This entry is part 6 of 8 in the series 28 ஜூன் 2026

யுவராஜ் சம்பத்

சமீப காலங்களில் தமிழகம் மட்டுமல்லாமல் இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளில் நடந்த அரசியல் மாற்றங்களைப் பார்த்தபோதுநம் மனதில்  ஒரு கேள்வி இயல்பாக எழுகிறது. இந்த மாற்றங்களுக்குப் பின்னால் முக்கிய உந்துசக்தியாக இருந்த  இளம் தலைமுறை  குறிப்பாக ஜென் Z தலைமுறையினர்  இயல்பாகவே இடதுசாரிகளாகப் பிறந்தவர்களா?

இந்தக் கேள்விக்கு நேரடியாக “ஆம்” அல்லது “இல்லை” என்று பதிலளிப்பது எளிதல்ல. எந்த மனிதனும் ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்துடன் பிறப்பதில்லை. இருப்பினும், முந்தைய தலைமுறைகளுடன் ஒப்பிடும்போது ஜென் Z தலைமுறையினரிடம் இடதுசாரி மற்றும் முற்போக்கு சிந்தனைகளின் தாக்கம் அதிகமாக இருப்பது மறுக்க முடியாத உண்மை. ஜென் Z என்பது அதிகாரத்தை எளிதில் நம்பாத தலைமுறை. அரசாக இருந்தாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும், கார்ப்பரேட் நிறுவனமாக இருந்தாலும், மத அமைப்பாக இருந்தாலும், “ஏன்?” என்று கேட்கும் மனநிலை இவர்களிடம் அதிகமாக உள்ளது.

இதற்கு பின்னால் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் காரணங்கள் இருக்கின்றன.

ஜென் Z தலைமுறையினர் வளர்ந்த காலம் உலகளாவிய பொருளாதார நெருக்கடி மிகுந்த  காலமாக இருந்தது. தொடர்ந்து உயர்ந்த பணவீக்கம், வேலைவாய்ப்பு குறித்த நிச்சயமின்மை, செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்களால் வேலைகள் பறிபோகும் என்ற அச்சம் ஆகியவற்றை இவர்கள் சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்துள்ளனர்.

முந்தைய தலைமுறைகள் “நன்றாகப் படி, கடினமாக உழை, வாழ்க்கை முன்னேறும்” என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்தன. ஆனால் ஜென் Z தலைமுறையினர் அதை நம்பும் மன நிலையில் இல்லை. பட்டப்படிப்பு பெற்ற பலரும் வேலைக்காக அலைவதையும், நல்ல வேலை நல்ல சம்பளம் கிடைத்தும் கூட சொந்த வீடு வாங்க முடியாமல் இருப்பதையும் அவர்கள் கண்முன்னே பார்க்கிறார்கள்.

இதன் விளைவாக தரமான வேலை வாய்ப்பை உறுதி செய்யும் இலவச கல்வி,  சமூகப் பாதுகாப்பு, சம வாய்ப்புகள் போன்ற கருத்துக்களை ஆதரிக்கும் மனநிலை உருவாகிறது. இந்தக் கருத்துக்கள் பாரம்பரிய இடதுசாரி அரசியலுடன் ஒத்துப்போவதால், அவர்கள் இடதுசாரி நோக்குடையவர்களாகத் தோன்றுகிறார்கள்.

தமிழகத்தின் சமூகச் சூழல் இவர்கள் இப்படி உருவானதை ஊக்குவித்தது. குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களின் வெற்றியால் பெரிய கூட்டுக் குடும்பங்கள் படிப்படியாக சுருங்கின. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த குடும்பங்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்தன. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்கள் அதிகரித்தன.பல குழந்தைகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது பெற்றோரின் வருகைக்காக காத்திருக்கும் நிலை உருவானது. இந்த தனிமை அவர்களுக்கு மிக இளம் வயதிலேயே தற்சார்பு மனநிலையை உருவாக்கியது. தங்கள் பிரச்சினைகளை தாங்களே சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் அவர்கள் வாழ்க்கையை  எதார்த்தத்தின் வழியாகப் பார்க்கத் தொடங்கினர். “தன் கையே தனக்கு உதவி” என்ற மனோபாவம் அவர்களிடம் உருவானது.

