This entry is part 6 of 10 in the series 21 ஜூன் 2026

 ஏ.நஸ்புள்ளாஹ் 

~

​இலக்கியம் காலம் காலமாக வெள்ளைத் தாள்களில் அச்சுக்கோக்கப்பட்ட வரிகளாகவும், வரிசைக்கிரமமான கதையோட்டமாகவும் மட்டுமே இருந்து வந்தது. வாசகன் ஒரு புத்தகத்தை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை நேர்க்கோட்டில் வாசிப்பதே மரபாக இருந்தது, கணினி மற்றும் இணையத்தின் வருகை இலக்கியத்தின் அமைப்பையே மாற்றி எழுதியுள்ளது. இந்த மாற்றத்தின் உச்சகட்ட வடிவமே மீ உரை Hypertextual Literature அல்லது மீ இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது.

​மீ உரை  ஒரு குறிப்பிட்ட உரையிலிருந்து வேறொரு உரைக்கோ அல்லது தகவலுக்கோ வாசகரை அழைத்துச் செல்லும் இணைப்புகளைக் கொண்ட ஒரு கட்டமைப்பாகும். காகிதப் புத்தகத்தில் நாம் அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்வது போலன்றி, மீ உரையில் வாசகன் தனது விருப்பப்படி உரையின் போக்கைத் தீர்மானிக்க முடியும். ஒரு சொல்லையோ அல்லது வாக்கியத்தையோ சொடுக்கும்போது, அது வாசகனை ஒரு புதிய கதைக்களத்திற்கோ, விளக்கத்திற்கோ அல்லது வேறொரு கவிதைக்கோ அழைத்துச் செல்லும். இது ஒரு நேர்க்கோட்டுப் பாதையை விட, ஒரு விரிந்து பரந்த வலைப்பின்னல் போன்றது.

​மீ உரையின் தத்துவம் பல தசாப்தங்களுக்கு முன்பே தத்துவஞானிகளால் விவாதிக்கப்பட்டது. ரோலன் பார்த் Roland Barthes போன்ற பின்நவீனத்துவச் சிந்தனையாளர்கள் வாசக மையவாதம் குறித்துப் பேசியபோது, ஒரு படைப்பின் முடிவு வாசகனின் கையிலேயே இருப்பதாகக் கருதினர். 1980 களின் இறுதியில் கணினித் தொழில்நுட்பம் வளர்ந்தபோது, மைக்கேல் ஜாய்ஸ் Michael Joyce போன்ற படைப்பாளிகள் Afternoon, a story என்ற முதல் மீ உரைக் கதையை உருவாக்கினர். இதுவே இந்த இலக்கிய வடிவத்தின் தொடக்கப்புள்ளியாகக் கருதப்படுகிறது.

​மீ உரையின் முக்கிய பண்புகள்

​நேர்க்கோடற்ற தன்மை மீ உரையின் மிக முக்கியமான பண்பு இதுவாகும். வாசகன் கதையின் தொடக்கத்திலிருந்து முடிக்கே செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும் சுதந்திரம் வாசகருக்கு வழங்கப்படுகிறது.

​வாசகனின் பங்கேற்புவாசகர் ஒரு மௌனமான பார்வையாளர் இல்லை அவர் கதையின் போக்கை வடிவமைக்கும் இணை ஆசிரியர் ஆக மாறுகிறார். ஒரு கதையில் ஏதேனும் ஒரு முடிவை எடுப்பதன் மூலம் கதையின் பாதையை மாற்றும் வாய்ப்பு அவருக்கு உண்டு.

 மீ உரைகள் எழுத்துக்களால் மட்டும் அமைவதில்லை. அதில் புகைப்படங்கள், அசைவூட்டங்கள் ஒலிக் கோப்புகள் மற்றும் காணொலிகள் இணைக்கப்படுகின்றன. இது வாசிப்பை ஒரு அனுபவமாக  மாற்றுகிறது. ஒரு சொல்லின் மீது சொடுக்கும்போது, அது தொடர்பான வரலாற்றுத் தகவல்கள், பிரதியின் குறிப்புகள் அல்லது ஒரு கவிதையின் பின்னணி ஆகியவற்றைக் காண முடியும். இது இலக்கியத்தின் எல்லையை விரிவுபடுத்துகிறது. ​எதிர்காலத்தில் மீ உரை இலக்கியம் தமிழ் போன்ற செம்மொழி வளமிக்க மொழிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கான காரணங்கள் பின்வருமாறு பார்க்க முடியும்.

​ கவிஞர்கள் ஒரு கவிதையை எழுதும்போதே, அது இணையத்தில் வாசகனின் மனநிலைக்கேற்ப விரிவடையும் வகையில் வடிவமைக்க முடியும். உதாரணமாக, ஒரு இயற்கை கவிதை வாசிக்கும்போது, வாசகன் சொடுக்கும் கிளையில் அந்த இயற்கையின் ஒலியையும், படங்களையும் இணைக்க முடியும்.

​ சங்க இலக்கியங்களை மீ உரை வடிவில் மாற்றினால், ஒரு செய்யுளில் உள்ள சொல்லைச் சொடுக்கும்போது அதன் பொருள், இலக்கணக் குறிப்பு, அது தொடர்பான பிற சங்கப் பாடல்கள் என அனைத்தையும் ஒரே திரையில் காண முடியும். இது மாணவர்களுக்குக் கற்றலை எளிதாக்கும். அச்சு ஊடகங்களில் பதிப்பகங்களின் கட்டுப்பாடுகள் இருக்கும். மீ உரை இலக்கியம் இணையதளங்கள் மற்றும் செயலிகள் மூலம் எவரும் தடையின்றிப் பிரதியை உருவாக்க வழிவகை செய்கிறது.

​எந்தவொரு புதிய மாற்றமும் சவால்களைக் கொண்டிருப்பதைப் போல, மீ உரையும் சில சிக்கல்களை எதிர்கொள்கிறது.

 மிகையான இணைப்புகள்  வாசகனின் கவனத்தைச் சிதறடிக்கக்கூடும். கதையின் மய்யக்கருத்திலிருந்தும் அவர் விலகிச் செல்லும் வாய்ப்பு உள்ளது.

​ மீ உரையை உருவாக்குவதற்குத் தொழில்நுட்ப அறிவு தேவைப்படுகிறது. இது இலக்கியவாதிகளுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் இடையிலான இடைவெளியை உண்டாக்குகிறது.

​ கால மாற்றத்திற்கேற்ப தொழில்நுட்பங்கள் மாறும்போது, மீ உரைப் படைப்புகளைத் தொடர்ந்து பாதுகாப்பதும், அவற்றை இணக்கமான மென்பொருள்களில் இயக்குவதும் சவாலான காரியம்.

​மீ உரை இலக்கியத்தின் முடிவில்லை அது அதன் புதிய பரிணாமம். நவீனத் தமிழ் இலக்கியம் டிஜிட்டல் யுகத்தின் தேவைகளை உணர்ந்து, இத்தகைய புதிய வடிவங்களை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். வெள்ளைத் தாள்களில் உறங்கிக் கொண்டிருந்த எழுத்துக்கள், திரைகளில் துடிப்போடு உலாவரும் காலம் இது. வாசகனை நுகர்வோனாகத் தள்ளாமல், படைப்பாக்கத்தில் பங்கெடுக்கச் செய்யும் மீ உரை, எதிர்காலத் தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருவெடுக்கும் . படைப்பாளி மற்றும் வாசகர் ஆகிய இருவருக்குமான இடைவெளி குறைந்து, படைப்பு  ஒரு கூட்டு அனுபவமாக மாறும் இந்த மீ உரைத் தளம், தமிழிலக்கியத்தின் புதிய உச்சங்களைத் தொடும் என்பதே நமது பார்வை.

​டிஜிட்டல் யுகத்தின் வரவு, கவிதை என்ற வடிவத்தை காகிதத்தின் எல்லைகளிலிருந்து விடுவித்து, திரையின் முடிவிலா வெளியில் விரிவுபடுத்தியுள்ளது. தமிழ்க் கவிதைப் புலத்தில் மீ உரை  தொழில்நுட்பச் சொல் மட்டுமில்லை.  அது வாசிப்பின் அனுபவத்தை முழுமையாக மாற்றியமைக்கும் ஒரு புதிய அகதி. தமிழ்க் கவிதைப் புலத்தில் இத்தகைய மீ உரை வடிவத்தில் இயங்கிவரும் கவிதைச் சொல்லிகள் கவிதையை ஒரு நிலையான உரைப்பகுதியாகக் கருதாமல், ஒரு திரவத்தன்மை கொண்ட அனுபவமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

​தமிழில் கவிதை மரபார்ந்த யாப்பு முறையிலிருந்து புதுக்கவிதைக்கு நகர்ந்தது போல, தற்போது புதுக்கவிதையிலிருந்து டிஜிட்டல் மீ உரைக் கவிதைக்கு பரிணமித்துக் கொண்டிருக்கிறது. மீ உரை கவிதைகள் என்பவை, வாசகன் திரையில் உள்ள ஒரு சொல்லை அல்லது குறியீட்டைச் சொடுக்கும்போது, அது அவனைத் திரையின் மற்றொரு பகுதிக்கு, ஒலிக்கு, காட்சிக்கு அல்லது மற்றொரு கவிதைக்கு அழைத்துச் செல்லும் கட்டமைப்பைக் கொண்டவை.

​இந்த வடிவத்தை முன்னெடுக்கும் கவிதைச் சொல்லிகள், கவிதையைத் தேக்கநிலையிலிருந்து அசைவியக்கத்திற்கு மாற்றுகிறார்கள். இவர்கள் கவிதையை ஒரு முடிவுற்ற படைப்பாக பார்க்காமல், வாசகனின் தேடலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரு உயிர் அமைப்பாக கருதுகின்றனர்.

​தமிழ் இணையச் சூழலில், தனிப்பட்ட வலைப்பதிவுகள் மற்றும் சமூக ஊடகத் தளங்களின் வளர்ச்சி மீ உரை கவிதைக்கு அடித்தளமிட்டது. தொடக்கத்தில் இது இணைப்புகளைக் கொடுக்கும் முறையோடு நின்றது. உதாரணமாக, ஒரு கவிதை வரிகளைச் சொடுக்கும்போது, அந்த கவிதைக்கு ஊக்கமளித்த சூழல், புகைப்படம் அல்லது அதன் பின்னணி இசை ஒலிக்கத் தொடங்கும் வலைதளங்கள் உருவாயின.

​பின்னாளில், இன்டராக்டிவ் கவிதை என்ற வடிவில், வாசகர் சில வரிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கவிதையின் முடிவையே மாற்றும் சூழலை உருவாக்கினர். இது வாசகனைச் சொல்லியின் துணைக் கர்த்தாவாக உயர்த்துகிறது. குறிப்பாக, நவீனத் தமிழ் கவிஞர்கள் சிலர் கவிதைகளை மின் நூல்களாக வெளியிடும்போது, அதில் மீ உரை இணைப்புகளைச் சேர்த்து, கவிதையின் நுண்மைகளைப் புரிந்துகொள்ளும் அகராதிச் சூழலை

​இந்தத் தளத்தில் இயங்கும் கவிதைச் சொல்லிகள் எதிர்கொள்ளும் முதன்மையான சவால், தொழில்நுட்பமும் அழகியலும் இணையும் புள்ளி. ஒரு கவிதை மிகையான இணைப்புகளால் சிதைந்துவிடக் கூடாது என்பதில் இவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார்கள்.

​ கவிதைச் சொல்லிகள் எழுத்தை மட்டும் நம்பியிருக்காமல், குரல் பதிவுகள் அசைவூட்டங்கள்  மற்றும் குறும்படங்களை கவிதையின் இணைப்புகளாகக் கோர்க்கின்றனர். ஒரு வரியைச் சொடுக்கும்போது கவிஞரின் குரலிலேயே அந்தக் கவிதை ஒலிக்கச் செய்வது, வாசகனுக்கும் கவிஞருக்குமான இடைவெளியைக் குறைக்கிறது.

