மழையை எதிர்கொள்தல் ( 14.6.26)
ஒரு வாரத்திற்கும் மேலான மழை
வீட்டு ஈரம் நனைசுவர்
ரோமம் சிலிர்த்தபடி குளிரில் வளைந்து
முடங்கி படுக்கிறது வீட்டு நாய்
தோல் பரப்பில் வழியும் மழையை
முழுதுமாக அனுபவிக்கிறது
தெருமண் முளையில் கட்டிய எருமை
பச்சை இலைகளில் சடசடத்து நழுவும் ஈரத்தை
வேர் பிடித்த மரம் வேடிக்கையாகவே நோக்கும்
கம்பிகளிலும் முடுக்குகளிலும் மாறி மாறி அமர்ந்து
ஈரத்திலேயே உலர்த்த முயற்சிக்கின்றன குருவிகள்
குழந்தைகள்
அறைக்குள்ளேயே முடக்கப்பட்டு விளையாட்டற்று
வலுக்கட்டாயமாய் உறங்க வைக்கப்படுவர்
எல்லாவற்றுக்கும் கண் கொடுத்துக் கொண்டே வருவதில்
குடையில்லாமல்
சொட்ட சொட்ட பாலூற்றும்
சைக்கிள்காரிகளை விட
மோசமாய் உறுத்திக் கொண்டே இருப்பது
கோவிலோரத்திலும் பஸ்நிறுத்தத்திலும்
மரத்துக்கு அடியிலும்
தோளில் இருத்திய குழந்தையுடன்
மழை முழுசுக்கும்
ஈரித்துப் போகிற குப்பைக் காகிதங்களைப் போலவே
நனைந்து நனைந்து நடமாடும் குறத்தியின்
வீடு வாசலற்று
ஊறிப் போன அவள் உள்ளங்கால்கள்.
**