திலிருந்து தன் பார்வையால் அவள் இன்னவிதமான பாதிப்புக்கு ஆளானாள் என்று அவனால் ஊகிக்க முடியவில்லை. ‘ஆழமான உணர்வுகள் உள்ள பெண். முகத்தை எப்படித்தான் எப்போதும் ஒரே மாதிரி வைத்துக்கொள்ள முடிகிறதோ!’ என்று அவன் தனக்குள் நினைத்துக்கொண்டான்.
… அவன் ஆவலோடு எதிர்பார்த்த அவளைப்பற்றிய தொகுப்பு மறுநாள் தபாலில் வந்தது. தலைமை எழுத்தர் அதை வாங்கித் தம் மேசை மீது வைத்துவிட்டு, “உங்க பெர்சனல் ஃபைல் வந்துடுத்துங்க,” என்று நிர்மலாவிடம் கூறினார். நிர்மலா வழக்கம் போல் பற்கள் தெரியாமல் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுத் தன் வெலையில் மூழ்கிப்போனாள்.
சாரங்கனுக்கு அன்று முழுவதும் வேலை ஓடவில்லை. அவளைப் பற்றிய விவரத்தொகுப்பைப் புரட்டிப் பார்த்து அவளைப் பற்றித் தெரிந்துகொள்ளாவிடில் தலையே வெடித்துவிடும் போன்ற பரபரப்பில் அவன் அன்று மாலை வரை மூழ்கியிருந்தான்.
மாலை மணி ஐந்து அடித்ததும் எல்லாரும் கிளம்பினார்கள். சாரங்கன் மட்டும் உட்கார்ந்திருந்தான். கேட்டவர்களிடம் தனக்கு வேலை இருப்பதாய்ச் சொன்னான். எவ்வளவு வேலை இருந்தாலும் கட்டி வைத்துவிட்டு ஐந்தடித்ததும் புறப்பட்டுவிடும் வழக்கமுள்ள சாரங்கனை வியப்போடு பார்த்தபடி சென்றார் தலைமை எழுத்தர்.
ஆயிற்று. மணி ஐந்து-பத்து. அலுவலகம் முழுவதுமே காலியாகிவிட்டது. சாரங்கன் மெதுவாக எழுந்து சென்று தலைமை எழுத்தரின் மேசையிலிருந்த நிர்மலாவின் விவரத்தொகுப்பை எடுத்துப் புரட்டலானான். முதலில் அவள் பிறந்த தேதியைப் பார்த்து அவள் வயதில் தன்னை விட மூன்று ஆண்டுகள் சின்னவள் என்பதைத் தெரிந்துகொண்டு நிம்மதியோடு பெருமூச்செறிந்தான். அந்தப் பெருமூச்சைத் தொடர்ந்து, ‘வயசில் பெரியவளாய் இருந்தால்தான் என்ன? மேல்நாடுகளில் பலர் பெரிய பெண்களை மணப்பதில்லையா என்ன?’ என்று தனக்குள் முனகிக்கொண்டான்.
அவளுக்கு எப்போது திருமணம் ஆயிற்று என்பதையும் அவள் எப்போது கைம்பெண் ஆனாள் என்பதையும் தெரிந்து கொள்ளுவதற்காக அவன் அந்தத் தொகுப்பின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த போது காலடிச் சத்தம் கேட்டுத் தலை நிமிர்ந்தான். தான் கையில் வைத்திருந்த தொகுப்பின் மேல் பார்வையைச் செலுத்தியவாறு பிரிவுக்குள் நுழைந்துகொண்டிருந்த நிர்மலாவைக் கண்டதும் அவன் திடுக்கிட்டுத் திகைத்து அசடு தட்டிப் போய் நின்றான்.
தன் தடுமாற்றத்தை மறைத்துக்கொள்ள முயன்றவாறு, “உங்க பெர்சனல் ஃபைல் வந்திருக்குங்க … என் ஃபைலைத் தேடுறதுக்காக இங்கே வந்தேன். … தற்செயலாப் பார்த்தேன். … இன்னிக்குத்தான் வந்ததுன்னு நினைக்கிறேன் …” என்று குழறியபடி அதைக் கீழே வைத்தான்.
நிர்மலாவின் முகத்தில் ஒரு மாறுதலும் நிகழவில்லை. வழக்கம் போல் அவள் அமைதியாய்க் காணப்பட்டாள்.
“வந்துடுத்துன்னு காலையிலேயே ஹெர்ட் க்ளார்க் சொன்னார்…” என்று பதில் கூறிய நிர்மலா, “ பர்சை மறந்து போய் டிராயர்லேயே வச்சுட்டுப் போயிட்டேன். அதை எடுத்துண்டு போறதுக்காகத்தான் வந்தேன்,” என்று தன் எதிர்பாரா வருகைக்குரிய காரணத்தைச் சொல்லிவிட்டு, மேசை இழுப்பறையைத் திறந்து, பணப்பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போனாள்.
சாரங்கனின் மனசு திக்திக்கென்று வெகு நேரம் அடித்துக்கொண்டிருந்தது. தன் அநாகரிகச் செயலை அவள் புரிந்துகொண்டுதான் அதைப் பற்றிய அருவருப்பை முகத்தில் காட்டாமல் அமைதியாகச் செல்லுகிறாள் என்று எண்ணி அவன் சிறுமைப்பட்டான்.
அவள் போனபிறகு அவன் மறுபடியும் அந்தத் தொகுப்பைப் புரட்டினான். அவள் வேலையில் சேரும் போதே கைம்பெண்தான் என்கிற விவரம் அவனுக்குக் கிடைத்தது. இதனால் அவன் கொஞ்சம் ஏமாற்றமடைந்தான்.
‘அவளையே கேட்டுவிட்டால் போகிறது. எப்படியும் என் உள்ளக்கிடக்கையை அவளிடம் ஒரு நாள் சொல்லித்தானே தீர வேண்டும்?’ என்று அவன் தனக்குள் முணுமுணுத்துக்கொண்டான். ‘அவளைப்பற்றிய விவரங்களை அறிவதற்காகவே தொகுப்பைப் புரட்டிய அநாகரிகச் செயலை அப்போது அவளிடமே ஒப்புக்கொண்டுவிட்டால் போகிறது’ என்று அவன் எண்ணிக்கொண்டான்.
… மறுநாள் முழுவதும் அவளை அவ்வப்போது கண்காணித்தும், தனது தரக்குறைவான செயல் பற்றிய அருவருப்பையோ ஆத்திரத்தையோ அவள் முகத்தில் காண முடியாமல், ‘மிகவும் ஆழமானவள்’ என்று அவன் அவளைப் பற்றி நினைத்துக்கொண்டான்.
இரண்டு நாள்களுக்குப் பிறகு ஒரு நாள் அலுவலகத்திலிருந்து அவள் கிளம்பிச் சென்றதும், சற்றுத் தொலைவில் நடந்தவாறு அவன் அவளைப் பின்தொடர்ந்து சென்றான். குனிந்த தலையுடன் நடந்துகொண்டிருந்த அவள் தன்னால் பின்பற்றப்படுவது தெரிந்தால் தன்னைப்பற்றி என்ன நினைப்பாள் என்று எண்ணியவாறு அவன் மெதுவாக நடந்துகொண்டிருந்தான்.
அவள் கடற்கரைச் சாலையில் திரும்பியதும், ‘கடற்கரையில் கொஞ்ச நேரம் காற்று வாங்கிவிட்டுத்தான் விடுதிக்குப் போவாள் போலும்’ என்று அவன் நினைத்துக்கொண்டான். கடற்கரையில் ஒதுக்குப்புறமாக ஓரிடத்தில் அவள் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு தன்னந்தனியளாய்க் கடலைப் பார்த்தபடி உட்கார்ந்துகொண்டாள். அவளுக்குப் பின்னால் சற்றுத் தொலைவில் உட்கார்ந்த சாரங்கன் சுமார் பத்து நிமிடம் கழிந்த பின்னர் எழுந்தான். முழங்கால்களைக் கட்டிக்கொண்டு தன்னந்தனியாக உட்கார்ந்திருந்த அவளைக் கண்டதும் அவன் மனம் அவள்பால் குழைந்தது.
அவன் அவளை நோக்கிச் சென்றான். கடற்கரைக் காற்றில் படபடத்த வேட்டியைக் கையால் பற்றியவாறு அவன் மெதுவாக நடந்தான். அவளை நெருங்க இன்னும் சிறிதே தொலைவு இருந்த நிலையில், அவள் சொல்லிவைத்தது மாதிரி திரும்பிப் பார்த்தாள். அவன் வந்துகொண்டிருந்தது தன்னை நோக்கித்தான் என்பது புரிந்தும் அவள் முகத்தில் துளியும் வியப்பில்லை.
