மீனாட்சி சுந்தரமூர்த்தி
விடிவதற்கு இன்னும் நிறைய நேரமிருந்தது. டிசம்பர் மாதக் குளிர் எப்போதுமே வாட்டியெடுக்கும்,ஊதா நிற ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டு கம்பளிக்குள்
கால்களை மடக்கி வைத்துக்கொண்டு மந்தனா தூங்கிக் கொண்டிருந்தாள்.
பத்தொன்பது வயதுதான் ஆகிறது. கயிற்றுக் கட்டிலில் திரும்பிப் படுத்தபோது
இலேசாக உறக்கம் கலைந்தது. எழுந்து மாட்டுக்கொட்டிலைச் சுத்தம் செய்ய
வேண்டுமே என்ற எண்ணம் வந்தது. அந்த மங்கலான மஞ்சள் விளக்கின் ஒளியில்
அருகிலிந்த இரண்டு கயிற்றுக் கட்டில்களில் படுத்திருந்த தங்கைகளையும்,
அம்மாவையும் பார்த்ததும் அம்மா வீட்டில் இருக்கிறோம் என்ற நிம்மதி வந்தது.
தூக்கத்தைத் தொடர்ந்தாள்.
கொட்டிலில் இருந்த லஷ்மி குரல் கொடுத்தது. நிறைமாதமாக இருக்கும் அதற்கு எந்தநேரமும் கன்றை ஈன்றெடுக்க வலி வரலாம் என்று கணித்திருந்தார்கள்.இரண்டு மூன்றுமுறை அதன் தீனமான குரல் கேட்டது. சம்பாபாய் எழுந்து கொண்டாள்.
கையில் லாந்தரை எடுத்துக்கொண்டு கொட்டிலுக்கு விரைந்தாள். அங்கே பேறுகால வலியில் துடித்துக்கொண்டிருந்த பசுவைத் தடவிக் கொடுத்தாள் முன் கட்டில் கயிற்றுக் கட்டிலில் முதல்நாள் இரவு குடித்திருந்த மயக்கம் தீராமல் உறங்கிக் கொண்டிருந்த கணவன் மங்ரு சிங்கை எழுப்பினாள்.
‘சீக்கிரமா லாலு சாச்சாவை கூட்டிட்டு வா’
‘இப்பவேவா? ‘
‘ லஷ்மிக்கு வலி வந்துடுச்சி சீக்கிரம் போ’
வைக்கோல் பரப்பி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அதனை நகர்த்திக் கொணர்ந்தாள் சம்பாபாய். அடுத்த அரைமணி நேரத்தில் லாலு சாச்சா வந்துவிட்டார். அந்த ஊரில் மாடுகளுக்கான வைத்தியம் பார்ப்பவர் இவர்தான். எல்லோரும் மரியாதையாகவும் அன்பாகவும் அவரை ,’லாலு சாச்சா’ என்று அழைப்பார்கள். இதற்காகப் பணம் எதுவும்
வாங்க மாட்டார். வாயில்லா ஜீவன்களுக்கு என்னாலான உதவி என்பார்.
அவரைக் கண்டதுமே லஷ்மியின் கண்களில் இலேசான ஒரு நிம்மதி தெரிந்தது.
அதைத் தடவிக்கொடுத்து,
‘லஷ்மி ஒண்ணுமில்லமா, தைரியமா இரு’
என்று பேசிக்கொண்டே கையோடு எடுத்து வந்திருந்த பச்சிலைக் கலவையை அதன்
பின்புறத்திலும் வயிற்றிலும் தடவினார். ஒரு மணிநேரத்திற்குப் பிறகு அழகான
வெள்ளை வெளேரென்ற கடேரிக் கன்றை ஈன்றெடுத்தது லஷ்மி. பின் தாய்க்கும் சேய்க்கும் செய்ய வேண்டியவற்றைச் செய்து விட்டுப் புறப்பட்டார் லாலு சாச்சா.