​மரபார்ந்த கவிதையில் கவிஞரின் எண்ணவோட்டம் வாசகனை ஒரே திசையில் செலுத்தும். மீ உரை கவிஞர்கள் வாசகனுக்குப் பல திசைகளைத் திறந்துவிடுகின்றனர். வாசகன் எங்கு பயணிக்கிறான் அவனது விருப்பத்தைப் பொறுத்தது. இது கவிதைக்கு ஒரு ஜனநாயகத் தன்மையை வழங்குகிறது.

​ தமிழ்க் கவிதைச் சொல்லிகள், தமிழ் மொழியின் செழுமையைத் தொழில்நுட்பக் குறியீடுகளோடு எவ்வாறு இணைப்பது என்பதில் புதிய சோதனைகளைச் செய்கின்றனர். சங்க இலக்கியத்தின் அகப்பொருள் மரபுகளை, மீ உரை வடிவில் டிஜிட்டல் தளத்திற்கு மாற்றும்போது, அது நவீனத் தமிழின் புதியதொரு முகமாகிறது.

​இவர்கள் கவிஞர்களாக மட்டுமல்லாமல், டிஜிட்டல் ஆவணப்படுத்துபவர்களாகவும் திகழ்கின்றனர். அழியும் நிலையில் உள்ள நிலப்பரப்புகளைப் பற்றியோ, சாதாரணநிலை மக்களின் வலிகளைப் பற்றியோ கவிதைகள் எழுதும்போது, அதனுடன் தொடர்புடைய கள ஆய்வுக் குறிப்புகளை இணைப்பதன் மூலம் கவிதையை ஒரு சமூக ஆவணமாக இவர்கள் மாற்றுகின்றனர். ஒரு கவிதையைச் சொடுக்கும்போது, அது அந்த மண்ணின் வரலாற்றையும், மக்கள் வாழ்வியலையும் காட்டும் ஒரு டிஜிட்டல் ஆவணச் சுரங்கமாக மாறுகிறது. ​வருங்காலத்தில், ‘செயற்கை நுண்ணறிவுடன் உரையாடும் கவிதைகள் தமிழ்க் கவிதைப் புலத்தில் முக்கிய இடம் பிடிக்கும். கவிதைச் சொல்லிகள் உருவாக்கும் மீ உரைக் கட்டமைப்பில், வாசகனின் மனநிலையை உணர்ந்து செயல்படும் கணினி நிரல்கள் அதற்கேற்ப கவிதை வரிகளை மாற்றியமைக்கும் முறை உருவாகலாம். இது இலக்கியத்தின் எல்லையை மனித மூளையிலிருந்து தொழில்நுட்பத்தின் ஆழத்திற்கு இட்டுச் செல்லும்.

​தமிழின் கவிதைப் புலத்தில் மீ உரை  ஒரு புரட்சி. இது வாசகனை மௌனமான நுகர்வோனாக மாற்றாமல், கவிதையின் உயிர்ப்பில் பங்கேற்கும் ஒரு பங்கேற்பாளனாக மாற்றுகிறது. தமிழ்க் கவிதைச் சொல்லிகள், இந்தத் தொழில்நுட்பக் கருவிகளை அலங்காரமாகப் பயன்படுத்தாமல், கவிதையின் ஆன்மாவையும் நவீன யுகத்தின் வேகத்தையும் இணைக்கும் பாலமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

​காகிதத்திலிருந்து டிஜிட்டல் திரைக்கு, திரையிலிருந்து வாசகனின் மனத்திற்கு என்று மீ உரையின் பயணம் தொடர்கிறது. எதிர்காலத்தில், இந்த மீ உரை சார்ந்த கவிதைச் சொல்லிகள், தமிழ்க் கவிதையை உலக அரங்கில் ஒரு தனித்துவமான, தொழில்நுட்ப அறிவார்ந்த படைப்பிலக்கியமாக நிலைநிறுத்துவார்கள் என்பதை சொல்லியாக வேண்டும். கவிதை  இனி வாசிக்கப்படுவது மட்டுமல்ல அது வாசகனால் கட்டமைக்கப்படும், உணரப்படும், அனுபவிக்கப்படும் ஒரு மாபெரும் அனுபவம்.

