சிலர்
வேலை முடிந்தவுடன் சென்றுவிடுவர்.
பலர்
வேலையை முடிக்காமல்
சென்று விட்டனர்.
இன்னும் பலர்
முடிந்தும் செல்லாமல் காத்திருப்பர்.
காத்திருப்பவர்கள் தான்
பரிதாபம்.
திண்ணையில்
தனியே படுத்திருப்பர்
வயோதிக முத்தியில்.
காசி ராமேஸ்வரத்தை வேண்டுவர்
அனுதினமும்.
வீதியில்
போவோர் வருவோரிடம்
இரண்டாம் உலக யுத்தம்
முடிந்ததா என கேட்பர்.
காந்தி
எங்கள் ஊரை மிதிப்பாரா
என பிதற்றி
அடுத்த வேளை
சோற்றுக்கும் குவளை நீருக்கும்
காத்திருப்பர்.
வரும் போகும்
மீன் காரி, தயிர் காரிகளிடம்
ஆயிரம் வம்பிழுப்பர்.
பாதி சமையலிலிருந்து வந்த
மருமகளின்
ஏச்சுக்கும், பேச்சுக்கும்
ஆளாவர்.
முன்னமே
சென்றுவிட்ட
இவரது தர்ம பத்தினியை
வசவுகளால் கிழித்தெடுப்பர் .
செத்தால்
சாம்பலை
காசியில் கங்கையில்
கரைத்துவிடு என
மகனிடம் வேண்டுவர்.
அவனுக்கோ
ஆயிரம் பிடுங்கல்கள்.
இதில் அவன்
எந்த காசியை கண்டான்.
எங்கோ பக்கத்தில்
ஓடும்
ஓடை காவிரியில்
கால் நனைத்து
சாம்பலை கரைக்க
ஆயிரம் சுருங்கிய மந்திரங்கள்.
கூட வந்த
நாலு பேரும்
ரேஷன் அரிசியை பேசுவர்.
காத்திருக்கும்
பட்டியலில்
இவர் பெயர் பார்க்க
காத்திருக்கும்
சொந்த-பந்தங்கள் கூட்டம்.
இரா. ஜெயானந்தன்.
- காரிருளில் ஒரு மின்னல்
- காற்றுவெளி மின்னிதழின்(2026) ஆவணி மாத இதழ் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக
- முதுமை
- கொலுசு மாத இதழ்
- மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் – பாகம் – 1 அத்தியாயம் – 9
- மீ உரை Hypertextual Literature டிஜிட்டல் யுகத்தின் புதிய இலக்கியப் பரிமாணம்
- டிஜிட்டல் இறையாண்மை பேசுபொருள் ஆகியிருப்பது ஏன்?
- காத்திருப்பவர்கள்
- மன்மதன்கள்
- கவிதைகள்