தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 24 – தூரப் பிரயாணம்

This entry is part 9 of 12 in the series 27 டிசம்பர் 2020

 

தூரப் பிரயாணத்”தில் பாலியின் பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தின் தாத்பர்யம் என்னவென்று  அறிவது ஒரு சவாலாக இருக்கிறது. ஏனென்றால் ஒரு காரணத்தை வைத்து இந்த தாத்பர்யத்தைக் கணித்திருந்தால்  மற்ற விசேஷ அம்சங்களை நாம் தவற விட்டிருப்போம் என்னும் உறுதியான எண்ணம் இக்கதையைப் பலமுறை படித்த பின் தோன்றுகிறது.   ஜானகிராமனின் சம்பாஷணைகள் கத்தி மேல் நடப்பது போன்ற லாகவத்தைத் தம்முள் அடக்கிய வண்ணம் இருப்பது இந்தச் சிறுகதையில் விஸ்தாரமாகவே வந்திருக்கிறது. 

கல்யாணமாவதற்கு முன், பாலியின் நட்பில் இருந்த ரங்கு அவளுக்குத் திருமணமான பின்னும், ஏன் அவனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை பிறந்துவிட்ட பின்னும் அவளைத் தேடி வந்து கொண்டிருக்கிறான். ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருஷம் அல்ல.பனிரெண்டு வருஷமாக மதுரையிலிருந்து மெட்ராஸுக்கு பாலியின்  வீட்டிற்கு இரண்டு மாதம், மூன்று மாதத்திற்கு ஒரு முறை வந்த  வண்ணமாயிருக்கிறான்.

அப்படி ஒரு நாள் ரங்கு பாலியின் வீட்டு வாசலில் வந்து நிற்கும் போதுதான் இந்தக் கதை ஆரம்பிக்கிறது. பாலியின் 

அழகும் செயல்களும்  இந்த வார்த்தைகளில் :”  பாலியின் உருண்டு திரண்ட கைகள்,தோள்கள்,பெரிய நீலம் ஓடிய நனைந்தாற் போன்ற கண்கள், ஒரு வகையிலும் சேர்க்க முடியாத சந்தனக் கட்டை வர்ணம், அளந்து அளந்து உனக்கு இந்த அர்த்தம், உன் அத்தைக்கு இந்த அர்த்தம், உங்களுக்கு இந்த அர்த்தம் என்று ஒரே வார்த்தையில் நான்கு அர்த்தம் தெரிவித்த பேச்சு, ஆளுக்கு ஒரு வகையான புன்முறுவல் – கடைசியாக, கையிலும் காலிலும் நீண்டு குவிந்த விரல்கள், வழவழவென்று குழைந்த கைகள். எப்படிப் பார்த்தாலும் எடுப்பாக இருந்த முகம், நீண்டு முதுகில் புரண்ட பின்னல், யாரையும் லக்ஷியமே செய்யாதது போன்ற நடை, அவள் வாசலில் சாமான் வாங்குகிற சாமர்த்தியம், கண்டிப்பு . இது எல்லாம் ரங்குவின் பார்வை போலத் தோன்றுகின்றன. ஆமாம் – “போல”    

1.வந்த விருந்தாளிக்காக “இன்னும் இரண்டு ஆழாக்கு பால் கொடுப்பா” என்று சொல்லும் பாலி அவனிடம் “அட எப்ப?” என்று வரவேற்கிறாள். “அந்தப் ,புன்முறுவலுக்கு எவ்வளவோ அர்த்தமுண்டு. அவளுக்கு எவ்வளவோ தினுசாகப் புன்னகை பூக்கத் 

தெரியும். ஆனால் இந்தப் புன்முறுவல் இவனுக்குத்தான்! வேறு யாருக்கும் அதைக் காணவோ அதன் குளுமையில் நனைந்து புல்லரிக்கவோ முடியாது. உரிமை கிடையாது. அதாவது உரிமை உள்ளவனுக்குக்கூட முடியாது, கிடையாது என்று அவனுக்குத் தெரியும். ‘யார் என்ன சொன்னாலும், செய்தாலும் யார் என்மீது உரிமை கொண்டாடினாலும்நான் முழுதும் உனக்குத்தான். முழுவதும்தான் ! ஆமாம். இந்தப் பொங்கிக் குலுங்குகிற வனப்பும் செழிப்பும் மலர்ந்து விரியும் நெஞ்சமும் உனக்குத்தான்’ என்று சொல்லுகிற புன்முறுவல் அது.”

