நாகராசன் கணேசன்
[தம்மம் தந்தவன் —ஆங்கிலத்தில் விலாஸ் சாரங்—தமிழில் காளி பிரசாத்—வெளியீடு: நற்றிணை பதிப்பகம்—முதற் பதிப்பு: ஜுன் 2019—பக்:208—விலை ரூ 200-தொடர்புக்கு:94861 77208]

(விலாஸ் சாரங்)
இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன் சடங்குகள், சம்பிரதாயஙகள் என அறியாமை இருளில் முழ்கிக் கிடந்த மக்களை அறிவு வெளிச்சத்தில் ஆசீர்வதித்தார் புத்தர் எனும் எண்ணம் கொண்டே “காரிருளில் ஒரு மின்னல்” என இக்குறிப்பிற்குத் தலைப்பிட்டேன். இது தேய்வழக்குதான். இந்த நூலின் வாசிப்பு என்னை மின்னலாகத் தாக்கியதன் வெளிப்பாடாகவும் இச்சொற்களைக் கருதலாம். இதுவரை புத்தரைப் பற்றிய சம்பிரதாயங்களை மட்டுமே நான் அறிந்திருந்தேன்.
“சித்தார்த்தர் சுகமாக அரண்மனையில் ராஜபோகங்களை அனுபவித்தபடியே வளர்ந்தார். ஒருநாள் நகர்வலம் செல்லும்போது ஒரு பிணத்தைக் கண்டார்: ஒரு முதிர்ந்த கிழவனைக் கண்டார்: ஒரு நோயுற்றவனைக் கண்டார். உடனே மனித வாழ்வில் நிகழும் துன்பங்களுக்குக் காரணம் என்ன என்று கண்டறிய மனைவி யசோதரையையும், மகன் இராகுலனையும் துறந்து ஒரு நள்ளிரவில் தன் அரண்மனையை விட்டு வெளியேறுகிறார். பல ஆண்டுகளுக்குப் பின் போதி மரத்தின் அடியில் தவம் செய்து புத்தரானார்.”
அவ்வளவுதான் நான் அறிந்தது. ஆனால் புத்தரைப் பற்றிக் “கற்றது கையளவு; கல்லாதது உலகளவு;” என நாவல் என் முகத்தில் அறைந்து உரைக்கிறது. நூல் ஒரேநேரத்தில் அறிவு பூர்வமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் புத்தரை அணுகுகிறது. அவரை வியந்தோதுகிறது. அதே நேரத்தில் இரக்கம் சிறிதும் இன்றி சவரக் கத்தியின் கூர்மை முனைபோல் “சரக். சரக், என விமர்சிக்கவும் செய்கிறது.
புத்தரின் அன்னை மாயாதேவி மகப்பேறுக்காக தொலைதூரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு மாட்டுவண்டியில் பயணம் செல்வதில் கதை தொடங்கிறது. பின்னர் 80 ஆண்டுகள் புத்தரோடு பயணிக்கிறது. உடல்நலம் குன்றிய சூழலில் ஏராளமான சீடர்கள் சூழ்ந்திருக்க [வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து] “உங்களின் விமோசனத்திற்காக விடா முயற்சியுடன் பாடுபடுங்கள்” என்று இறுதி மகா வாக்கியத்தை உதிர்த்து முழுமை நிலையை [பூரணத்துவம்] புத்தர் அடைவதோடு நாவல் முடிகிறது.

நூலாசிரியர் “விலாஸ் சாரங்” அவர்களின் சொல்முறை குறிப்பிடத்தக்கது. சிறிய வாக்கியங்களால் ஆனது அவர் மொழிநடை; சம்பவங்களை ஏதோ ஒரு கதாபாத்திரத்தின் கண்களின் வாயிலாக [சுதர்த்தா, யசோதரா…] விவரித்தபடியே நாவல் செல்கிறது. பல இடங்களில் சித்தார்த்தரின் மனம் வழியாகவும் [கதைசொல்லி] நூல் பயணிக்கிறது. ஆனால் அவர் புத்தரானபின் அவரது பார்வை நூலில் வருவதில்லை. ஜெயமோகனின் பெரும்படைப்பான வெண்முரசு நாவலில் பிரதான கதாபாத்திரங்களான இளைய யாதவர் [கிருஷ்ணர்], க்ருஷ்ணை [திரௌபதி] மனங்களின் வாயிலாகக் கதை எப்போதும் நிகழ்வதில்லை என்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. பின்நவீனத்துவ நாவல்களில் நிகழ்வது போல ஆசிரியர் கதையின் நடுவே ஆங்காங்கு களத்தில் குதிக்கிறார். அது தடையாக நிற்காமல், புரியாத பல செய்திகளையும், நோக்குகளையும் தருகின்ற உத்தியாக மிளிர்வது மகிழ்ச்சி தருகின்றது.