அதே நேரத்தில், இந்த தனிமை சிலரிடம் விரக்தியையும் உருவாக்கியது. பாப் கலாச்சாரம், ராப் இசை, சில நேரங்களில் மது, பொழுது போக்கும் இணைய சமூகங்கள் போன்றவை அவர்களின் உணர்வுகளை, இயலாமையை வெளிப்படுத்தும் இடங்களாக மாறின.

தமிழகத்தில் கல்வி வாய்ப்புகள் அதிகரித்தன. பட்டதாரிகளின் எண்ணிக்கை உயர்ந்தாலும், அவர்களின் திறன்களுக்கு ஏற்ப வேலைகள் உருவாகவில்லை. இதனால் அரசு வேலை என்ற ஒரே இலக்கை நோக்கி பலர் திரும்பினர். சிலர் தொழில் முனைவோராக மாறி வெற்றி பெற்றனர். ஆனால் பெரும்பாலான இளைஞர்களுக்கு எதிர்காலம் குறித்த நிச்சயமின்மை தொடர்ந்தது.

இதன் விளைவாக இன்று தமிழக ஜென் Z தலைமுறையினரிடையே ஒரு விசித்திரமான மனநிலை உருவாகியுள்ளது. ஒருபுறம் அவர்கள் உலகத்தை மாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள்; மறுபுறம் தங்களது எதிர்காலம் குறித்து அச்சப்படுகிறார்கள். ஒருபுறம் சமூக நீதி குறித்து பேசுகிறார்கள்; மறுபுறம் தனிப்பட்ட பாதுகாப்பையும் தேடுகிறார்கள்.

இந்த முரண்பாடுதான் அவர்களின் அரசியல் மனநிலையையும் வடிவமைக்கிறது.

இது புதிய இடதுசாரித்தனமா? அல்லது?

கடந்த நூற்றாண்டின் இடதுசாரி இயக்கங்கள் பெரும்பாலும் ஆலை  தொழிலாளர்கள், நிலமற்ற விவசாயிகள், விவசாய கூலிகள் போன்றவற்றை மையமாகக் கொண்டு இயங்கின. அவர்களின் எதிரி தொழிற்சாலை முதலாளிகள், நிலப்பிரபுக்கள் மற்றும் காலனித்துவ ஆட்சிகள்.

ஆனால் இன்றைய ஜென் Z தலைமுறையின் உலகம் முற்றிலும் வேறுபட்டது.

அவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் இணையம், தகவல் தொழில்நுட்பம், தனியார் நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றைச் சுற்றியே அமைந்துள்ளது. எனவே அவர்களின் எதிர்ப்பு வேறு வடிவம் பெறுகிறது.

இன்று ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞன், தன்னை ஒரு சாதாரண தொழிலாளியாகக் கருத மாட்டான். அவன் வேலை நேர அழுத்தம், இலக்கு அடிப்படையிலான மதிப்பீடுகள், வேலை பாதுகாப்பின்மை, மனநல பாதிப்புகள் போன்றவற்றை அனுபவிக்கும் போது கார்ப்பரேட் கலாச்சாரத்தை விமர்சிக்கத் தொடங்குகிறான்.

அதேபோல், பட்டப்படிப்பு முடித்தும் வேலை கிடைக்காத இளைஞன் கல்வி அமைப்பையே கேள்வி கேட்கிறான். வீடு வாங்க முடியாத இளைஞன் பொருளாதார அமைப்பையே சந்தேகிக்கிறான். அரசியல் அதிகாரமும் பெரும் பணமும் சிலரிடம் மட்டுமே குவிந்திருப்பதாக உணரும்போது சமத்துவம் குறித்த கேள்விகளை எழுப்புகிறான்.

இதனால் ஜென் Z தலைமுறையின் இடதுசாரித்தனம் என்பது பாரம்பரிய கம்யூனிசத்தின் மறுபிறப்பு அல்ல. அது நவீன உலகின் சமத்துவமின்மைகளுக்கு எதிரான ஒரு புதிய எதிர்ப்புக் கலாச்சாரம்.

 

 

சமூக ஊடகங்கள்: புதிய அரசியல் தளம்.

முந்தைய தலைமுறைகளுக்கு அரசியல் அறிவு, கட்சிக் கூட்டங்கள், நூலகங்கள், செய்தித்தாள்கள், விவாத மேடைகள் போன்றவற்றின் மூலம் கிடைத்தது.

ஆனால் ஜென் Z தலைமுறையின் அரசியல் பல்கலைக்கழகம் சமூக ஊடகங்களாகும்.

இன்று ஒரு இளைஞன் எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப், அல்லது டெலிகிராம் போன்ற தளங்களில் தினமும் பல மணி நேரங்கள் செலவிடுகிறான். அங்கு உலகின் பல்வேறு அரசியல் கருத்துக்களும், பொது சமூகம் பற்றிய சிந்தனைகளும், அவனுக்கு அறிமுகமாகின்றன.

தமிழகச் சூழலில் சமூக நீதி, பெரியாரியம், அம்பேத்காரியம், பெண்ணியம், அரசியல், மொழி உரிமைகள் போன்ற கருத்துக்கள் சமூக ஊடகங்கள் மூலமாக மிக வேகமாக பரவுகின்றன.அதே நேரத்தில் தேசியவாதம், மத அடையாள அரசியல், பழமைவாதம், சந்தை பொருளாதார ஆதரவு போன்ற வலதுசாரி கருத்துக்களும் அதே வேகத்தில் பரவுகின்றன.

இதனால் அவர்கள் பல்வேறு சிந்தனைகளின் கலவையாக இருக்கிறார்கள்.அவர்களின் முக்கியமான பண்பு, ஒரு கருத்தை ஏற்றுக்கொண்டாலும் அதை நிரந்தரமாகப் பிடித்துக்கொள்ளாமல் தொடர்ந்து கேள்வி கேட்பதுதான்.

ஒருபுறம் அதிகாரத்தை சந்தேகிக்கும் தலைமுறையாக இருக்கும் ஜென் Z, மறுபுறம் சில நேரங்களில் ஒரு நடிகர், ஒரு பிரபல முகம் அல்லது ஒரு தனிநபர் மீது மிகுந்த நம்பிக்கை வைப்பதை காண முடிகிறது. இதற்கு காரணம் என்ன?

தமிழகத்தில் அரசியல் மற்றும் சினிமா கடந்த ஏழு தசாப்தங்களாக ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. பல தலைமுறைகளாக மக்கள் திரைப்படக் கதாநாயகர்களை சமூக மாற்றத்தின் முகமாகப் பார்க்கப் பழகியுள்ளனர்.இந்த மரபு இன்னும் முற்றிலும் மறைந்துவிடவில்லை.

மேலும், பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீது ஏற்பட்டுள்ள சலிப்பு, ஊழல் குற்றச்சாட்டுகள், தலைமுறை மாற்றமின்மை, கொள்கை விவாதங்களின் குறைபாடு போன்ற காரணங்களால் சில இளைஞர்கள் புதிய முகங்களைத் தேடுகிறார்கள்.அந்தத் தேடலின் ஒரு வடிவமாக நடிகர்கள் அரசியலுக்குள் வரும்போது அவர்களிடம் நம்பிக்கை வைக்கிறார்கள்.

