This entry is part 5 of 5 in the series 3 மே 2026

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர்

இந்த வேளையினில் வந்தருளும் தேவ ஆவியே – இப்போ

எங்கள் மீதிறங்கித் தங்கி வரம் தாரும் ஆவியே

அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்யஆவியே – முன்

ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே

அர்ச்சியர்க் கந்நானில் அற்புதம் செய்தாண்ட ஆவியே – இந்த

ஆதிரை மீதினில் தீதகற்றியாளும் ஆவியே

ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே – இங்கு

அஞ்ஞானம் அகற்றி மெய்ஞ்ஞானம் புகட்டும் ஆவியே

கிறித்துவக் கீர்த்தனை

பழங்குடித் தலைவர், சிம்பாரி இனம், பாப்புவா நியூ கினியா

சூரியன் மேலே வந்து விட்டான். நான், என் குடிலில் இருந்து பெருங்காஞ்சொறிச் செடிகள் வளர்ந்து இருக்கும், முள்காட்டை நோக்கி, நடந்து கொண்டு இருந்தேன்.

இந்தப் பெருங்காஞ்சொறிச் செடிகளைப் பிடுங்கி, கொத்தாகக் கட்டி, புனிதக் குழல் விழாவில் கலந்து கொள்ளும், சிறுவர்களை விளாச வேண்டும். வாங்கும் அடியால், பிள்ளைகள், அரிப்பு தாங்காமல், சொறியச் சொறிய, அந்தப் பிள்ளைகள் தோல் தடிக்கும்.

அவர்கள், உடல் புனிதமாகும். அப்புறம்தான், அந்தச் சிறுவர்கள், விழா நடக்கும், பெருங்குடிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இது, புனிதக்குழல் திருவிழாவின் வழக்கம்.

அதற்காகத்தான், பெருங்காஞ்சொறிச் செடிகளைச் சேகரிக்கத்தான், நான் பெருங்காஞ்சொறிச் செடிகள் வளர்ந்து இருக்கும், முள்காட்டை நோக்கி, நடந்து கொண்டு இருக்கிறேன்.

“வணக்கம் ஐயா..“ யாரோ ஒருவன், என் பின்னால் இருந்து குரல் கொடுத்தபோது, நான் அதிர்ச்சியில் திரும்பிப் பார்த்தேன்.

“யாருப்பா நீ.. புதுசா இருக்கே?” என்றேன்.

“நான் பழசுதான் மாமா.. என் பேரு வில்லாளன்… நான்தான் பெருஞ்சடையன் மகன்..” என்று, அவன், தலையைச் சொறிந்து கொண்டு நின்றபோது, நான் அவனை மகிழ்ச்சியுடன், ஏற இறங்கப் பார்த்தேன்.

“அட.. பெருஞ்சடையன் மகனா? உங்கப்பன் செத்து, பத்து வருசம் ஆகுது, உன்னை சின்னப்பிள்ளயாப் பார்த்தது. நீ இவ்வளவு நாளு எங்கப்பா இருந்தே?” என நான், ஆச்சரியத்தில் கேட்டபோது, அந்தப் பிள்ளை, நிறைய விவரங்கள் எனக்குக் கொடுத்தது. ஆனால், அவன் கடைசியாகச் சொன்னது, எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது.

“நீயும், அந்த கிறித்தவ மதச் சாக்கடைல விழுந்துட்டியா? ஏப்பா.. நம்ம பாட்டனும், பூட்டனும் சொல்லிக்கொடுத்த வாழ்க்கை முறையை எல்லாம், காட்டு மிராண்டி வாழ்க்கை முறை, அப்படிண்ணு சொல்றவங்களோட, நீ சேந்திட்டேன்னு சொல்றியே.. என்னப்பா இது நியாயம்?” நான், வேதனையுடன் பேசினேன்.

வில்லாளன், எனது கையைப் பிடித்துக்கொண்டான். “அப்படியெல்லாம் சொல்லாதீங்க நாட்டாமை மாமா. கிறித்துவமதம் எவ்வளவோ, நல்ல விசயங்களை நமக்குச் சொல்லிக் கொடுக்குது. நமக்குக் கல்வி தருது, உணவு தருது.. நாம் இருக்க, இனி, வீடு இங்கே கட்டப்போறாங்க.. எல்லாம் நம்ம நல்லதுக்குத்தானே மாமா?”, என்று அவன் என் கைகளைப் பிடித்துக்கொண்ட போது, நான் அவன் கையை உதறினேன்.

“ஏம்பா.. இங்கே என்ன நம்ம சாப்பாடு இல்லாம, செத்துக்கிட்டா இருக்கோம்? காட்டுக்குப் போனா, விதவிதமா பன்னியைப் பிடிச்சிட்டு வரப்போறோம். சோளம், கம்பு, சாமை, இங்கே என்னப்பா இல்லே? அந்த நாத்தமெடுத்த ரொட்டியைத் தின்னாத்தான் நம்ம கும்பி நிறையுமா” நான், கோபமாகப் பேசினேன்.

வில்லாளன் கெஞ்சினான்.. “அதெல்லாம் சரிதான் மாமா.. ஆனா நம்ம சிம்பாரி தெய்வத்துக்கிட்டே போய், பேச, யார் இங்கே இருக்கா? மந்திரம், தந்திரம் எல்லா பொய்யி மாமா.. ஆனால், இயேசு அற்புதமானவர்.. கர்த்தரின் பிள்ளை..” என்று வில்லாளன் சொன்னபோது, இவனைத் திருத்தமுடியாது என்று தோன்றியது.

“ஏப்பா, நம்ம மசளையான், நம்ம கடவுளோட பேசிக்கிட்டுத் தானே இருக்கான்?” நான் பேசுவதை இடை மறித்தான் வில்லாளன்.

“எங்கே பேசறாரு மசளையான்? இங்கே இருக்கற மக்களைக் கொலை செஞ்சுக்கிட்டே இருக்காரு…” என்றவுடன், நான், எரிச்சல் ஆனேன்.

“மாப்பிளை… நம்ம சிம்பாரி ஆண்டவர்கிட்டே, எல்லாராலும் பேசிட முடியாது. மசளையானால் மட்டுமே முடியும். மசளையான் பிறப்பே, ஒரு தனிப்பிறப்பு மாப்பிள்ளை.”

“சூரியனும், சந்திரனும் சேர்ந்த பிறப்பு, மசளையானின் பிறப்பு. அதெல்லாம், உன்னை மாதிரி, அற்பப் பதர்களுக்குப் புரியாது.” நான், எனது பேச்சை, நிறுத்திப் பேசி, மறுபடியும் தொடர்ந்தேன்.

“அதுபோகட்டும் வில்லாளன்… கொலை செய்யாம என்ன செய்யச் சொல்லுகிறாய்? நம்ம சிம்பாரி இனத்தை, ஒரு வெளிநாட்டுக்காரன் அழித்துக்கொண்டே இருக்கிறான். ஆனா, நம்ம சிம்பாரிப் பசங்களோ, அவன் கொடுக்கற, ரொட்டித் துண்டு பின்னாடி ஓடுறானுங்க.. நம்ம இனம் அழிஞ்சுகிட்டே போனா, அப்புறம் கொலைதான் செய்யணும்” நான் ஆவேசமாகப் பேசினேன்.

வில்லாளன், நான் ஆவேசமாகப் பேசியதைப் பார்த்து கொஞ்சம் பயந்து போனான் போலும். அதற்கப்புறம், எதுவும் பேசாமல், என் பின்னாடியே வந்தான்.

பேசிக்கொண்டே, நாங்கள் இருவரும், பெருங்காஞ்சொறிச் செடிகள் வளர்ந்து இருக்கும், முள்காட்டை அடைந்து விட்டோம்.

வில்லாளன் இப்போது தன்மையாகப் பேசினான்.. “நீங்க சொல்றதிலேயும், நிறைய நியாயங்கள் இருக்கு மாமா.. நம்ம இனத்தை, அந்தக் கிறித்துவமதமும் அழிச்சுகிட்டுத்தான் இருக்கு.. என்ன செய்யறது மாமா? இளம் பிள்ளைகள், காலத்துக்கு ஏற்ப வாழ்ந்தாகணும் மாமா” என்று வில்லாளன் சொன்னபோது, நான் நம்பவில்லை.

ஆனால், வில்லாளன், சிம்பாரிப் பாரம்பரியம் பற்றி, அதற்கப்புறம் அதிகம் பேசினான். அவன், பேசுகிறபோதே, அவன் நல்ல விவரமானவன் என்பது, எனக்குப் புரிந்து போனது.

“நாட்டாமை மாமா.. நான் அந்த ஜேம்ஸ் பாதரிடம் பேசுகிறேன். நம்ம சிம்பாரிப் பாரம்பரியமும் வாழட்டும். புதிதாக உள்ளே வந்து இருக்கும், கிறித்துவ மதமும் வாழட்டும். அதுக்கு நான் ஏற்பாடு செய்யறேன்… சரியா மாமா?” என்று அவன் சொன்னபோது நான் அமைதியாக, பெருங்காஞ்சொறிச் செடிகளைப் பிடுங்க ஆரம்பித்தேன்.

கொஞ்ச நேரத்தில், வில்லாளனும் என்னோடு சேர்ந்து கொண்டான். பெருங்காஞ்சொறிச் செடிகளை, அவனும் சேர்ந்து பிடுங்க ஆரம்பித்தான்.

செடிகளைப் பிடுங்கிக் கொண்டே வில்லாளன் பேசினான். “மாமா.. கவலை வேண்டாம். இந்த தடவை, புனிதக்குழல் விழாவைச் சிறப்பா நடத்திடுவோம்.. விழாவில், நான் வரும் இளம் பிள்ளைகளுக்கு, என்னுடைய ஆண் பால் ஊட்டுகிறேன். சரியா மாமா?” என்றபோது, எனக்கு வில்லாளன் மீது நம்பிக்கை பிறந்தது.

நாங்கள், அப்புறம், மலை வாழ்க்கை பற்றி நிறையப் பேசினோம்.

பேசிக்கொண்டு இருக்கும்போதே, வில்லாளன் என்னிடம் கேட்டான். “மாமா.. இந்த மசளையான் எங்கேதான் இருக்கிறான்? அவன் கூடுவிட்டு கூடு பாய்வது எப்படி மாமா? இந்தக் கூடுவிட்டு, கூடு பாய்வது பத்தி எல்லாம், எனக்கு ஒண்ணும் தெரியாது மாமா” என்றவுடன், நான் உற்சாகமாகப் பேசினேன்.

“மாப்பிள்ளை.. மசளையான் இப்போது எங்கே இருக்கிறான் என்றெல்லாம், இப்போது நான் உனக்குச் சொல்லமுடியாது. ஆனால் நிச்சயமாக கூடுவிட்டு கூடு பாய்வது பற்றி, நான் உன்னோடு இப்போது பேசலாம்.” என்றவுடன், நான் பேசுவதை, வில்லாளன் கவனமாகக் கேட்டான்.

“மாப்பிளை, இந்த மலை நிறைய, மசளையான் போலவே, அதீத பலம் கொண்ட, மலைச்சித்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மைப் போல் பிறந்தவர்கள் இல்லை. சிலர், தாயின் கருவறையில் பிறக்காமல், மண்ணில் இருந்து வந்தவர்கள். சிலர், தாயின் கருவறையில் இருந்தே வந்து பிறந்தாலும், தங்கள் தவத்தால், சூரியனையும், சந்திரனையும், தங்கள் வசமாக்கியவர்கள்.”. வில்லாளன், இப்போதும் பேசாமல் என்னையே கவனித்துக்கொண்டு இருந்தான்.

“கூடு விட்டுக் கூடு பாய்வது என்பது, ஒரு உயிரில் இருந்து, இன்னொரு உயிரை ஆக்கிரமிப்பு செய்து, அந்த உயிராகவே மாறிப்போவது. அப்படி மாறிப்போன உயிரில் இருந்துகொண்டே, செய்ய வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு, பின்னர், தங்கள் உண்மையான உயிருக்கே தாவி விடுவது. தான், கூடுவிட்டுக் கூடு பாய்வது மாப்பிள்ளை”

வில்லாளன் இப்போது ஆர்வமாக என்னிடம் கேட்டான். “அப்படி கூடு விட்டுக் கூடு மாறித்தான், நம்ம மசளையான் கொலை செய்கிறாரா மாமா?”

நான் உடனே சொன்னேன். “ஆம் மாப்பிள்ளை, முதலையாக, பாம்பாக, கூடு விட்டுக் கூடு மாறிக் கொலை செய்வது, நம்ம மசளையான்தான்..”.. நான், ஆர்வத்தில், அவசரம் அவசரமாகப் பேசினேன்.