சித்தார்த்தரின் வாழ்க்கைப்பாதை மலர்ப்பாதையாக இல்லை. முட்களால் நிரம்பியதாகவே உள்ளது. அரசர் பிம்பிசாரரின் சிறைவாசம், அவரின் இறப்பு, இளவரசனாக அஜாத சத்ருவிற்குப் பட்டம் சூட்டுதல், அத்தை மகன் தேவதத்தனின் போட்டி, புத்த சங்கம், பிட்சுகளின் மடாலயங்களில் நிகழும் பிரச்சனைகள், நாட்டின் அரசர் அளிக்கும் விருந்தை துறவிகள் ஏற்கலாமா? எனும் விவாதம், புலால் உணவைத் துறவிகள் உட்கொள்ளலாமா? எனச் சிக்கல்களுக்குக் குறைவில்லை. மகன் இராகுலனை “பிட்சு’ ஆக்குவதைச் சுத்தோதனர் பார்வையிலிருந்து சொல்லியிருப்பது சிறப்பு.
ஒரு முழுமுதலானத் தமிழ் நாவலைப் படிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தும் நேர்த்தியான மொழிபெயர்ப்பு வாசகருக்குக் களிப்பைத் தருகிறது. மொழிபெயர்ப்பாளரின் மொழி எளிமையாகவும், நவீனமாகவும். உள்ளது. சிக்கலற்ற வாக்கியங்கள் வாசிப்பை நெருக்கமாக்குகின்றன. இந்த அரிய நூலைத் தமிழில் படிக்க அளித்த காளிப்பிரசாத் பாராட்டுக்குரியவர். ஐயமின்றி இது அவரின் அரிய பணியாகும். சிக்கல்களே சிறிதும் அற்ற வாழ்க்கையை வாழ்ந்த சித்தார்த்தன், ஏன் மனித வாழ்வின் துன்பங்களுக்கு ஊற்றுக்கண்னைத் தேடி அலையும் வேட்கை கொண்டான்? என நூலின் முன்னுரையில் காளிபிரசாத் கேட்கும் கேள்வி மிக நியாயமானதாகத் தெரிகிறது.
இந்த நாவலின் ஆகச் சிறந்த மகிழ்ச்சி, புத்தரை ரத்தமும், சதையுமாகக் கதையில் சிந்தித்ததுதான். குழந்தையாக, சிறுவனாக, இளைஞனாக, இளைய கணவனாக, முழுமை அடையும் நோக்கத்தில் ஊரெல்லாம் அலைந்து திரிந்த துறவியாக, எல்லாமுணர்ந்த புத்தராக, இந்த உலகிற்கே அருள் புரக்கும் பிரபஞ்ச ஒளியாகத் திகழும் அந்தத் தேவன் தம்மத்தை இன்றும் நமக்கு அருளிக் கொண்டிருக்கின்றான். அவனின் அருள் மொழிகளாலான அந்த அமுத சுரபி என்றுமே வற்றுவதில்லை.
- காரிருளில் ஒரு மின்னல்
- காற்றுவெளி மின்னிதழின்(2026) ஆவணி மாத இதழ் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக
- முதுமை
- கொலுசு மாத இதழ்
- மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் – பாகம் – 1 அத்தியாயம் – 9
- மீ உரை Hypertextual Literature டிஜிட்டல் யுகத்தின் புதிய இலக்கியப் பரிமாணம்
- டிஜிட்டல் இறையாண்மை பேசுபொருள் ஆகியிருப்பது ஏன்?
- காத்திருப்பவர்கள்
- மன்மதன்கள்
- கவிதைகள்