பாலமுருகன்.லோ
“கௌதம், ஏம்பா கௌதம்… சித்த, இப்படி வரியா?”
“வரேன்பா… இதோ கைவேலையா இருக்கேன். உடனே வந்து என்னன்னு பார்க்கிறேன்.”
“ஹாங்… சொல்லுப்பா. வந்துட்டேன். என்ன விஷயம்?”
“யப்பா… என்னைப் பத்தி டாக்டர்கிட்ட சொல்லி ஒரு ஊசி போடச் சொன்னேன்! என்னால தாங்க முடியல இந்த நரக வேதனையை. நானும் கஷ்டப்பட்டு உன்னையும் கஷ்டப்படுத்திட்டுருக்கேன். என் ஒருத்தனால எல்லாத்துக்கும் சிரமமா இருக்கு.”
“ஏம்பா, இப்ப நீ சும்மா இருக்கப்போறியா இல்லையா? தேவையில்லாம எதையாவது பேசிக்கிட்டே இருப்பியா? சும்மா சிவனேன்னு ஒரு இடத்துல கிடக்க வேண்டியதுதானே? நம்ம நினைக்கிறப்ப எல்லாம் சாவு வரும்னா, அப்புறம் கடவுள் எதுக்கு?” என்று சொல்லிவிட்டு நான் சமையலறைப் பக்கம் வந்தேன்.
“ஏங்க, அவர் அப்படித்தான். நீங்க அவருகிட்ட சும்மா போயி வாக்குவாதம் செஞ்சுகிட்டு… அவருக்கு வயசு ஆயிடுச்சு. வேளா வேளைக்கு போட வேண்டிய மாத்திரையெல்லாம் போட்டுக்க மாட்டேங்கிறார். அதனால் அவர் அனிமிக்காத்தான் இருப்பார்,” என்றாள் கனகா சமையலறையிலிருந்தபடியே.
“இல்லடி, கனகா, அது எனக்கும் தெரியும். அதனாலத்தான் முடிஞ்ச அளவுக்கு என்னாலான மட்டும் சொல்லிட்டு வர்றேன்.”
“நீங்க மேலும் மேலும் அவருகிட்டுப் பேச்சுக் கொடுக்கறது நிறுத்துங்க,” பதிலளித்தாள் கனகா. “நல்லா யோசிச்சுப் பாரேன். அவருக்கு என்ன இப்ப பெரிசா வேலை? அவரால முடிஞ்சதைச் செஞ்சுக்கோ; இல்லையா என்னைக் கூப்பிடு, நான் வந்து பண்ணிவிடுறேன். அதை ரெண்டையும் செய்யாம, அவரு மனசுக்குள்ளேயே போட்டு வச்சுக்கிட்டா, அது அவருக்கு மட்டும் கஷ்டம் இல்ல; எனக்கும்தான் கஷ்டம்.”
“நீங்க சொல்லறது எனக்குப் புரியுது. ஆனா, அவரு இதையெல்லாம் ஏத்துக்கிற மனநிலையில இல்லன்னுறதுதான் நிதர்சனம்.”
“அவரோட கஷ்டத்தை என்கிட்ட சொல்லறாரு. இதையேதான் நான் சில சமயம் அவருகிட்ட கோபமா வெளிப்படுத்துறேன். அது அவருக்கு புரியுதான்னு தெரியல.”
“இந்தப் பாரு கனகா. நீயும் விடியற்காலையில எழுந்து எல்லாருக்கும் சமைத்து வைக்கிற. காலையில ஏழு மணிக்கு ‘காபி வேணுமாப்பா?’ன்னு நான் அவரைக் கேட்டா பதில் இல்லை. சரி, தூங்குறாருன்னு அரை மணி நேரம் கழிச்சுக் கூப்பிட்டாலும் ஒண்ணும் பதில் இல்லை. சரி, இதுக்குள்ள நாம போய்க் குளிச்சுட்டு வந்துடலாம்னு குளிச்சுட்டு, என்னோட வேலையையெல்லாம் முடிச்சுட்டு, ஆபீசுக்கும் ரெடியாகி வந்து, ‘அப்பா, எந்திரிங்க… அப்பா, எந்திரிங்க…’ன்னு எவ்வளவோ கூப்பிட்டும் இப்படிப் பேசாம திரும்பித் திரும்பிப் படுத்தா, பார்க்கிற மனுஷனுக்குக் கோபம் வருமா, வராதா?”
“சரிங்க. நீங்க சொல்லறது அத்தனையும் சரிதான். நான் இல்லேன்னு சொல்லல. ஆனா, இப்படி அவருகிட்ட மல்லுக்கட்டி நிற்க வேண்டாம்னுதான் சொல்லறேன்.”
“ஏண்டி, உனக்கு புரியுதா இல்லையானு தெரியல. எப்படி ஒரு மனுஷனால சாப்பிடாம இருக்க முடியும்? ஏதாவது கொஞ்சம் சாப்பிடலாமில்ல. எனக்கு இந்த ஒரே ஆதங்கம்தானே; வேற ஒண்ணுமில்ல. இதுதான் கோபமா வெளியில வருது. அவரு வேலையை அவரால செஞ்சுக்க முடியலைன்னாலும் பரவாயில்லை. வேற ஒரு ஆளை வச்சுப் பார்த்துக்கலாம். அவரால சில வேலையை ஓரளவுக்குச் செஞ்சுக்க முடியுது. அவரால முடியாத காரியத்தை நான் செஞ்சு விடுறேன். நான் அவருகிட்ட கேட்கிறது ஒண்ணே ஒண்ணுதான்: நான் கூப்பிட்டா ஒழுங்கா பதில் சொல்லு என்றுதான். இதை அவருகிட்ட சொல்லிட்டேன். ஊரு உலகத்துல போய்ப் பாரேன்; பெத்தவங்களை வெளியில தள்ளுறவங்கதான் அதிகமா இருக்காங்க. இங்க உன்னை வச்சு நான் பார்க்கிறேன். இப்ப நீயே சொல்லேன். தினம் ஒருத்தன் தன்னோட சொந்த காரியங்களையெல்லாம் பார்த்துக்கிட்டு, அவன் இஷ்டத்துக்குக் கம்பெனிக்குப் போக முடியுமா? இல்லதானே? அப்ப கொஞ்சமாவது கூப்பிடுற சமயம் ஒத்தாசையா இருந்துக்கிட்டா, அவருக்கு வேண்டியதைச் செஞ்சுவிட்டுட்டு நானும் நிம்மதியா வேலை பார்க்கப் போவேன்ல.”
“காலை உணவோட சாப்பாடு வச்சிருக்கேன் பா,” என்ற மெல்லிய குரலுக்கு எந்தப் பதிலும் இல்லை.
ஒரு பெருமூச்சுடன் அறையை விட்டு வெளியே வந்து ஹாலில் நின்றேன். கதவு எப்போதையும் போலவே திறந்தே இருந்தது. ஹாலில் நின்று பத்து நிமிடம் காத்திருந்த பின், அவர் ஒருவேளை மனம் மாறிச் சாப்பிட்டிருப்பாரோ என்ற சின்ன நம்பிக்கையில் மீண்டும் அறைக்குள் சென்று பார்த்தபோதுதான், தட்டு வைத்த இடத்திலேயே இருந்தது. அவரும் சுவரையே பார்த்தபடி அசைவற்றுப் படுத்திருந்தார்.
எனக்குள் என்ன தோணுச்சுனா, “இன்னும் எத்தனை நாளைக்கு?” என்ற கேள்வி எழுந்தது. அவரது செயல் வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுற மாதிரி இருந்தது.
“ஏம்பா, எப்ப கூப்பிட்டாலும் அமைதியா கண்ணை மூடிக்கிட்டு அப்படி என்ன தூக்கம்? ரெண்டு வார்த்தை கத்தினா போதும்; உடனே அந்தப் பக்கம் சுவரைப் பார்த்தபடி திரும்பிப் படுக்க வேண்டியது. நான் என்ன இப்ப கேட்டுட்டேன்? எந்திருங்க… துணியை மாத்திக்கலாம்னு சொன்னேன்; குளிக்கலாம்னு சொன்னேன். இது தப்பா? உங்க உடம்பை ஒழுங்கா வச்சுக்கிட்டாதானே நாளைக்கு வேற எந்தத் தொந்தரவும் வராம இருக்கும்?”
“ஏம்பா, சும்மா அவருகிட்ட போயி ‘சாப்பிடு, சாப்பிடு’ன்னு சொன்னா அவரு சாப்பிடுவாரா?” என்றாள் மகள் லதா.
“அவரால முடியலப்போல. நீதான் கொஞ்சம் அவரைத் தூக்கிப் பிடித்து உட்கார வை முதலில்.”
“ஏண்டி, லதா, நீ சொல்றது சரிதான். எப்போ ஒருவரால் எழ முடியலனா நாம அவருக்கு உதவலாம். அவரால எழுந்திருக்க முடியும்; ஆனா மாட்டேங்கிறாரு. இந்தா பாருமா லதா, முதல்ல மூணு வேளை ஏதோ சாப்பிட்டாரு. காலையில மூணு நாலு தோசை, மதியம் கொஞ்சம் சாப்பாடு, ராத்திரியில ரெண்டு தோசை. இப்ப என்ன ஆச்சு? மதிய சாப்பாட்டை சாப்பிட மாட்டேங்கிறாரு. சரி, ரெண்டு வேளையாவது ஒழுங்கா சாப்பிட்டா போதும்னு நினைச்சேன். மூணு நாலு தடவை வீட்டுக்கு டாக்டரை வரவழைச்சு உடம்புக்கு என்னன்னு பார்த்தாச்சு. அப்படித்தான் ஒரு தடவை டாக்டர் வந்தாரு. வந்து கண்டிஷனைப் பார்க்குறாரு. பிறகு, ‘தாத்தாவுக்கு எல்லாமே நார்மலாத்தான் இருக்கு. அவருக்கு உடம்புல ஏதுமில்ல; மனசுலதான்’ன்னு சொன்னாரு.
இதுதான் எனக்கும் அம்மாவுக்கும் தெரியுமே. அவருக்கு உடம்பில் ஒண்ணுமில்ல; எல்லாம் அவரு மனசுலதான்னு. நான் டாக்டர்கிட்ட, ‘நீங்க வேணும்னா கொஞ்சம் அட்வைஸ் செஞ்சுட்டுப் போங்களேன்? ஏதாவது சேஞ்சஸ் தெரியுதான்னு பார்ப்போம்,’ என்றதுக்கு, அவரும் அவரால முடிஞ்ச அட்வைஸ் செஞ்சாரு.
‘தாத்தா, பாருங்க. உங்களைப் பரிசோதிச்சதுல ஒண்ணு நல்லாவே விளங்குது. உங்க உடம்புக்கு ஒண்ணுமில்ல; எல்லாம் உங்க மனசுதான் காரணம். உங்ககிட்ட ஒரு உண்மையை சொல்லுறேன். டாக்டரா நான் பல இடத்துக்கு போறேன். நான் பெரும்பாலும் ஹோம்ல இருக்குற பெரியவங்களுக்கு முடியலைன்னா போய்ப் பார்க்குறது வழக்கம். அப்படி பார்க்கப் போகும்போது ஒவ்வொருத்தர் சொல்லுறதைக் கேட்டா நெஞ்சே வலிக்கும். “எவ்வளவு சொத்து இருந்தும் என்ன பிரயோஜனம்? கடைசி காலத்துல கூட பாத்துக்க ஒரு ஆள் இல்லையே”ங்கிறதுதான் அவங்களோட ஒரே ஆதங்கம். இங்க உங்களைப் பாத்துக்கிறதுக்கு ஆள் இருக்கு. அப்படி இருக்குறப்போ நீங்க இப்படி பண்ணலாமா? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. யாருமே இல்லாம பலர் ஏங்குறாங்க. நிறைய சொந்த பந்தங்கள் எல்லாம் இருந்தும், அவங்களோட கடைசி காலத்துல பக்கத்துல பிள்ளைகூட இல்லைன்னு புலம்புறாங்க. இவங்களையெல்லாம் பார்க்குறப்போ நீங்க கொடுத்து வச்சவங்கதானே? சொல்லுங்க பார்ப்போம். இப்படியே நீங்க படிப்படியா சாப்பிடாம இருந்துட்டு வந்தீங்கன்னா, எலும்பு எல்லாம் தேஞ்சு போயிடும். சத்து இல்லாம ஒரே இடத்துல படுத்திருந்தாலோ, அல்லது கையை ஒரே இடத்துல வச்சிருந்தாலோ, அதனுடைய இயக்கத்தை இழந்து மடக்க முடியாம, நீட்ட முடியாம எல்லாம் ஆயிடும். அப்புறம் யாருக்கு கஷ்டம்? உங்களுக்கு மட்டுமல்ல; உங்க புள்ளைக்கும் தான். நல்லா ஆரோக்கியமா சாப்பிடுங்க. வேண்டுங்கிறதை எடுத்துக்குங்க. பட்டினி இருக்காதீங்க. என்கிட்ட சத்தியம் பண்ணுங்க—ஒழுங்கா சாப்பிடுவீங்களா?’ என்று அரை மணி நேரம் பெரிய லெக்சர் எடுத்துட்டுப் போனாரு.”
அன்றிலிருந்து ஒரு ரெண்டு வாரம் அவரது மனநிலை மாறுபட்டுக் காணப்பட்டது. பிறகு, வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையாக அவர் அவரது போக்கிலேயே இருந்தார். நானோ எனது கையறுநிலையுமாக அவரிடம் தினம் மன்றாடும்படி ஆகிவிட்டது.
அன்று இரவு படுக்கையில் படுத்த பின் தூக்கம் வரவில்லை. பழைய பசுமையான நினைவுகள்—அம்மா, அப்பா, அனைவருடனும் இருந்த தருணங்கள்—எல்லாம் சுழன்றவண்ணமாக இருந்தது. சின்ன வயதில் ரஜினி, கமல் மாதிரித்தான் அப்பாவையும் ஹீரோவாகத்தான் நினைச்சிருந்தேன். அதில் எந்த மாற்றுக் கருத்தே இல்லை. அவர் கோபக்காரராக இருந்தாலும், எனக்குள் ஹீரோவாகவே தெரிந்தார். இதற்கு முக்கிய காரணம்: சில காரணங்களால் அவரது மனைவி, அதாவது எனது அம்மா, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த சமயம். அப்பா மட்டும் அவளை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்வதும், அழைத்துக்கொண்டு வருவதுமாக இருந்ததைப் பார்த்த அந்தக் கணத்திலிருந்தே, அவர் மீது இருந்த ஒருவகையான விலகல் பின் பாசமாக மாறியது.
“ஏண்டி, நீயே சொல்லேன்.”
“என்னத்த சொல்லச் சொலுறீங்க? நீங்க உங்க மனசு ஏதாவது நினைச்சுகிட்டு திடீருன்னு என்னைப் பார்த்து சொல்லச் சொன்னா நான் என்ன சொல்லறது?” என்றாள் கனகா.
“இல்லடி. மனசுல ஒருவித பயமும் கலக்கமும் இருக்கு.”
“எதைப்பத்தி பயமும் கலக்கமும் இருக்கு உங்களுக்கு?”
“எல்லாம் நம்ம புள்ளைங்களைப் பற்றித்தான்.”
“ஏன், அவுங்களுக்கு என்ன? நல்லாதானே இருக்காங்க!”
“இல்ல. இப்ப நான் இருக்கிற மனநிலையிலத்தான் அவுங்க நாம வயசான பிறகு இருப்பாங்களோ!”
“ஏன் தேவை இல்லாம எதையாச்சும் யோசிச்சுகிட்டு பேசாம படுங்க.”
“இல்ல. படுத்தா இப்பெல்லாம் தூக்கம் வர மாட்டேங்கிறது. பிள்ளைகளும் என்னை ஒரு கோபக்காரனாக காணுவாங்களோ என்ற பயம் இப்பெல்லாம் நெஞ்சைக் கசக்கிப் பிழியுது. விரக்தியின் உச்சத்தில் கத்தும் தருணங்களில், பிள்ளைகள் நம்மை—அதாவது என்னை—கூர்மையாகப் பார்க்கும் அந்தக் கணம்தோறும் எனது தவறை உணர்கிறேன். ஆனால் என்ன செய்வது? கோபத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அதுதான் என்னுடைய உண்மையான கையறுநிலை.
இதனால், எல்லாவற்றுக்கும் என்னை எதிர்பார்த்திருந்த அப்பாவே இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பேச்சைக் குறைப்பதும், எது சொன்னாலும் வேண்டாம் என்று முரண்டு பிடிப்பதும்… உடம்பின் மீது அவ்வளவு அக்கறை காட்டியவர் இப்படி ஏறுக்குமாறாக நடப்பதைப் பார்க்கும்போது எப்படிச் சும்மா இருக்க முடியும்? அதுவே கோபத்தை வரவைத்தது.”
கனகா மெதுவாகச் சொன்னாள்: “நான் ஒண்ணு சொல்லவா? தேவையில்லாம கண்கண்டதை யோசிச்சுகிட்டு இருந்ததால் இப்படித்தான். நம்ம புள்ளைங்களுக்கு உங்களையப் பற்றியும் தெரியும். உங்க அப்பாவைப் பற்றியும் தெரியும்.”
“சரி. நீ சொல்லுவது நிஜம்தான்.”
நான் அவரைப் புரிந்துகொண்டது போல, என்னையும் நம்ம பிள்ளைகள் ஒருநாள் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
“தனிமை வேண்டாம். அப்படி ஒரு நிலை வந்தால், என்னை உன்னுடன் அழைத்துக்கொள், இறைவா!” என்ற குரலுக்கு—
“ஏங்க, அப்படி எப்படி போகலாம் நீங்க? எங்களிடமிருந்து தப்பித்துவிடலாமுன்னு நினைக்கலாமா? கனவுலயும் நினைக்காதீங்க,” என்றாள் கனகா.
படுக்கையில் மெல்லிய சிரிப்பொலி எழுந்தது. மறைந்தது.
— பாலமுருகன் லோ