நிர்மலன் VS அக்சரா – சிறுகதை

This entry is part 7 of 17 in the series 27 செப்டம்பர் 2020

கே.எஸ்.சுதாகர்

நிர்மலன்….. என்ன காணும்…. வந்த நேரம் தொடக்கம் ஒரே யோசனையா இருக்கின்றீர்?” நிர்மலனின் தோளை இறுகப் பற்றி புளியமரக் கொப்பை உலுப்புவது போல உலுப்பிவிட்டுச் சிரித்தார் தவராசா.

புளியம்பழங்கள் ஒன்றும் உதிர்ந்து விழவில்லை. மாறாக வெறித்த பார்வையுடன் தவராசாவை உற்று நோக்கினான் நிர்மலன்.

“நிர்மலன்… குளிச்சுப்போட்டு சாப்பிட வாரும். வெளிக்கிட்ட நேரத்திலையிருந்து நல்ல சாப்பாடும் சாப்பிட்டிருக்கமாட்டீர்” என்றார் தவராசாவின் மனைவி ஈஸ்வரி.

நிர்மலன் இலங்கையிலிருந்து ஒன்பது மணி நேரம் வான் பறப்பை மேற்கொண்டு, தனது திருமணத்திற்காக அவுஸ்திரேலியா வந்து சேர்ந்திருக்கின்றான். இலங்கையில் நிர்மலனிற்கு அம்மாவும் அக்காவும் இருக்கின்றார்கள். அவுஸ்திரேலியாவில் உறவினர் என்று சொல்லிக் கொள்வதற்கு தவராசாவையும் ஈஸ்வரியையும் தவிர வேறு ஒருவரும் அவனுக்கு இல்லை. ஈஸ்வரி நிர்மலனின் அம்மா வழி உறவு. அவர்கள் இருவரும் தான் நிர்மலனின் திருமணத்திற்கான பெற்றோர்கள். இந்தக் கலியாணத்தை சரிவரப் பொருத்தியவர்கள்.

சாப்பாடு பரிமாறும் போது பொரித்த கோழிக்காலையும், அவித்த முட்டையையும் எடுத்து நிர்மலினின் சாப்பாட்டிற்குள் புதைத்து வைத்துவிட்டு, “உம்… இனிச் சொல்லு” என்றார் ஈஸ்வரி.

நிர்மலன் சாப்பாட்டைப் பார்த்தான். தீக்கோழி தலையை மணலிற்குள் புதைத்து உடம்பை வெளியே நீட்டுவது போல, கோழிக்காலின் ஒருபகுதி வெளியே நீண்டிருந்தது.

முன்னே எதிராகவிருந்த ஆசனங்களில் ஆணும் பெண்ணுமாக, ஈஸ்வரியின் இரண்டு பிள்ளைகளும் இருந்தார்கள். வயதில் மிகவும் சிறியவர்களான அவர்கள் நிர்மலனின் முகத்தையும் கோழிக்காலையும் மாறிமாறிப் பார்த்தபடி இருந்தார்கள்.

“இரண்டுபேரும் சாப்பிட்டியள்தானே. ஓடுங்கோ… ஓடிப்போய் படியுங்கோ” ஈஸ்வரி இரண்டு பிள்ளைகளையும் துரத்திவிட்டார்.

நிர்மலன் இன்னமும் விமானநிலையக் காட்சியிலிருந்து மீளவில்லை. சந்திரமண்டலத்திற்குப் பயணிப்பவர்களின் தோற்றத்தில் வந்திறங்கிய நிர்மலனுக்கு விமானநிலையத்தில் இருந்த வரவேற்பு பிரபலங்களுக்குச் சமானமாக இருந்திருந்தது. மணப்பெண் அக்சராவின் தரப்பில் இருந்து பலர் வந்திருந்தார்கள். தவராசா குடும்பத்திலிருந்து நால்வர். கோலாகல வரவேற்பு. பூச்செண்டுடன் சின்னதாக ஒரு `ஹக்’கும் குடுத்து, நிர்மலனை திக்குமுக்காடச் செய்திருந்தாள் அக்சரா. அவள் அணிந்திருந்த ஆடை அணிகலன்கள், அவளிடமிருந்து பிரிந்துவந்த வாசனை எல்லாமே நிர்மலனை கிறங்கடித்திருந்தது. என்ன நவ நாகரீகமான பெண் அவள்! வியப்புற்றான் நிர்மலன்.

“ஈஸ்வரி அக்கா….” சொல்ல முடியாமல் திண்டாடினான் நிர்மலன்.

“சொல்லன்ரா…!”

“அக்சரா அவுஸ்திரேலியாவிலை வளர்ந்தவள். யூனிவசிற்றியிலை படிச்சுப் பட்டமும் எடுத்திருக்கிறாள். நுனி நாக்கு இங்கிலிஸ். அவளுக்கு நான் பொருத்தமாக இருப்பேனோ எண்டுதான் யோசிக்கிறன்.”

நிர்மலனின் வார்த்தைகளுக்கு கெக்கட்டம் போட்டுச் சிரிக்கத் தொடங்கிவிட்டார் ஈஸ்வரி.

“இஞ்சை பார்… கலியாண எழுத்தும் முடிஞ்சு ஏழெட்டு மாதங்களாப் போச்சு. தாலி கட்டவெண்டு அவுஸ்திரேலியாவும் வந்திட்டார். பொருத்தம் எல்லாம் சரியா இருந்ததாலைதானே எல்லாம் நடந்திருக்கு. இப்ப போய் இப்படிக் கேக்கிறீர்”

இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தவராசா, ஈஸ்வரியின் சிரிப்பில் லயித்து தனது வாயை அகலத்திறந்து சிரிப்பை அதற்குள் அடக்கி வைத்துக் கொண்டார். சிரிப்பை அடக்க முயன்ற அவரினால் துருதுருத்த கைகளை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒருங்குசேர்த்துக் கைகளைத் தட்டத் தொடங்கிவிட்டார்.

“அப்படியெண்டு இல்லை. அக்சராவுக்கு அவுஸ்திரேலியாவிலை ஏன் ஒரு கலியாணம் சரிவரவில்லை?” நிர்மலனிடமிருந்து வெடிகுண்டாகத் தெறித்து வந்த அந்தக் கேள்வியை இருவரும் எதிர்பார்க்கவில்லை. ஆவியாகச் சிரித்து அட்டகாசம் போட்டுக்கொண்டிருந்த ஈஸ்வரி, பனித்துளி போல ஒடுங்கிக் கொண்டார். முட்டையை அமுக்கி சாப்பாட்டிற்குள் செருகியது போல எதையோ மனதிற்குள் போட்டு அமுக்கினார். வானம் போன்று அகன்றிருந்த தவராசாவின் வாய், சுருக்குப்பை மூடுவது போல் சுருங்கிப் போனது.

“இஞ்சத்தைப் பெடியள் தம்பி…. அப்பிடி இப்பிடி. கொஞ்சக்காலம் பழகிப்போட்டு பிறகு வேண்டாம் என்பாங்கள். பெம்பிளப்பிள்ளையளைப் பெத்தவை மடியிலை நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கவேணும். அவை மூண்டு நாலு வரிசம் டேட்டிங் செய்துபோட்டு வேணும் வேண்டாம் சொல்ல இவளவைக்கென்ன விசரே. அதுதான் அக்சரா தனக்கு பெற்றோர் பாத்துச் செய்யுற மாப்பிள்ளைதான் வேணும் எண்டு சொல்லிப் போட்டாள்” நிர்மலனின் தலை மேல் பெரிய ஐஸ் ஒன்றை வைத்தார் ஈஸ்வரி.

