பாலமுருகன்.லோ
இதை நான் எப்படி உன்கிட்டச் சொல்லறதுன்னு தெரியல. ஆனா இப்ப இருக்கிற நிலைமையைப் பார்த்தா அதைச் சொல்லித்தான் ஆகணும் போல இருக்கு. அதைச் சொன்னா நீ எப்படி எடுத்துப்ப, உன் மனசுல என்ன ஓடும்னு எனக்கு கொஞ்சம் ஊகிக்க முடியும்.
வேற வழியில்லாமத்தான் இதை நான் உன்கிட்டச் சொல்லுறேன். உன் அப்பாவா நான், உனக்கு என்னாலானமட்டும் முடிந்ததைச் செய்திருக்கிறேன்.
ஒவ்வொரு நாளும் மனசுல எண்ணுவதுண்டு, இன்றைய பொழுது நல்லபடியாக விடிய வேண்டும் என்று. ஆனா ஏதோ ஒரு காரணத்தால் எனக்கும் உன் அம்மாவுக்கும் சண்டை வருது.
ஒரு பைசா பிரயோஜனமும் இல்லாத விஷயமா இருந்தாலும், சண்டை ஆரம்பிக்கிற சமயத்துல அது தப்புன்னு மனசுக்கு புரிய மாட்டேங்கிறது. போட்டிப் போட்டுக்கிட்டு ஓசை எழுப்பறதே பிரதானமா ஆகிப் போச்சு வீட்டுல. பல சமயம் உங்கள நினைச்சு அமைதியா போயிடுறேன். ஆனா நானும் மனுஷன் தானே? எனக்கு ஆசை, பாசம், கோபம், வருத்தமெல்லாம் இருக்குமில்ல. சும்மா என்னையவே சீண்டினா எப்படி? ஒரு நாள் இல்ல ஒருநாள் எரிமலை மாதிரி வெடிக்க வேண்டியதாப் போகுது.
சரிதா தன் அப்பாவை பார்த்தபடி நின்றாள். என்ன சொல்வதென்று தெரியாமல், கண்கள் விரிந்த நிலையில் அமைதியாக இருந்தாள். இப்போதுதான் கல்லூரி வாழ்க்கைக்குள் தன் கால்களைப் பதிக்கிறாள். அதற்குள்ளே அவளது மனதில் ஒரு பெரிய இடியாக இறங்கப்போகிற விஷயம் பெருசாக இருக்கப்போகிறது என்று அவளால் ஊகிக்க முடிந்தாலும், அதற்கு ஒரு தீர்வைச் சொல்லவோ, தன் பக்கம் இருக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தவோ அவள் தயங்கினாள்.
தயங்கியவள் மெதுவாக தன் அப்பாவிடம்,
“அப்பா, இது என்ன புதுசா நம்ம வீட்டுல? சொல்லுங்க.” என்றாள்.
சங்கரனுக்கு ஒரு நிமிஷம் என்ன பதில் சொல்லணும்னு தெரியாமல், தன் தாடியைத் தடவியபடியே மகளின் கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்ன, ஒண்ணும் பேசாம இருக்கீங்க? ஏதாவது பதிலாவது சொல்லலாம்ல?” என்றாள் சரிதா.
சிறிது நேரம் அமைதியாக இருந்த சங்கரன் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு,
“இல்லம்மா… இந்தப் பிரச்சனை உங்க மனசுல இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்னு நான் நினைக்கவே இல்ல. அது உங்களை எந்தளவுக்கு மாத்தியிருக்குன்னு எனக்கு இப்பத்தான் தெளிவா புரியுது,” என்றான்.
சரிதா, அம்மாடி சரிதா என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தாள் உமா. சரிதாவின் அம்மா. உமா உள்ளே வந்ததை கவனித்த சங்கரன், பேசிக்கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு அமைதியாக அவளைப் பார்த்தான்.
“என்னம்மா சரிதா, பேசிட்டு இருந்தீங்க? கொஞ்சம் எனக்கும் சொல்லலாமில்ல? நானும் தெரிஞ்சுக்குவேணுல்ல.”
“அம்மா, அதுவா? அப்பா ஏதோ ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு என்னைக் கூப்பிட்டு பேசிக்கிட்டிருந்தாரு. அப்ப நீயும் வந்துட்ட.”
“ஆங், அப்படி உட்காரு. அவரு என்ன சொல்லப்போறாருன்னு ரெண்டு பேரும் தெரிஞ்சுக்கலாம்.”
“இல்லடி, அவரு என்ன பேசிட்டு இருந்தாருன்னு எனக்கு தெரியும். நீ எப்படி எடுத்துக்கப் போறேன்னுதான் எனக்கு தயக்கமா இருக்கு.”
இதை சரிதா எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம் தன் அம்மாவை உற்றுக் கண் இமைக்காமல்பார்த்தாள்.
சில நொடிகள் மௌனத்திற்குப் பிறகு சரிதா பேசத் தொடங்கினாள்.
“நீங்க ரெண்டு பேரும் ஒரு முடிவுக்கு வந்திருக்கீங்க போல. பாத்தா அப்படித்தான் தெரியுது,” என்றாள்.
உமா உடனே அவளிடம் பதில் சொன்னாள்.
“சில காலமாவே எங்க ரெண்டு பேருக்குள்ள மனஸ்தாபம் இருக்குன்னு உனக்குக் கொஞ்சம் தெரிஞ்சிருக்கும். ஆனா அதுக்கான காரணம் என்னன்னு உனக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. ஏன்னா, நானோ உங்க அப்பாவோ இதைப் பற்றி உன்கிட்ட இதுவரைக்கும் வெளிப்படையா பேசியதில்ல.
““ம்மா, குடும்பமுன்னா சண்டைச் சச்சரவு எல்லாம்தான் இருக்கு. இதுக்குப் போய் இருவரும் ஏதோ முடிவெடுத்தா எப்படி?”
“அது அப்படியல்ல சரிதா!”
“வேறு எப்படியாங்க?”
“ஒரு பெண் பல விஷயங்களை மன்னிச்சிடுவா சரிதா. எவ்வளவு பெரிய கஷ்டமா இருந்தாலும் தாங்கிக்குவா. ஆனா ஒரு விஷயத்தை மட்டும் அவளால ஏத்துக்க முடியாது…”
“எந்த விஷயத்தம்மா? நீ பேசுறத தெளிவாச் சொல்லேன்.”
“உங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். இதையெல்லாத்தையும் நீங்களே பேசி முடிச்சுப்பீங்க. இப்ப மட்டும் ஏன் என்னிடத்துல சொல்லணும்னு முடிவுக்கு வந்துட்டீங்க?”
“இதுல நீயும் சம்பந்தப்பட்டிருக்கே. அதனாலத்தான் சொல்றோம். நாங்க ரெண்டு பேரு மட்டும்தான் என்றால் என்னைக்கோ முடிவெடுத்திருப்போம்.”
“ம்மா, என்ன முடிவெடுத்திருக்கீங்க?”
உமா அந்த வார்த்தைகளைச் சொன்ன பின், சங்கரன் கண்களில் வெறுப்புத்தான் காணப்பட்டது. இவளுடன் இனி வாழ முடியும்னு தோணல என்ற எண்ணம் மனதில் ஓட, எதிரில் சுவரில் மாட்டியிருந்த குடும்ப அட்டைப்படத்தில் இருந்த தன் மகள் சரிதாவின் முகத்தையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
“அம்மா, நீ புரியிற மாதிரி சொல்லேன். ஏன் இவ்வளவு பெரிய பீடிகை போடுற?”
“அப்படி அவரு என்ன தப்புப் பண்ணிட்டாரு?”
“நீ அவரு மேல ஏதோ பெரிய குற்றச்சாட்டு வைக்கப்போற மாதிரி பேசுற. என்ன, அவரு யாரையாவது கொலை பண்ணிட்டாரா?”
என்று சரிதா பதற்றத்துடனும் எரிச்சலுடனும் கேட்டாள்.
“இனி எங்களால சேர்ந்து வாழ முடியும்னு தோணலயே.”
என்று சொன்னதற்கு அப்புறம், சரிதா தன் அப்பாவைப் பார்த்து இது உண்மையா என்று கண்களாலேயே சம்பாஷணை செய்தாள். சங்கரன் ஏதும் பேசாமல் அமைதி காத்ததைப் பார்த்த சரிதாவின் முகம் மாறியது.
“அப்ப இவுங்க சொல்றது உண்மைத்தான் போல,” என்று மனதிற்குள் ஊர்ஜிதம் செய்துகொண்டாள்.
மேலும் சங்கரன் சரிதாவிடம்,
“ஒத்து வரலைன்னு தெரிஞ்ச பிறகு எப்படி ஒண்ணா வாழ்றது? அதனால பரஸ்பரமா பிரிஞ்சிடலாம்னு முடிவு எடுத்திருக்கோம்…” என்று கூறிவிட்டு, தனது தாடியை மெதுவாகத் தடவியபடி அமைதியாக அமர்ந்திருந்தார்.
“உங்க அப்பா உனக்கு ஒரு நல்ல அப்பாவாத்தான் இருந்திருக்காரு.’’ ஆனா எனக்கு ஒரு நல்ல கணவனா எப்போதும் இருந்ததில்ல.
“என்னம்மா, சொல்லுற? நம்ம அப்பாவா?”
“ஆம், உங்க அப்பாத்தான்.”
“ஒரு கசப்பான உண்மையைத்தான் இப்ப உனக்குத் தெரிவிக்கப் போறேன்.”
சங்கரன் சரிதாவையும் உமாவையும் பார்க்கல. மனசுல ஏதோ நினைச்சுக்கிட்டு, வலது கையில் உள்ள கட்டை விரலை ஆள்காட்டி விரலால் தேய்த்தபடி அமைதியா இருந்தார்.
உங்க சோகால்ட் அப்பா நம்மோட வாழ்ந்துகிட்டிருக்கும்போதே வேற ஒரு தொடர்பில் இருந்திருக்காரு. அதை இதுவரை என்னிடம் அவரால மறுத்து பேச முடியல.
இதுநாள் வரைக்கும் அவரைப் பற்றி இந்த விஷயம் எல்லாம் உனக்குத் தெரியாது. ஆனா இப்போ நீ எல்லாத்தையும் தெரிஞ்சிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கிற,” என்றாள் உமா.
“ஏம்பா, எப்படி உங்களுக்கு மனசு வந்தது? இன்னும் ஒரு வருஷத்துல நான் வேலைக்குப் போயிடுவேன். இப்ப போயி அதுவும் நீங்க அம்மாவுக்கு துரோகமா? என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியல. என் முகத்தைய தினமும் பார்க்கிறீங்க. அப்புறம் எப்படி உங்களுக்கு அப்படியொரு எண்ணம் வந்தது? உண்மையச் சொல்லணும்னா, இப்ப உங்க கண்ணைக்கூட என்னால நேராப் பார்க்க முடியல.”
சரிதாவின் கண்ணிலிருந்து கண்ணீர் துளிகள் மளமளவென வழிந்தன. “நம் அப்பாவா இந்தச் செயலைச் செய்தார்?” என்ற எண்ணம் ஒரு கணம் மனதில் எழுந்து மறைந்தது. சில நொடிகள் அந்த அறையை மௌனமே ஆட்கொண்டிருந்தது. மயான அமைதியைப் போன்ற ஒரு கனத்த அமைதி அங்கே நிலவியது.
குளியலறையில் இருந்த குழாயிலிருந்து தண்ணீர் தளக்… தளக்… என்று பக்கெட்டில் விழுந்துகொண்டிருந்தது. அந்த ஒலி மட்டுமே அறையின் அமைதியைக் கிழித்துக்கொண்டு கேட்டது.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரிதா தன் அப்பாவைப் பார்த்தாள். ஆனால் அவரோ நிலத்தைப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தார்.
பின் சரிதாவின் குரல் கேட்டு இருவரும் அவளைப் பார்த்தனர்.
“இப்ப என்ன சொல்லச் சொல்லுறீங்க? நீங்க எடுத்த முடிவை நான் சரின்னு சொல்லணுமா? இல்ல தப்புன்னு சொல்லணுமா? என்னத்த சொல்ல? அதையும் நீங்களே சொல்லிடுங்க.
உங்க முடிவு, உங்க வாழ்க்கை. நான் உங்ககிட்ட ஒண்ணே ஒண்ணுத்தான் கேட்கணும்.
இந்தக் கேள்வி உங்க இருவருக்கும்தான். உங்களோட ஆசை, பாசம், சுகம், துக்கம், விருப்பு, வெறுப்பு இதை எல்லாத்தையும் கட்டுப்படுத்த முடியலென்னா, அப்புறம் ஏன் கல்யாணம்? ஏன் பிள்ளை குட்டியெல்லாம்? அவங்க அவங்க வாழ்க்கையை தனியாவே பார்த்துக்கலாமில்ல?
அப்பா, ஏனோ இப்போ உங்களைப் பார்க்கறதுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ஏதோ ஒண்ணு என்னைத் தடுக்குது. வெளிப்படையா சொல்ல முடியல. ஆனா உங்க மாதிரி தகப்பன்மார்களுக்கு நாங்க பிள்ளைகள் என்ன சொல்ல விரும்புறோம்னா, எங்களோட மீதியிருக்கிற பயணம் முழுவதும் அம்மாவுடனே.
“இனி, உங்க பங்களிப்பு இருக்காது. அப்போ எங்களுடைய வாழ்க்கையை நாங்க பார்த்துக்க வேண்டியதுதான். சரியா?”
-பாலமுருகன்.லோ