ஆயினும், தனது போலியான வியப்பை, “அடேடே! நீங்களா?” என்று கேட்டதன் வாயிலாக அவன்தான் வெளிப்படுத்திக்கொண்டான். தன்னெதிரில் வந்து நின்ற அவனைப் பார்த்து அவள் புன்னகை செய்தாள்.
“தினமும் பீச்சுக்கு வந்துட்டுத்தான் விடுதிக்குப் போவீங்களாக்கும்?”
“ஆமாம். ஏழுக்குள்ளே விடுதிக்குப் போயிடணும். ஆறரை வரை காத்தாட உக்காந்துட்டுப் போவேன். இந்த மெட்றாஸ்ல காசில்லாம கிடைக்கிறது பீச்சுக்காத்து ஒண்ணுதானே?” என்று கேட்டுவிட்டு அவள் வாய்விட்டுச் சிரித்தாள். பற்கள் தெரிய அவள் சிரித்து அவன் பார்த்ததே இல்லை. முல்லைச்சரத்தைப் போல் வரிசையாய்ப் பளிச்சிட்ட அந்தப் பற்களையே பார்த்துக்கொண்டு அவன் மெய்ம்மறந்து நின்றான். அருமையாகச் சிரித்தாலும் ஆழமாகச் சிரிக்கக்கூடியவள் என்பதை அவள் முகத்தில் சில விநாடிகள் வரை தேங்கி நின்ற மலர்ச்சியைப் பார்த்து அவன் தெரிந்துகொண்டான்.
மேற்கொண்டு பேச்சை எப்படித் தொடர்வது என்று தெரியாமலோ என்னவோ, காற்றில் படபடத்த வேட்டியை முழங்காலருகே இறுக்கிப் பிடித்தபடி அவன் நின்றான். அவள் உட்காரச் சொன்னாலன்றி உட்காருவது சரியன்று என்று எண்ணியவனாய் அவன் மௌனமாக நின்றுகொண்டிருந்தான். அவளைத் தேடி வந்து தான் பேச்சுக் கொடுத்ததை அவள் விரும்பினாளா இல்லையா என்பதைப் பற்றி அவனால் ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அமைதி நிறைந்த அவள் கண்களை அவன் கூர்ந்து நோக்கிய போது அவள் தன்னை வரவேற்கவுமில்லை, தன் வருகையை வெறுக்கவுமில்லை என்று அவனுக்குத் தோன்றியது.
அந்த இடத்தை விட்டு நகராமல், அங்கேயே அவளுக்கு முன் தான் நின்றுகொண்டிருந்தது அவளுக்குப் பிடிக்காதோ என்கிற ஐயம் கண நேரம் அவன் மனத்தில் எழுந்தாலும், அருமையான அந்த வாய்ப்பை நழுவவிட மனமில்லாமல், “அப்பா அம்மா இருக்காங்களா உங்களுக்கு?” என்று அவன் விசாரித்தான்.
கனிவு நிறைந்த அவன் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்த வண்ணம், “இல்லை. அண்ணா மட்டும் இருக்கான். மதுரையில இருக்கான்…” என்று அவள் பதில் சொன்னாள்.
“அவர் போய் எத்தனை நாளாச்சு?”
“யாரு? …ஓ! … அவரா? அவரு போயி ஏழு வருஷத்துக்கு மேலே ஆச்சு.”
“ஏழு வருஷத்துக்கு மேலே ஆயிடுத்தா?”
“ஆமா.”
அவளை மணந்தவன் மறைந்து அவ்வளவு காலமாகிவிட்டது என்கிற நிலை அவனுள் நம்பிக்கையைத் தோற்றுவித்தது.
“ஏழு வருஷமாயிடுத்துன்னா அவர் முகம் கூட மறந்து போயிருக்குமே?”
“கல்யானமான போது எனக்குப் பதினேழு வயசு. ஆறு மாசம் கூட நான் அவரோடு சேர்ந்து வாழல்லே. ஆச்சு. இந்த மார்ச் வந்தா எட்டு வருஷமாயிடும்…” என்று அவள் பதில் சொன்னாள். ஏற்ற இறக்கமற்றுப் பொதுமையாக எப்போதும் போல் ஒலித்த அவள் குரல் அவனுள் கிளர்ந்து விட்டிருந்த நம்பிக்கைக்கு மேலும் வலுவூட்டிற்று.