“இஞ்சாரும் காணும்…. ஒண்டுக்கும் யோசியாதையும். இப்ப சரியாகக் களைச்சுப் போயிருக்கிறீர். நாளைக்கும் கலியாணவீட்டு வேலையள் நிறைய இருக்கு. இப்ப றெஸ்ற் எடும்” தவராசா நிர்மலனை அணைத்தபடி அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் கூட்டிச் சென்றார். கதவில் நின்று வெளியே ஈஸ்வரியை எட்டிப்பார்த்துவிட்டு, “நிர்மலன்… அக்சரா  இலங்கையிலை வந்து நிண்ட காலங்களிலை உம்மோடை எப்பிடி நடந்து கொண்டவள்? சும்மா ஜாலியா இருந்திருப்பாளே!” கண்ணைச் சிமிட்டி, காதிற்குள் கிசுகிசுத்துக் கேட்டார்.

“உங்களுக்குத் தெரியும் தானே! அக்சரா இலங்கையைச் சுத்திப்பாக்கவெண்டு வந்த நேரத்திலைதானே எங்கடை கலியாண எழுத்தும் நடந்தது. என்ன ஒரு நாலைஞ்சு தரம் சந்திச்சிருப்போம். அக்சரா சொல்லித்தான் மாமாவின்ரை வாழ்க்கை வீல்செயரிலை எண்டும் தெரிய வந்தது. சுகர் கூடி தூக்கி எறிஞ்சு போட்டுதாமே! தான் சின்னனா இருக்கேக்கையே அம்மா தவறிவிட்டதா சொல்லிக் கவலைப்பட்டாள்.”

“பிறகென்ன காணும்… இரண்டுபேரும் அந்தமாதிரி ஒரே ஊடாட்டமாக அங்கை இருந்திருக்கிறியள்” கையாலே நிர்மலனை ஒரு இடி இடித்தார் தவராசா.

“சரி நீர் படும். நல்லா நித்திரையைக் கொள்ளும். கனவிலை அக்சரா வருவாள்” சொல்லிவிட்டு கதவை இழுத்து சாத்திவிட்டு வெளியேறினார் தவராசா.

அக்சராவின் நுனிநாக்கு ஆங்கிலம் நிர்மலனை விரட்டியது. நிர்மலனும் கதைப்பான். ஆனால் அக்சரா மாதிரி ஸ்ரைலாகப் பேசமாட்டான். அவன் அக்சராவின் மீது மனதை ஓடவிட்டபடி அறையை நோட்டமிட்டான். அறைக்குள் ஒரு படுக்கை, அருகே சிறு மேசை. மேசை மீது இரவு விளக்கும், குடிப்பதற்கு ஒரு தண்ணீர்ப்போத்தலும் இருந்தன. தாகம் தீர நீரைப் பருகினான். ஆடைகளை மாற்றிவிட்டு, அக்சராவின் பிரேம் போட்ட புகைப்படம் ஒன்றை மேசை மீது வைத்தான். அது அவள் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும்போது எடுத்த படம். நீட்டி நிமிர்ந்து கட்டிலில் படுத்தபடி அக்சராவை சரிந்து பார்த்தான். பொது நிறம் என்றாலும் கொள்ளை அழகு. உதட்டிற்கு மேலே சிறு மச்சம் கொண்ட `ராசி’ப் பெண் அவள். இரட்டைப் பின்னலைத் தூக்கி முன்னே எறிந்துவிட்டுக், காந்தவிழி மயக்கி, ’வா’ என்று சொல்லி நின்றாள். தலையைச் சரித்துச் சரித்துப் பார்த்தான். கண்களை மூடிக்கொண்டான். அவள் தனக்குப் பொருத்தமானவள் அல்ல என நினைப்பிருந்தும் மனம் அவளைச் சுற்றியே வருகின்றெதே ! ஏன்? ’எண்ணிரண்டு பதினாறு வயது. அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது’ பாடல் மனதுக்குள் ஓடியது.

அக்சரா மாலை நேரங்களில் தந்தையை வெளியே கூட்டிச் செல்வது வழக்கம். அவளுக்கு அது ஒரு நடையாகவும், தந்தை மோகனகுமாருக்கு நல்ல காற்றோட்டமாகவும் அது இருக்கும்.

