பழமொழிகளில் துரோகங்களும் துரோகிகளும்

This entry is part 17 of 45 in the series 26 பிப்ரவரி 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

காலங்காலமாக மனிதர்கள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்துகொண்டுதான் இருந்திருக்கின்றனர். வரலாற்றில் பல துரோக நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. துரோகம் செய்பவர்கள் துரோகிகள்என்று வராலாற்று அறிஞர்களால் அடையாளப்படுத்தபடுகின்றனர். மனித இனத்தில் மட்டுமே இத்துரோகம் என்பது மிக எளிதாக நிகழ்கின்றது. மனித இன வரலாறு தொடங்கியதிலிருந்தே இத்துரோகங்கள் நிகழ்ந்துள்ளன.

இத்துரோகத்தை, ‘‘கூட இருந்தே குழிபறிப்பது என்றம், வஞ்சனை என்றும் குறிப்பிடுவர். இவ்வாறு நடந்து கொள்பவர்களை இறைவனும், சமுதாயமும், மனச் சான்றும் மன்னிக்காது, இத்துரோகம் செய்பவர்களைத் துரோகிகள் என்றும் வஞ்சகர், எத்தர் என்றும் அறிஞர்களும் மக்களும் குறிப்பிடுகின்றனர். இத்துரோகிகளின் செயல்வரலாற்றில் அழியாத கறைாயகப் படிந்து விடுகின்றன எனலாம்.

நம்பிக்கைத் துரோகிககள், மேகக்காரர்கள், பிக்கஞ்சாதவர்கள், சந்தர்ப்பவாதிகள், படுபாதகர்கள், காரியவாதிகள், பாவிகள், சுயநலவாதிகள் என்று பல்வேறு வகைகளில் பல்வேறு சூழல்களின் இத்துரோகிகளான வஞ்சகர்களை மக்கள் வழக்கில் வழங்கி வருகின்றனர். இவ்வஞ்சகர்களையும் அவர்களது செயல்களையும் பழமொழிவாயிலாக நமது முன்னோர்கள் அடையாளம் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வஞ்சகமும் நெஞ்சகமும்

வஞ்சகம் புரியும் துரோகிககள் சாராரண மக்களைப் போன்றே இருப்பர். அவர்களை அடையாளம காண்பதரிது. எப்போது எப்படி மாறுவான் என்று இவர்களைக் கணிக்க முடியாது. கணவன், மனைவி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், மைத்துனன், சீடன், நண்பன் என்று ஒன்றுக்குள் ஒன்றாக துரோகிகள் இருந்து கொண்டே துரோகம் இழைப்பார்கள். இத்துரோகிகள் தன்னலக்காரர்களாக இருப்பர். மனதிற்குள் எப்போதும் வஞ்சனைபுரியும் எண்ணத்துடன் இருப்பர். இவர்கள் சமயம் வாய்க்கும்போது தங்களது சுய உருவத்தைக் காட்டிவிடுவர். இவர்கள் பழிபாவங்களுக்கு அஞ்சாது செயல்படுவர்.

இத்தகையோர் ‘‘மைபொதி விளக்கு’’ போன்றவர்கள். விளக்குஎரிந்தாலும் அதற்குள் இருள் மைபோன்று தெரியாது இருக்கும். வெளியில் பார்த்தால் ஒளி மட்டுமே தெரியும். ஆனால் அதனுள்(மை) இருள் பொதிந்திருப்பது அறிய முடியாது. இவர்கள் வஞ்சனை புரிந்தாலும் அவ்வஞ்சகச் செயல் அவர்களது நெஞ்சத்தைக் கெடுக்கும். அது வாழ்நாள் முழுவதும் உறுத்திக் கொண்டே துன்பத்தைத் தந்து கொண்டே இருக்கும். அவர்களை இறைவன் ஏதாவதொரு வகையில் தண்டித்துவிடுவான்.அது அவர்களது கண்போன்று விளங்கும் முதன்மையான பொருளாக இருக்கும். அதனால் பிறருக்கு மனமறிய தெரிந்தோ தெரியாமலோ துரோமிழைததல் கூடாது என்ற பண்பாட்டு நெறியைினை,

‘‘வஞ்சகம் நெஞ்சைக் கெடுக்கும்

மகாதேவன் கண்ணைக் கெடுக்கும்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

இப்பழமொழி வஞ்சனை புரியும் துரோகிகளைத் தோலுரித்துக் காட்டுவதாக அமைகின்றது. இத்துரோகிகளை மனச் சான்றும், இறைவனும் தண்டிக்காது விடமாட்டார்கள் என்பதை அறிவுறுத்துகின்றது.