ஆனால் இந்த நம்பிக்கை நீண்ட கால அரசியல் தீர்வை வழங்குமா என்பது வேறு கேள்வி. அந்த நடிகர் அல்லது அந்த நபர் அவர் எதிர்பார்த்த மாற்றத்தை வழங்க முடியவில்லை என்றால், அந்த நம்பிக்கை விரைவில் விரக்தியாக மாறக்கூடும்.

விரக்திக்குப் பிறகு என்ன?

இன்றைய இளைஞர்களின் மிகப் பெரிய சவால் கோபம் அல்ல; விரக்தி.

யார் வந்தாலும் எதுவும் மாறாது, அனைத்து அரசியல்வாதிகளும் ஒரே மாதிரி, இந்த அமைப்பைச் சீர்திருத்த முடியாது போன்ற எண்ணங்கள் அதிகரித்தால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்தானதாக மாறும்.ஏனெனில் அது, அவனை அரசியலில் ஈடுபடுவதை விட, அரசியலை அவன் முழுமையாக நிராகரிக்கும் மன நிலைக்கு தள்ளிவிடும். அவனை சுற்றி ஒரு அரசியல் பின்னப்படுவதை அவன் உணராமலே போய் விடக்கூடும்.

அதேநேரத்தில் இதற்கு மாற்றாக இன்னொரு சாத்தியமும் இருக்கிறது.

தனிநபர் வழிபாட்டின் எல்லைகளை உணர்ந்த பிறகு, இளைஞர்கள் கொள்கை அடிப்படையிலான இயக்கங்களை நோக்கி நகரலாம். சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட தன்னார்வ இயக்கங்கள், சுற்றுச்சூழல் இயக்கங்கள், மாணவர் இயக்கங்கள், உள்ளூர் உரிமைப் போராட்டங்கள் போன்றவற்றில் அதிகமாக பங்கேற்கலாம்.

அந்த மாற்றம் ஏற்கனவே உலகின் பல பகுதிகளில் தொடங்கியிருப்பதையும் நாம் பார்க்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளில் தெற்காசியாவின் பல நாடுகளில் நடந்த அரசியல் மாற்றங்கள் உலகின் கவனத்தை ஈர்த்தன. இலங்கையில் பொருளாதார நெருக்கடி வெடித்தபோது மக்கள் தெருக்களில் இறங்கினர். வங்கதேசத்தில் மாணவர் இயக்கங்கள் அரசியல் மாற்றத்திற்கான அழுத்தத்தை உருவாக்கின. நேபாளத்தில் பழைய அரசியல் அமைப்புகளின் மீது ஏற்பட்ட அதிருப்தி புதிய அரசியல் சக்திகளுக்கு வாய்ப்பளித்தது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. அவற்றின் காரணங்களும் விளைவுகளும் வேறுபட்டவை. ஆனால் ஒரு பொதுவான அம்சம் இருந்தது.

அது இளைஞர்களின் பங்கு.

இந்த இயக்கங்களில் பங்கேற்ற பெரும்பாலான இளைஞர்கள் பாரம்பரிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களாக இருக்கவில்லை. பலர் சமூக ஊடகங்கள் வழியாக ஒன்றிணைந்தனர். பலருக்கு தெளிவான கட்சி அடையாளம் கூட இருக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு அங்கு நிகழும் எதுவும் பிடிக்கவில்லை . அந்த விரக்தி அவர்களை ஒன்றிணைத்தது. 

இது இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகளிலிருந்து மாறுபட்ட ஒன்று.

முந்தைய காலங்களில் அரசியல் மாற்றங்களை உருவாக்கிய இயக்கங்களுக்கு தெளிவான தலைவர்கள், கட்டுப்பாடான அமைப்புகள், கட்சி ஒழுங்குகள், கொள்கைகள் இருந்தன.இன்றைய டிஜிட்டல் யுகத்தில் உருவாகும் பல இயக்கங்களுக்கு நிரந்தர தலைவர்கள் இல்லை. கட்டுப்பாடு இல்லை. சமூக ஊடகங்களே தகவல் பரிமாற்ற மையமாக செயல்படுகின்றன.இதனால் அவை மிக வேகமாக வளர்கின்றன.