இன்றும் அப்படித்தான். வீல் செயரில் தந்தையாரை இருத்தி, இருவருமாக வீட்டிற்கு அருகில் இருந்த நீரோடையைச் சுற்றி நடை பயின்றார்கள். ஏற்றமும் இறக்கமுமான உடற்பயிற்சி செய்வதற்கு உகந்தவாறு நீர்நிலைகளைச் சுற்றி அந்தப் பாதை அமைந்திருந்தது. பாதை மருங்கிலும் இயற்கை மரங்கள், செடிகள், கொடிகள். கூடவே பல இலட்சம் பெறுமதியான மாடமாளிகைகளும் அந்த இயற்கையை அழகு பார்த்தன. தூரத்தில் ஒரு சிறு பையனும் பெண்ணும் தமது பெற்றோருடன், தண்ணீருக்குள் நீந்தும் வாத்துக்கூட்டத்திற்கு உணவு போட்டுக் கொண்டு நின்றார்கள். அதைக் கண்டுவிட்டு தூரத்தேயிருந்து விசைப்படகுகள் போல நீரைக் கிழித்துக் கொண்டு ஏனைய வாத்துகள் பறந்து வருகின்றன.

“அக்சரா…. மாப்பிள்ளை என்ன சொல்கின்றார்?”

“அவுஸ்திரேலியா பிடித்திருக்கின்றது என்று சொன்னார்…”

“நீ சந்தோசம் தானே! ஒண்டுக்கும் யோசியாதை. என்ரை சொந்தபந்தங்கள் எல்லாருமாச் சேர்ந்து உன்ரை கலியாணவீட்டைச் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள்.”

“ஓம் அப்பா…”

கோடை காலத்தில் சூரியன் மறைவதற்கு நேரமாகுவதால், இரவு ஒன்பது வரையும் வெப்பமாக இருந்தது. மரத்தாலான பெஞ்ச் ஒன்றின் மீது ஒரு இளம்பெண் தனித்துப் படுத்திருந்ததை மோகனகுமாரும் அக்சராவும் அவதானித்தார்கள். இவர்களின் அரவம் கேட்டு கண் திறந்து பார்த்துவிட்டு மீண்டும் சரிந்து படுத்துக்கொண்டாள் அந்தப்பெண். அவள் முகத்தில் ஒரு துயரம் தெரிந்ததை மோகனகுமார் அவதானித்தார். கண்முன்னே தெரியும் துயரம், அதன் பின்னாலே இருப்பதை அறிய முடிவதில்லை. அக்சரா தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

`நிர்மலன் அவுஸ்திரேலியா வரட்டும். தன் குடும்பத்தை முன்னேற்றட்டும். நான் என்பாட்டில் போய்விடுகின்றேன்’ அவள் மனம் எண்ணமிடுகின்றதா?

வீல்செயரை ஏற்றத்தில் தள்ளவும், இறக்கத்தில் இழுத்துப் பிடிக்கவும் அக்சராவுக்கு மூச்சு வாங்கியது. அதனால் அவள் தந்தையுடன் கதைப்பதைக் குறைத்துக் கொண்டாள். எல்லாவற்றுக்கும் `ஓமப்பா’ சொல்லிக்கொண்டு வந்த மகளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, மோகனகுமார் தன் கடந்த காலத்துக்குள் புகுந்தார்.

நில அளவையாளரான அவர், மனைவி இறந்த பின்னர், புள்ளி அடிப்படையில் அவுஸ்திரேலியாவிற்குள் அடியெடுத்து வைத்தார். அப்போது அக்சராவுக்கு பதின்னான்கு வயதிருக்கும். எட்டாம்வகுப்புப் படித்துக்கொண்டிருந்த அவளுக்கு தனது நண்பர்களையும் பாடசாலையையும் விட்டுப் பிரிவதில் கவலை கொண்டிருந்தாள். மோகனகுமாரின் மனைவி வழி உறவான சுரேந்தர் அவர்களுக்கு எல்லா உதவிகளும் செய்து கொடுத்தான். வீடு ஒன்று வாடகைக்கு எடுத்துக் கொடுத்தான். வங்கிக்கணக்கு ஆரம்பிக்கவும், வருமானவரி கணக்கு இலக்கம், நாட்டிற்குப் புதிதாக வருபவர்களுக்கான `சென்ரர்லிங்’  கொடுப்பனவுகள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளவும் ஒழுங்குகள் செய்தான். சுரேந்தர் கார் வைத்திருந்ததால் கடைகளுக்கும் கூட்டிச் செல்வான். அக்சராவை பாடசாலைக்கு ஏற்றி இறக்குவான். சுரேந்தர் இவர்களுக்கு நாலைந்து வருடங்கள் முன்பதாக அகதியாக வந்தவன். அப்போது சுரேந்தருக்கு இருபத்திரண்டு வயதுகள் தான். சுறுசுறுப்பாக கம்பீரமாக பொதுத்தொண்டுகள் பலவும் செய்து கொண்டிருந்தான். நாட்டுப்பிரச்சினைகள் காரணமாக கூட்டங்களை ஒழுங்கு செய்வதிலும், ஊர்வலங்களில் பங்குபற்றுவதிலும் கரிசனையாக இருந்தான். அக்சரா பள்ளி முடித்து பல்கலைக்கழகம் போனபோது கூட அவளை எங்கும் கூட்டிச் செல்வான். அக்சராவின் உள் மனத்தில் சுரேந்தர் ஒரு `றோல் மொடலாக’ உருண்டு கொண்டிருந்தான். அவனது நடவடிக்கைகளும் அப்படித்தான் இருந்தன. அக்சரா என்றால் சுரேந்தருக்கு உயிர். உயிரை உறிஞ்சி சக்கையாக்கிவிட்டு, தனக்கொரு கலியாணம் என்று வந்தபோது அக்சராவைத் தட்டிக் கழித்துவிட்டான் சுரேந்தர். அதன் பிற்பாடு விசர் பிடித்தது போல சிலகாலம் அக்சரா அலைந்து திரிந்தாள்.

எத்தனையோ இலட்சம் தமிழ் மக்களைக் காவு கொண்ட, நாட்டுப்பிரச்சினை ஓய்ந்திருந்தவேளை – அக்சரா தனது சித்தப்பா குடும்பத்தினருடன் இலங்கை சென்றிருந்தாள். அக்சராவின் மனதிற்கு ஒரு மாறுதல் தேவை எனப் புரிந்துகொண்டார் மோகனகுமார். சித்தப்பாவின் குடும்ப நண்பர்களான தவராசாவும் ஈஸ்வரியும், நிர்மலனின் முகவரியை அவர்களிடம் கொடுத்து, அக்சராவிற்கு பொருத்தம் பார்க்கும்படி சொல்லியிருந்தார்கள். சுரேந்தரின் பிரிவின் பின்னர் அந்தரத்திலே தொங்கித் திரிந்த அக்சராவிற்கு, சித்தப்பாவின் ஆலோசனை சரி என்று தெரிந்தது. நாட்டின் சிதைவுகளையும் அவலங்களையும் நேரில் பார்த்தும், கதையாகக் கேட்டும் கிலி கொண்டிருந்தாள் அக்சரா. அவுஸ்திரேலியாவில் ஊர்வலங்களில் பங்கு கொண்டபோது இருந்த உணர்வுகளில் இருந்து இன்னமும் அவள் விடுபடவில்லை. இலங்கையில் இருக்கும் ஒருவரை மணந்து கொண்டால், ஒரு புதியவரை அவுஸ்திரேலியாவிற்குள் அழைத்துவிடலாம், அவரின் குடும்பத்தை உறவினரை முன்னேற்றிவிடலாம் என்பது அவள் எண்ணமாக இருந்தது.

நிர்மலனின் அக்காவிற்கு நீண்ட நாட்களாகத் திருமணம் நடக்கவில்லை. அவளின் அழகு நிறம் என்பவற்றை மேவிப்பாய எந்தவித சொத்துப்பத்துக்களும் பணமும் அவர்களிடம் இருக்கவில்லை. தன்னைவிட இரண்டுமடங்கு வயது கொண்ட அவள் இளமையிலே முதுமை கொண்டிருந்தது கண்டு கவலை கொண்டாள் அக்சரா.

அப்படித்தான் – போன இடத்தில் எல்லாமே பொருந்திப் போயின.

மரத்தாலான தொங்குபாலம் ஒன்றை மோகனகுமாரும் அக்சராவும் நெருங்கினார்கள். அதன்மீது வீல்செயர் உருண்டோடும்போது, அது அங்கும் இங்குமென ஊஞ்சல் போல் ஆடும். அது எழுப்பிய `கிறிச்’ என்ற ஒலியினால் அருகில் புதருக்குள் மறைந்திருந்த இரண்டு அன்னப்பட்சிகள் மிரண்டுபோய் சடசடவென இறக்கைகளை விரித்துப் பறந்து போயின. அந்தச் சடசட ஒலியினால் இருவரினது ஊஞ்சல் மனங்களும் ஒரு நிலைக்கு வந்தன.

”இண்டைக்கு ஒரு ரவுண்ட் போதும் அக்சரா. கலியாணவீட்டு வேலைகள் நிறைய இருக்கின்றன” தந்தையார் சொல்ல, வீல்செயரை வீடு நோக்கித் திருப்பினாள் அக்சரா.

திருமணம் முடிந்தது. வீட்டிற்கு வந்துவிட்ட மணமக்கள் கம்பளம் விரிக்கப்பட்ட செற்றியில் வீற்றிருந்தார்கள். கூட்டம் கூட்டமாக வந்தவர்கள் கதைத்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். உணவு, சிற்றுண்டிகள் விரைவாகத் தீர்ந்து போய்க்கொண்டிருந்தன. மதுப்புட்டிகள் ஒன்றுடன் ஒன்று கலகலத்து நாதம் எழுப்பின. சினிமாப்பாட்டுடன் இரைச்சலும் போட்டியிட்டன.

அக்சராவும் நிர்மலனும் கதைத்ததையோ சிரித்துக் கழித்ததையோ காண முடியவில்லை. நிர்மலன் கதைக்கப்போகும் தருணங்களில் அக்சரா முகத்தை உம்மென்று வைத்திருந்தாள். இடையிடையே யாருக்கோ மொபைல் போனில் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள்.

நேரம் விரைந்து இருளத் தொடங்கிவிட்டது. ஆக்கள் மெல்லக் கலைந்து போய்க்கொண்டிருக்கும் தருணத்தில் அவள் எழுந்து தனது அறைக்குள் நுழைந்தாள். நிர்மலன் ஆந்தைக்கண் முழியால் சுற்று முற்றும் பார்த்துவிட்டு அவளைத் தொடர்ந்து உள்ளே போய் கதவைச் சாத்தினான்.

சற்று நேரத்தில் உள்ளே ஏதோ சத்தம் கேட்டது. அக்சராவின் ஓங்கி ஒலிக்கும் குரலிற்கு, ஒத்தூதும் நாயனமாக நிர்மலனின் குரல். நான்கு சுவர்களுக்குள் நடந்த அந்த நாடகம் வெளியே தெரிய வாய்ப்பில்லை. சிறிது நேரம் தான். அக்சரா டெக்  இருந்த பக்கக் கதவினைத் திறந்துகொண்டு முயல் போல வெளியே பாய்ந்தாள். தன் குதியுயர்ந்த செருப்புகள் இரண்டையும் கழற்றிப் புல்வெளிக்குள் எறிந்தாள். டெக்கினுள் காட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தவர்களும், அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மோகனகுமாரும் திகைத்து விடுபடமுன் வீட்டு வாசலை நோக்கி ஓடினாள். சடுதியாக ஒரு கார் கிரீச்சிட்டு வாசலில் வந்து நின்றது.

