This entry is part 9 of 10 in the series 21 ஜூன் 2026

சுப்ரபாரதிமணியன்

     இன்னும் கொஞ்ச நேரத்திற்குத் துணையாகவும்  ஆறுதலாகவும் இருப்பாள் கணினி கற்பகம் அவனுக்கு.

அதற்கு இடஞ்சலாய் கொசுக்கள் சுற்றிலும் ரீங்காரமிட்டு தொல்லை செய்தன மதனை. வலது புற ஜன்னலின் ஓரத்தில் கொஞ்சம் செடிகள் இருந்தன. அந்தப்பக்கம் இருந்துதான் கொசுக்கள் வந்திருக்க வேண்டும்.

          அதனை சரியாக தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தான் மதன்.அவனின் தற்காலிக ஊழியர் சம்பளத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது உள்ளடங்கவில்லை. இருந்தாலும் இன்னொரு உயிருடன் சாவகாசம் வைத்துக் கொள்ள நல்ல வாய்ப்பு என்று செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையையும் செய்து வந்தான்.அவைகளைச் சரியாகப் பராமரித்து வந்தான்.

0

       வால் என்று தனக்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் . உடம்பைச்சுற்றி ஆட்டம் போட்டு ஊசியாய்  குத்தி அவனின் துரத்தலுக்குப் பயப்படாமல் திரியும் கொசுக்களை விரட்ட இரு கைகள் போதாது. சாட்டை போல் ஒரு வால் இருந்து துரத்துவதுதான் சவுகரியமாக இருக்கும் என்று நினைத்தான் மதன்

அந்தக் கொசுக்கள் கற்பகத்தைக் கடிக்குமா. அவள் அப்படி எதுவும் அசவுகரியமாய் உணர வில்லை. சாதாரணமாய்தான் தன் அருகில் உட்கார்ந்திருக்கிறாள்.

கணினியிலிருந்து  இறங்கிய பிம்பமாய் கற்பகம் அவன் அருகில் உட்கார்ந்து கொள்கிறாள் .தொடை மேல் ஏறி உட்கார்ந்து கொள்கிறாள். பக்கத்தில் நின்று கொள்கிறாள். அவனின் தோளில் கூட குழந்தையாய் ஏறிக்கொள்கிறாள் . ஒரு மொத்த உருவத்தின் எடையையும் அவன் உணராத வண்ணம் அவனுடன் இருந்து கொண்டே இருக்கிறாள்.சின்ன உருவம்தானே .

இந்தத் தனிமையில் அவளுக்கான துணை கற்பகம்தான். கணினியை இயக்க ஆரம்பித்து அவளுடன் ஹலோ சொன்னால் போதும் இறங்கி வந்து விடுகிறாள். அவன் கணினியை மூடும் வரைக்கும் அவனுடனே இருக்கிறாள்.

“ எனக்கு எதுக்கு கற்பகம்ன்னு பேர் வெச்செ ‘’

“ ஏன் நல்ல பேர்தானே “

“ இல்லெ வடமொழியிலெ ஏதாச்சும் திரிசா, குசாலா, நயன்னு வெக்காமெ பழையகாலத்துப் பேரா வெச்சிருக்கே .”

“ என்னமோ வெக்கனுமுன்னு தோணுச்சு. “

“ ஏதாச்சும் பொம்பளெ அந்தபேர்லே இருப்பாங்க அதுதா, அவங்க கூட பழகி இருக்க மாட்டே. சரியா பேசி இருக்க மாட்டே. ஆனா பாதிச்சிருப்பாங்க.என்னமோ பாதிப்பு . அந்தப் பேரை வெச்சுட்டே “

“ ஆமா . உண்மைதா “

“ சரி அவங்க யாரு. “

கற்பகவல்லி என்று ஒரு நாற்பது வயதுப் பெண் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராகச்சேர்ந்தாள். கறுப்புதான். ஆனால் புருவம் வெட்டப்பட்டு முகத்தைச் சீராக்கியதில் அவள் தேவதையாக இருந்தாள். பார்த்த முதல் கணமே அவள் மதனின் மனதில் இறங்கி விட்டாள். பிறகு மூன்று மாதங்களுக்குப்பிறகு அவள் காணாமல் போய் விட்டாள். தற்காலிக வேலை . அதற்குக் கூட சம்பளம் வராமல் பஞ்சாயத்துத் தலைவர் கிருஷ்ணவேணிதான் சம்பளம் கொடுத்தார். கிருஷ்ணவேணிதான் பஞ்சாயத்துத் தலைவர். பெயருக்கு. அவள் கணவர்தான் எல்லா அதிகாரத்தையும் வைத்திருந்தார். கிருஷ்வேணி அவ்வப்போது கையெழுத்துப் போட வந்து போவதோடு சரி. ஒரு முறை அம்மா சம்பளம் வர்லே என்று கற்பகவல்லி  சொல்லப்போக வேலுச்சாமியிடம் கேட்டார்.