“உனக்கு ஒண்ணு தெரியுமா மாப்பிள்ளை? அந்தக் கிறித்துவ போதகன்.. அதான்… நம்ம இனத்தைச் சார்ந்த அந்த போதகர் வில்லியம்ஸ் பய.. அவனை, இன்று அதிகாலையில், மசளையான் கொன்று விட்டான் மாப்பிள்ளை.” என்று நான் சொன்னவுடன், எதுவும் பேசவில்லை வில்லாளன். நான், தொடர்ந்தேன்.

“இன்று அதிகாலையில், வெளிக்குப் போய்கொண்டு இருந்தான், அந்தக் கிறித்துவன் வில்லியம்ஸ்.. அவன்.. வெளிக்குப் போய்க்கொண்டு இருக்கும்போதே, புலியாக, கூடு விட்டுக் கூடு பாய்ந்த, மசளையான், அந்த, கிறித்துவப் போதகனை, கொன்றுவிட்டான் என்பது உனக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை மாப்பிள்ளை.” நான், வெறியோடு சிரித்தேன்.

நான் இப்போது வில்லாளனைக் கவனித்தேன். அவனிடம் எந்த வித சலனமும் இல்லை. அமைதியாக, அவன், நின்றுகொண்டு இருந்தான்.

அப்புறம், நாங்கள், இதுவரை சேகரித்து முடித்த, பெருங்காஞ்சொறிச் செடிகளை, கயிறு வைத்து, கட்டுக் கட்டாகக் கட்டிக் கொடுத்தான் வில்லாளன். அவனது, அந்த உதவி, எனக்கு மிகவும் பேருதவியாக இருந்தது.

“மாப்பிள்ளை.. நமது இனத்திற்காக, நீ செய்யும் இந்தத் தொண்டுக்கு, நமது இறைவன், உனக்கு எல்லாவித பாக்கியங்களும் கொடுப்பார் மாப்பிள்ளை.” என்று, அங்கேயே, அவனை, நான் வாழ்த்தினேன்.

வில்லாளன் பதில் ஏதும் பேசாது, ஒரு மூங்கில் சாக்கை, அவனது தோளின் மேல் போட்டுகொண்டான். அப்புறம், அந்த பெருங்காஞ்சொறிச் செடிக் கட்டுகளையும், அவனது தோளில், அந்தச் சாக்குக்கு மேல் ஏற்றிக்கொண்டான்.

“வாங்க மாமா நம்ம குடிலுக்குப் போகலாம்” என்று, அன்புடன், எனது கைகளைப் பிடித்துக்கொண்டே, தோளில் இருந்த, கனத்த அந்த பெருங்காஞ்சொறிச் செடிக் கட்டுகளைச் சுமந்து நடந்துவந்தான் வில்லாளன்.

எனக்கு வில்லாளன் மாப்பிள்ளையை நினைத்துப் பெருமையாக இருந்தது. நான், அவன் கூடவே, நடந்து வந்தேன்.

வில்லாளன், சிம்பாரி மலை, பாப்புவா நியூ கினியா

இரவு வந்தது. நானும், ஜேம்ஸ் பாதரும், நாட்டாமை மாமாவின் குடிலுக்கு, எதிரில் இருந்த புதரில், பதுங்கி இருந்தோம்.

காலையில், நான் நாட்டாமையுடன், பெருங்காஞ்சொறிச் செடிகள் பறிக்கும்போது, “போதகர் கொல்லப்பட்டுவிட்டார் மாப்பிள்ளை” என்று, நாட்டாமை, என்னிடம், சந்தோசத்துடன் சொன்னபோது, எனக்கு அது கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்தது.

அந்த சிம்பாரி போதகர் வில்லியம்ஸின் கடுமையான உழைப்பால்தான், எங்கள் கிறித்துவம், இந்த சிம்பாரி மலையில், இவ்வளவு தூரம், மக்களிடையே பரவி இருக்கிறது. நேற்றுக் கூட, பாதர் சொற்பொழிவு ஆற்றும்போது, அந்த சிம்பாரி போதகர், எவ்வளவு சந்தோசமாக, இங்கும், அங்கும் அலைந்துகொண்டு இருந்தார்!

“அவரை, மசளையான், புலி வடிவில் வந்து கொன்று விட்டானா?”  நாட்டாமை சொல்வதை, என்னால் நம்பவே முடியவில்லை.

“சரி.. காட்டுக்கு என்னோடு வந்த நாட்டாமைக்கு, போதகர் வில்லியம்ஸ் கொல்லப்பட்ட சேதி, எப்படித் தெரிய வந்தது?” எல்லாமே, எனக்கு மர்மமாக இருந்தது.

நான், அந்த பெருங்காஞ்சொறிச் செடிக் கட்டுகளை சுமந்து வந்து, நாட்டாமை சொன்ன இடத்தில், பொத் என்று போட்டேன். அடுத்த நிமிடமே, நான் ஜேம்ஸ் பாதரைப் பார்க்க, அவர் குடில் நோக்கி ஓடோடி வந்தேன்.

ஜேம்ஸ் பாதர், அவ்வளவு கோபமாக இருந்து, நான் இதுவரை பார்த்ததேயில்லை. எப்போதும் கருணையாகவே இருக்கும் பாதரின் முகத்தை, பார்த்துப் பார்த்துப் பழகிய எனக்கு, இப்போது அவரது கோபமான  முகத்தைப் பார்க்க நேர்ந்தபோது, நடந்தது என்ன என்று புரிந்து போனது.

ஜேம்ஸ் பாதர், கோபமாக உறுமினார். “அந்த சிம்பாரி போதகரை யாரோ கொலை செய்து விட்டார்கள்” என்று என்னிடம், பாதர் சொன்னபோது, “எனக்குத் தெரியும் பாதர்” என்றேன்.

நான், காலையில், நாட்டாமையுடன், பெருங்காஞ்சொறிக் காட்டில் நடந்த விவரங்கள் அனைத்தையும், பாதரிடம் ஒன்று விடாமல் சொன்னேன்.

“பாதர்.. இந்தக் கொலையை மசளையான்தான் செய்ததாக, நாட்டாமையே சொல்கிறார். ஒவ்வொரு முறை, இப்படிக் கொலைகள் நடக்கும்போதும், நாட்டாமைதான், மசளையானைப் பார்க்க, வழக்கமாகச் செல்கிறார். எனவே, இன்று இரவும், நாளை இரவும் நாம் நாட்டாமையை தீவிரமாகக் கண்காணித்தால், நாம் மசளையானைக் கண்டுபிடித்துவிடலாம்” என்று, நான் சொன்னேன்.

“அதுதான் சரி” என பாதரும், ஆமோதித்தார். எனவேதான், இப்போது இந்த இரவில், நாட்டாமையின் குடில் எதிரில் இருந்த புதரில், நாங்கள் இருவரும் மறைந்து இருக்கிறோம்.

அந்த இரவிலும், நாட்டாமை வீட்டில் இருந்து, நல்ல பன்றிக்கறி சமைக்கும் வாசம், எங்கள் இருவரின் மூக்கைத் துளைத்தது.

எங்கள் இருவருக்கும் பசித்தது. ஆனால், அந்தப் பசியை இருவருமே பொறுத்துக்கொண்டோம். நள்ளிரவு ஆகிவிட்டது. நாட்டாமை வெளியே வரவே இல்லை. எங்களுக்கு பொறுமை குறையத் தொடங்கியது.

ஆனால், நள்ளிரவைத் தாண்டிய ஒரு மணி நேரத்தில், நாட்டாமை, தனது குடிலை விட்டு, வெளியே வருவதை, நாங்கள் இருவரும் பார்த்தோம். நாங்கள் இருவரும் உடனே உஷார் ஆனோம்.

நாட்டாமை கையில், ஒரு பெரிய மரவாளி இருந்தது. அதற்குள், அவர் வீட்டில் சமைத்த பன்றிக்கறி இருக்கவேண்டும் என, நாங்களே ஊகித்துக்கொண்டோம்.

நாட்டாமை, வேகமாக அந்த இருளில் நடந்தார். நாங்கள் இருவரும் நாட்டாமையை, அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தோம்.

நான், நாட்டாமையின் பின்னால், பத்தடி தள்ளி மெதுவாக  நடந்தேன். எனக்கு ஐந்தடி தள்ளி, ஜேம்ஸ் பாதர் நடந்து வந்தார்.

சட்டென, அந்த இருளில், ஜேம்ஸ் பாதர் கையைப் பார்த்தேன். அவர் கையில் ஒரு துப்பாக்கி இருந்தது. அதைப் பார்த்ததும், எனது, சப்த நாடி ஒடுங்கியது.

நள்ளிரவில், குளிர் கடுமையாய் இருந்தது. ஆனால் அந்தக் குளிரிலும், நாட்டாமை வேகமாக நடந்தது, ஆச்சரியமாக இருந்தது.

முதலில், ஒரு பரந்த வெளிக்குப் போனார் நாட்டாமை. அந்தப் பரந்த வெளி, எனக்கு ஏற்கனவே பழகிய பரந்த வெளிதான். அங்கேதான், பிள்ளைகளுக்கு, வில்வித்தை பயிற்சி சொல்லித்தருவார்கள்.

அந்த இருளில், அந்தப் பரந்த வெளியின், ஒரு மூலைக்குப் போன நாட்டாமை, “தெய்வமே.. தெய்வமே” என்று கத்தினார். ஏதோ, சிம்பாரி தேவனை வேண்டுகிறார் போலும், என்று நாங்கள் இருவரும் நினைத்தோம்.

ஆனால், அவர் கும்பிட்ட திசையில், எந்தவித சிலையும் இல்லை. கடவுள் கும்பிடப்படுகிற மேடை போன்ற எந்த வித விசயங்களும் இல்லை. அப்புறம் எந்த தேவனை நாட்டாமை பார்த்து, இப்படிக் கத்துகிறார் என ஆச்சரியமாக இருந்தது.

தான் கொண்டு வந்த பன்றிக் கறியில் கொஞ்சம் எடுத்து, “சாப்பிடுங்கள் சாப்பிடுங்கள்” என வேண்டிக்கொண்டே, கறியை வீசி எறிந்தார் நாட்டாமை. ஆனால், அங்கே சாப்பிடத்தான், ஆள் யாரும் இல்லை. அங்கே எந்த தெய்வமும் இல்லை.

“எதற்காக நாட்டாமை இப்படிச் செய்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. நான், அடுத்து யோசிக்கும் முன்னரே, நாட்டாமை, அந்த இருளில், வேகமாக மறுபடியும் நடந்தார். நாங்கள் இருவரும் பின்தொடர்ந்தோம்.

இன்று காலையில், நானும், நாட்டாமையும் வந்த அந்த பெருங்காஞ்சொறிக் காடும் வந்துவிட்டது. அதையும் கடந்த நாட்டாமை, ஒரு முள்காட்டின் உள்ளே போய் நின்று கொண்டார்.

“குருவே… குருவே.. வணக்கம் குருவே.. மசளையான் மாந்தரீக குருவே… வணக்கம் குருவே” என்று, திடீரென்று சத்தம் கொடுத்தார் நாட்டாமை.

“ஐயோ மசளையான் வரப்போகிறான்..” என்று, நாங்கள் இருவரும், அந்த இருளில், அருகில் இருந்த முள் காட்டுச் செடிகளிடையே பதுங்கி, தலையை மட்டும் நீட்டிப் பார்த்தோம்.

மசளையான் என்று அங்கே யாரும் வரவில்லை. என்ன நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.

திடீரென்று, “மசளையானே.. எங்கள் மாந்தரீக குருவே.. இப்பவும் புலி வடிவில், கூடுவிட்டு கூடு பாய்ந்து, எங்கள் இனப் பையனைக் கொன்று விட்டீர்களே மசளையான்” என்று நாட்டாமை, திடீரென பெருங்குரலெடுத்து அழுதார்.

ஆனால், நாட்டாமை எதிரில், யாருமே இல்லை. நாட்டாமை, அழுது கொண்டே வேண்டினார்.  

“புலியாரே.. புலியாரே.. மசளையான் புலியாரே.. நீங்கள் உங்கள் குகைக்குப் போங்கள். புலியில் உருவத்தில் இருந்து, உங்கள் சொந்த உருவத்துக்கு கூடு விட்டுக் கூடு பாய்ந்து, மறுபடியும் மசளையான் வடிவத்துக்கு மாறுங்கள்.. மசளையான் புலியாரே…” என்று, நாட்டாமை, நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்தபோதும், எதிரில், எந்தப் புலியையும் நாங்கள் காணவில்லை.

எனக்கு, நாட்டாமையின் செயல்கள், பயத்தையும், ஆச்சரியத்தையும் கொடுத்தது.

ஆனால், ஜேம்ஸ் பாதர் தெளிவாக இருந்தார். எனது அருகில், மெதுவாக நடந்து வந்து சொன்னார். “வில்லாளன்.. இந்த நாட்டாமைக்கு மனநிலை சரியில்லை. இவன் ஒரு மனநிலை சரியில்லாத பைத்தியம்” என்று, என் காதில் சொன்னபோது, எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

நான் மெதுவாக கிசுகிசுத்தேன். “ஆனால், இன்று காலையில், இந்த நாட்டாமை தெளிவாகத்தான், பேசினார் பாதர்” என்று நான் சொன்னபோது, பாதர் எரிச்சலில், எனது தோளைத் தட்டினார்.

“வில்லாளன்.. பகலில் இந்த நாட்டாமை தெளிவுதான். ஆனால், இது போல, இரவு நேரங்களில், மசளையானைப் பார்க்க வரும்போதெல்லாம், இவன் ஒரு மனநோயாளி.. புரிந்ததா?” என்றார். எனக்குப் புரிந்தது.

நாட்டாமை, புலி ஒன்று, நடந்து, முன்னால் போவது போலவும், அவர் புலிக்குப் பின்னால் போவது போலவும், பாவனை செய்துகொண்டே நடந்தார்.

நாங்கள் இருவரும் புன்னகை செய்துகொண்டே, நாட்டாமை பின்னால் நடந்தோம்.

கடைசியில், ஒரு பெரிய குகை வந்தது. நாட்டாமை உள்ளே போனார். நாங்களும் உள்ளே போனோம். அங்கே.. அங்கே.. நாங்கள் அந்த மசளையானைக் கண்டோம்.

மசளையான் முகம், அந்த இருளில்,  சரியாய்த் தெரியவில்லை. ஆனால், அவனது உருவம் தெரிந்தது. பெரிய உருவம். பிரமாண்டமான உருவம்.

என்னை விட, மசளையான் ஒன்றரை மடங்கு உயரமாக இருந்தான். அவனது நெஞ்சின் அளவு, என்னைவிட இரண்டு மடங்காக இருந்தது. அவனது கையில், பெரிய வாள் இருந்தது. அவன் விட்ட பெருமூச்சில், ஒரு உக்கிரம் தெரிந்தது.

“என் சாமி.. என் சாமி.. புலியில் இருந்து மனுசனா மாறுன என் மசளையான் சாமி… கூடுவிட்டுக் கூடு பாயும் என் சாமி” எனக் கூச்சல் போட்டுக்கொண்டே, மசளையான் காலில் போய் விழுந்தார் நாட்டாமை.

ஆனால், அதற்குள், எங்கள் இருவரையும் கண்டு பிடித்துவிட்டான் மசளையான்.

எங்களைப் பார்த்ததுமே, மசளையான் கர்ஜித்தான். அவனது கடுமையான ஆண்குரல், என்னைக் கலவரப்படுத்தியது. இப்போது மசளையான், ஓடிப்போய், குகையின் அந்தப் பகுதியில் இருந்த, ஏரி நீரில் தாவினான்.

உடனே, ஜேம்ஸ் பாதர், தனது கையில் இருந்த துப்பாக்கியால், கண்டபடி சுட ஆரம்பித்தார். அந்த கடுமையான இருளில், அவரால், சரியாகக் குறி வைக்க முடியவில்லை.

அந்தத் துப்பாக்கி குண்டுக்கு, இரையாகாமல் மசளையான் தப்பி, ஏரி நீருக்குள் மறைந்து போனான்.

ஆனால், கண்மண் தெரியாமல், கண்டபடி சுட்ட, பாதர் ஜேம்ஸின் குண்டுக்கு, நாட்டாமைதான் பலியானார்.

“ஆஆ” வென்று, நாட்டாமை அலறியபோது, எனக்குப் புரிந்துபோனது. நாட்டாமை குண்டுக்குப் பலியாகி, கீழே சாய்ந்தார். எனக்கு பாதர் மீது, இப்போது கோபம் வந்தது.

நான், ஜேம்ஸ் பாதர் மீது பாய்ந்தேன். அவர் உடல் திமிறியது.

தொடரும்

அழகர்சாமி சக்திவேல்

சிங்கப்பூர்

Series Navigationமழைபுராணம் 30