ஆர் வத்ஸலா
மூன்று ஆண்டுகள்
கழித்து முன்னறிவிப்பின்றி
என்னருகில் மண்டியிட்டு வந்ததமர்ந்து
கேட்டாய்
“அடையாளம் தெரில்ல இல்லெ”
“பாவி மகனே, இருபது வருசமானாலும் மறக்க முடியுமாடா ஒம்மொகத்தெ” என திட்ட நினைத்தேன்
மூன்று ஆண்டுகள் உன்னை கண்ட உடன் கொட்டுவதற்காக சேமித்து வைத்த
அத்தனை திட்டுகளுடன்
அதுவும் ஆவியாக
நான் பேச்சற்றுப் போனேன்
கண் பார்வை மங்கியதற்கு
கண்புரையை காரணம் காட்டிக் கொண்டு
நிதானமாக
பழையபடி
பாசம் நிறைந்த சொற்களை சிந்தி விட்டு
நீ விடைபெற்றுப் போன பின்
மனதாழத்திலிருந்து மேலெழுந்து வந்தன
சேமித்து வைத்திருந்த அனைத்து திட்டுக்களும்
வெட்கமில்லாமல்