மீ உரை குறித்து இரு கவிதைகளின் சூழலை வாசகனுக்குள் இனி ஊடுருவிப் பரவுகிறது.

லறீனா அப்துல் ஹக் கவிதை

உதிர்ந்திருந்த நட்சத்திரங்களைப் பொறுக்கிச் சேகரிக்கிறேன்

என்னுடைய வானத்தில் என்றேனும் ஒருநாள்

பொருத்தி ஒளிர்க்கலாம் என்ற பேராசை

ஒரு கனவைப்போல் நீண்டு விரிகிறது.

மேடுகளும் குழிகளும் கடந்து எல்லையை அடைகிறேன்

கையில் இருந்த பையின் அடித்துளை

அகதியின் ஏக்கம் போல் வாய் பிளந்திருந்தது

முட்கிழித்த பாதங்களின் ரத்தச் சிவப்பு

கடந்து வந்த பாதையை அலங்கரித்திருந்தது

நேர்த்தியாய் நெய்த ஒரு சிவப்புக் கம்பளமாய்

மனசின் குறுகுறுப்பு தாங்காமல் உற்று நோக்கினேன்

இரவின் அந்தகாரத்தில் உருகிக் கரைந்துகொண்டிருந்தது

நான் எனும் கனவு.

ஏ.நஸ்புள்ளாஹ் கவிதை

​நேற்று என்பது ஒரு செத்த பிணம்

அதை நான் தோளில் சுமந்து திரிகிறேன்.

இன்று ஒரு அவசர சிகிச்சைப்பிரிவு

நாளை என்பது ஒரு விளம்பரப் பலகை.

காலம் அது ஒரு நேர்கோடு

அதில் நாம் புள்ளிகளாக நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

இரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில்

காத்திருப்பது 

நம்மைக் கடந்து போகும் காலத்திற்காக.

நிழல்கள் மெல்ல மெல்ல நம்மை விழுங்குகின்றன.

இருட்டு என்பது வெளிச்சத்தின் இல்லாமை 

அது ஒரு அடர்த்தியான உண்மை.

முடிவற்ற பயணத்தின் முடிவில்

நாம் வந்தடைந்த இடம் நாம் கிளம்பிய இடமேதான்.

திசைகள் மாறலாம்

நமது கால்தடங்கள் எப்போதும் பின்னோக்கியே பார்க்கின்றன.

 லறீனா அப்துல் ஹக் மற்றும் ஏ.நஸ்புள்ளாஹ்வின் கவிதைகளில் மீ உரை எனது  வாசிப்பு அனுபவத்தில் விரிவடையும் ஒரு வலைப்பின்னல். மீ உரை உள்ளது. ஒரு இணையப் பக்கத்தில் சொற்களைச் சொடுக்கும்போது தோன்றும் புதிய பரிமாணங்கள் மட்டுமில்லை. அது ஒரு கவிதையின் வரிகளுக்குள் புதைந்து கிடக்கும் நுட்பமான குறியீடுகளும், வாசகனின் மனத்திரையில் விரியும் விரிந்த அர்த்தங்களும்தான். லறீனா அப்துல் ஹக்கின் நட்சத்திரங்கள் குறித்த கவிதையும், ஏ.நஸ்புள்ளாஹ்வின் காலம் குறித்த கவிதையும் காகிதத்தில் அச்சிடப்பட்டிருந்தாலும், அவற்றின் உள்ளடக்கம் மீ உரைத்தன்மை கொண்ட ஒரு நவீனத் தளத்தை நோக்கி நம்மை இட்டுச் செல்கின்றன.

​லறீனாவின் கவிதை ஒரு பெரும் துயரத்தின் குறியீடு. உதிர்ந்த நட்சத்திரங்களைப் பொறுக்கிச் சேகரிக்கும் கவிஞரின் செயலில் ஒருவிதமான மீ உரைத்தன்மை உள்ளது. நட்சத்திரங்கள்  வானத்துக் கோள்கள் இல்லை அவை உடைந்த கனவுகள், இழந்த உறவுகள் அல்லது கைவிடப்பட்ட அடையாளங்களின் குறியீடுகள்.

​பையின் அடித்துளை அகதியின் ஏக்கம் போல் வாய் பிளந்திருந்தது என்ற வரி, ஒரு அற்புதமான மீ உரைக் குறியீடு. ஒரு சொல்லைச் சொடுக்கும்போது எப்படி ஒரு முழு வரலாறு விரியுமோ, அதுபோல அகதி என்ற சொல், நிலமற்ற தன்மை, வேரறுப்பு மற்றும் வாழ்வின் வறுமை என்ற ஒரு பிரம்மாண்டமான அர்த்த வலைப்பின்னலைத் திறக்கிறது. பையின் ஓட்டை  பொருள் சார்ந்த இழப்பல்ல, அது வாழ்வின் கனவுகள் கசிந்து வெளியேறும் துளை.

​முட்கிழித்த பாதங்களின் இரத்தத்தை சிவப்புக் கம்பளம் என உருவகிக்கும்போது, அங்கு வலியை அழகியலாக மாற்றும் ஒரு முரண்  பிறக்கிறது. இந்த வரி வாசகரை வலிக்கான வரலாற்றுக்கு இட்டுச் செல்கிறது. வாசகன் அங்கே வலி,. தியாகம்,  அரசியல் போன்ற சொற்களைத் தன் அக உணர்வால் இணைத்துக்கொள்ள முடிகிறது.

​இந்தக் கவிதை, ஒரு இணையதளத்தின் லிங்க் போல, வாசகனை அந்தப் பாதையின் ரத்தச் சிவப்பிலிருந்து, இடம்பெயர்ந்த மக்களின் துயரம் வரை பல திசைகளில் பயணிக்க வைக்கிறது.

​ஏ.நஸ்புள்ளாஹ்வின் கவிதை முற்றிலும் மாறுபட்டது. இது நேரடியான தத்துவார்த்தப் பயணம். நேற்று என்பது ஒரு செத்த பிணம், இன்று ஒரு அவசர சிகிச்சைப்பிரிவு என அவர் பயன்படுத்தும் படிமங்கள் மீ உரையின் அடுக்குகளைப் போன்றவை.

​ நஸ்புள்ளாஹ் காலத்தை ஒரு ‘நேர்க்கோடு’ என்கிறார். அதில் நாம் புள்ளிகளாக நகர்கிறோம். டிஜிட்டல் மொழியில் சொன்னால், ஒரு மீ உரைக் பிரதியில் நாம் ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்குத் தாவுகிறோம். அவரது கவிதை வாசகனை அந்தப் புள்ளிகளுக்கிடையிலான வெற்றிடத்தில் சிந்திக்க வைக்கிறது.

​நமது கால்தடங்கள் எப்போதும் பின்னோக்கியே பார்க்கின்றன என்ற வரி, வாசகனைத் தனது சொந்த நினைவுகளின் கோப்புறைக்கு இழுத்துச் செல்கிறது. இதுதான் மீ உரையின் செயல்பாடு. கவிதை சொல்கிறது,வாசகன் தன் அக உணர்வின் வழியாக இணைப்புகளை உருவாக்கி, தன் வாழ்க்கையோடு ஒப்பிடுகிறான்.

​இருட்டை ‘வெளிச்சத்தின் இல்லாமை என்று அவர் வரையறுப்பது, ஒரு பிரதிக் குறிப்பைப் போல  கவிதைக்குள் புதிய அர்த்தத்தைத் திறக்கிறது. வாசகன் இங்கே இருட்டு

 என்ற சொல்லில் சொடுக்கும்போது, அது பயம், தனிமை, அல்லது அறிவின்மையின் இருள் எனப் பல பக்கங்களுக்கு அவனை அழைத்துச் செல்கிறது.

​இந்த இரு கவிதைகளும் நேர்முகமாகத் தொழில்நுட்பத்தை அழைக்கவில்லை என்றாலும், மறைமுகமாக வாசகனை ஒரு செயலில் ஈடுபடும் வாசிப்பிற்கு அழைக்கின்றன.

​மீ உரையில் வாசகன் ஒரு முடிவை எடுத்தால் மட்டுமே அந்தத் தகவல் வெளிப்படும். லறீனாவின் கவிதையில் அகதி என்ற சொல்லில் வாசகன் அழுத்தம் கொடுக்கும்போது அந்த முழு வலையும் அவனுக்குக் கிடைக்கிறது. நஸ்புள்ளாஹ்வின் கவிதையில் பிணம் அல்லது விளம்பரப் பலகை என்ற சொல்லில் வாசகன் ஆழ்ந்து சிந்திக்கும்போது, அந்தப் படிமங்களின் சொற்கள் அவனுக்கு முன்னால் விரிகின்றன.

​இரு கவிதைகளுமே பயணத்தைப் பேசுகின்றன. லறீனா மேடுகளையும் குழிகளையும் கடக்கிறார். நஸ்புள்ளாஹ் காலத்தின் பிளாட்பாரத்தில் காத்திருக்கிறார். இவை இரண்டும் கதைகள் இல்லை இவை வாசகனைத் தனது சொந்தப் பயணத்தின் பல்வேறு கிளைகளுக்கு இட்டுச் செல்லும் பாதை.

​லறீனா அப்துல் ஹக்கின் கவிதை உணர்வுகளின் மீ உரையாகவும், ஏ.நஸ்புள்ளாஹ்வின் கவிதை சிந்தனைகளின் மீ உரையாகவும் இயங்குகின்றன. கவிதை  அச்சு ஊடகத்தில் உறைந்து கிடக்கும் எழுத்துக்கள் மற்றுமன்றி அது வாசகனின் ஆழ்மனதில் இணைப்புகளை உருவாக்கும் ஒரு டிஜிட்டல் தளம். இந்த இரண்டு கவிஞர்களும் தங்களின் வரிகளுக்குள் ஒளித்து வைத்திருக்கும் குறியீடுகள், வாசகனை ஒரு கவிதைக்குள்ளேயே பலமுறை பிரவேசிக்கச் செய்கின்றன.

தமிழ் கவிதைச் சூழலில் மீ உரையூடாக போர் மற்றும் இடப்பெயர்வுகள் உருவாக்கிய அதிர்ச்சி நினைவுகளை  லறீனா எப்படிக் கையாளுகிறார் என்பதை இங்கு நாம் கூர்ந்து கவனிக்க முடியும். அவரது கவிதைகளில் வெளிப்படும் நிலமற்ற தன்மை மற்றும் அகதிகளின் ஏக்கம் ஆகியவை, ஒரு தனிமனிதனின் வேதனையாக மட்டுமன்றி, ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டு வலியின் பதிவாகவே நான்  கருதுகிறேன்.

​வலி மற்றும் அழகியலுக்கு இடையிலான முரண்

​வலியை வரியாகப் பதிவு செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதனை ஒரு படிமமாக மாற்றி, ஒருவிதமான அழகியல் துயரத்தை உருவாக்குவதில் லறீனா வெற்றி பெற்றுள்ளதாக நான் மதிப்பிடுகிறேன். இரத்தச் சிவப்பைக் கம்பளமாகப் பார்க்கும் அவரது பார்வை, வலியையும் கண்ணியத்துடன் சுமக்கும் ஒரு மனநிலையைப் காட்சிப்படுத்துகிறது.

​எதிர்காலத் தமிழ் இலக்கியத்தில், எழுதப்படும் கவிதைகள் கூட, இத்தகைய வலுவான மீ உரைத்தன்மையைக் கொண்டிருக்குமாயின், அது கவிதைக்கும் வாசகனுக்கும் இடையிலான இடைவெளியை முற்றிலுமாக அழித்து, படைப்பை ஒரு மாபெரும் கூட்டு அனுபவமாக தரும்.

Series Navigationமகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் – பாகம் – 1 அத்தியாயம் – 9டிஜிட்டல் இறையாண்மை பேசுபொருள் ஆகியிருப்பது ஏன்?