ஏசுபெருமானின் சீடராகக் கூடவே இருந்த யூதாஸ் காசுக்கு ஆசைப்பட்டு உயிரிருக்கு உயிராக நேசித்த ஏசுபிரானையே காட்டிக் கொடுத்து ஏசுவிற்குத் துரோகம் செய்கின்றான். இவனை வரலாற்றில் காணப்படும் முதல் துரோகி எனலாம். இவன் காட்டிக் கொடுத்துத் துரோகியாக மாறினாலும் அவனது மனச்சான்றும் இறைவனும் அவனைத் தண்டித்து விடுகின்றனர். கூட இருந்தே குழிபறித்தவன் என்று இந்த யூதாசை நாம் குறிப்பிடலாம். இதுபோன்ற துரோகச் செயல்களை உலகம் ஒருபோதும் மன்னிக்காது என்பதனை யூதாஸின் முடிவும் அவனது வாழ்வும் நமக்கு எடுத்தியம்புகின்றன எனலாம்.

துரோகச் செயல்

துரோகிகள் தங்களுக்கு லாபம் கிடைக்கும்படி எப்பொழுதும் நடந்து கொள்வர். மூன்று நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்து ஒரு தொழிலைச் செய்கிறார்கள். வரும் லாபத்தைச் செலவுபோகச் சரிசமமாகப் பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்கின்றார்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி லாபமும் கிடைக்கிறது. அதில் முதன்மையாக இருந்து செயல்படுபவர் யாருக்கும் கொடுக்கக் கூடாது தாமே லாபம் முழுவதையும் கவர்ந்து கொள்ள நினைக்கிறார். இருந்தும் முடியவில்லை. இருவரில் ஒருவருக்கு மட்டும் ஒரு சிறுபகுதியைக் கொடுத்துவிட்டு மற்றொருவரிடம் செலவுகள் அதிகரித்துவிட்டது எனக்கூறி ஒரு சிறுதொகை கொடுக்கின்றார். இத்துரோகத்தை அறிந்த மூன்றாமவர் அதனை அவரிடமே திரும்பிக் கொடுத்துவிடுகிறார். இச்செயல் முழுமையான நம்பிக்கைத் துரோகமாகும்.

இவ்வாறு செய்பவர் கீழான நிலையையே அடைவர். தமக்குள் பேசியபடி சமமாகப் பகிர்ந்து கொண்டிருந்தால் அது பாராட்டுதற்குரிய ஒன்றாக இருந்திருக்கும். அதை விடுத்துக் குரங்கு அப்பத்தைப் பகிர்ந்து கொடுத்ததைப் போன்று செய்வது நம்பியவர்களை மோசடி செய்வதைப் போன்றதாகும். இத்தகையவர்களின் நம்பிக்கைத் துரோகச் செயலை,

‘‘ஒரு கண்ணுல வெண்ணையும்

ஒரு கண்ணுல சுண்ணாம்பும் வைக்கக் கூடாது’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

தன்மை முழுமையாக நம்புவோரைத் தனக்கு லாபம் முழுமையாகக் கிடைக்க வேண்டுமென்பதற்காக ஆசைப்பட்டுத் துரோகச் செயலில் ஈடுபடுபவன் அதுபோன்று பிறரால்் ஏமாற்றப்படுவான். இதை உணர்ந்து நேரிய வழியில் மனிதர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இப்பழமொழி நமக்கு அறிவுறுத்துகிறது.

அடாது செய்தல்

நட்புடனும், நெருக்கத்துடனும் ஒருவர் பழகும் நிலையில் அவருக்கு எதிராக அடாத(தகாத) செயல்களில் ஈடுபடக்கூடாது. அங்ஙனம் செய்தால் அத்தகைய செயல்களில் ஈடுபடும் துரோகிகள் படாத பாடுகளைப்(துன்பங்கள்) படுவர். அது இயற்கையின் நியதியாகும். அதனால் தன்னை நம்புகின்றவருக்கு எத்தகைய தகாத செயல்களையும் செய்தல் கூடாது என்பதை,

‘‘அடாதது செஞ்சா படாதது படணும்’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. ஒருவருக்கத் தீங்கிழைத்தால் மிகுந்த துன்பத்தை அடைய நேரிடும் என்பதையும் அதிலும் ஒருவரது மனம் வேதனையுறும்படி வஞ்சனைபுரிந்தால் வஞ்சனையில் ஈடுபடுவோர் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாவர் என்பதனையும் இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.

மகாபாரதத்தில் வரும் துரியோதனன் அடாத பல துரோகச் செயல்களைப் பாண்டவர்களுக்குச் செய்தான். பெரியோர்கள் எவ்வளவோ எடுத்துக்கூறிய போதும் அவற்றையெல்லாம் துச்சமெனக் கருதித் தூக்கியெறிந்துவிட்டுப் பாண்டவர்களுக்குப் பல துரோகங்களைச் செய்தான் முடிவில் பல துன்பங்களை அடைந்து குலத்துடன் அழிந்தான். அதனால் தன்னைச் சார்ந்தவர்களுக்கு ஒரு போதும் வஞ்சனை புரிதல் கூடாது என்று மேற்குறித்த பழமொழி மொழிகிறது.

முரண்படப் பேசுதல்

எப்பொதும் நேர்படப் பேசுதல் வேண்டும். முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதும் துரோகச் செயலே ஆகும். எதையும் வெளிப்படையாகப் பேசுவதுடன் சொன்ன சொல் தவறாது நடந்து கொள்ளவேண்டும்.

துரியோதனன் சூதாட்டத்தில் நடந்துகொண்ட விதமும் இதுபோன்றதே ஆகும். அவையில் அவன் உறுதிகொடுத்தபடி பாண்டவர்களிடம் நடந்து கொள்ளவில்லை. 12 ஆண்டுகள் காட்டிலும் 1 ஆண்டு மறைந்தும் வாழ்ந்துவிட்டு வந்தால் நாட்டைத் திருப்பித்தருவதாகக் கூறிய உறுதிமொழியைத் துரியோதனன் காற்றில் பறக்கவிட்டதால் அவனும் அவனைச் சார்ந்தோரும் தோல்வியடைந்து அவமானப்பட்டு முடிவில் இறக்க நேரிட்டது. இதனை,

‘‘மனசுல ஒண்ணும் வாக்குல ஒண்ணும்

வச்சுப் பேசக்கூடாது’’

(மனசு-மனம், வாக்கு-பேச்சு, வெளியில், வச்சு-வைத்து)

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. நேரத்திற்குத் தகுந்தாற்போன்று பேசுவதையும் நடந்துகொள்வதையும் தவிர்த்தல் வேண்டும் என்ற கருத்தினை இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது.

ரெண்டகம் – பாதகம்

துரோகத்தை, ரெண்டகம், பாதகம் என்றும் வழங்குவர். ஒரே தட்டில் உண்டு, ஒரே இடத்தில் தங்கி வாழ்பவர்களுக்குத் தீங்கு செய்தல் கூடாது. அது மிகுதியான துயரத்தை ஏற்படுத்தும். ஜீலியஸ் சீசருடன் உண்டு உறங்கி நட்புக் கொண்டு வாழ்ந்த அவரது நண்பர்களே அவருக்குத் துரோகமிழைத்க்கத் துணிகின்றனர். ஜீலியஸ் சீசரின் நெருங்கிய நண்பனாகிய புரூட்டஸ் முடிவில் தன்னை நம்பிய நண்பனாகிய ஜீலியஸ் சீசரை முதுகில் கத்தியால் குத்திக் கொலை செய்கிறான். புரூட்டஸின் இத்துரோகச் செயலை ரெண்டகம், பாதகம் என்று குறிப்பிடலாம். இத்தகைய செயல்களைச் செய்யக் கூடாது என்பதனை,

‘‘உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கக் கூடாது’’

‘‘பால் குடித்த வீட்டுக்குப் பாதகம்

நினைக்கக் கூடாது’’

என்ற பழமொழிகள் விளக்குகின்றன. சீசருக்கக் கொடுமை செய்த நண்பர்கள் பின்னர் பல துயரஙகளுக்கு ஆளாகி இறக்கின்றனர். வரலாற்றில் அவர்கள் துரோகிகள் என்ற அழிக்க இயலாத இழிந்த நிலையை அடைகின்றனர்.

ஒன்றாக உண்டு, உறங்கி நட்புறவு கொண்டவர்களுக்கு எந்த நிலையிலும் எந்தச் சூழலிலும் துரோகம் இழித்தலோ, மனதில் நினைத்தலோ கூடாது என்பதனை இப்பழமொழிகள் வலியுறுத்துவதுடன் வாழ்க்கையில் கெட்டுச் சீரழிந்து போகக்கூடியவர்களே இத்தகு துரோகச் செயல்களில் ஈடுபடுவர் என்பதனையும் எடுத்துரைக்கின்றது. இதனையே,

‘‘படித்தவன் பாவமும் பொய்யும் செய்தால்

போவான் போவான் ஐயோ என்று போவான்’’

எனப் பாரதியாரும் குறிப்பிடுகின்றார்.

வஞ்சனைபுரிவாரோடு இணைங்காது பாதகம் செய்பவரைக் கண்டு முகத்தில் உமிழ்ந்து பயங்கொளாது முன்னோர் காட்டிய நல்வழியில் நடைபோட்டு, துரோகச் செயல்களைச் செய்து துரோகியாக மாறாது நல்லவர்களாக நாளும் வாழ்வோம் நம்மை நாடும் போற்றும், நலமும் கூடும்.

Series Navigationமுன்னணியின் பின்னணிகள் – 29வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 1
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *