This entry is part 7 of 8 in the series 28 ஜூன் 2026

       

லாவண்யா சத்யநாதன்

சீனப் பெருஞ்சுவர்போல

நீண்டுகொண்டிருக்கும் இரவின் தூரம்.

மின்விசிறியின் றெக்கைகள்

நாகலிங்கப் பூக்களை மெத்தை விரிப்பில் நிரப்பும்.

தலையணைக்குள்ளிருந்து

வற்றல்குழம்பு கொதிக்கும் வாசனை

மூக்கைத் துளைக்கும்.

இமைகளால் கண்களை மூடிக் கொள்ளலாம்.

ஊர் தேசம் கண்டம் அண்டமென்று திரியும்

உள்ளேயிருக்கும் ஒன்றை என்ன செய்ய?

பெருவெளியில் கொசுபோல் பறக்கும் விமானம் காட்சி தரும்.

லியோ ரோஜசின் குழலோசையை நினைத்து ரசிக்கும்.

எங்கோ நடனமாடும் குதிரையின் சீரான  குளம்புச் சத்தம்

செவியருகில் கேட்கும்..

எப்படி உறங்கச் சென்றானோ அப்படியே

மறுநாளைத் துவங்கும் ஆசீர்வாதம் பெற்றவர்களில்

நானும் ஒருவன்.

——லாவண்யா சத்யநாதன்

Series Navigationஜென் Z இடதுசாரிகளாகவே பிறந்தவர்களா?மினி புலி