“ஒரு சிநேகிதன்கிற முறையிலே நான் உங்களுக்கு ஒரு புத்திமதி சொல்லலாமா?” என்று அவன் மெல்லிய குரலில் கேட்கவும், கண நேரத்துக்கு அவள் கண்களில் ஓர் ஒளி தோன்றி உடனே மறைந்தது. அது வியப்பின் விளைவா அல்லது அவனைப் புரிந்துகொண்டு விட்டதால் ஏற்பட்ட மலர்ச்சியின் அறிகுறியா என்பது அவனுக்கு விளங்கவில்லை.
அவள் தன் கண்களால், ‘என்ன?’ என்பது போல் நீட்சியாகப் பார்த்தாள்.
“நீங்க இந்த மாதிரித் தனியா வாழறது சரியில்லை. முகம் கூட மறந்து போயிட்ட ஒரு மனுஷனை நினைச்சுண்டு வாணாள் பூராவும் ஒரு பெண் வாழ்ந்துடணும்கிறதும், பெண்டாட்டி செத்த மறு வருஷமே ஆண்பிள்ளை மட்டும் புது மாப்பிள்ளையாகலாம்கிறதும் என்ன நியாயம்?” என்று அவன் சூடு பறக்கும் குரலில் அவளை நோக்கிக் கேட்டான்.
அவள் தன் கண்களை அவன் முகத்திலிருந்து அகற்றிக்கொண்டாள். அவள் தலை தாழ்ந்தது. கடற்கரைக் காற்றில் புடைவை பறக்காதவாறு ஒரு கையால் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு மறு கையால் மணலை அளைந்தவாறு அவள் மௌனமாக இருந்தாள்.
தன் கேள்வி அவள் சிந்தனையைக் கிளறிவிட்டு விட்டதாக அவள் மௌனத்துக்குப் பொருள் கற்பித்துக்கொண்ட அவன், “நான் உட்காரலாமா?” என்று கேட்டான்.
அது வரை அவனை நிற்க வைத்தே தான் பேசிக்கொண்டிருந்து விட்ட தவற்றை அப்போதுதான் உணர்ந்துகொண்டவள் போல், “ஐயாம் சாரி. உக்காருங்க …” என்றாள் அவள்.
அவன் மிகுந்த நாகரிகத்துடன் அவளிடமிருந்து மிகவும் தள்ளி உட்கார்ந்துகொண்டான். அவர்கள் உட்கார்ந்திருந்த இடம் ஒதுக்குப்புறமாக இருந்ததால், யாரும் தங்கள் பேச்சைக் கேட்கப்போவதில்லை என்கிற நிம்மதியோடு அவன் தொண்டையைச் செருமிக்கொண்டான்
“நம்ம சமுதாயம் பெண்களுக்குப் பெரிய கெடுதி செய்திருக்கு. ஆணும் பெண்ணும் மேலெழுந்தவாரியான சில விஷயங்களிலே வேறுபட்டிருந்தாலும் அடிப்படைங்கிறது ரெண்டு பேருக்கும் ஒண்ணுதானே? நம்ம நாட்டிலே பெரும்பாலான பெண்கள் மறுமணம் செய்துக்க விரும்புறதில்லைதான். அதென்னவோ அப்படி ஒரு பதிவிரதத்தனம் நம்ம பெண்கள் ரத்தத்துல ஊறிக்கிடக்கு. ஆண் துணை இல்லாமெ வாழறதாலே ஏற்படக்கூடிய அபாயங்களிலேருந்து தன்னைக் காப்பாத்திக்கிறதுக்காகவோ, இல்லைன்னா ஆண்துணையின் தேவையாலேயோ மறுமணம் பத்தி நினைக்கிற மிகச் சில பெண்கள்ளே பெரும்பான்மையினர் ‘நாலு பேர்’னு அழைக்கப்படற சமுதாயத்துக்குப் பயந்து, அது நிறைவேறாத கனவுங்கிற அளவுக்கு வெறும் நினைப்பாகவே மட்டும் வெச்சிண்டு ஏங்கிப்போறாங்க. துணிஞ்சு செய்துகொள்ற ஒருத்தர் ரெண்டு பேரைக்கூட நாமதான் என்ன பாடு படுத்திடறோம்! எப்படியெல்லாம் அவங்களைப் பத்தி இழிவாய்ப் பேசறோம்! செய்யத்தகாத பாதகத்தை அவங்க செய்துட்ட மாதிரி எப்படி யெல்லாம் அவங்களைப் புண்படுத்தறோம்! ஆனா, பெண்டாட்டி செத்தாப் புது மாப்பிள்ளைன்னு அத்தனை ஆண்களும் நடந்துக்கிட்டாக் கூட நாம ஏதாவது பேசறோமா? அதென்ன நியாயம்?” என்று அவன் அவளை நோக்கிக் கேட்டான். பேசத் தொடங்கிய போது மெதுவாக ஒலித்த அவன் குரல், பேச்சில் சூடு ஏற ஏற, சிறிது சிறிதாக ஓங்கி முடிவில் அடித் தொண்டையில் ஆத்திரத்தோடு ஒலித்து நின்றது.