இந்த மாற்றத்தை புரிந்துகொள்ளாமல் எந்த அரசாங்கமும் எதிர்கால இளைஞர் அரசியலை புரிந்துகொள்ள முடியாது.

தீர்வு எங்கே இருக்கிறது?

இந்த நிலை மாற வேண்டுமெனில் முதலில் கல்வி அமைப்பு மாற வேண்டும்.

இன்றும் பல கல்வி நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளுடன் தொடர்பில்லாத பழைய பாடத்திட்டங்களையே கற்பித்து வருகின்றன. பட்டங்கள் வழங்கப்படுகின்றன; ஆனால் சந்தைக்குத் தேவையான திறன்கள் வழங்கப்படுவதில்லை.

எதிர்கால உலகில் பட்டம் மட்டும் போதாது. தொழில்நுட்ப திறன்கள், தொடர்புத் திறன்கள், தொழில் முனைவு திறன்கள், நிதி மேலாண்மை திறன்கள், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டு திறன்கள் ஆகியவை அவசியமாகின்றன.

அதேபோல் அரசு வேலை மட்டுமே பாதுகாப்பான வாழ்க்கைக்கான வழி என்ற எண்ணத்திலிருந்தும் சமூகத்தை வெளியே கொண்டு வர வேண்டும்.

சிறு தொழில்கள், புதிய தொழில் முயற்சிகள், உள்ளூர் உற்பத்தி, தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில் முனைவோர் உருவாக்கம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.இளைஞர்களை வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல் வேலைகளை உருவாக்குபவர்களாகவும் மாற்ற வேண்டும்.அதுவே அவர்களின் விரக்தியை நம்பிக்கையாக மாற்றும் முதல் படியாக இருக்கும்.

மேற்கத்திய இளைஞர்களும் தமிழக இளைஞர்களும்: ஒரு முக்கிய வேறுபாடு

இன்றைய உலகில் தமிழக இளைஞர்கள் மட்டும் அல்ல, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல வளர்ந்த நாடுகளின் இளைஞர்களும் இதே போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அங்கும் வீட்டு வசதி பிரச்சினை இருக்கிறது. மாணவர் கடன் சுமை இருக்கிறது. வேலை இல்லா திண்டாட்டம் இருக்கிறது. வேலை பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது. அங்கும் இளைஞர்கள் பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீது அதிருப்தியுடன் இருக்கிறார்கள்.

ஆனால் அங்கு ஒரு முக்கியமான வேறுபாடு காணப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளில் இளைஞர்களின் கோபம் பெரும்பாலும் ஒரு தனிநபரை நோக்கி செல்வதில்லை. அது ஒரு அமைப்பை நோக்கிச் செல்கிறது. அவர்கள் பொருளாதார அமைப்பை, கல்வி அமைப்பை, அரசியல் அமைப்பை அல்லது கார்ப்பரேட் அதிகாரத்தை கேள்வி கேட்கிறார்கள்.தங்களை காப்பாற்ற ஒரு தனிநபர் வருவார், ஒரு சூப்பர் ஹீரோ தோன்றுவார் என்று அவர்கள் பெரும்பாலும் நம்புவதில்லை.

மாறாக, அமைப்புகளை மாற்ற வேண்டும், கொள்கைகளை மாற்ற வேண்டும், நிறுவனங்களைப் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என்ற மனநிலையில்தான் செயல்படுகிறார்கள்.

தமிழகத்தில் இன்னும் தனிநபர் மைய அரசியல் தொடர்கிறது.இது முற்றிலும் தவறானது என்று கூற முடியாது. சில நேரங்களில் வலுவான தலைவர்கள் சமூக மாற்றங்களுக்கு ஊக்கமாக இருந்திருக்கிறார்கள். ஆனால் எந்த சமூகமும் நீண்ட காலத்திற்கு தனிநபர்களின் மேல் மட்டும் நம்பிக்கை வைத்து முன்னேற முடியாது.

நிறுவனங்கள் வலுப்பெற வேண்டும். வலுவான சித்தாந்தங்கள் நிலை பெற வேண்டும். அரசியல் கட்சிகளுக்குள் உள் ஜனநாயகம் வளர வேண்டும். இளைஞர்களின் குரலுக்கு இடம் வழங்கப்பட வேண்டும். கொள்கை விவாதங்கள் அதிகரிக்க வேண்டும்.அப்போதுதான் தனிநபர் வழிபாட்டிலிருந்து கொள்கை அடிப்படையிலான அரசியலுக்கு சமூகங்கள் நகர முடியும்.

ஜென் Z-யின் உண்மையான சவால்

ஜென் Z தலைமுறையின் மிகப் பெரிய சவால் வறுமையோ, தொழில்நுட்ப மாற்றமோ, வேலைவாய்ப்போ மட்டும் அல்ல.அவர்களின் மிகப் பெரிய சவால் நம்பிக்கையைத் தக்க வைத்துக்கொள்வதுதான்.ஏனெனில் இந்த தலைமுறை உலகின் அநீதிகளை மிக அதிகமாகப் பார்த்திருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் உலகின் வாய்ப்புகளையும் மிக அதிகமாகப் பார்த்திருக்கிறது.அவர்கள் முன் திறந்து கிடக்கும் வாய்ப்புகள் எண்ணற்றவை.

ஒரு கிராமத்தில் இருக்கும் இளைஞன் உலகத் தரத்தில் கல்வி கற்க முடிகிறது. ஒரு சிறிய நகரத்தில் இருக்கும் இளைஞன் உலக உலக பெரும் நிறுவனங்களுக்கு தனது திறமையை விற்க முடிகிறது. ஒரு புதிய தொழில் தொடங்குவதற்கான கருவிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எளிதாகக் கிடைக்கின்றன.

ஆனால் இந்த வாய்ப்புகளுடன் சேர்ந்து கடுமையான போட்டியும் வருகிறது.இதனால் சிலர் நம்பிக்கையுடன் முன்னேறுகிறார்கள். சிலர் விரக்திக்குள் விழுகிறார்கள்.

இந்த விரக்தி அரசியல் அவநம்பிக்கையாக மாறினால் அது சமூகத்திற்கு ஆபத்து. ஆனால் அதே விரக்தி சமூக மாற்றத்திற்கான ஆற்றலாக மாறினால் அது புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.

கட்டுரையின் தொடக்கத்தில் எழுப்பிய கேள்விக்கு மீண்டும் வருவோம்.

ஜென் Z தலைமுறையினர் இடதுசாரிகளாகவே பிறந்தவர்களா?

அதற்கான பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும் .அவர்கள் பிறவியிலேயே இடதுசாரிகளும் அல்ல. வலதுசாரிகளும் அல்ல.அவர்கள் டிஜிட்டல் யுகத்தின் குழந்தைகள்.

இணையம், உலகமயமாக்கல், பொருளாதார நிச்சயமின்மை, தொழில்நுட்ப புரட்சி, சமூக ஊடகங்கள், உலகளாவிய தகவல் ஓட்டம் ஆகியவை இணைந்து உருவாக்கிய ஒரு புதிய தலைமுறை.அவர்கள் இடதுசாரி கருத்துக்களால் ஈர்க்கப்படலாம். வலதுசாரி கருத்துக்களாலும் ஈர்க்கப்படலாம். சில நேரங்களில் இரண்டையும் ஒரே நேரத்தில் ஏற்றுக்கொள்ளவும் முடியும்.

ஆனால் அவர்களின் பொதுவான பண்பு ஒன்று.அவர்கள் அதிகாரத்தை எளிதில் நம்ப மாட்டார்கள்.அவர்கள் கேள்வி கேட்பார்கள்.அவர்கள் விளக்கம் கேட்பார்கள்.அவர்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பார்கள்.அவர்கள் ஏமாற்றமடைந்தால் எதிர்ப்பார்கள்.

இந்த குணங்கள்தான் அவர்களை முந்தைய தலைமுறைகளிலிருந்து வேறுபடுத்துகின்றன.

முடிவுரை

ஜென் Z தலைமுறையினரை சுயநலவாதிகள் என்று விமர்சிப்பவர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் சுயநலவாதிகளாகப் பிறந்தவர்கள் அல்ல; பாதுகாப்பற்ற பொருளாதார சூழலில் வளர்ந்ததால் முதலில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கற்றுக்கொண்டவர்கள். எனினும் இந்த சுயபாதுகாப்பு உணர்வு சில நேரங்களில் சமூகப் பொறுப்புணர்வைக் குறைத்து சுயநலப் போக்காக வெளிப்படுகிறது.

ஒவ்வொரு தலைமுறையும், தங்கள் இளமைக்காலத்தை ஒரு அளவுகோலாக வைத்து அடுத்த தலைமுறையை மதிப்பிடுகிறது. அதனால்தான் தலைமுறைகளுக்கிடையேயான குழப்பம் அதிகரிக்கிறது மற்றும் நீடிக்கிறது.

இவர்கள் இப்படி மாறி போனதில், பெற்றோர்களின் பங்கும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதிக வேலைப்பளுவின் காரணமாக, பிள்ளைகளை கவனிப்பதற்கோ, அவர்களுடன்  அமர்ந்து ஒரு சில நிமிடங்கள் உரையாடுவதற்கோ, அவர்களுடைய  பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பதற்கோ அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

 ஏதோ ஒரு லேப்டாப்பையும் ஒரு இருசக்கர வாகனத்தையும் வாங்கி கொடுத்து விட்டால், பிள்ளைகள் தானாகவே கற்றுக் கொள்வார்கள் என்கிற மனோபாவம் பெற்றோர்களிடம்  அதிகம் காணப்படுகிறது. மேலும் அவர்களே தற்கால அரசியல் புரிதல் இல்லாததால், தங்கள் குழந்தைகளுக்கும் அவர்களை  சுற்றி நடக்கிற அரசியலை புரிய வைக்க இயலாத நிலையில் இருக்கிறார்கள்…

இன்றைய இளைஞர்களுக்கு தேவையானது, எல்லாவற்றையும் அமைதியாக ஏற்றுக்கொண்டு வாழ்வதல்ல. அதே நேரத்தில் எல்லாவற்றையும் நிராகரித்து விரக்தியில் மூழ்குவதும் அல்ல.

அவர்களுக்கு தேவையானது எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் திறன், தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் துணிச்சல், பொறுப்புடன் செயல்படும் மனநிலை, புதிய வாய்ப்புகளை உருவாக்கும் தன்னம்பிக்கை.அதே நேரத்தில் கோபம் மட்டும் மாற்றத்தை உருவாக்காது என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.

சமூக நீதி, சம வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், தனிநபர் சுதந்திரம், ஜனநாயகப் பொறுப்பு ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் புதிய அரசியல் மொழியை உருவாக்கும் பொறுப்பு இந்த தலைமுறையின் தோள்களில் உள்ளது.

அவர்கள் விரும்பும் பாதுகாப்பான, சமத்துவமான, வாய்ப்புகள் நிறைந்த சமூகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை இழக்காமல் முன்னேறினால், தமிழகத்தின் அடுத்த அரசியல் மற்றும் சமூக அத்தியாயத்தை எழுதப் போவது இந்த ஜென் Z தலைமுறையே என்பதில் சந்தேகமில்லை.

யுவராஜ் சம்பத்   22.06.2026…

Series Navigationகவிதைஆசீர்வாதம்