பொழுது விடிந்து விட்டது, மலைச் சாரலில் அமைந்திருந்த கிராமம் என்பதனால் குளிர் கூடுதலாகவே இருந்தது. சம்பாபாய் பெண்களை எழுப்பி விட்டாள். பன்னிரண்டு வயதுச் சமேலியும், எட்டு வயது ரிங்கியும் பெரிய வாசலைப் பெருக்கித் தண்ணீரைத் தெளித்தனர். மந்தனா எழுந்து வந்து தேனீர் போடுவதற்கு விறகு அடுப்பைப் பற்ற வைத்தாள்.
சம்பாபாயும் அவள் கணவன் மங்ரு சிங்கும் வாசலில் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்தனர்.
‘ பல்ராம் சாயந்திரம் வரேன்னு சொல்லி அனுப்பியிருக்கான்’
‘எதுக்கு? இப்போ என்ன அவசரம்? இப்பதானே வந்திருக்கா’
‘சம்பா நீ என்ன நெனைச்சிட்டிருக்கே?’
‘ரெண்டு நாளுதானே ஆச்சு, ஒரு பத்து நாளு இருக்கட்டுமே’
‘நெறைய நாளு இங்க இருந்துட்டான்னா, திரும்பப் போக மாட்டேன்னுவா?’
‘ரொம்ப கஷ்டப்பட்டிருக்கா, நல்ல சாப்பாடு கூட இல்லை’
‘சரி எல்லாம் பேசி முடிக்க பத்துப் பதினைஞ்சி நாளு ஆகிடும்’
இந்த நேரத்தில் மந்தனா பெரிய தட்டில் பீங்கான் கோப்பைகளில் தேனீரைக் கொண்டு வந்து தந்தாள்.
‘ நல்லாத் தூங்கனியா மா?’
‘தூங்கினேன் அப்பா’
அவள் முகத்தில் படிந்த அடுப்புக் கரியைத் தன் சேலைத்தலைப்பால் துடைத்து அருகில் அமர்த்திக்கொண்டாள் சம்பா ,
‘சனிக்கிழமை சந்தைக்குப் போய் உனக்கு லெஹங்கா சோளியும், சமேலி, ரிங்கி க்குப் பாவாடை,சட்டையும் வாங்கலாம்.’
’இப்போ எனக்கு எதுக்குமா?’
’அடுத்தவாரம் படாதேவ் திருவிழா வருதே, அதுக்குதான்’
படா தேவ்( பெரிய இறைவன்)இந்த கிராமத்தினர் வணங்கும் கடவுள், எல்லோரும் சேர்ந்து கொண்டாடி மகிழ்வார்கள். சமேலியும் ரிங்கியும்,ஓடி வந்து ,
’அக்கா வா குளிச்சிட்டு வரலாம்’
‘நீங்க மூணுபேரும் போயிட்டு வாங்க, நான் ரொட்டி சப்ஜி செஞ்சி வைக்கிறேன்’ என்றாள் சம்பா.
மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு சகோதரிகள் புறப்பட்டனர்.
இந்த கிராமத்தின் வடக்குப் புறத்தில் நதி ஒன்று ஓடுகிறது. சஜா மரங்கள் நிறைந்த வனப்பகுதியில் இந்த கிராமம் உள்ளது. ஊரின் நடுவில் கல்மேடையில் இருக்கும் சஜா மரம் பழைமையானது. ஆறு தலைமுறைகள் பார்த்தது அதில்தான் தங்கள் படாதேவ் உறைவதாக இவர்கள் நம்புகிறார்கள்.
விதைப்பதற்கு முன்னரும்,அறுவடைக்கு முன்னரும் இங்கு பூஜை செய்வார்கள்.
