***************************************
நன்றியற்றவர்கள் நாங்கள் ஓ மழையம்மா
மழையம்மா கோபிக்காதே
நீ இல்லாத போது அத்தனை வருந்தினோம்
குடத்துடன் கவலையுடன்
ஏக்கத்துடன் வருந்தினோம்
சுவரெல்லாம் தரையெல்லாம் தெருவெல்லாம்
காற்றெல்லாம் கொளகொளக்க
குபுகுபுவென சோசோவென நீ பொழிகின்றபோது
உன்னை வணங்கத் தெரியவில்லையே மழையம்மா
குளிருதென்று சாக்கு போட்டு
வீட்டுக்குள் அமர்ந்து காவல் காக்கும்
உண்ணி நாயும் மதிப்பதில்லை மழையம்மா உன்னை
ஈரத்தில் புகும் வீடு என எண்ணி
குழந்தைகள் இருமுது என எண்ணி
பாத்திரம் மாற்றி பாத்திரம் வைத்து
வீட்டுக் கூரை வழியே
மழைக்குள் வீடு புகுந்த கதையும் மறந்தோம்
மழையம்மா உன் பெருமை ஏன் மறந்து போச்சோ.
நனைவதற்கு உணர்வதற்கு எல்லை வைத்துப்
நன்றியற்று ஏன் படைத்தாய் எம்மை மழையம்மா
கொண்டாட வேண்டாமா பூரிக்க வேண்டாமா
உடம்பு வாழ்க்கை முக்கியமென ஆனதினால்
உன் தியாக பொழிவு மறக்கின்றோம்
பேருந்துக்குள் கூட
கருப்புக் குடையுடன் நுழையும் மனிதர்கள் காணும்போது
மாரியம்மா என அழைத்துவிட்டுமக்கள் உன்னை ஏன்
ஒதுக்கினர் புரியுதம்மா அக மரியாதை இல்லையம்மா .
** பா.சத்தியமோகன்