
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
*
உனக்கு வயதாகிவிட்டது என்கிறாய்
உனக்கும்தான் என்கிறேன்
உன் கழுத்தெங்கும் சுருக்கங்கள் என்கிறாய்
உனக்கும்தான் என்கிறேன்
நீ மாடிப்படியேறும்போது உன் முழங்கால்கள் முரண்டுபிடிக்கின்றன என்கிறாய்
உனக்கும்தான் என்கிறேன்
முன்போல் உன்னால் மளமளவென்று நடக்கமுடியவில்லை யென்கிறாய்
உனக்கும்தான் என்கிறேன்
எப்பொழுதுமே நினைத்துக்கொண்டிருப்பதாய்
பொய் சொல்லமுடியாவிட்டாலும்
உன்னை முழுமையாக மறந்துவிட முடியவில்லை என்கிறாய்
எனக்கும்தான் என்கிறேன்
நிலைக்கண்ணாடியில் பார்க்கும்போது நம் முகம் யாருடையதைப் போலவோ தோன்றுமில்லையா – அதைப்போன்றதொரு உணர்வு ஏற்படுகிறது என்கிறாய்
எனக்கும்தான் என்கிறேன்.
எதிரில் நீ நிற்கும்போது உன் சுருங்கிய தோலைத் தாண்டி
உன் தளும்பும் மனது மினுங்கித் தீண்டுகிறது என்னை என்கிறாய்
எனக்கும் அப்படியே என்கிறேன்.
காலக் கரையான் அரிக்காத உன் குரலைக் கேட்கையில்
தேன்வந்து பாய்கிறது என் காதுகளில் என்கிறேன்
காலக்கரையான் அரித்தால்தான் என்ன?
குரலென்பது குரல் மட்டும் தானா என்கிறாய்
நீ சொல்வது சரிதான் – ஆனால், நான் நான் தான்
நீ, நீ தான் என்கிறேன்
ஆமாமாம் – நான் நானேதான் – நீ நீயே தான் என்கிறாய்.
சிறுபொழுதில் ஒரு பிரளயம் அங்கே உருவாகி
கால வயதுக் கணக்கைப் புரட்டிப்போட,
மறுபடி பிறக்கிறோம் நாம் –
மழலையராய் அல்ல!