ஆண்டு முழுவதும் ஒவ்வொரு பருவத்திலும் விழா நடக்கும்.வசந்த காலத் துவக்கத்தில் வரும் விழாவை மட்டும் மிகப்பெரிய அளவில் நடத்துவார்கள். குளிர்காலத்தில் இலைகளை உதிர்த்து வசந்தத்தில் தழைத்துப் பூத்துக் குலுங்கும் இந்த மரங்களின் அழகைச் சொல்லி முடியாது.
பிறந்த வீட்டிற்குத் திரும்பியிருந்த மந்தனாவின் தோழியர் எட்டு பேர் மந்தனா வந்திருப்பது தெரிந்து ஆற்றங்கரைக்கு வந்தனர்
நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்த மகிழ்ச்சியில் குதூகலித்தனர்.
’மந்தனா உன்னை நல்லா வச்சிருந்தாங்களா?’
‘ஆமா, ராணி மாதிரி பார்த்துக்கிட்டாங்க’
‘கிரண் நீ எப்படி இருக்கே ?’
’ அது இராட்சச குடும்பண்டி, திரும்பி வந்தா போதும்னு போச்சு’
‘நீங்கல்லாம் சொல்லுங்கடி?’
‘மாடு மாதிரி வேலை வாங்குவாங்க,’
‘அடிக்கத் தயங்கவே மாட்டாங்கடி’
‘நல்ல சாப்பாடு சாப்பிட்டே நாளாச்சுடி’
‘நீ அதிர்ஷ்டசாலி மந்தனா, நல்ல எடம் கெடச்சுது’
‘ஏய் இதோ பாருங்கடி ,மந்தனா முதுகில சாட்டையால அடிச்சிருக்காங்க’
‘ஆமாண்டி,வரி வரியா இருக்கு’
’அதானே பார்த்தேன் எவனும் நல்லவன் இல்லே’
தலை கவிழ்ந்த மந்தனா கண்கள் குளமானது தெரியாமலிருக்க நீரில் மூழ்கினாள்.
இவர்கள் குளித்துக் கரையேறியபோது சீமை ஜாமூன் மரத்தின் அருகில் தல்பத் நின்றிருந்தான்.
’மந்தனா உனக்காகதான் நிக்கறான், பேசுடி’
என்று ரிங்கி, சமேலியை அழைத்துக்கொண்டு நகர்ந்தனர் தோழியர்.
’இருங்கடி நானும் வரேன்’ என்று விரைந்தவளின் எதிரில் வந்த தல்பத்,
‘மந்தனா நில்லு,உனக்காக எவ்ளோ நாளா காத்துகிட்டிருக்கேன்’
‘இதற்கு மேலும் தல்பத் நீ என்னை நெனைக்கறது சரியா?’
‘மந்தனா உண்மையைச் சொல்லு, நீ என்ன மறந்துட்டியா?’
’நெனைச்சா மட்டும் என்ன மாறப்போகுது தல்பத்?’
’நீ நல்லா இருக்கியா, உண்மையைச் சொல்லு?’
’எப்படியோ இதுதான் என் தலைவிதி’
‘இல்ல மந்தனா இனியும் உன்ன அந்த நரகத்துக்குப் போக விட மாட்டேன்.’
உடைந்துபோனவள் அவன் கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டு அழுதாள்,
’தைரியமா இரு’அவள் கண்ணீரைத் துடைத்து அனுப்பி விட்டு அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றான் தல்பத். அன்றொரு நாள் மந்தனா மணமகனோடு படகில் செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றது தல்பத்தின் நினைவிலாடியது.
பக்கத்து கிராமத்திலிருந்த நடுநிலைப்பள்ளியில் மந்தனாவும், அவள் தோழிகளும் எட்டாவது வரை படித்ததும் அதற்கு மேல் படிக்க எட்டுமைல் தூரம் போகவேண்டாம் என்று பெற்றோர் படிப்பை நிறுத்தி விட்டனர். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் படாதேவின் பெரிய திருவிழாவிற்கு மலைக்கிராமங்களுக்கு அப்பாலிருந்த இருபது கிராமங்களின் தலைவரான தல்பத்தின் தந்தை அழைக்கப்படுவார்.குடும்பத்தோடு சென்று ஒருநாள் முழுவதும் அங்கு அவர்தங்குவார்.அதனால் தல்பத்தும் மந்தனாவும் சிறு வயதிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிவர்.
இருவரும் வளர்ந்தனர்,அவர்களின் நட்பும் வளர்ந்து காதலாகப் பரிமாணம் கொண்டது. இந்த கிராமத்தினரோடு எவரும் கொடுக்கல்,வாங்கல் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்று முதலில்
மறுத்தார் தல்பத்தின் தந்தை . பின்னர் மகனுக்காகவும், மந்தனாவின் நல்ல பண்புகளுக்காகவும் சம்மதித்தார். ஆனால் மந்தனாவின் பெற்றோர் மறுத்துவிட்டனர்.
‘என்னடா பார்த்துப் பேசிட்டியா வா போகலாம் ‘? என்று வந்த நண்பனின் குரலில் நினைவு கலைந்த தல்பத் வண்டியில் ஏறினான்.
அன்று மாலை நான்கு மணிக்கு மந்தனாவின் வீட்டிற்கு பல்ராம் வந்தான்,
மங்ரு சிங்கும்,சம்பாவும் வரவேற்றனர்.
‘அண்ணி நல்லா இருக்கீங்களா?’
‘இருக்கோம், உக்காருங்க.’
’ சம்பா சாயாவும் பகோடாவும் எடுத்துட்டு வா’
‘மந்தனா எங்கே?’
‘கிரண் வீட்டுக்குப் போயிருக்கா’
‘ மங்ரு பல்ராம் காட்டிய படங்களைப் பார்த்துக்கொண்டே,
‘அடிச்சி கொடுமை பண்ணியிருக்காங்க ,இந்த முறை நல்ல எடமா சொல்லு’
‘ நல்லா வச்சுக்கறேன்னுதான் சொல்றானுங்க மங்ரு, நம்மால வேற ஒண்ணும் பண்ண முடியல’
‘சரி, மூணு இலட்சம் தரணும் பல்ராம்’ என்று பேச்சு தொடர்ந்த வேளையில்,
தல்பத் தன் தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தான்,
‘ அப்பா மந்தனா திரும்பி வந்திருக்கா?’
‘நல்லா இருக்காளா? பாவம்’
‘என்ன பழக்கம் பா இது?’
‘இந்த இனத்து மக்களிடம் இந்தப் பழக்கம் எப்படி வந்ததென்று தெரியவில்லை. பெண் குழந்தைகள் வளர்ந்ததும் அவர்களை வீடுகள், நிலங்களைக் குத்தகைக்கு விடுவது போல் அறிமுகமே இல்லாத அந்நிய ஆடவனுக்கு ஐம்பதாயிரம் ,இலட்சம் என்று தொகைக்கு ஏற்றபடி ஒரு வருடம்,இரண்டு வருடம்ஒப்பந்தம் செய்கிறார்கள்.
முத்திரைத்தாளில் எழுதி வாங்கிக் கொண்டு, பேருக்குத் திருமணம் ஒன்று செய்து அனுப்புகிறார்கள்,ஒப்பந்தம் முடிந்து திரும்பியதும் மீண்டும் வேறு இடத்திற்கு என்று இது தொடர்கிறது.இதில் கிடைக்கும் கணிசமான தொகை பாசத்தைத் தின்று விடுகிறது.ஒரே பெண்ணைத் திருமணம் செய்து வாழ்வதை விரும்பாத உல்லாசப் பேர்வழிகளுக்கு இது வசதி. இதற்கான ஏஜெண்டு பல்ராம்.”
‘அப்பா இதை மாத்த முடியாதா?’
‘அவங்க மனசு வைச்சா முடியும்’
‘நான் முயற்சி எடுக்கறேன், நீங்க உதவணும்’
என்று தன் தோழர்களோடு தல்பத் புறப்பட்டவேளையில்,
மந்தனாவும், தோழியரும் கிரண் வீட்டு முற்றத்தில் கூடியிருந்தனர், பெரிய தட்டுகளில் வைத்திருந்த,உருளைக்கிழங்கு வற்றலையும், வேர்க்கடலையையும் விரும்பித் தின்று கொண்டே பேசிக் களித்துக்கொண்டிருந்தனர்.கிரணின் அம்மா தேனீர் போட்டுத் தந்துவிட்டு சந்தைக்குச் சென்றாள்.
அப்போது சமேலி ஓடி வந்தாள்,
‘அக்கா பல்ராம் வந்துருக்கார், அம்மாவும், அப்பாவும் பேசிட்டிருக்காங்க’
‘எல்லார் வீட்டுக்கும் வருவானே, என்னடி பண்றது?’
‘மந்தனா மறுபடியும் என்னால அங்க போக முடியாதுடி’
‘அந்தக் கொடுமையை நெனச்சாலே நடுங்குதுடி’
‘இவங்கல்லாம் எதுக்கு நம்மைப் பெத்து வளர்த்தாங்கடி’
‘வேற எதுக்கு, பணம் வாங்கி உக்காந்து சாப்பிடத்தான்’
என்று ஒவ்வொன்றைச் சொல்லிப் பதைத்தனர் .
சிலையாகச் சமைந்திருந்த மந்தனாவின் நினைவலைகள் வேகம்கொண்டு எழுந்தன.
பதினேழு வயதான மந்தனாவை இரண்டு இலட்சத்திற்கு பஞ்சாபைச் சேர்ந்த குல்தீப் ஒப்பந்தம் செய்தான். குறித்த நாளில் மந்தனாவிற்கு நகை,சேலைகள் கொணர்ந்தான்.
படாதேவ் குடிகொண்ட சஜா மரம்சாட்சியாகத் திருமணம் நடந்தது. குல்தீப் தந்தை தரம்வீருக்கு உதவியாக விவசாயம் பார்த்துக்
கொண்டிருந்தான். ஏற்கெனவே மணமானவன். மனைவி இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்து விட்டு மூன்றாவது பிரசவத்தில் இறந்து போனாள். இரண்டு தம்பிகள். வசதிக்குக் குறைவில்லை. மந்தனாவையும் மகனையும் ஆரத்தி சுற்றி வரவேற்றாள் அன்னை சோனம்.
இரவு அறை வண்ண மயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மந்தனா புதுமணப்பெண் அலங்காரத்தில் ஜொலித்தாள்.
அன்பும் ஆசையுமாகப் பேசுவான் என்று நினைத்திருந்தாள்.அப்படி எதுவும் நடக்கவில்லை, நெடுநாள் தாகத்தைத் தீர்த்துக்கொண்டான் குல்தீப். விடிந்தபோது
‘ஏய் எழுந்திரு’என்று எட்டி உதைத்தான் குல்தீப்.
உடைகளைச் சரிசெய்து கொண்டு வந்தவளைக் குளித்து விட்டு வரச் சொன்னாள் மாமியார். பாத்திரங்களும், துணிகளும் அவளுக்காகக் காத்திருந்தன ,குல்தீப்பின் எட்டு வயது, ஆறுவயது மகன்களுக்கு வேண்டியதைச் செய்து பள்ளிக்கு அனுப்புவது,மாடுகளுக்குத் தீவனம் வைப்பது,கொட்டிலைச் சுத்தம் செய்வது என்று நாள் முழுவதும்
வேலைகள் இருந்துகொண்டே இருந்தன. .சமையல் செய்வதற்கு ஒரு பெண்மணி இருந்தாள். அவளுக்கு உதவியாக காய்கறிகள் நறுக்கித் தருவதும் இவளுடைய வேலைதான். இரவில் கணவனுக்குப் பணிவிடை செய்துவிட்டு அவளுடைய அறைக்கு வந்து உறங்குவதற்கு நள்ளிரவு கடந்து விடும். சமையல்காரப் பெண்மணி இவளுக்கான உணவைத் தட்டில் வைத்துத் தருவாள், ஒரு நாள் இரவு அசதியில் உறங்கியவளை அள்ளியது ஒரு கரம். பயந்து எழுந்தவளின் எதிரில் குல்தீப்பின் தம்பி,
‘தம்பி என்ன இது போங்க, இல்லன்னா சத்தம் போடுவேன்.’
‘போடுடி யாரும் வர மாட்டாங்க’
‘நானு உன்னோட அண்ணி’
‘அண்ணியாவது தண்ணியாவது,வெலைக்கு வாங்கி வந்த அடிமைடி நீ !’
அவனும் ஆசையைத் தீர்த்துக் கொண்டு போனான். மறுநாள்
இரவு கணவனிடம் தயங்கித் தயங்கி இதைச் சொன்னாள்.
‘வீட்டில இருக்கறவங்க சொல்றதைச் செய் , வம்பு பண்ணினா கொன்னு
புதைச்சிடுவேன்.’ என்றான்.
மாமனார் என்று மரியாதை வைத்திருந்த தரம் வீர் ஒரு நாள் பிற்பகலில் கால் பிடித்துவிட அழைத்தார். கதவு தாளிடப்பட்டது,கேவலமான
மிருகம் பசியாற்றிக் கொண்டது. தினம் இது வாடிக்கையானது. இவள் எதிர்த்தபோது உடலெல்லாம் இரணமாக அடி, உதை கிடைத்தது. பாசமில்லாமல் பணத்திற்காக விற்ற தாய் தந்தையர் மீது வெறுப்பு வந்தது. அங்கிருந்து தப்பிக்கப் பலமுறை முயன்றாள். முடியவில்லை. கருவுற்றாள், உள்ளூர் மருத்துவச்சியை அழைத்து மருந்து தந்து கலைத்தனர்.
இரண்டு வருடம் முடிந்த மறுநாள் காலையில் பல்ராமும் மங்ரு சிங்கும் வந்து இவளை அழைத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பினர். நினைவுகள் கலைந்தன. ‘இந்த நிலமை நம் தங்கைகளுக்கு கதி வரக்கூடாது.’
மந்தனா ஒரு முடிவுக்கு வந்தாள்,
‘நான் சொல்றது சரியான்னு சொல்லுங்க’
‘சொல்லு’
‘நம்ம தங்கச்சிங்களையும் கூட்டிட்டு எல்லோரும் மொத்தமா ஆத்துல எறங்கிடுவோம்’
முடிவை ஏற்ற தோழியர் தங்கைகளையும் அழைத்துக்கொண்டு நதிக்கரை வந்தனர். அங்கே தல்பத் தோழர்களோடு நின்றிருந்தான்.
‘மந்தனா இது கோழைத்தனம் போராடுங்க’ எங்க அப்பா இதைத் தடுக்க முயற்சி எடுப்பார்’
‘நாங்கள் எல்லோரும் உங்களுக்குத் துணையாக நிற்போம்’ என்றனர் அவனது தோழர்கள்.
மந்தனா,’ எதிர்ப்போம், புதிய தீர்ப்பு எழுதுவோம்’ என்றாள்
‘பாரம்பரியக் கைவேலைகள் செய்வோம்’
‘விவசாயமும் பார்ப்போம்’
‘தங்கைகளைப் படிக்க வைப்போம்’ என்ற
கன்னியரின் கண்களில் தெறித்த மின்னல் கண்டு மழைமேகம் பன்னீர் தூவியது.