This entry is part 11 of 13 in the series 2 ஏப்ரல் 2023

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] 
தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா 

++++++++++++++++++++++++ 

அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2 

++++++++++++++++ 

நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] 

ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது] 

மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] 

புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது] 

காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] 

ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25] 

சிசாரோ :  மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 வயது] 

எமிலியோ : புருனோவின் மனைவி. 

மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர். 

பயாங்கா :  காஸ்ஸியோவின் கள்ளக் காதலி. 

மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ்,  சாம்ராஜிய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.  

நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு 

இடம் :  சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம் 

நேரம் : பகல் வேளை 

பங்கெடுப்போர் :  சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு  படைவீர்கள், காஸ்ஸியோ. 

[படகிலிருந்து இறங்கி வருகிறாள் மோனிகா, தோழியர், எமிலியோ, ஷைலக் சூழ]   

காஸ்ஸியோ:  பாருங்கள் !  வருகிறாள் வெனிஸ் கப்பல்  கோமகள் மோனிகா, அனைவர் பார்வையும் அவள் பக்கம் தான்.  அடுத்து  அருகில்  தோழி எமிலியோ, புருனோவின் மனைவி.  [மற்றவரைப் பார்த்து]  மோனிகா முன் மண்டியிட்டு வந்தனம் செய்வீர்.  [மோனிகா அருகில் போய் ]  வருக, வருக எழில் மாதரசி, புது மண மாதரசி.  வானுலக வீனஸ் ஒளிமயம் உனக்கு முன்னும், பின்னும் , உன்னைச் சுற்றியும் மிளிர்கிறது.   

மோனிகா :  மிக்க நன்றி,  மாவீரர் காஸ்ஸியோ.  என்னருமை கணவர் எங்கிருக்கிறார் சொல்ல முடியுமா ?   

காஸ்ஸியோ :  இங்கு இன்னும் வரவில்லை ஒத்தல்லோ ஜெனரல்.  சீக்கிரம் இங்கு வந்து விடுவார் .  நலமுடன் உள்ளார். 

மோனிகா :  ஆனால் எனக்கு பயமாக இருக்குது.  [கலக்கமுடன்] நீ இங்கே.  அவர் எங்கோ ?  எப்படி நீ  தனித்து இங்கே  அவரைப் பிரிந்து நிற்கிறாய் ?     

காஸ்ஸியோ :  கொந்தளிக்கும் கடலும், கோரப் புயல் காற்றும் எங்களைப் பிரித்து விட்டன மோனிகா.  அதோ ஒரு படகு வருகுது.  வரவேற்பு வெடி வெடிக்குது.  [காவலன் ஒருவனிடம்] வருவது யாரெனத் தெரிந்து வா.  [ போகிறான்].  [புருனோவை நோக்கி]  கோபப் படாதீர்  கோமானே ,  உமது மனைவியை நான் புகழ்வதற்கு.  [எமிலியோ கையைப் பற்றி முத்தம் தருகிறான்.]   

புருனோ:  என்னோடு என் மனைவி உரையாடும் சொல் எண்ணிக்கை குறைவு. அந்த அளவு நீங்கள் முத்தமிட்டால் தான் , உங்களுக்கு மன நிறைவு உண்டாகும்.   

மோனிகா: [புன்னகை செய்கிறாள் புருனோவைப் பார்த்து] 

புருனோ: என் மனைவி மிகையாகப் புலம்பி பேசுவாள், நான் படுக்கையில் தூங்க முயலும் போது.  [எமிலியாவுக்கு கோபம் வருகிறது]  [மோனிகாவை நோக்கி]  மேடம் மோனிகா !  நான் ஒப்புக் கொள்கிறேன்.  என்ன பேசுகிறாள் என் மனைவி என்று கவலை இல்லை எனக்கு.  வாயைத் திறந்தால் அவள் வசை புராண மொழிகள் தான்  கொட்டும் எதைப் பற்றியும் !     

எமிலியோ:  [சினங்கொண்டு]  அப்படி என்னைப் பழிப்பது  தகாத செயல் புருனோ. 

புருனோ:  இல்லை, இல்லை இனியவளே !   வெளியே பிறர்  முன்பாக மாதர் ஓவியப் படம் போல் ஊமையாய் நிற்பர் !  ஆனால் வீட்டில் பெருத்த வாயாடியாய்  இருப்பர் காட்டுப் பூனையைப் போல்.! [புருனோ பேசப் பேச எமிலியோ சினம்  மிகுந்து வேதனை அடைகிறாள்]  தெய்வீக மாதர் போல் நடிப்பீர், மற்ற மாதரை இகழும் போது.  வீட்டுக்குள் நடப்பது எல்லாம் நிஜக் கடிப்பு. 

மோனிகா:  போடா போ வெட்கம் இல்லாதவனே.   

புருனோ:  நான் முரட்டு துருக்கி நாட்டவன் அல்லன்.  மாதர் காலையில் எழுந்ததும் படுக்கையில் என் மீது காதல் வயப்படுவார்.  ஆனால் எனக்கு மாதர் மீது காதல் எழாது.  

எமிலியோ: [கனிவுடன்] நீ எனக்கொரு காதல் பாடல் எழுதுவாயா ? 

புருனோ: உனக்கு நிச்சயம் எழுத மாட்டேன் . 

மோனிகா: [புன்னகையுடன்] என்னைப் புகழ்ந்து ஒரு காதல் பாடல் நீ புனைந்தால் அது எப்படி எழுதுவாய் ?  

புருனோ:  என்னைக் கேட்காதே.  ஜெனரல் ஒத்தல்லோ என்னைக் கொன்று விடுவார். எனக்கு குறை கூறத்தான்  தெரியும். 

மோனிகா:  முயன்று பார் புருனோ.  சொல் எப்படி என்னை நீ பாட்டில் புகழ்வாய் ?  

புருனோ:  முயல்கிறேன்,  ஆனால் என் கற்பனை வேலை செய்ய மறுக்கிறது.  பொன்னிறக் கூந்தல் அழகி,  திறமையுடன் இருந்தால் புகழலாம்.  வெறும் திறமை மட்டும் இருந்து அதையே அழகாகக் காட்டினால்  அது ஏற்புடமை ஆகாது.  

மோனிகா:  மெச்சுகிறேன் புருனோ,  பொன்னிறக் கூந்தல் அழகி தனித்துவ கலைத் திறமை கொண்டிருந்தால் ? 

புருனோ:  பொன்னிறக் கூந்தல் அழகி திறமைசாலியாக இருந்தால் அவள் பெரிய மேதை ஒருவனைக் கவர்ந்து விடுவாள்.  

மோனிகா:  அப்படி எல்லாம் சொல்ல முடியாது புருனோ. 

எமிலியோ:  பொன்னிறக் கூந்தல் அழகி முட்டாளாக இருந்தால் ? 

புருனோ:  முட்டாள் பொன்னிறக் கூந்தல் அழகி பல ஆடவரை கவர்வாள். அவள் முட்டாள்தனமே கவர்ச்சி தருகிறது.  [டிரம்பெட் முரசம் கேட்கிறது] அதோ ஜெனரல் ஒத்தல்லோ வருகிறார்.  

 [ரகசியமாக, ஆனால் கேட்கும் படி காஸ்ஸியஸ் காதில்] மோனிகா அருகில் நில் ! அவள் கையைப் பற்றி முத்தம் கொடு !  நல்ல தருணம் நழுவ விடாதே  ! 

மோனிகா: [ அதிர்ச்சி அடைந்து விழிக்கிறாள். ] என்ன சொன்னாய் அயோக்கியனே ! 

[தொடரும்] 

Series Navigationரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்முதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம்