—-வளவ. துரையன்
உனக்கும் எனக்குமிடையில்
உருவமில்லாத ஒரு
சுவர் விழுந்துவிட்டது,
நாம் எய்யும் சொல்லன்புகள்
நம்மைத் தாக்காமல்
அதன்மீது விழுகின்றன.
காயப்பட்டுக் காயப்பட்டு
அது தழும்பேறி நிற்கிறது.
ஆனாலும்
அது இன்னமும் வளர்கிறது.
அதன் அஸ்திவாரம் மிகவும்
ஆழமானது பலமானது.
பிறரால் வரும் பேய்ப்பூகம்பங்களும்
வசைச்சொல் சுனாமியும்
வலுவிழந்து போகின்றன.
அந்த மாயவலையின்
பின்னல்களின் இடைவெளியில்
நாம் புதைந்து போக வேண்டும்.
சிலந்தி வலையின் பின்னலில்
சிக்கிய பூச்சியாய் மாறிச்
சின்னாபின்னமாக வேண்டும்.
அப்போதுதான்
பீனிக்ஸ்போல் மீண்டெழுந்து
சுவர் மீது எட்டி உதைப்போம்.
சுக்குநூறாக்குவோம்.