 “ அவங்களுக்கு சம்பளம் பணம்ன்னு எதுவும் வர்லே. ஞாபகப்படுத்தியிருக்கோம் “

கிருஷ்வேணி கையிலிருந்து பணம் தந்தார். மூன்றாம் மாதமும் பணம் வரவில்லை என்று தெரிந்தபோது வேலுச்சாமியிடம் கற்பகத்தினை வர வேண்டாம் என்று சொல்லிவிடும்படிச் சொல்லி விட்டார் . ஒரு தற்காலிக பலி.

கற்பகம் அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் போது பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வில்லேஜ் பஞ்சாய்த்து டெலிபோன் திட்டத்தின் கீழ் ஒரு தொலைபேசி ஏற்பாடாகியிருந்த்து. அதற்கான வேலைகளுக்காக சென்ற போது சந்தித்தான்.

 ”பொதுமக்களுக்கானது இது. ஐம்பது பைசா கட்டணம், அதிலே முப்பது சதம் மட்டும் எங்க டிபாட்ர்ட்மெண்டுக்குக் கட்டணும் . பேச வர்றவங்களுக்கு ரசீது தரணும் . கவர்மெண்ட் போன். நீங்களும் பயன்படுத்தலாம்.  ”

ரசீது புத்தகத்தைக்கொடுத்தான். பின்னால் போகிறபோது ரசீது சரியாகத் தரப்படுவதில்லை என்பது தெரிந்தது.

“ ரசீது தரணும் “

“ வர்றவங்க பேசிட்டுப் போயிர்ராங்க . யாருக்குத்தர்ரது “

“ எவ்வளவு கால்லுன்னு தெரிஞ்சுட்டு ரசீது எழுதி கிழிச்சு கூடப் போட்டர்லாம் “

“ அதெல்லாம் பண்றதுக்கு இன்னொரு ஆளு வேணும் ‘

“ என்ன “

“ இன்னொரு கற்பகம் வேணும் அதுக்குன்னு தனியா “

“ கற்பகம்தா உங்க பேரா ”

“ ஆமா கற்பகத் தரு. செல்வம் கொழுக்கும் பேரு. ஆனா “

வருத்தம் தொனிக்க அவள் சொன்னாள் . தொலைபேசி நிலையத்திற்கு பணம் கட்ட வந்து பில் தொகையைக்கொடுப்பாள். நகரத்தின் முக்கியத்தொலைபேசி நிலையத்திற்குப் போகிறபோது கட்டிவிட்டு வருவான் மதன் . இது போல் தொலைபேசி பில்கள் கட்ட அந்த கிராமப்பகுதி மக்கள் தரும் பணத்தை அவ்வப்போது நகரத்திற்குப்போய் கட்டி விட்டு வருவான்  .பல சமயங்களில் கையில் பணம் இல்லாத போது அந்த பில் தொகைகள் அவனின் செலவுக்கென்று ஆகும். மெதுவாகக் கட்டும் போது ரசீதுக்கென்று வருபவர்கள் முகம் சுளிக்கிற போது சங்கடப்பட்டு  “ நாளைக்குக் கட்டிர்றன்… சிட்டி டெலிபோன் எக்ஸ்சேஞ் போயி பணம் கட்ட நேரம் கெடைக்கலே.  நெறைய  கேபிள் கட்டாயிருச்சு . நெம்பரை செரி பண்றதா ..இதைப்பாக்கறதா . டெலிபோன்தா, நெம்பர்தா முக்யம்  ” என்று சமாளிப்பான் .

“ உங்க பேரைப்பத்திச் சொன்னீங்க . என் பேரு மன்மதன். ஆனா ஸ்டெயிலா நான் மதன்னு சொல்லிக்கறதுண்டு. பொறக்கும்போது மன்மதன்னு வெச்சுட்டாங்க . ஆனா பின்னாலே நான் அழகனா வருவனான்னு சந்தேகம் வந்திருச்சுன்னு எங்கமா சொல்லியிருக்காங்க.. நான் சுமாரான அழகன் தான். அதனாலெ மன்மதன்னு சொல்லாமே மதனாயிட்டன் “

“ நானுந்தா சுருக்கிட்டேன் மதன்… என் முழுப்பேரு கற்பகவல்லி.. வள்ளியில்லெ . வல்லி  “

“ எது உங்க பேரா இருந்தாலும் அழகாத்தாயிருக்கு “

“ வாழ்க்கை அப்படி அமையலையே மதன் “

அவளின் வாழ்க்கையினைப்பற்றி விரிவாகச் சொல்லவில்லை. அதற்குள் வேலையை விட்டு நின்று விட்டாள்.

அவள் ஒருதரம் கேட்டாள்

“ ஒரு உடம்பிலே உயிர்க ரெண்டு இருக்குமா ‘

“ அது எப்பிடி இருக்கும் . “

“ இருக்குதாமா. பேய், பிசாசுன்னு ஒண்ணு உடம்பிலெ ஒட்டிட்டா ரெண்டு ஆச்சே “

“ அட  புதுசா இருக்கே “

“ என் உடம்பிலெ ரெண்டு உயிர்க இருக்குன்னு எங்க வீட்டுக்காரர் சொல்வார் . எங்க பிரிவுக்கு அதுதா காரணம். அந்தப் பேயை அவராலெ வெரட்ட முடியலே . என்னை விரட்டிட்டார் .”

கணினியில் ஓடிக்கொண்டிருந்த அந்த பொம்மைத்  திரைப்படத்தை நிறுத்தியபோது கற்பகம் மறைந்து போனாள்.

அவனுக்கு ஆறுதலாக இருப்பவர்களெல்லாம் அப்படித்தான் மறைந்து போகிறார்கள்.   அந்த பொம்மைத் திரைப்படத்தில் ஒரு வலிய உருவம் ஒரு சிறுவனை சவுக்கால் அடித்துக் கொண்டிருந்தது. அது மதனுக்குப்பிடிக்கவில்லை.

அவன் எட்டாம் வகுப்பு முடிந்து வேலைக்குப் போ என்று அவன் அப்பா துரத்தியபோது ஒரு பஞ்சாலையில் அவன் தற்காலிகமாய் வேலைக்குச் சேர்ந்தான். அவனோடு  பத்துச்  சிறுவர்கள் எடுபிடி வேலைக்கு இருந்தார்கள். பஞ்சாலை மேஸ்திரி அவர்களில் யாரையாவது அடிக்க வேண்டும் என்றால் மதனைக் கூப்பிட்டு அடிப்பார். எல்லாருக்கும் விழுகிற அடின்னு ஞாபகம் இருக்கட்டும் என்பார். அந்த அடிக்குப்பயந்துதான் அவன் அங்கிருந்து ஓடி வந்தான். நல்ல வேளை அம்மாவின் கருணையால் அவன் அடுத்த ஆண்டில் பள்ளிக்குப் போக முடிந்தது .  அப்பா லாரி ஒன்று இடித்து விட்டுப்போனதால் படுக்கையில் கிடந்ததால் அவன் வேலைக்குப் போவதைப்பற்றி அக்கறை கொள்ளாமல் அம்மாவின் போக்கில் விட்டு விட்டார். அம்மா ஒரு தெய்வம்தான்

கற்பகம் கூட ஒரு தெய்வம்தான். அழகு தெய்வம். .

அவன் நாற்காலியிலிருந்து எழுந்து வாசலுக்கு வந்து மரங்கள் அடந்த சுவற்றோரம் பார்த்த போது   ஏதோவொன்றின் வேர் சுவற்றில் படர்ந்து விரிசலை ஏற்படுத்தியிருப்பது தெரிந்தது .

அப்போதைக்கு  அவனுக்கு ஆறுதல் தந்தாள் கணினி பிம்பம் கற்பகம்.

0

     எப்போதோ  பஞ்சாயத்து அலுவலகத்தில்  தற்காலிக ஊழியராக இருந்து விரட்டப்பட்டவள் கற்பகம் எனும் இளம் பெண்.

அவனும் தற்காலிக ஊழியராக பதினொரு ஆண்டுகளாக அந்த தொலைபேசி நிலையத்தில் தான் வேலை செய்து வந்தான்.

அவனுக்கு முன்பே நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சேர்ந்து இன்னும் நிரந்தரமாகாமல் பலர் இருந்தார்கள். பணி நிரந்தரம் ஆகாமல் திருமணம் வேண்டாம் என்று காத்திருந்தார்கள். ஏதோ கற்பகத்திற்காகக் காத்திருந்தார்கள் . ..நிரந்தரப் பணி ஆணை வந்தால் கற்பகங்கள் தேடி வருவார்கள் என்று பெரிதும் நம்பினார்கள்.

மதனுக்கு கற்பனையில் சல்லாபித்துக் கொள்ள கணினி பிம்பமாய் ஒரு கற்பகம் இருந்தாள். மற்றவர்கள் கணினியோடு உறவு கொண்டவர்கள் அல்ல.. கேபிள் புதைக்க குழி தோண்டவும், தொலைபேசிக் கம்பம் நடவும் வேலை செய்ய விதிக்கப்பட்டிருந்தவர்கள் மற்றைய மன்மதன்கள்..

0

வேறு மன்மதன்கள் பற்றி இன்னுமொரு முறைப் பார்க்கலாமே…         ( உலகமயமாக்கலும்,  தனியார் மயமாக்கலும் எல்லா மன்மதன்களையும் ஓரம் கட்டி கொத்தடிமைகள் மாதிரி வெவ்வேறு இடம் மாற்றி விட்டதைப் பற்றி அப்போது பேசலாமே )

Series Navigationகாத்திருப்பவர்கள்கவிதைகள்