பிறிதொரு நாட்டுப் பையன் ஒருவன் காருக்குள் இருந்து இறங்கி அக்சராவின் கையைக் கோர்த்தான். இருளோடு இருளாக இருவரும் பாய்ந்து காருக்குள் ஏறினார்கள். வாசலை நோக்கி ஓடிவந்தவர்களுக்கு, இருவரும் கையைக் காட்டியபடியே பறந்தோடினார்கள்.

“என்ன தம்பி… என்ன நடந்தது?” மாப்பிள்ளை நிர்மலனைப் பார்த்தபடி மூச்சிரைக்கக் கேட்டார் மோகனகுமார்.

“நான் ஒண்டும் செய்யேல்லை மாமா! கத்தி ஒண்டை நீட்டிக் குத்தவந்தாள், பிறகு கதவைத் திறந்து ஓடீட்டாள்” திகைப்பில் இருந்து விடுபடாதவனாக நிர்மலன் உளறினான்.

வீல் செயரை உருட்டியவாறே அக்சராவின் அறைக்குள் பதகளித்தபடி விரைந்தார் மோகனகுமார். அங்கே அவள் ஓடியதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க எதுவித தடயங்களும் இருக்கவில்லை. நெஞ்சைப் பொத்தியபடி சரிந்தார் மோகனகுமார்.

ஹார்ட் அற்றாக். அம்புலன்ஷில் அவரை ஏற்றி. பின்னால்  உறவினர்கள் நண்பர்களும் வைத்தியசாலைக்கு விரைந்தார்கள்.

”மோகனகுமாருக்கு மூன்று இடங்களில் `புளொக்’. உடனேயே அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும்” வைத்தியர்கள் சொன்னார்கள்.

நிர்மலன் திக்குத் தெரியாத காட்டிற்குள் விடப்பட்டவன் போல உணர்ந்தான். அவனுக்கு என்ன நடக்கின்றது என்றே புரியவில்லை. மனசு உடைந்து பாறாங்கல்லுப் போல கனத்தது.

இரவு இரண்டு மணியளவில் சத்திரசிகிச்சை நடந்தது. வைத்தியசாலை வளவிற்குள் இருந்து பலதும் பத்தும் கதைத்துக் கொண்டிருந்த உறவினர்களும் நண்பர்களும் மெது மெதுவாகக் கலையத் தொடங்கினார்கள்.

“நிர்மலன்… எதாவது உதவி தேவை என்றால் ரெலிபோன் செய். உடனே வந்துவிடுவோம்” ஆளாளுக்கு ரெலிபோன் நம்பர்கள் எழுதிய துண்டை நீட்டினார்கள்.

`பாத்தீர்களா விதியை? தாய் நாட்டில் தன் தாயை வைத்துப் பராமரிக்க முடியாமல், ஒரு துணை தேடி வந்து துணையும் தொலைந்துபோய் மாமனாரைப் பார்க்க வேண்டி வந்துவிட்டதே!’ பலரும் அவனது காதுபடச் சொல்லிக் கொண்டார்கள்.

`அங்கேயே மணம் முடித்து அம்மாவைப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கப்படாதா? பேதை பெதும்பை எல்லாம் கடந்து போய்விட்ட அக்காவுக்காகத்தானே இங்கே வந்தேன்’ நிர்மலனின் மனம் ஏங்குகின்றது.

அவுஸ்திரேலியா வந்த அன்று அம்மா, அக்காவுடன் கதைத்ததற்குப் பின்னர் இதுவரை அவன் அவர்களுடன் கதைக்கவில்லை.

வாங்கில் இருந்து வானத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தான் நிர்மலன். நிலவு வெளியே பால் போலப் பொழிகின்றது. தெளிந்த வானத்தில் இரண்டு கருமுகில்கள். நவநாகரீகமான நகரத்து மங்கை ஒருத்தி, நாட்டுப்புறக் கிழவன் ஒருவனுடன் சண்டையிடுவது போன்றதொரு காட்சி. அது நான்கு சுவர்களுக்குள் அக்சராவிற்கும் நிர்மலனிற்கும் இடையே நடந்த நாடகம் தான்.

”நிர்மலன்…… எனக்கு உங்களைப் பிடிக்கவில்லை.”

நிர்மலனிற்கு அதிர்ச்சி. இவ்வளவு நாட்களும் பீலா விட்டது எல்லாம் வெறும் புருடாவா? அசைவற்று நின்றான்.

”அப்போது எனக்கு அறியாத பருவம். உங்களைப் பார்த்ததும், உங்கள் ஏழ்மைதான் எனக்கு முன்னே தெரிந்தது. அம்மா அக்கா எல்லாருக்கும் ஏதாவது வகையில் உதவி செய்ய வேண்டும் போல இருந்துச்சு. என்னால் இந்த உதவியைத்தான் செய்ய முடியும்” தொடர்ந்தாள் அக்சரா.

”நான் உனக்கு நல்ல கணவனாக இருப்பேன்….அக்சரா. நீ ஒண்டுக்கும் யோசியாதை” சொல்லியபடியே அவளிற்குக் கிட்ட நெருங்கினான் நிர்மலன்.

“நீங்கள் அவுஸ்திரேலியாவில் நல்லபடி வாழ்ந்து உங்கள் குடும்பத்தை முன்னேற்றுங்கள். காலம் வரும்போது விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம்.”

“அக்சரா… அவசரப்படாதை. கதைச்சு முடிவெடுக்கலாம்” திடீரென அக்சராவின் கைகளைப் பிடித்துக்கொண்டான் நிர்மலன்.

அக்சரா அருகே இருந்த அப்பிள் வெட்டுவதற்கான கத்தி ஒன்றை எடுத்துக் கொண்டாள்.

”கதைப்பதற்கு நேரமில்லை. கிட்ட வராதை, தொடாதை, குத்துவன்” கத்தியை நெஞ்சிற்கு முன்னே நீட்டினாள்.

நிர்மலன் பயந்தே போனான். இப்பவும் நெஞ்சு படபடக்கின்றது. இதுவரை காலமும் எதுவும் பிடிகொடாத வகையில் நடந்திருக்கின்றாளே!

“சத்திரசிகிச்சை சக்சஸ்” தாதி ஒருத்தி வெளியே வந்து சொன்னாள். அந்த நல்ல சேதியைக் கேட்பதற்கு நிர்மலன் தவராசா ஈஸ்வரி என்ற மூன்றுபேருமே அங்கு இருந்தார்கள்.

“மோகனகுமாரின் உறவுக்காரர்கள் யாராவது நிற்கின்றார்களா? யாராவது நின்றால், நடமாட முடியாத அவருக்கு ஒத்தாசையாக இருக்கும்” தொடர்ந்தாள் தாதி. ஈஸ்வரியினது தவராசாவினதும் முகங்கள் நிர்மலனை உற்று நோக்கின.

“நான் நிற்கின்றேன். நான் தானே அவருக்கு மருமகன்” மனம் நினைத்தது. உடல் செயலில் இறங்கியது. நிர்மலன் வாங்கில் இருந்து எழுந்து தாதியின் பின்னால் போகின்றான்.

தவராசாவும் ஈஸ்வரியும் அவன் போவதைப் பார்த்தபடி நின்றார்கள்.

மோகனகுமார் தனக்கு மாமா என்பதைத்தவிர அவனது மனதில் வேறு எதுவுமில்லை.

Series Navigationயாப்பிலக்கண நூல்கள்: ஓர் அறிமுகம்கவிதை
author

கே.எஸ்.சுதாகர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *