கே.எஸ்.சுதாகர்
ஞாயிற்றுக்கிழமை. காற்று சூறாவளி போல கதவு ஜன்னல்களை அடித்து, செந்தில்வாசனின் உறக்கத்தைக் கலைத்தது. அவுஸ்திரேலியாவின் காலநிலை மனிதர்களை நள்ளிரவிலும் உறக்கம் கொள்ள விடாது. பாதி விழிகள் மூடியிருக்க, அருகேயிருந்த தனது கைபேசியைத் தடவி எடுத்தார் செந்தில்வாசன்.
ஏதாவது மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றனவா எனப் பார்த்துவிட்டு முகப்புத்தகத்திற்குத் தாவினார்.
“ரீ வைச்சிருக்கிறன். ஆற முதல் குடியுங்கோ!” சொல்லிவிட்டு, பிள்ளைகளை ரியூசனுக்கு அனுப்புவதில் முனைந்தார் மனைவி உமா.
முகநூலைத் தட்டிக்கொண்டு வந்த செந்தில்வாசன் பேயறைந்தது போலானார். முகப்புத்தகத்தில் இருந்த பேய் ஒன்று, ஹோட்சிமின் சிற்றியின் பின்புலத்திலிருந்து அவரை எட்டிக் காலால் உதைத்தது. உதட்டுக்கு ஸ்ரோபரிக் கலரில் அள்ளி அப்பி `இந்தா கொழக் எண்டு விழப்போகின்றேன்’ எனத் துள்ளித்ததும்பி நிற்கும் லிப் ஸ்ரிக். நீண்டு, இடதும் வலதுமென தலை மயிரைத் தொட்டுவிடத் துடிக்கும் கண் புருவங்கள். கரு நாகமெனப் படமெடுத்தாடும் செயற்கையான இமைகள். உதட்டுக்குள் அடங்காமல் உருக்கொண்டு ஆடும் பற்கள்.
செந்தில்வாசன் தன் பெருவிரலையும் சுட்டுவிரலையும் ஒன்றாக இணைத்து, கைபேசியின் திரையருகே கொண்டு சென்று, அந்தப் படத்தை விரித்து விரித்துப் பார்த்தார். சந்தேகமில்லை. அவள் ராமின் மனைவியே அல்ல. வினோதமும் திகைப்பும் கலந்த கலவையில், அவர் அவளை உற்றுப் பார்த்தார்.
“எங்கே இவளைப் போய் பிடித்தான்?”
கைபேசியைப் படக்கென மூடி வைத்துவிட்டு, வானத்தை வெறித்துப் பார்த்தார். இப்போது வியட்நாமில் என்ன நேரம் இருக்கும்? மெல்பேர்ணைவிட நான்கு மணித்தியாலங்கள் குறைவாக இருக்கலாம்.
அதிகாலைச் சூரியன் முகில்கூட்டங்களிடையே வர்ணங்களை ஸ்பிறே செய்துகொண்டு வந்து கொண்டிருந்தான்.
ராம் கூட ஒரு ஸ்பிறே பெயின்ரர் தான். அதுவும் முதல் தரமான ஸ்பிறே பெயின்ரர். அவனை ஒரு கணம் நினைத்துக் கொண்டார். சமீபத்தில் நடந்த சம்பவமொன்றிற்குத் தாவிக் கொண்டார்.
கார் உற்பத்தித் தொழிற்சாலையில் வேலை ஆரம்பமாவதற்கு சில நிமிடங்கள் தான் இருந்தன. செந்தில்வாசன் ரோபோக்களை ஒவ்வொன்றாகப் பரிசீலித்துக் கொண்டிருந்தான். தினமும் வேலை ஆரம்பமாவதற்கு முன்னர் செய்யும் வேலை தான். விண்வெளி வீரர்கள் போல் உடையணிந்த ஆறு தொழிலாளர்கள், ரோபோக்கள் அமைந்திருந்த இடத்துக்கு அடுத்த பகுதியில் நின்று தமது ஆரம்பப்பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள். ரோபோக்களுக்கும் மனிதர்களுக்கும் இங்கே தனித்தனி கண்ணாடிக் கூண்டுகள். ரோபோக்களினால் காரின் வெளிப்புறங்களை மாத்திரமே ஸ்பிறே செய்ய முடியும். கார் பொனற், கதவுகள், பூற்லிட் என்பவற்றைத் திறந்து ஸ்பிறே செய்வதற்காக தொழிலாளர்கள் காத்திருந்தார்கள்.
திடீரென உள்ளிருந்து கதவைத் திறந்தபடியே வெளியே வந்தான் ராம்.
“சேர்! உங்களுடன் ஒன்று கதைக்க வேண்டும்.”
“ராம்… அவசரம் கதைக்க வேண்டும் என்றால் பத்து நிமிடங்களில் உமக்குப் பதிலாக இன்னொருவனை மாற்றி விடுகின்றேன். அவசரம் இல்லையென்றால் சுமோக்கோ நேரத்தில் கதைக்கலாம்.”
ராம் தயங்கினான். தலையைச் சொறிந்தான். “பிறகு கதைப்போம் சேர்!” தலையை ஆட்டியபடியே உள்ளே போனான். வேலை ஆரம்பமாவதற்கான மணி அடித்தது.
தேநீர் இடைவேளையை அவர்கள் இருவரினதும் உரையாடல் விழுங்கியது.
“சேர்… எனது மனைவிக்கு கான்சர். இன்னும் ஆறுமாதங்கள் தான் இருப்பார்” கவலையுடன் ராம் சொன்னான். அந்தச் செய்தி செந்தில்வாசனுக்குப் புதியது. எப்படி அவனைத் தேற்றுவது என்று அவருக்குப் புரியவில்லை.
“கேட்பதற்குக் கவலையாக இருக்கின்றது. உனக்கு லீவு வேண்டுமா? மனேஜருடன் கதைத்து ஒழுங்கு செய்கின்றேன். மூன்று மாதங்கள் வரையில் எடுக்கலாம்.”
“லீவு ஒன்றும் வேண்டாம் சேர். அவளை ஒருதடவை வீட்டிற்கு வந்து பாத்துவிட்டுப் போங்கள். எங்களுக்கு உறவினர்கள் என்று ஒருவருமே இல்லை. நண்பர்களும் சிலர் தான். எனக்கு இங்கே கூட நண்பர்கள் என்று பெரிதாக இல்லை. வேலை… வீடு… வேலை… வீடு என்று இருந்துவிட்டேன்.”
“கவலைப்படாதே ராம். நானும் எங்கள் குறூப்பில் இருக்கின்றவர்களும் இந்தச் சனிக்கிழமை வீட்டிற்கு வருகின்றோம். போர்மனையும் அழைத்து வரப் பார்க்கின்றேன்.”
ராம் உடனே அழத் தொடங்கிவிட்டான். அவனுக்கு இன்னும் ஏதோவெல்லாம் சொல்வதற்கு இருந்தன.
“மனைவி கூட மூன்று மாதங்களுக்கு முன்னர் வரை வேலை செய்துகொண்டுதான் இருந்தாள். அவள் கூட ஒரு கடின உழைப்பாளி. நாங்கள் இருவரும் இரவு பகல் பாராது உழைத்து, வீட்டுக்கடனை அடைத்துவிட முயற்சி செய்தோம். ஊரில் எங்கள் குடும்பத்திற்கும் காசு அனுப்பினோம். எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். ஆறும் மூன்றும் வயதுகள். மூத்தவன் `ஓட்டிசம்’ ஸ்கூலுக்குப் போய் வருகின்றான்” சொல்லிக் கொண்டே போனான் ராம்.
செந்தில்வாசனுக்கு அவனது குடும்ப வாழ்வின் அந்தரங்கங்களை அழுத்திக் கேட்க விருப்பம் இருக்கவில்லை. என்ன ஆறுதல் சொல்வது என்றும் புரியவில்லை. அவனது முகவரியைப் பெற்றுக்கொண்டு, கையைப் பிடித்து இறுக அழுத்தி விடை கொடுத்தார்.
ராம் எந்த வேலை என்றாலும் மறுத்துச் சொன்னது கிடையாது. எங்கே போகச் சொன்னாலும் போய் விடுவான். `பூம் பூம் மாடு’ போல எதுக்கும் தலை ஆட்டுவான். தொழிற்சாலையில் அவனைப்பற்றி எந்தவித முறைப்பாடுகளும் வந்தது கிடையாது.
ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பிரச்சினைகள் போல, வியட்நாமியர்களுக்கும் உண்டு என்பதை செந்தில்வாசன் அறிவார்.
ராமின் வீட்டிற்குச் செல்வதற்கு திட்டமிட்டு, இன்னும் எல்லாரும் வந்து சேராததால் வீட்டிற்கு முன்பாக மரநிழலில் ஒதுங்கி நின்றார்கள். கோடை காலம். வெப்பம் அதிகமாக இருந்தது.
பிறிம்பாங் ஷொப்பிங் சென்ரருக்கு சற்று முன்பாக, அவனது இரண்டு மாடிகள் கொண்ட வீடு இருந்தது. ஷொப்பிங் சென்ரர், பாடசாலை, பிரதான வீதி, மெடிக்கல் கிளினிக் எல்லாம் அண்மையாக இருப்பதால் அவனது வீடு பல இலட்சங்கள் தேறும். அவுஸ்திரேலியாவில் சிட்னிக்கு அடுத்தபடியாக மெல்பேர்ணில் வீடுகளின் விலை அதிகம்.
ராமின் மனைவிக்கு முப்பத்தாறு வயது. அவனுக்கு நாற்பத்தொன்று. இருவரும் கடின உழைப்பாளிகள் என்றபடியால், பெரியதொரு வீடு வளவு வாங்கி மோட்கேஜும் கட்டி முடித்துவிட்டார்கள்.
எல்லாரும் வந்து சேர்ந்த பின்னர் வீட்டின் கதவைத் தட்டினார்கள். ராம் தன் கடைசி மகனைத் தூக்கி வைத்திருந்தபடியே கதவைத் திறந்தான். பின்னாலே மூத்தவன் நின்றிருந்தான். பிள்ளைகளுக்கென்று வாங்கிச் சென்ற உடுப்புகள், விளையாட்டுப் பொருட்களை அந்தச் சிறுவனிடம் குடுத்தார்கள். மூத்த மகனிற்கும் பின்னால், ராமின் மனைவி சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்றாள். அழகு தேவதையான அவள், தன்னுடைய எதிர்காலத்தைத் தயார் செய்துவிட்டாள் என்பதை அவளது வரவேற்புச் சொல்லியது.
“டைலன்… சே தாங் யு” என்றாள் ராமின் மனைவி. அவன் அவர்கள் குடுத்த பொருட்கள் எல்லாவற்றையும் அப்படியே நிலத்தில் `தொம்’ என்று போட்டுவிட்டு உள்ளே ஓடினான். “சொறி… சொறி” என்றபடியே அவள் எல்லாப் பொருட்களையும் தூக்கிப் பத்திரப்படுத்திக் கொண்டாள்.
உட்புற வாசலில் பொன்னிறத்தில் ஆளளவு புத்தா சிலை ஒன்று வீற்றிருந்தது. அவர் தன்னுடைய வண்டியை அகல விரித்து அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டிருந்தார். வீட்டிற்குள் தளபாடங்கள், அலங்காரப் பொருட்கள் என ஒரு குட்டி வியட்நாம் இருந்தது. எல்லாரும் அமர்வதற்கு போதுமான இருக்கைகள் இருக்கவில்லை. அவர்கள் இத்தனை பேர்கள் வருவார்கள் என எதிர்பார்த்திருக்கவில்லை. ராமும் மனைவியும் நின்றார்கள். அவர்களுடன் சென்றிருந்த ஒரு வியட்நாம் தம்பதியரில், கணவனின் மடியில் மனைவி இருக்கவேண்டிதாயிற்று. வியட்நாம் தம்பதியர் ராமின் மனைவியுடன் தங்களுடைய பாஷையில் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவளுக்கு அது மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏனையோர் மெளனமாக அவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
`ராமின் மனைவிக்கு அவளது கடின உழைப்புத்தான் எமனாகி இருக்க வேண்டும்’ என்பது அவர்களின் உரையாடலில் இருந்து தெரியவந்தது. ராம் கூட வாரத்திற்கு 38 மணி நேரம் வேலை செய்வதுடன், 30 மணித்தியாலங்கள் ஓவர்டைம் செய்துவிடுவான்.
“இவர் வியட்நாமிலிருந்து இங்கே வரும்போது ஒன்றும் கொண்டு வரவில்லை. அகதியாகத் தான் வந்தார். நண்பருடன் வாடகை வீட்டில் இருந்தார். பின்னர் ஐந்து வருடங்கள் கழித்து நான் வந்தபோது, நானும் ஒன்றும் கொண்டு வரவில்லை. ஆனா நான் அதிதியாக வந்து இவரைத் திருமணம் செய்து கொண்டேன். பிறகு இரண்டு பேருமாச் சேர்ந்து இந்த வீட்டைக் கட்டி முடித்தோம்” ராமின் மனைவி வளவளவென்று கதைத்தபடி இருந்தாள். ராம் நிலத்தை உற்றுப் பார்த்தபடி, மனைவி சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருந்தான்.
அறையின் ஒரு மூலையில் இருந்த மூத்தவன் கொம்பியூட்டர் கேம் விளையாடிக் கொண்டிருந்தான். அவனுக்குக் கீழே, அடுத்தவன் நிலத்திலே இருந்து ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தான். “டைலன்… லாம்… இஞ்சை வாங்கோ. வந்திருப்பவர்களுக்கு உங்கள் முகத்தை ஒருக்காக் காட்டுங்கோ” அவர்கள் இருவரையும் தாயார் சத்தமிட்டுக் கூப்பிட்டார். மூத்தவன் அங்கிருந்தபடியே தாயாரை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். தாயாரின் கூப்பாடு எல்லை மீறிப் போகவே, கடைசிப் பையன் தான் கீறிக்கொண்டிருந்த ஓவியங்களைக் கிழித்துவிட்டு, தன் காதுகளைப் பொத்தியபடி கத்திக்கொண்டு வீட்டிற்குள் ஓடினான். அவனது படம் கீறுதலை அம்மா குழப்பிவிட்டதாக ராம் சொன்னான்.
சிறிது நேரத்தின் பின்னர் வந்து தாயுடன் ஒட்டிக்கொண்டு நின்றான். பின்னர் திடீரென்று ஓடிச்சென்று சுவர் முழுக்க கலர் சோக்கினால் கீறினான். படு குழப்படிகள் செய்தான். அவனது செய்கைகள் அசாதாரணமாக இருந்ததை செந்தில்வாசன் நோட்டமிட்டார். அந்தப் பையனுக்கும் ஓட்டிசம் இருப்பதாக நினைத்தார்.
ராம் வந்திருந்தவர்கள் அனைவருக்கும் தண்ணீர்ப் போத்தல்கள் குடுத்தான். வீடு ஒரே வெக்கையாக இருந்தபோதிலும் ஒருவரும் நீர் அருந்தவில்லை. அவனும் வற்புறுத்தவில்லை.
ராமின் மனைவி அடிக்கடி வீட்டைச் சுத்தம் செய்தபடி இருந்தாள். குழந்தைகளின் குழப்படியின் வேகத்திற்கு அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை.
“வாருங்கள்… இப்படி வந்து இருங்கள்” என்று சொன்னபடியே தனது இருக்கையை விட்டு எழுந்தார் செந்தில்வாசன். அவள் இருக்கவில்லை. மீண்டும் நின்று கொண்டிருந்தாள். வீட்டை விட்டுப் புறப்படும்போது, “என்னை வந்து பார்த்ததற்கு மிக்க நன்றி” என்று கரம் கூப்பினாள்.
கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல்நாள் ராமின் மனைவி இறந்து போனாள். அவளது உடல் ஈமச்சடங்கு மண்டபத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. `தன்னை’ ஒரு தடவை வந்து பார்த்துவிட்டுப் போகமாட்டார்களா என்று கேட்ட அந்தப் பேதைப்பெண்ணை எல்லாரும் இறுதியாகப் பார்த்தார்கள். அன்று முழுவதும் ராம் மெளனமாகவே இருந்தான். ஒரு சொட்டுக் கண்ணீர் கூட அவன் கண்களிலிருந்து வரவில்லை. தொழிற்சாலையிலிருந்து பலரும் மயானத்திற்கு வந்திருந்தார்கள். செந்தில்வாசனின் கண்களுக்கு ராமின் குழந்தைகள் தென்படவில்லை. தூரத்தில் யாராவது வைத்திருக்கக் கூடும். புதைப்பதற்காக அவளின் உடலைக் குழிக்குள் இறக்கினார்கள். குரு போன்ற தோற்றத்தில் இருந்த ஒருவர் வியட்நாம் பாஷையில் சிறிது நேரம் உரை ஆற்றினார். அவரின் உரை தொடங்கியதும், ராம் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவன் போலக் காணப்பட்டான். உரை முடிந்தவுடன் கத்திக் குழறியபடி குழிக்குள் குதித்துவிட்டான்.
“என்னையும் சேர்த்து மூடுங்கோ… என்னையும் சேர்த்து மூடுங்கோ…”
அவனைத் தூக்கி எடுப்பது பெரும்பாடாகிப் போய்விட்டது. செந்தில்வாசனும் மனேஜரும் அவனுக்கு ஆறுதல் சொல்லி, உறவினர்களிடம் ஒப்படைத்தார்கள்.
அங்கே நின்றவர்களுக்கு, மதிய உணவாக ‘போக் ரோல்’, தண்ணீர்ப் போத்தல் குடுத்தார்கள். மயானத்தில் முதன்முறையாக அப்பிடியொரு அனுபவம் செந்தில்வாசனுக்குக் கிட்டியது. அவரால் சாப்பிட முடியவில்லை. வேண்டாமென்று மறுத்துவிட்டார்.
அன்று மாலை வேலையிடத்தில் கிறிஸ்மஸ் பார்ட்டி நடந்தது. ஒருநாளின் இருவேறு பொழுதுகளில் இரண்டு வேறுபட்ட மன நிலையில் எல்லாரும் இருந்தார்கள்.
தொடர்ந்து வந்த ஈஸ்டர் விடுமுறையின்போது ராம் வியட்நாம் போவதற்கு விரும்பினான்.
“சேர்… எனது பிள்ளைகளை தாத்தா பாட்டியைக் காண அழைத்துச் செல்ல விரும்புகின்றேன். பிறந்ததிற்கு இன்னும் அவர்கள் நேரில் என் பிள்ளைகளைப் பார்க்கவில்லை. எனக்கும் மன ஆறுதலாக இருக்கும். எனக்கு ஒரு மாதம் லீவு வேண்டும்.”
“அதுதான் நல்லது ராம். போய் வா.”
ராம் வியட்நாம் போய், மறுவாரத்தில் தான் இந்த அதிசயம் நிகழ்ந்தது.
“என்னப்பா ரீ ஒரே பச்சைத்தண்ணியா ஆறிப் போய் கிடக்கு. எங்கை கனவு கண்டு கொண்டிருக்கிறயள்?” சொல்லியபடியே தேநீரை எட்டிப் பார்த்த உமா, உள்ளே விழுந்து கிடந்து துடிக்கும் ஒரு பூச்சியைக் கண்டுகொண்டாள்.
“அது ஒரு பெண் பூச்சி” என்றபடியே அதை விரல் நுனியில் பிடித்து வெளியே விட்டார் செந்தில்வாசன். வெளியே வந்ததும் அது இறந்து போய்விட்டது.
செந்தில்வாசன் தான் முகநூலில் பார்த்ததை மனைவியிடம் சொல்வதா விடுவதா என்று குழம்பிப் போனார். அதற்கிடையில், அந்தப் படத்துக்குக் கீழே பல லைக்குகளும் கொமன்ஸ்களும் விழுந்துவிட்டன.
“உமா… இஞ்சை ஒருக்கா வாரும். இதை ஒருக்காப் பாரும். ஆர் எண்டு தெரியுதா?”
”தெரிகின்றது. நான்கு மாதங்களுக்கு முதல், உங்களோடை வேலை செய்யிற ஒருத்தன்ரை மனிசி கான்சரில் செத்துவிட்டாள் எண்டு செத்தவீட்டுக்குப் போய் வந்தீர்களே! அவன் தானே!”
“அவன் தான்… அவன் தான்… ஆனாப் பக்கத்திலை நிக்கிறது ஆரெண்டு தெரியுதோ?”
“அது அவன்ரை தங்கையாக இருக்கும். பாத்தா இருபது வயதுக்குள்ளை மதிக்கலாம் போல கிடக்கு.”
“அது அவன்ரை புதுப் பெண்டாட்டியப்பா…”
“உங்களுக்கு விசர்!”
“இஞ்சை பாரும்… கீழுக்கு எத்தினை கொமென்ஸ் வந்திட்டுது எண்டு… அவன்ரை எதிர்கால வாழ்க்கை சிறப்புற அமைய வேண்டும் எண்டு வாழ்த்துகள் போய்க் கொண்டிருக்கு…
உமக்கு நான் அவன்ரை முந்தின மனிசியின்ரை படத்தைக் காட்டவேணும். எக்கச்சக்கமான படங்கள் போட்டிருந்தவன்” சொல்லிக்கொண்டே ராமின் முகநூலை ஆராய்ந்தான் செந்தில்வாசன். ஒரு லட்சம் படங்கள் போட்டிருந்த, அவனின் இறந்துபோய்விட்ட மனைவியின் ஒரு படம் கூட அங்கிருக்கவில்லை. பிள்ளைகளின் படங்களையும் அகற்றியிருந்தான்.
“அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். இப்ப முகநூலிலும் தெரியுது” என்றாள் உமா.
“ஒரு பெண் தன் உழைப்பை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு மாளிகையைக் கட்டிவிட்டு, அங்கேயே சருகாகிவிட, அதை அனுபவிப்பதற்கென இன்னொரு பெண் தயாராகிவிட்டாள். அவள் இந்த நாட்டிற்கு வரும்போது அவளிடம் ஒன்றுமில்லை, இவள் இந்த நாட்டுக்கு வரும்போது இவளுக்கு எல்லாம் இருக்கின்றன.”
“அவன்ரை இரண்டு பிள்ளைகளுக்கும் ஒரு அம்மா வேணும் தானே! அவன் இன்னொரு கலியாணம் செய்யுறதுதான் சரி” என்றாள் உமா.
செந்தில்வாசனுக்கும் அதுவே சரியெனப் பட்டது. ஒரு லைக்கை அமத்திவிட்டு, வாழ்த்துச் செய்தியைக் கீழே எழுதினான்.
`அன்பும் மகிழ்ச்சியும் வாழ்நாள் முழுவதும் நிரம்பி இருக்க வாழ்த்துகள்.’
- இலக்கியப்பூக்கள் இதழ் 219
- சார்ள்ஸ் டிக்கின்ஸ்- கிறேட் எக்பெக்ட்ரேசஸ் : Great Expectations
- ஒரு கதை ஒரு கருத்து – சா கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள் -2
- எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 23
- உலகில் முதன் முதல் அணு ஆயுதம் ஆக்கிய விஞ்ஞானி ராபர்ட் ஓப்பன்ஹைமர்
- பீஜிங் குளிர்கால ஓலிம்பிக்கில் 15 வயதேயான சிறுமியின் கனவு கலைந்ததற்கு யார் காரணம்?
- `என்னைப் பார்க்க வருவீர்களா?’ – சிறுகதை