அவள் கண்கொட்டாமல் அவனைப் பார்த்துக்கொண்ருந்தாள். ஆத்திரத்தால் விரிந்த அவன் விழிகளையும், ஏறி இறங்கிய அடர்ந்த புருவங்களையும், நெற்றிச் சுருக்கங்களையும், உணர்ச்சிகளின் திண்மையால் சுருங்கி விரிந்த நாசியையும், முடிவாக, ‘அதென்ன நியாயம்?’ என்று, சமுதாயம் என்கிற ஒட்டுமொத்தமான ஓர் உருவம் தன் முன் நின்றுகொண்டிருந்ததாய்ப் பாவித்தவன் போன்று, சீற்றத்தோடு அவன் வினவியபோது, கோணிய உதடுகளையும் ஆழ்ந்து நோக்கியவாறு அவள் உட்கார்ந்திருந்தாள்.
தான் சொன்னதை யெல்லாம் ஒப்புக்கொண்டதற்கானவோ, அல்லது மறுப்பதற்கானவோ மாறுதல் எதையும் அவள் முகத்தில் கண்டுபிடிக்க முடியாத அவன் ஒரு கணம் திகைத்துத்தான் போனான். ஆயினும் தன் கூற்றை அவள் வாய்விட்டு மறுக்கவில்லை என்பதால் மேற்கொண்டு பேசுவதற்குரிய துணிவைப் பெற்ற அவன், குரலைச் சட்டென்று தாழ்த்திக்கொண்டு கேட்டான்.
“நீங்க என்னங்க சொல்றீங்க? நான் சொன்னது தப்பா?” – இப்படி ஒரு நேரடியான கேள்வியைக் கேட்டுவிட்டு அவன் அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தான். ஊடுருவிய அவனது பார்வையால் சிறிதும் பாதிக்கப்படாதவள் போன்று அவள் அமரிக்கையாகப் பதில் சொன்னாள்.
“கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்ளக் கூடாதுன்னு சமுதாயம் சட்டம் போட்டு வெச்சிருக்கிறது சரியில்லைன்னும், கைம்மைங்கிறது அதை ஒரு பெண் தானே ஏத்துண்டா அது ரொம்ப உயர்ந்ததுதான்னும், ஆனா கைம்மையைக் கட்டாயமா ஒருத்தி மேலே திணிக்கிறது மாபெரும் பாவச்செயல்னும் மகாத்மா காந்தியே சொல்லியிருக்காரே? ஏன்? விவேகானந்தர் கூடத்தான் சொல்லியிருக்கார்…”
மறுமணம் செய்துகொள்ளுவதைப் பற்றிய தனது சொந்தக் கருத்து இன்னதென்பதை அவன் தெரிந்துகொள்ளும் வகையில் ஒரு கோடி காட்டாமல், பொதுவான ஒரு நியாயத்தை எடுத்துச் சொல்லும் அவளது கெட்டிக்காரத்தனத்தைக் கண்டதும், மேற்கொண்டு பேச்சை எவ்வறு தொடர்வது என்று தெரியாமல், கணப் பொழுது திகைத்துப்போன அவன் சுதாரித்துக்கொண்டு வினவினான்.
“விவேகானந்தரும் மகாத்மா காந்தியும் புரட்சி நிறைந்த பெரிய இந்துக்கள்ங்கிறதையும், அவங்க சொன்ன நியாயங்களையும் வாயளவுக்கு நாம ஒப்புக்கொள்றோமே தவிர, தன்னுடைய சொந்த வாழ்க்கைன்னு வரும்போது, அந்த நியாயங்களைச் செயல்படுத்தறதுக்கு வேண்டிய துணிச்சல் யாருக்கு இருக்கு?” என்று கேட்டுவிட்டு அவன் தன் காலருகே கிடந்த கிளிஞ்சல் ஒன்றை எடுத்துக் கடலை நோக்கி வீசி எறிந்தான். அவன் கிளிஞ்சலை வீசி எறிந்த தோரணையிலிருந்து அவனது காழ்ப்பைப் புரிந்துகொண்ட அவள் புன்னகை புரிந்தாள்.
“உண்மைதான்,” என்று அவள் மறுபடியும் பட்டுக்கொள்ளாத வகையிலேயே பதில் சொன்னாள். ‘இவ்வளவு பேசற உங்களுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிற துணிச்சல் உண்டா?’ என்று அவள் கேட்க மாட்டாளா என அவன் ஏங்கினான்.
அவன் உற்சாகத்தோடு சொன்னான்: “ஆனா, சிலர் கிட்ட அந்தத் துணிச்சல் இருக்கு …” – இவ்வாறு சொன்ன போது அப்படிப்பட்ட துணிச்சல்காரர்களில் தானும் ஒருவன் என்பதைத் தெளிவுபடுத்தும் வண்ணம் அவன் தன் மனத்தில் அவள்பால் கனிந்துகொண்டிருந்த அன்பையெல்லாம் ஒன்றுதிரட்டிக் கண்களில் ஒருமுகப்படுத்தி அவளை ஆழ்ந்து நோக்கினான்.
அவள் அவனது பார்வையைத் தவிர்த்து மணலை அளையலானாள். சட்டென்று அவள் எழுந்து நின்றாள்: “அதோ நம்ம ஹெட் க்ளார்க்!” என்று அவள் காட்டிய திசையில் அவன் திரும்பிப் பார்த்தான்.
“நாம இங்கே சந்திச்சது தற்செயலாய்த்தான்னு தெரியாம அவர் நம்மைப்பத்தி ஏதாவது தப்புக்கணக்குப் போடக்கூடும். நான் வரட்டுமா?” என்று கேட்டுவிட்டு, அவன் பதிலுக்குக் கூடக் காத்திராமல் அவள் விடுவிடென்று நடந்தாள்….
…மறுமணம் செய்துகொள்ளும் விருப்பமோ, அதைச் செயல்படுத்திக்கொள்ளுவதற்கான துணிச்சலோ தனக்கு உண்டா இல்லையா என்பதை உணர்த்தும் வகையில் அவள் ஒரு குறிப்புக்கூடக் காட்டாவிடினும், அந்த விருப்பம் உள்ள பெண்கள் பழிப்புகுரியவர்கள் அல்லர் என்கிற அளவுக்கு – தன்னைப்பற்றி அவன் என்ன நினைப்பானோ என்கிற அச்சமின்றி – தன் உண்மையான கருத்தை அவள் வெளியிட்டாள் என்பதால், அந்தக் கருத்தைச் செயல்படுத்துகிற எல்லைக்கு அவளை இட்டுச் செல்லுவது அவ்வளவு கடினமாயிராது என்று அவன் நம்பினான். அந்த நம்பிக்கை தோற்றுவித்த மலர்ச்சியில், அடுத்த தடவை அவளைச் சந்திக்கும் போது என்னென்ன பேசவேண்டும் என்பதைப் பற்றிய ஒத்திகையில் அவன் மூழ்கிப் போனான். அவள் மறுக்கும் பட்சத்தில் அவளை வழிக்குக் கொண்டுவர எப்படியெல்லாம் வாதிக்க வேண்டும் என்பதையும், தன் பரந்த மனப்போக்கால் அவள் கவரப்படுவதற்குத் தன்னைப்பற்றி என்னவெல்லாம் சொல்லிக்கொள்ள வேண்டும் என்பதையும் அவன் தனக்குள் சொல்லிப்பார்த்துக்கொண்டான்.
இருட்டத் தொடங்கும் வரை உட்கார்ந்திருந்துவிட்டு, உற்சாகம் பொங்கும் மனத்தினனாய் அவன் தன்னறைக்குச் சென்றான்.
மறு நாள்.
அலுவலகத்தில், பிற்பகல் மூன்று மணிக்கு, நிர்மலாவுக்கு ஒரு தந்தி வந்தது. தந்தியைப் பிரித்துப் படித்ததும் அவள் முகத்தில் ஈயாடவில்லை. அவள் கண்கள் நொடிப் பொழுதில் கலங்கிச் சிவந்தன.
சட்டென்று சாரங்கன் எழுந்தான்.
“என்னம்மா? யாருக்காவது உடம்பு சரியில்லையா?” என்று தலைமை எழுத்தர் தம் இருக்கையில் இருந்தபடியே விசாரித்தார்.
தன்னையும் அறியாமல் அவளெதிரில் வந்து நின்ற சாரங்கன், “என்னங்க? உங்க அண்ணாவுக்கு உடம்பு சரியில்லையா?” என்று பரபரப்போடு வினவினான்.
“என் குழந்தைக்கு ரொம்ப உடம்பு சரியில்லாம இருக்காம். நான் இன்னிக்கே புறப்படணும்,…” என்றாள் அவள், உடைந்து போன குரலில். அவள் குழந்தைக்கு உடம்பு சரியில்லாததால் அவளுக்கு ஏற்பட்ட வருத்தம் விளைவித்த துயரத்தை விட, அவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்கிற உண்மை விளைவித்த அதிர்ச்சியைச் செரித்துக்கொள்ள முடியாமல், சாரங்கன் விழிகள் விரிய, வாயடைத்துப் போய் நின்றான்
கண்ணீருடே மங்கலாய்த் தெரிந்த அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த நிர்மலா, அவன் மனத்தில் தோன்றிய எண்ணங்களை யெல்லாம் வரிவரியாய்ப் படித்துத் தெரிந்துகொண்டு விட்டவள் பேஒல், “ஆமாம். எனக்கொரு பையனிருக்கான்,” என்றாள்.
சமாளித்துக்கொண்ட சாரங்கன், “நீங்க சொல்லவே இல்லையே?” என்று கேட்டான்.
“நேத்து பீச்ல இன்னும் ரெண்டு நிமிஷம் இருக்க முடிஞ்சிருந்தா, கண்டிப்பாய் சொல்லியிருப்பேன்….” என்று சொல்லிவிட்டுத் தலைமை எழுத்தர் பக்கம் திரும்பிப் பார்த்தாள் அவள்.
“யாருக்கம்மா உடம்பு சரியில்லை?” என்று தன்னிருக்கையில் இருந்தபடியே அவர் மறுபடியும விசாரித்தார்.
“என் பையனுக்கு, சார். எனக்கு ஒரு வாரம் லீவ் வேணும்…” என்று பதில் சொன்ன நிர்மலா கண்களைத் துடைத்துக்கொண்டு விடுப்பு விண்ணப்பத்தை எழுதலானாள்.
சாரங்கன், “கவலைப்படாதீங்க. ஒண்ணும் இருக்காது…” என்று ஆறுதலாக அவளை நோக்கிச் சொல்லிவிட்டுத் தன் இருப்பிடத்தில் அமர்ந்துகொண்டான். ஆறு மாதங்களைக் கணவனோடு வாழ்ந்த வாழ்க்கைக்கு ஆதாரமாக அவளுக்கு ஒரு மகன் இருந்த உண்மை முந்திய நாள் கடற்கரையில் உட்கார்ந்து தான் செய்த இன்பமயமான கற்பனைகளூடே ‘பானகத் துரும்பு’ போல் உறுத்திய உறுத்தலில் அவளை மணப்பதில் அவன் கொண்டிருந்த ஆர்வம் அணைந்து போயிற்று. பொங்கிவரும் பால் ஒரு துளி நீரால் சட்டென்று அடங்கிப் போவது போல, அவன் மனத்தில் பொங்கிக்கொண்டிருந்த உணர்ச்சி ‘பொட்’டென்று சமனப்பட்டுவிட்டது.
“ஊருக்குப் போனதும் பையனுடைய உடம்பு எப்படி இருக்குன்னு ஒரு கடுதாசி போடுங்க,” என்றான் சாரங்கன் உபசாரமாக.
புறப்பட்டுப் போய் இரண்டு நாள்களுக்கெல்லாம் தன் மகன் நோயினின்று முற்றும் விடுபட்டுவிட்டதைத் தெரிவித்தும், மேலும் ஒருவார விடுப்பு நீட்டிப்புக்காக விண்ணப்பித்தும் நிர்மலா தலைமை எழுத்தருக்கு மகிழ்ச்சி பொங்கக் கடிதம் எழுதியிருந்தாள். மகனின் அருகில் மேலும் ஒரு வாரமாவது தான் இருக்க விரும்பியதை அவள் காரணமாகக் காட்டியிருந்தாள்.
அன்று கடற்கரையில் இலைமறை காயாகத் தன் உள்ளக்கிடக்கையை அவளிடம் வெளியிட்ட தான் அவள் திரும்பிவந்த பிறகு அன்றைப் பேச்சைத் தொடரக்கூடும் என்று எதிர்பார்ப்பாளோ என்பதை நினைத்து அவன் தனக்குள் ஒடுங்கிப் போனான். ஆயினும் தன் எண்ணத்தைத் திட்டவட்டமாக அவளிடம் கூறவில்லை என்பதை எண்ணி அவன் ஆறுதலுற்றான். ‘இந்த நாட்டுச் சமுதாயம் விதவைகளின்பால் காட்டுகிற ஓரவஞ்சனையைப் பற்றிப் பொதுவாகத்தானே சொன்னேன்? ‘ஒரு சிநேகிதன்கிற முறையிலே உங்களுக்கு ஒரு புத்திமதி சொல்லலாமா’ என்றுதானே கேட்டேன்? நான் அவளை மணந்துகொள்ள விரும்பியதாக வாய்விட்டுச் சொல்லவில்லையே?’
சாரங்கன் வீட்டுக்குச் சென்ற போது அவனுடைய அண்ணன் எழுதியிருந்த கடிதம் அவனுக்காகக் காத்திருந்தது.
‘ … உன் திருமணம் பற்றி இத்துடன் பல கடிதங்கள் எழுதிவிட்டேன். ஆயினும் நீ அதைப்பற்றி உன் கடிதங்களில் ஏதும் சொல்லுவதில்லை. போனவளைப்பற்றிய நினைவுகளையே அசை போட்டுக்கொண்டிருந்தால் என்ன பயன்? வாழ்க்கை என்பது வாழ்ந்தாக வேண்டிய ஒன்று. வெறும் கனவன்று. நானும் உன் அண்ணியும் உன் குழந்தைகளை எவ்வளவுதான் கவனித்துக் கொண்டாலும், தகப்பனாகிய உன்னருகில் இருப்பதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள் …
‘எதிர் வீட்டில் புதிதாகக் குடிவந்திருக்கும் ஓர் ஏழைக் குடும்பத்துப் பெண் – இருபத்தைந்து வயசிருக்கும் அவளுக்கு – நம் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறாள். உன் குழந்தைகள் அவளோடு மிகுந்த ஒட்டுதலுடன் பழகுகிறார்கள். அவள் தந்தை அவளை உனக்குக் கொடுக்க இணங்கியிருக்கிறார். அந்தப் பெண்ணுக்கும் சம்மதமே. நீ இக்கடிதம் கண்டதும் புறப்பட்டு வந்து சேரவும். இம்மாத முடிவுக்குள் உன் திருமணத்தை நடத்திவிடலாமென்று இருக்கிறேன். இந்தத் தடவை மறுப்பேதும் கிளப்பாமல் சம்மதிப்பாயென்று நம்பி, உன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்….’
சாரங்கன் தன் கல்யாணத்துக்கு ஒரு மாத விடுப்புக்கேட்டுக் கடிதம் எழுத உட்கார்ந்தான்.
…….
- பதிப்பகச் சூழலில் செம்மையாக்குநர்கள்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம். 13
- அக்கா
- தருணம்
- அதென்ன நியாயம்?
- யாப்பிலக்கண நூல்கள்: ஓர் அறிமுகம்
- நிர்மலன் VS அக்சரா – சிறுகதை
- கவிதை
- ‘ஆறு’ பக்க கதை
- அருளிசெயல்களில் பலராம அவதாரம்
- கவிதைகள்
- பரகாலநாயகியும் தாயாரும்
- ஒப்பீடு ஏது?
- புஜ்ஜியின் உலகம்
- எஸ் பி பாலசுப்ரமணியம்
- ஒரு கதை ஒரு கருத்து…. அசோகமித்திரனின் ‘இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை’
- பாலா