குருட்ஷேத்திரம் 17 (அதர்மத்தின் மொத்த உருவமாக அவதரித்த துரியோதனன்)

This entry is part 4 of 10 in the series 26 செப்டம்பர் 2021

 

 

 

எந்த இரவும் விடியாமல் இருந்ததில்லை. காலம் யாரை அரியணையில் உட்கார வைக்கும், யாரை கையேந்த வைக்கும் என யாருக்கும் தெரியாது. எது வெற்றி? எது தோல்வி? தோற்றவர்களும், ஜெயித்தவர்களும் மரணத்தை முத்தமிடத்தானே வேண்டும். புரியவைக்கிறேன் பேர்வழி என்று யாரும் களத்தில் இறங்கக் கூடாது, புரியவைக்க வேண்டுமென்றால் படைத்த கடவுளே புரியவைப்பார். காரணமின்றி எந்த உயிரும் இவ்வுலகில் ஜனிப்பதில்லை. அன்பை போதிக்கும் நாம் பேரழிவு காலங்களில் முதலில் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள நினைக்கிறோம். மனஉலகில் நல்லெண்ணங்களும், தீயஎண்ணங்களும் போராடிக் கொண்டிருக்கின்றன. இப்படியும் மனிதர்கள் உண்டா என சில சமயங்களில் நினைக்கத்தானே வேண்டியிருக்கிறது. அவர்களுக்கும் தர்மம் என்றால் என்னவென்று வாழ்க்கை கற்றுக் கொடுக்காமல் விட்டுவிடுமா? இந்தப் பூவுலகில் தர்மமும், அதர்மமும் களம் காணுகின்றன. சத்தியத்தின் வழி நிற்பவன் தோற்றாலும் சுவர்க்கம் புகுவான் என்கிறது பகவத்கீதை.

 

வியாசர் மகாபாரதக் கதையின் மூலம் அறத்தின் குரலை முன் நிறுத்துகிறார். தர்மவாதிகளும் வெற்றிபெற நியதியை மீறவே செய்கிறார்கள். மகுடத்துக்காக மண்ணில் இரத்தம் சிந்தப்படுகிறது. வெற்றியை இலக்காகக் கொண்டவர்கள் தர்மகிரந்தம் சொல்லும் நியதியை தங்கள் செளகரியத்துக்காக மறந்துவிடுகிறார்கள். தர்மத்தின் பக்கம் நிற்பவர்கள் இந்த உலக சேற்றிலிருந்து நீர்ப்பூவைப் போல மேலுயர்ந்து நிற்கிறார்கள். யுதிஷ்டிரன் மகுடம் சூட்டிக் கொண்டபோது அரண்மனைக்கு வெளியே இரத்த் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. பரமாத்மாவும், ஜீவாத்மாவும் தர்மநியதிகளுக்கு முன்பு சிறுதூசுதான். சத்தியம் நிலைநிறுத்தப்படும் வரை இவ்வுலகம் தனது அச்சில் சுழன்று கொண்டுதான் இருக்கும். வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் தெரியும் சாம்ராஜ்யங்கள் எப்படி சீட்டுக்கட்டாய் சரிந்தன என்பது. எது ஜெயம்? இரத்த சொந்தங்களான தாயாதிகள், பாட்டனார், குரு இவர்கள் வீழ்ந்து கிடக்கும்போது மகுடம் சூட்டிக் கொள்வதா? வாழ்க்கை கண்டிப்பான ஆசிரியன் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

 

பீஷ்மர் காந்தார தேசத்து மன்னன் சுபலனுக்கு ஓலை அனுப்பியிருந்தார். அவ்வோலையில் சுபலன் மகள் காந்தாரியை அங்ககீனமான திருதராஷ்டிரனுக்கு மணம் முடிக்க கேட்டிருந்தார். சுபலன் குருடனுக்கா தன் மகளை கொடுப்பது எனத் தயங்கவே, சுபலன் மகனும் காந்தார தேசத்து இளவரசான சகுனி இந்த விவாகம் நமது தேசத்தை அரணாக காக்கும் என எடுத்துக்கூறி சம்மதிக்க வைத்தான். இதற்கு காரணமாக சகுனி சொன்னது குருதேசத்தின் சம்மந்தி என்றால் எந்த தேசமும் காந்தாரத்தின் மீது படையெடுக்கத் தயங்கும் என்பதே. பிறந்த வீட்டு சீதனத்தோடு சகுனியுடன் அஸ்தினாபுரம் நோக்கிப் புறப்பட்டாள் காந்தாரி. அஸ்தினாபுரத்தைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களும், மந்திரிப்பிரதானிகளும் காந்தாரியை எதிர் சென்று வரவேற்றார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பேரரசி சத்தியவதியும், பிதாமகர் பீஷ்மரும் நேரில் வந்து காந்தாரியை வரவேற்று அழைத்துச் சென்றார்கள். சத்தியவதி காந்தாரியிடம் இனி அஸ்தினாபுரம் தான் உன் தாய்வீடு, குருதேசத்தின் மாண்பினை நீதான் காக்க வேண்டும் என்றாள். பீஷ்மரும் உன்னுடைய குணம் அறிந்துதான் நானும் பேரரசியும் உன்னைப் பட்டத்து இளவரசியாக தேர்ந்தெடுத்தோம் எங்களுடைய தேர்வு வீண்போகாது என்று நீதான் நிரூபிக்க வேண்டும் என்று சிரசில் கை வைத்து ஆசிர்வதித்தார்.

 

பீஷ்மரின் உள்ளம் போன்றே காந்தார தேசத்தைவிடவும் குருதேசம் அளவில் மிகப்பெரியதாக இருந்தது. உப்பரிகையில் நின்று பார்க்கும் போது தோட்டம் தெரிந்தது. ரம்யமான அரண்மனை சூழல் மாலையில் சகுனி காந்தாரியை சந்திக்க வந்தான். காந்தாரி உன்னுடைய பேச்சினால் எல்லோருடைய மனதிலும் இடம்பிடித்துவிட்டாய். நாளை முறைப்படி உனக்கும் திருதராஷ்டிரனுக்கும் திருமணம். உனக்கு வாய்க்க இருப்பவன் யானை போன்ற பலசாலி. அவனுடைய அரசியல் சாணக்கியத்தனமே குருதேசத்தை வழிநடத்திச் செல்கிறது. திருதராஷ்டிரன் ஒப்பற்ற ஆண்மகன் அவனுக்கு ஈடுஇணையானவர்கள் உலகத்தில் இல்லையென்றே சொல்லிவிடலாம் அந்த வீரனுக்கு ஒருசிறு குறை அதை நீ பொருட்படுத்த மாட்டாய் என்றே நினைக்கிறேன் என்றான் பூடகமாக. இருக்கையிலிருந்து துணுக்குற்று எழுந்த காந்தாரி என்ன குறை என விசாரித்தாள். திருதராஷ்டிரன் புறக்கண்கள் இல்லாதவன் அந்தகன் என்றான். அவர் பார்வையற்றவரா என காந்தாரி உள்ளம் உடைந்து போனாள். கண்களை கறுப்புத்துணியால் கட்டியிருந்த காந்தாரியை சத்தியவதியும், அம்பிகாவும் வந்து பாரத்தனர். நீதான் அவனுக்கு கண்ணாக இருக்க வேண்டும் பிடிவாதம் பிடிக்க வேண்டாம் துணியை அகற்றிவிடு என வேண்டிக்கொண்டனர். மறுத்த காந்தாரியின் வைராக்கியம் அவர்களை மிரளச் செய்தது. கணவரைப் போன்றே எனக்கும் அகக்கண் மட்டுமே போதும் என்று சொல்லிவிட்டாள்.

 

திருமணத்தன்று இரவு காந்தாரியிடம் தன் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினான் திருதராஷ்டிரன். காந்தாரி பார்வைக் குறைபாடு என்பது முற்பிறவியில் நான் செய்த தீவினையால் அடையப் பெற்றிருக்கலாம். உன் கண்களைக் கொண்டு நான் இவ்வுலகைக் காணலாம் என்றிருந்தேன். நானோ பிறவிக் குருடன் நேற்று வரை நீ உலகைப் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தவள் எதனால் இந்த முடிவுக்கு வந்தாய் என்றார். ஐம்புலன்களில் ஒன்றை இழந்து நிற்பதற்குண்டான வேதனையை நான் மட்டுமே அறிவேன் காந்தாரி எனப் புலம்பினான். விழிகளால் பார்த்து அனுபவிக்கும் சுகத்தை இறைவன் உங்களிடம் பறித்துக் கொண்ட போது எனக்கும் மட்டும் எதற்கு என்று பதிலளித்தாள். காலச்சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. காந்தாரி கர்ப்பவதியானாள். வியாசர் அவளுக்கு நூறு புத்திரர்களை அருள்பாலித்து இருந்தார். திருதராஷ்டிரன் வனத்தில் குந்தி பாண்டுவின் வாரிசை பெற்றெடுக்கும் முன்பாக காந்தாரி பிரசவித்து விடவேண்டும் என பிரார்த்தித்தான். தனது அரசியல் எதிர்காலத்தோடு சம்பந்தப்பட்டது இது என்று அவன் கருதினான். ஆனால் தருமனை குந்தி பெற்றெடுத்த பின்பே காந்தாரிக்கு துரியோதனன் பிறந்தான். துரியோதனன் பிறந்த போது நிகழ்ந்த சகுனங்கள் நல்லதற்கல்ல என்று ஜோதிடர்கள் கணித்துச் சொன்னார்கள். துரியோதனன் பிறப்பை பேய்கள் கொண்டாடுவதாக கூறினர். அதர்மத்தின் பிரதிநிதியாகத்தான் அவன் இவ்வுலகில் இருப்பான் என்று கூறினார்கள். அவனால் குருதேசம் பேரழிவுக்கு உள்ளாகுமென்றும் குலநாசம் ஏற்படும் என்று எச்சரித்தார்கள். செய்தி அறிந்த விதுரர் திருதராஷ்டிரனிடம் குருதேசத்தின் நலன் காக்க துரியோதனனை பலியிடச் சொல்லி கேட்கிறார். அதுவே அறம் என்று மேற்கோள்களைக் காட்டுகிறார். உலக நலனுக்காக ஒருவனை பலியிடுவதில் தவறில்லை என்கிறார். அதற்கு திருதராஷ்டிரன் சம்மதிக்கவில்லை. அவன் என் உதிரம் என்கிறான். கடைசிவரை துரியோதனனின் செயல்பாடுகளை திருதராஷ்டிரன் ஏன் எதற்கென்று தட்டிக் கேட்கவுமில்லை கண்டிக்கவுமில்லை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவுமில்லை துரியோதனன் மீது பொய்க் கோபம் கூட கொண்டதில்லை அவன்.

 

வனத்தில் பாண்டு இறக்க குந்தி ஐந்து புதல்வர்களோடு அஸ்தினாபுரம் வருகிறாள். கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் துரோணரே தனுர் வேதத்தை பயிற்றுவிக்கிறார். அர்ச்சுனன் நிகரற்ற வில்லாளியாக உருவெடுக்கிறான். பீமனின் வாயைவிட அவன் கையிலிருக்கும் கதாயுதமே பேசுகிறது. தருமனுக்கு பட்டத்து இளவரசனாக முடிசூட்டியது துரியோதனனுக்கு வேப்பங்காயாக கசந்தது. துரியோதனனின் அரக்கு மாளிகைத் திட்டம் பாண்டவர்களைக் கொல்வதற்கு எனத் தெரிந்தும் திருதராஷ்டிரன் கல்மனதுடன் அதற்கு அனுமதி அளிக்கிறான். விதுரரின் மதி பாண்டவர்களை அந்தக் இக்கட்டிலிருந்து காப்பாற்றியது. விதுரர் கடைசி வரை தர்மதேவதையாகவே நடந்து கொள்கிறார். அதனால் விதுரரை வெறுத்தான் துரியோதனன். இதற்கெல்லாம் மேலாக தாசி மகன் என அவர் குலத்தை, பிறப்பை இழிவுபடுத்தினான். இக்காரணத்தினால் தான் பாண்டவர்களுக்கு எதிரான யுத்தத்தில் விதுரர் ஆயுதமேந்தவில்லை. இதற்கு துரியோதனன் மீது அவருக்கு இருந்த வெறுப்பு தான் காரணம் என்பதை விடவும் நீதியின் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கையே மேலான காரணம்.

 

துரியோதனன் கர்ணனைக் கண்டடைந்தான். அதிவிரதன் என்ற தேரோட்டியின் வளர்ப்பு மகனான கர்ணனுக்கு அங்கதேச நாட்டைத் தந்து அவனை அரசனாக்கி அழகு பார்த்தான் துரியோதனன். வில்லாற்றலில் அர்ச்சுனனுக்கு நிகரான கர்ணன் துரியோதனின் ஆன்மாவாக ஆனான். இந்திரப்ரஸ்தத்தில் மயன் உருவாக்கிய அரண்மணைக்கு பாண்டவர்களின் அழைப்பினை ஏற்றுச் சென்ற துரியோதனன் தரை என்று நினைத்து தண்ணீரில் கால் வைக்க அதைப் பார்த்து அர்ச்சுனனும், பீமனும் வெடிச்சிரிப்பு சிரித்தனர் கூடவே திரெளபதியும் சேர்ந்துகொண்டாள். இந்தக் கேலிச் சிரிப்பு தான் துரியோதனன் பாஞ்சாலி மீது பேராத்திரம் கொள்ளக் காரணம். திரெளபதியின் கேலிச் சிரிப்பு குருதேசத்தை போருக்கு இட்டுச் சென்றது. நடந்த அவமதிப்பை துரியோதனன் கூறக் கேட்ட சகுனியின் மூளையில் ஒரு திட்டம் உதித்தது. எதிர்ப்பது மூடத்தனம் சூழ்ச்சியால் வீழ்த்துவதே புத்திசாலித்தனம் என்ற முடிவுக்கு வந்தவனாய் அஸ்தினாபுரத்தில் மாளிகை எழுப்பி பாண்டவர்களை அழைக்க விதுரரை இந்திரப்ரஸ்தம் அனுப்பினான்.

 

தருமனுக்கு சூதாட்டத்தில் அப்படியொரு வெறி. விருந்து முடிந்தவுடன் ஆடிப்பார்க்கலாம் என்று சகுனி அழைக்க முன்யோசனை சிறிதுமின்றி ஒப்புக் கொண்டான். பகடைக் காய் உருண்டது முத்தை வைத்து ஆடியதில் தொடங்கி இறுதியில் தர்மபத்தினி பாஞ்சாலியைப் பணயம் வைத்து ஆடியதில் போய் முடிந்தது. சிலமணி நேரத்திலேயே தேசம், சகோதரர்கள், மனைவி என எல்லாவற்றையும் இழந்து நின்றான் தருமன். பகை முடிக்க சரியான சந்தர்ப்பம் அமைந்தது துரியோதனனுக்கு. துச்சாதனனைப் பார்த்து சபைக்கு இழுத்து வா பாஞ்சாலியை என்றான். துச்சாதனன் சபையோர் முன்னிலையிலேயே பாஞ்சாலியின் சேலையை உருவினான். கர்ணனும் துரியோதனனும் உடலெங்கும் கண்ணாக பாஞ்சாலி உருக்குலைந்து நிற்பதை பரவசத்துடன் பார்த்தனர். சபையில் பாஞ்சாலி அவமானப்பட அவளது பேரழகே காரணமாக அமைந்தது. மகாபாரதத்தில் துரியோதனனின் முடிவு நமக்கு ஒரு பாடம்.

 

Series Navigationஇந்தியா இருமுறை எரிசக்தி இணைப்பில் [Hybrid Energy Integrated System] மின்சக்தி பெருக்கத் திட்டங்கள்குருட்ஷேத்திரம் 18 (மாத்ரிக்கு தீராப்பழி வந்து சேர்ந்தது)
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *