This entry is part 3 of 8 in the series 14 ஜூன் 2026

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்

(தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்)

பாகம் – 1

அத்தியாயம் – 9

மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம்

வாழ்க்கை, வாழ்முறை குறித்த தனது பார்வை தன்னோடு சமூக ரீதியான தொடர்பு கொண்டவர்களால், அதைவிடக் குறிப்பாக, தான் யாரோடு வாழ்ந்து கொண்டிருக்கி றோமோ அவர்களால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே பெரும்பாலா னோருக்கு மகிழ்ச்சியாக இருப்பது சாத்தியமாகிறது.  இது நவீன சமூகக் குழுக்களின் வினோதமான தனித்தன்மையாகவே விளங்குகிறது. நவீன சமூக குழுக்கள் தங்கள் ஒழுக்க நெறிகளிலும் நம்பிக்கைகளிலும் வேறுபட்ட பார்வைகள், அணுகுமுறைகளைக் கொண்டவர்களாய், தனித்தனி தொகுதிகளாப்க பிரிந்திருக் கிறார்கள். இந்த நிலைமை சீர்திருத்தத் காலகட்டத்துடன்  ஆரம்பித்தது; அல்லது , மறுமலர்ச்சிக் காலகட்டத்திலிருந்து தொடங்கியது என்று சொல்லலாம். அது முதல் இந்த நிலைமை அதிகதிகமாக வலுப்பெற்றுக்கொண்டேயிருக்கிறது ப்ராட்டஸ்டண்ட்டுகள், கத்தோலிக்கர்கள் இரு பிரிவினரும் இறையியலில் மட்டுமல்லாமல் வேறு பல வாழ்வியல் விஷயங்களிலும் தங்களுக்கிடையே வேறுபட்டிருந்தார்கள். மேற்குடி வர்க்கத்தினர், தொழிலாளர் வர்க்கத்தினரால் அவர்களுக்கிடையே அனுமதிக்கப்படாத, சகித்துக்கொள்ளப்படாத பலவகையான செயல்பாடுகளைத் தங்களுக்கிடையே அனுமதித்தார்கள்.  பின், மத ரீதியான நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய கடமைகளை ஏற்றுக் கொள்ளாத பரந்தமனப்பான்மை கொண்டவர்களும், சுதந்திரச் சிந்தனையாளர்களும் (latitudinarians and free-thinkers) வந்தார்கள். நம்முடைய காலகட்டத்திலேயே ஐரோப்பிய கண்டம் முழுக்க பொதுவுடமைவாதிகளுக்கும் மற்றவர்களுக்கும் இடையேயான துலக்கமான வேறுபாடு நிலவுகிறது. இந்த வேறுபாடு அரசியல் களத்தில் மட்டுமல்லாமல் வாழ்வின் மற்ற எல்லா துறைகளையும் உள்ளடக்கி யதாக இருக்கிறது. ஆங்கிலம் பேசும் நாடுகளில் இத்தகைய பகுப்புகள் மிக ஏராளமானவை. சில பிரிவுகளில் கலை போற்றப்படுகிறது. வேறு சில பிரிவுகளில் அது சைத்தானாகப் பார்க்கப்படுகிறது. அதுவும், அது நவீன கலையாக இருப்பின் சைத்தானாகவே பார்க்கப்படுகிறது. சில பிரிவுகளில் சாம்ராஜ்யத்திற்க்கான விசுவாசம் மிக உன்னத பண்பாக பாவிக்கப்படுகிறது. வேறு பிரிவுகளில் அதுவொரு தீய பண்பாகப் பார்க்கப்படுகிறது. இன்னும் வேறு பிரிவுகளில் அது ஒரு வகை மடமையாகப் பார்க்கப்படுகிறது. மரபுகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் மனிதர்கள் மத்தியில் திருமணத்தை மீறிய உறவு என்பது குற்றங்களிலேயே மிக மோசமான குற்றச்செயலாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், மக்கட்தொகையில் பெருவாரியான பிரிவுகள் அதை நேர்மறையான பாராட்டத்தக்க ஒன்றாகக் கருதவில்லையென்றாலும்  மன்னிக்ககத்தக்க ஒன்றாகவே பார்க்கிறார்கள் கத்தோலிக்கர்கள் மத்தியில் விவாகரத்து அறவே ஏற்றுக்கொள்ளப்படாதது. கத்தோலிக்கர்கள் அல்லாத கிறிஸ்தவர்கள் அதை திருமணத்தின் வலு குறைத்தலாக ஏற்கிறார்கள்

அவரவர் ரசனைகளுக்கு ஏற்பவும் நம்பிக்கைகளுக்கு ஏற்பவும் ஒருவரின் கண்ணோட்டத்தில் நிலவும் இத்தகைய எல்லா வேறுபாடுகளின் காரணமாக ஒரு குறிப்பிட்ட வகையில் ரசனைகளும் நம்பிக்கைகளும் கொண்ட மனிதர் வேறுவகை ரசனைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருக்கும் மனிதக் குழுவில் ஒரு அந்நியனாகவே பாவிக்கப்படுவார்; அவ்விதமே உணர்வார். அதுவே இன்னொரு வகையான குழுவில் அவர் முற்ற முழுக்க இயல்பான மனிதப்பிறவியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விடுவார்.

  • மிகப்பெரிய அளவு மகிழ்ச்சியின்மை, குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் இவ்விதமாகத்தான் ஏற்படுகிறது. ஒரு இளைஞனோ, யுவதியோ உலகில் உள்ள சிந்தனைகள், கருத்தாக்கங்களை எப்படி அறிந்து கொள்கிறார்கள் ஆனால் அவன் அல்லது அவள் இருக்கும் சமூக குழுவில் அல்லது பிரிவில் அந்த சிந்தனைகள் அறவே ஏற்றுக்கொள்ளப்படாதவை என்பதை அறிந்து கொள்கிறார்கள் அந்த இளைய தலைமுறையினருக்கு நமக்கு பரிச்சயமான சமூகச் சூழலே உலகம் முழுமையையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக தோன்றுகிறது. இங்கே மிக வக்கிர மானதாக கருதப்படும், புறமொதுக்கப்படும் ஒன்று, அந்த பயம் காரணமாகவே அந்த ஒன்று நல்லது, தன் நம்பிக்கைக்கு உரியது என்று வெளிப்படையாக பேச தான் துணியாதது, வேறொரு இடத்தில், வேறொரு சமூகப் பிரிவில் அந்த காலகட்டத்தின் மிக இயல்பான, சாதாரண மான விஷயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டி ருக்கிறது, ஏற்றுக்கொள்ளப்படலாம் என்ற உண்மை நம்பவே முடியாத ஒன்றாக அவர்களுக்குத் தோன்றுகிறது. இவ்வாறு, உலக நடப்புகளை பற்றிய அறியாமை காரணமாக அனாவசியமான துயரமும் பயமும் மிக அதிக அளவு பொறுத்துக் கொள்ளப்படுகிறது. சில சமயங்களில் இளமைக்காலத்தில் மட்டுமே இந்த பாரம் என்றாலும், பல நேரங்களில் வாழ்நாள் முழுக்க இந்த பாரத்தைத் தாங்கவேண்டி யிருப்பதும் தவிர்க்கமுடியாததாகிறது. இவ்வகையான தனிமைப்படுத் தப்பட வலி, வேதனைக்கான காரணமாக அமைவதோடு எதிர்ப்பு காட்டும் சூழலில் நமது அகவய சுதந்திரத்தைத் தக்கவைத்துக் கொண்டாகவேண்டிய தேவையற்ற பணியில் நமது சக்தித் திறனாற்றல் விரயமாகும்படி செய்கிறது. இத்தகைய நெருக்கடியில் உள்ள நூறில் 99 பேர் விஷயத்தில் இந்நிலை சிந்தனைகளை அவற்றின் தர்க்கபூர்வ முடிவு வரை பின்தொடர்வதில் ஒருவித தயக்கத்தை, தைரியமின்மையை உருவாக்குகிறது Bronte சகோதரிகள் அவர்களுடைய புத்தகங்கள் பிரசுரிக்கப்படும் வரை அவர்களுடைய கருத்துக்களுக்கு உடன்படும் இணக்கமான மனிதர்கள் எவரையுமே ஒருபோதும் சந்தித்ததில்லை அந்த நிலைமை வீரநாயகத்தன்மை யோடு எப்போதும் மகிமை பொருந்திய அளவிலேயே  இருந்த எமிலியை பாதிக்கவில்லை. ஆனால், அது சார்லட்டை நிச்சயமாக பாதித்தது. காரணம், அவருடைய வாழ்வு குறித்த கண்ணோட்டம். சார்லட்டுக்கு இருந்த அத்தனை தகுதித் திறனாற்றல்களை மீறி, எப்போதுமே ஒரு செவிலித்தாயினுடையதாக மட்டுமே பெருமளவில் இருந்தது. Blakeம் Emile Bronteஐப் போலவே மிக  அதிக அளவு அகவயமான தனிமைப்படுத்தப்படலில் வாழ்ந்தார். ஆனால், அவளைப் போலவே அதன் மோசமான விளைவுகளை கடந்து வரும் அளவு மகத்தானவராக இருந்தார். தன்னுடைய கண்ணோட்டமே சரியானது, தன்னை விமர்சிப்பவர்களின் பார்வை தவறு என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார். பொதுமக்களின் கண்ணோட்டத்தைப் பற்றிய அவருடைய பார்வை என்னவாக இருந்தது என்பதை பின்வரும் வரிகள் எடுத்துரைக்கின்றன:
  •  
  • என்னை வாந்தியெடுக்கவைக்குமளவு போய்விடாத ,
  • நானறிந்த ஒரே மனிதன்
  • Fuseli . அவன் துருக்கியன், யூதன் இரண்டுமாக இருந்தான்
  • எனவே, அன்புமிக்க கிறித்துவ நண்பர்களே – நலம்தானே?

ஆனால், இந்த அளவு வலிமையான சக்தியை தங்களுடைய உள்வய வாழ்வில் பெற்றிருப்போர் மிகவும் குறைவு. ஏறத்தாழ எல்லோருக்குமே, அனுசரணையான, பரிவுணர்வுகூடிய சுற்றுச்சூழல்கள் அவர்கள் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு அவசியமாக இருக்கின்றன. பெரும்பாலானோருக்கு அவர்கள் வாழும் சமூக சூழல்கள் அனுதாபமும் அனுசரணையும் கொண்டதாக அமையவில்லை. அவர்கள் தமது இளமைப் பருவத்தில் புறத்தில் நிலவும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டு அவற்றிற்கு ஏற்ப தங்களை தங்களைத் தகவமைத்துக் கொள்கிறார் கள். ஆனால், ஏதாவது அறிவார்த்த அல்லது கலாபூர்வமான ஆற்றல், தகுதி வாய்க்கப்பெற்றிருக்கும் மிகச் சிலரையும் உள்ளடக்கியிருக்கும் சிறுபான்மை யினரில் பெருவாரியானவர்களுக்கு இந்த ஏற்பு மனோபாவம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகிறது; அசாத்தியமானதாகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு சிறிய நகர்ப்புற பகுதியில் பிறந்த ஒருவர் அறிவு சார் மேதமைக்கு அவசியமான எல்லா விஷயங்களையும் வெறுக்கும், எதிர்க்கும் சூழலில் இருப்பதை தனது இளமைப் பருவத்தில் உணர்கிறார். தீவிரமாக சில விஷயங்களை பற்றிப் பேசும் புத்தகங்களை படிக்க அந்த இளைஞர் விரும்பினால் மற்ற பையன்கள் அவனை வெறுக்கிறார்கள். அத்தகைய புத்தகங்களைப் படிக்கலாகாது, அவை அவனுடைய மனதைக் கெடுக்கும் என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அவனுக்கு கலை மீது நாட்டம் மிகுந்தால் அவனுடைய சக வயதினர் அவனை ஆண்மைத்தன்மை அற்றவனாக பாவிக்கிறார்கள். அவனுக்கு மூத்தவர்கள் அவனை ஒழுக்கங் கெட்டவனாக பாவிக்கிறார்கள் அவன் இருக்கும் வட்டத்தில் ஏதாவது தொழில் செய்ய வேண்டும், வாழ்க்கை தொழில் மேற்கொள்ள வேண்டும் என்று அவன் விரும்பினால், வழக்கமாக மற்றவர்கள் மேற்கொள்ளாத வேறுவகையான தொழிலை அவன் செய்ய விரும்பினால் அவன் அப்பா பார்த்து தொழில் தான் அவனுக்கும் ஏற்றது என்றும்,  அதுவே அவனுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. தனது பெற்றோர்களின் மத ரீதியான கோட்பாடுகளையோ, அரசியல் சார் ஆதரவு நிலைப்பாடுகளையோ விமர்சிக்க அவன் முற்பட்டால் அவன் மிகவும் தீவிரமான பிரச்சினைகள் மாட்டிக்கொள்ள வாய்ப்பு அதிகம். இந்தக் காரணங்களுக்காக அசாதாரண அறிவாற்றலும், தகுதித்திறனாற்றலும் கொண்ட எத்தனையோ இளந்தலைமுறையினருக்கு வளரிளம் பருவம் என்பது மிக அதிக அளவு மகிழ்ச்சியின்மை நிலவும் கால கட்டமாக அமைகிறது. சாதாரணத்தனம் வாய்க்கப்பெற்ற பருவம் என்பது கேளிக்கை, குதூகலத்திற்கான காலமாக அமையலாம். ஆனால், அசாதாரணத் தன்மை வாய்ந்த வளரிளம்பருவத்தினர் கேளிக்கை, குதூகலத்தைத் தாண்டிய  தீவிரமான ஒன்றை விரும்புகிறார்கள்; நாடுகிறார்கள். அதை அவர்கள் வாழும் குறிப்பிட்ட சமூகச்சூழலில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர்கள் பிறந்திருக்கும் அந்த சமூகச் சூழலில், அவர்களால் தங்களை விட மூத்தவர்கள் மத்தியிலும் கண்டறியு முடிவதில்லை; தங்கள் சம வயதினரிடையேயும் கண்டறிய முடிவதில்லை.

 இத்தகைய இளம்பருவத்தினர் ஒரு பல்கலைக்கழகத்திற்குச் செல்லும்போது அவர்கள் தங்களைப் போலவே சிந்திக்கும், விஷயங்களை அணுகும் ஒத்த கருத்துடைய சிலரை சந்திக்கிறார்கள். அவர்களோடு சில வருடங்களை மிகவும் ஆனந்தமாகக் கழிக்கிறார்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும்போது தங்கள் மனம் கவர்ந்த சிலரை தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்புகள், வாய்ப்புள்ள ஏதாவது வேலை அவர்களுக்குக் கிடைக்கிறது. லண்டன் அல்லது நியூயார்க்கைப் போன்ற அத்தனை பெரிய நகரில் வாழ்கின்ற ஓர் அறிவுசாலி அவனுடைய மனதுக்கு ஏற்ற, அவனுடைய கருத்துக்கள் அணுகுமுறைகளை ஏற்றுக் கொள்கிற சகாக்களைக் கண்டுபிடித்துக் கொள்ள முடிகிறது. அங்கே அவன் தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டிய தேவை இல்லை. போலித்தனமாக நடந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அவனுடைய பணி நிமித்தம் ஏதாவது ஒரு சிறிய ஊரில் வாழவாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் – ஒரு மருத்துவர் அல்லது வழக்கறிஞர் போல் – அவருடைய வாழ்நாள் முழுக்க அவர் போலித்தனமாக நடந்துகொள்ளவேண்டிய, தனது உண்மையான ரசனைகளை, நம்பிக்கைகளை, கண்ணோட்டங்களை. தினசரி அவர் சந்தித்தாகவேண்டிய மனிதர்களிடமிருந்து ஒளித்துஒழித்து வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது இது குறிப்பாக அமெரிக்கா போன்ற அகண்ட நாட்டில் மிகவும் நஉண்மையான நிலவரம். நாம் நினைத்துப்பார்க்கவே இயலாத  பகுதிகளில்,- வடக்கு தெற்கு கிழக்கு மேற்கில்,  தனிமையில் உழலும் மனிதர்களைப் பார்க்க முடியும்

அப்படித் தனிமையில் உழலவேண்டிய தேவையிருக்காத இடங்கள் இருக்கின்றன என்பதை புத்தகங்களிலிருந்து அவர் அறிந்துகொண்டிருப்பார். ஆனால், அந்த இடங்களில் வாழும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைக்கவே வழியில்லை என்பதும் அவருக்குத் தெரியும். அவருக்கு இருக்க வாய்ப்புள்ள இடத்தில் ஒத்த கருத்துள்ளவர்களோடான உரையாடல் என்பதற்கு வாய்ப்பேயில்லை. இத்தகைய சூழல்களில் ‘ப்ளேக்’ அல்லது ‘எமிலி ப்ராண்ட்டே’ போன்றவர்களை விட குறைந்த அளவு ஆளுமை வாய்க்கப்பெற்றவர்களுக்கு மெய்யான சந்தோஷம் சாத்தியமே யில்லை. அத்தகைய சந்தோஷம் சாத்தியமாகவேண்டுமென்றால், பொதுமக்களின்/ மற்றவர்களின் அபிப்பிராயம் என்ற கொடுங்கோன்மையை மட்டுப்படுத்த அல்லது தவிர்க்க முடியும் வழியொன்று கண்டுபிடிக்கப்படவேண்டியது அவசியம். அதன் மூலம் அறிவுசாலி சிறுபான்மையின அங்கத்தினர்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்கும், தங்களது கலந்துறவாடலில் பரஸ்பரம் இருவருமே மகிழ்ச்சியடைவதற்கும் வாய்ப்பு ஏற்படும் வகையில் ஒரு வழியைக் கண்டுபிடித்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

பலபேரைப் பொறுத்தவரை தேவையற்ற பயம், கூச்சம், தயக்கம் எல்லாம் மேற்குறிப்பிட்ட சிரமத்தை அது இருக்கவேண்டிய அளவை விட இன்னும் மோசமாக்குகிறது. பொதுமக்களின் அபிப்பிராயம் என்பது அதை பொருட்படுத்தா தவரை விட அதிகமாக, அதை எதிர்கொள்ள அஞ்சுகிறவரை நோக்கித்தான் இன்னும் கொடுங்கோன்மையோடு செயல்படும். ஒரு நாய் அதைக் கண்டு மக்கள் அஞ்சும்போதுதான் அவர்களைப் பார்த்து ஆக்ரோஷமாகக் குறைக்கும்; அவர்கள் மீது பாய்ந்து கடிக்கும். தன்னைப் பார்த்து பயப்படாதவரை, தன்னை அதட்டுபவரைக் கண்டு அது பின்வாங்கும். மனிதர்களும் இதே குணாம்சத்தைக் கொண்டவர்கள்தான். அவர்களைப் பார்த்து நீங்கள் அஞ்சுவதை வெளியே காட்டிக் கொண்டால் அவர்களுக்கு நல்லதொரு வேட்டை விருந்துக்கான வாய்ப்பை நீங்கள் அளிக்கிறீர்கள் என்பது உறுதி. அவர்களை அலட்சியப்படுத்தினால், புறக்கணித்தால், உங்களை பாதிக்கும் சக்தி தங்களுக்கு இருக்கிறதா என்று அவர்களுக்கு சந்தேகம் வந்துவிடும். எனவே உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள். இங்கே நான் எதிர்ப்பின் உச்சபட்சமான தீவிர வடிவங்களைப் பற்றி எண்ணவில்லை. நீங்கள் கென்ஸிங்க்ஸ்ட்டனில் ருஷ்யாவின் மரபார்ந்த கண்ணோட்டங்களை உயர்த்திப் பிடித்தால், அல்லது கென்ஸிங்க்ஸ்டனின் மரபார்த்தமான விஷயங்களை ருஷ்யாவில் உயர்த்திப்பிடித்தால் அதற்கான விளைவுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.. நான் இங்கு உச்சபட்ச எதிர்ப்பு வடிவங்களைப் பற்றி எண்ணவில்லை. மாறாக, வழிவழியான மரபிலிருந்து மிக சன்னமான அளவிலான வழிவிலகலையே பேசுகிறேன். சமூகத்தில் மற்றவர்கள் ஏற்குமளவில் உடை யணியாதிருத்தல்,, ஏதாவது ஒரு சர்ச்சில் அங்கம் வகிக்காதிருத்தல் அல்லது அறிவார்த்தமான புத்தகங்களைப் படிக்காதிருத்தல் – இப்படி. இத்தகைய சிறு விலகல்கள் விடுபடல்கள் – அவை கொண்டாட்டவுணர்வுடன் கவலையற்ற களிப்புடன் மேற்கொள்ளப்பட்டால், மிகவும் கட்டுப்பட்டித்தனமான சமூகங்களிலும் அவை சகித்துக்கொள்ளப்படும். படிப்படியாக அவர்கள் ‘அங்கீகரிக்கப்பட்ட பைத்தியக்காரர்கள்’ என்ற அந்தஸ்தை அடைவது சாத்தியமாகும். அத்தகைய அந்தஸ்தை பெற்றவருக்கு மற்றவர்கள் செய்தால் மன்னிக்க முடியாத குற்றமாக பாவிக்கப்படும் விஷயங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இது பெருமளவில் ஒரு வகை நல்ல குணமும், நட்புறவாடலும் ஆகும். பொதுவாக மரபார்ந்த மனிதர்கள் வழிவழியாக மரபுகளில் ஏற்படும் வழி விலகள்களைக் கண்டு ஆவேசப்படு கிறார்கள். காரணம், இத்தகைய வழிவிலகல்களை அவர்கள் தங்கள் மீது வைக்கப் படும் எதிர்விமர்சனங்களாகப் பார்க்கிறார்கள். தான் மரபிலிருந்து விலகியிருப்பது மற்றவர்களை விமர்சிக்க அல்ல என்பதை, அவர்களில் மிக மிக முட்டாள்களிடம் கூடத் தெளிவாக்கமுடியுமளவு குதூகலமும் சினேகபாவமும் இருப்பின் அவருடைய மரபிலிருந்தான வழிவிலகலை அவர்கள் மன்னித்துவிடுவார்கள்.

என்றாலும் தணிக்கைக்குத் தப்புவதற்கான இந்த வழிமுறை பலருக்கு அசாத்திய மான காரியமாக இருக்கிறது. காரணம் அவர்களுடைய ரசனைகள் அல்லது அபிப்பி ராயங்களால் தாம் சார்ந்த சமூகக் குழுவிடமிருந்து எந்தவிதமான அனுதாபமும் தங்களுக்குக் கிடைக்காமல் செய்திருப்பவர்கள் பலருக்கு இவ்விதமான தணிக்கை யிலிருந்து தப்பித்தல் அசாத்தியமாகவே இருக்கிறது. இந்த நிலைமை, தாம் சார்ந்த சமூகத்தினரிடமிருந்து தமக்கு அனுதாபம் கிடைக்காத நிலை,, சண்டைசச்சரவுக்குத் தயாராக இருக்கும் ஒருவிதமான மனோபாவத்தை அவர்களிடம் வரவாக்குகிறது. இப்படியாக அவர்கள், எந்த அழுத்தமான விஷயத் தையும் தவிர்க்க முற்பட்டாலும், அல்லது , அதற்கு இணக்கமாக இருப்பதாக காட்டிக்கொண்டாலும், உள்ளூர மேற்படி மனோபாவம் அவர்களிடம் ஆழப் பதிந்து விடுகிறது. நாம் சார்ந்த சமூகக் குழுவின் சம்பிரதாயங்கள், நடைமுறைகளோடு இணக்க உணர்வு கொண்டிராத வர்கள் கோபப்படுபவர்களாக, தர்மசங்கடமாக உணர்கிறவர்களாக இருக்க நேரிடுகிறது. அவர்களிடம்  இதே மனிதர்களே தமது என்ன ஓட்டங்கள் அணுகு முறைகள் விசித்திரமானவையாக பார்க்கப்படாத வேறொரு சமூகக் குழுவுக்குள் இடம்பெயர்க்கப்பட்டால் அது அவர்களுடைய குணநலனையை ஒட்டுமொத்தமாக மாற்றி விடுவதாக தோன்றும் எப்போதுமே இறுகிய விலகிய தீவிர பாவத்தோடு ஒதுங்கி இருக்கும் அவர்கள் உற்சாகமானவர்களாகவும் தன்னம்பிக்கை மிக்கவர் களாகவும் மாறக்கூடும்;  விறைப்பாகவும், எதிர்ப்புணர்வோடும் எதிர்வினையாற்று பவர்கள் இயல்பாக, சகஜமாகக் கலந்துறவாடுபவர்களாக மாறக்கூடும். தன்முனைப் பாகவே இருப்பவர்கல் உள்வயமாகவே இருப்பவர்கள், மற்றவர்களோடு சிநேக பூர்வமாக கலந்துறவாடுபவர்களாக மாறக்கூடும்.

(இன்னுமுண்டு)

Series Navigationசிங்கப்பூர் எழுத்தாளர் அழகர்சாமி சக்திவேல் அவர்களின் குயர் (Queer) மக்கள் பற்றிய புத்தகங்களின் மதிப்பாய்வு நிகழ்வுபட்டைதீட்டியவன்…..