2. “நீ வரபோதெல்லாம் அவர் தூங்கிண்டுதான் இருக்கார்.” அவன் முகம் இந்த இங்கிதத்தைக் கண்டு வியப்பில் ஒளிவிட்டது. இதன் முழு அர்த்தமும் அவனுக்குத்தான் தெரியும்.

3.”இந்தக் காப்பி எனக்கு மெட்ராஸ்லேதான் கிடைக்கிறது.” “மெதுவாடா, மெதுவா! உங்க ஆமடையா காதுலே இதையெல்லாம் போட்டு வைக்காதே !”.இந்தக் கேளிக்கைப் பேச்செல்லாம் அவள் வாயைப் பிடுங்கிப் பிடுங்கிக் கேட்கும் போது அவனுக்கு மெய் முழுவதும் – ஒவ்வொரு மயிர்க்காலும் மகிழ்ந்து மலர்ந்தது.

இப்படியெல்லாம்  ரங்கு தனது மனதில் நினைத்துக் கொண்டு அகமகிழ்கிறான் என்றுதான் நான் நினைக்கிறேன். பாலி இதில் கலந்து கொள்கிறாளா? இதற்கு முக்கிய காரணம் அவள் பின்னால் நடந்து கொள்ளும் முறை. பனிரெண்டு வருஷப்  பழக்கத்தின் ஆரம்பத்தில் பாலி அவளது அழகின் உச்சத்தில் இருந்த போது ரங்கு கொண்ட மயக்கம் இன்றும் தீராமல் நினைவுகளை அதற்குள் போட்டு முயங்குகிறான். அதனால் அவனிடம் இப்போது எதற்கு இங்கே வந்தாய் என்று பாலி 

கேட்பதை அவனால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அவள் கேள்வி சம்பந்தமில்லாமல் இருக்கிறது என்று நினைக்கிறான். சில சமயம் அவள் மனதின் ஆழம் அவளுக்கே தெரியாது என்று நினைக்கிறான்.

பாலி அவனிடம் “ரங்கு, நீ நிஜமா ஆபீஸ் வேலையாதான் வந்திருக்கியா?”

“இல்லாவிட்டால் வரப்படாதோ?” என்று கேட்டுக் கொண்டே மாட்டியிருந்த போட்டோக்களைப் பார்த்தான் அவன்.

“அப்படீன்னா, ஆபீஸ் வேலையா வரலையா நீ?”

அவன் அவளைத் திரும்பிப் பார்த்தான். அந்தக் கேள்வியைத் தவிர வேறு ஒன்றும் அந்த முகத்தில் தெரியவில்லை.

“ஏன்?” 

“பின்னே எதுக்கு வந்தே?”

“எதுக்கா?”

“ஒரு லெட்டர் போடப்படாதான்னு கேட்கிறேன்.”

“லெட்டர் போட்டால்தான் வரவேற்பு உண்டாக்கும்?”

அதன் பின்னர் சாப்பிட்டு முடிந்ததும் பாலி “இப்படீப் போயிட்டு வாயேன்” என்று அவனிடம் சொன்னாள்..

“பாலி, நீ என்ன சொல்றே? உன் சமுத்திர நெஞ்சில் முழுகத் தெம்பில்லை எனக்கு.”

அப்போது பாலி “அண்ணா உடம்பைப் பாத்தேல்லியோ? என்னவோ மஞ்சளும் குங்குமமுமாப் பொழைச்சேன். பத்து நாள் படுக்கையை விட்டு அசையவில்லை. வயிற்று வலி, மருந்துக்குக் கட்டுப்படற வலியாத் தோணலை. கடைசியில் பக்கத்துத் தெரு மாரியம்மனுக்கு வேண்டிக் கொண்டேன். ஒரு மண்டலம் – நாற்பத்தெட்டு நாள் – அடிப்பிரதக்ஷிணம் பண்ணுகிறதாக வேண்டிக் கொண்டேன். மகமாயி வயிற்றில் பாலை வார்த்தாள்.” என்றாள்   

  இதைத் தொடர்ந்து நடக்கும் பேச்சில் ரங்கு பாலியிடம் “முன்னூறு மைல் கண் விழிச்சு வந்திருக்கேன். எனக்கு உத்தியோகம் உயர்ந்தால் என்ன? உயராவிட்டால் என்ன?” என்கிறான்.

பாலி மறுபடியும் மௌனமாக நின்றாள்.

“மூணு மாசமா ஏங்கிண்டு  கடைசியில் புறப்பட்டு இவ்வளவு தூரம் வந்து…”

“ரங்கு, நீ ஊருக்குப் போயிடு !”

“என்னது?”

“இன்னிக்கி ராத்திரியே போயிடணும்.”

“பாலி…!”

“கிட்ட வராதேன்னா, வராதே ! ஆமாம்.”

அவன்  சிரித்துக் கொண்டே அவள் மோவாயைத் தட்டும் போது “சை , நீ ஒரு புருஷன் மாதிரி ! சொன்னாப் 

புரியறதே இல்லை !” என்று தண்ணீரை விட்டு மோவாயை அலம்பிக் கொண்டு வருகிறாள். ‘இப்படி அலம்பினால் எல்லாம் சுத்தமாகி விடுமா?’ என்று கேலி செய்து மறுபடியும்  அவன் அவளைத் தொடும் போது அவள் சுற்றின பாம்பைப் பிடுங்கி விடுகிறது  போல அவன் கைகளை உதறி எறிகிறாள். அழுகிறாள்.

ரங்கு பதறிப் போய் மன்னிப்புக் கேட்கிறான். அவன் உடனே ஊருக்குப் போகிறேன் என்று கிளம்புகிறான். அவள்  அவனிடம் இனிமேல் மெட்ராஸ்  வரவேண்டாம் என்று சொல்லுகிறாள். வாசலில் பால்மணி கேட்கிறது. பால் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு பாலி போய் “இரண்டுஆழாக்குப் போதும் ” என்று வாங்கிக் கொள்கிறாள்.பாலில் ரங்கு சுற்றிச் சுற்றி வருவது போல் இருக்கிறது. 

பாலியின் மனமாற்றத்திற்குக் காரணம் அவளது கணவர் செத்துப் பிழைத்ததாலா? அவருக்கு நேர்ந்த மோசமான உடல் நிலைக்கு ரங்குவுடனான தனது உறவுதான் என்று நினைத்து அதனால் ரங்கு வரும் போது அவனை மறுக்கிறாளா? இதுதான் 

பிரத்யட்சய  நிலை என்றால் கதையின் முன்பகுதிகளில் வரும் பாலியின் உடல், அழகு பற்றிய வருணனைகள், அவள் அவனிடம் காட்டும் கரிசனம், அவளது வார்த்தைகளுக்கான விசேஷ அர்த்தங்கள் எல்லாம் ரங்குவின் மன அவசங்கள்தாமா? ஆம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. கதை நடக்கும் அன்று இவ் விவகாரங்களில் பங்கு கொள்ளாது பாலி  தனித்து ஒதுங்கி நிற்கின்றாள் என்றுதான் நாம் ஏற்றுக் கொள்வதை ஜானகிராமன் எதிர்பார்க்கிறார். ரங்கு தனது பழைய நினைவுகளின் சௌகர்யத்தில் திளைத்து  நிகழ்காலத்தையும் உருவாக்கிக் கொள்ள நினைப்பதால் பாலியின் மனதில் ஏற்பட்டுவிட்ட இம் மாறுதல்களை 

அவன் உணர முடியாதவனாகி நிற்கிறான்,       

தூரப் பிரயாணத்தில் ரங்குவையும், பாலியையும் தவிர ஒரு மூன்றாம் பாத்திரமாக ஜானகிராமனும் நடமாடுகிறார். தூரத்தில் நின்று கொண்டு.

Series Navigationதோள்வலியும் தோளழகும் – இராமன்தோள்வலியும் தோளழகும் – இராவணன்
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *