This entry is part 2 of 8 in the series 28 ஜூன் 2026

-பாலமுருகன்.லோ

ஸ்ட்ரோக் அறிக்கையைப் பார்த்த வேணுகோபால் என்ன செய்வது அறியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனார். கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் உருண்டோடின. பேசத் தொடங்கிய அவர், அவரது குரல் குரல்வளையிலிருந்து வெளியே வர மறுத்தது. செவிலியரைப் பார்த்தபடி இரண்டு நொடிகள் கண் இமைக்காமல் நின்றார்.

“என்ன சார்… ஏதாவது கிளாரிட்டி வேண்டுமா?” என்றாள் செவிலியர். “இது ரெகுலர் ஃபார்மாலிட்டீஸ், சார்.”

வேணுகோபாலின் முகம் சுருங்கியது.

“ஏங்க, சிஸ்டர்… என்னென்னமோ எழுதியிருக்கீங்க. பி.பி., எஸ்.பி.ஓ₂, ஹார்ட் ரேட், பல்ஸ் — எல்லாமே நார்மலாத்தான் இருந்தது. அவரால் உணவு உட்கொள்ள முடியல. பார்க்கவே ஸ்ட்ரோக் மாதிரி இருந்தது. ‘என்னன்னு பாருங்க’ன்னுதான் நான் எல்லா இடத்திலும் பதிவு செய்திருப்பேன்,” என்று கூறி, கண்களிலிருந்து வடிந்த நீரைத் துடைக்காமல் தன் தம்பியைப் பார்த்தார்.

“சார், இதை உங்களுக்கு ஐ.சி.யூவிலேயே சொல்லியிருப்பாங்களே!”

குரல் வந்த திசையை நோக்கித் தன் தலையைத் திருப்பியவர், செவிலியருக்கு தன் பதிலைத் தெரிவித்தார்.

“அங்கிருந்த மருத்துவர், ‘உங்க தம்பி நார்மலாத்தான் இருக்காரு. ஆனா இந்த நோயை மெதுவாகத்தான் குணப்படுத்த முடியும். நர்சிங் கேர் தொடர்ந்து கொடுத்தால் மெதுவாகக் குணமடைய சாத்தியம் இருக்கு. ஐ.சி.யூவில் வைத்துத்தான் பார்க்கணும்னு அவசியமில்லை’ன்னு சொன்னார். இந்த கன்சென்ட் லெட்டரும் ஒரு ஃபார்மாலிட்டிதான். திடீரென்று உடல்நிலையில் மாற்றம் வந்தா, அப்போது ஐ.சி.யூவுக்கு மாற்ற நோயாளியின் உறவினர்கள் சம்மதிக்க வேண்டும் என்றுதான் இதில் எழுதியிருக்கு என்று கூறினார். அதனால்தான் நான் இருமுறை படிச்சுப் பார்த்து கையொப்பமும் செய்தேன்.”

“சார், நாங்களும் அதைத்தான் எழுதியிருக்கோம். என்ன வித்தியாசம் இருக்கு?”

“ஏம்மா, எவ்வளவு கையெழுத்து வாங்குவீங்க?” என்றார் வேணுகோபால் செவிலியரைப் பார்த்து.

“சார், அந்த கையெழுத்து ஐ.சி.யூவிற்கு, இது வார்டுக்கு,” என்றாள் செவிலியர்.

“வித்தியாசமா? நல்லா இருக்கிற ஒருத்தனுக்கு எந்த நேரத்திலும் இருதய அடைப்பு வரலாம், பி.பி. அப்நார்மலாகப் போகலாம், எஸ்.பி.ஓ₂ குறையலாம் என்று எழுதியிருக்கீங்க. ஏன் பயமுறுத்துறீங்க? நாங்க உங்களை மாதிரி மருத்துவம் படிக்கலை. ஆனா ஏதோ கேள்வி ஞானம் கொஞ்சம் இருக்கு, சிஸ்டர். இந்தக் கடிதத்தில நான் இப்போ கையொப்பம் போட மாட்டேன். நாளை என் புள்ளை மும்பையிலிருந்து வரான். அவன் படிச்சுப் பார்த்துட்டுப் போடுவான்.”

“சிஸ்டர், நான் ஒண்ணு கேட்கலாமா?”

“சார், நீங்க தாராளமா கேட்கலாம்.”

“மனசாட்சியைத்தொட்டு சொல்லுங்க — இவன் நல்லா இல்லேனா, எங்கிட்டக் கூப்பிட்டு சொல்ல மாட்டாங்களா? ‘சார், நீங்க இவரை வீட்டுல வச்சு பார்த்துக்கோங்க’ன்னு சொல்ல மாட்டாங்களா?”

நர்ஸ் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.

“சரி, சார். நாளை கையொப்பம் போடுங்க. நான் மருத்துவரிடம் சொல்றேன்.”

வேணுகோபால் மீண்டும் தம்பியைப் பார்த்தார்.

“அவனுக்குன்னு என்னவிட்டா யாருமில்ல. என்னோடத்தான் இருக்கான். நான்தான் அவனைப் பார்த்துக்கிறேன். இந்த வயசான காலத்துல நீ முந்திப்பியா, இல்ல நான் முந்திப்பேனான்னு இருக்கிறப்ப இவனுக்கு இந்த ஸ்ட்ரோக் வந்திருக்கு. நான் கொண்டு வந்தப்போ வைட்டல்ஸ் நல்லாத்தான் இருந்தது. இப்போ ஓ₂ சப்போர்ட் வச்சுருக்கீங்க, ஜி.சி.எஸ். குறைவா இருக்குன்னு சொல்லுறீங்க. இதைப் பற்றியெல்லாம் எனக்கு என்ன தெரியும்? ஆனா நான் பார்த்த வரைக்கும் அவன் கூப்பிட்டா ரெஸ்பாண்ட் பண்ணுறான். கேள்வி கேட்டா பதில் சொல்லுறான். இன்னைக்கு ஒரு இரவு தானே. நாளை என் மகன் வந்த பிறகு அடுத்தது என்னன்னு முடிவு பண்ணலாம்.”

“சரி, சார்,” என்றாள் செவிலியர்.

மறுநாள் காலை பத்து மணி அளவில் மும்பையிலிருந்து வேணுகோபாலின் மகன் கார்த்திக் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். பிஸியோதெரபி துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் அனுபவமுடைய அவன், ஒரு கல்லூரியின் முதல்வராகவும் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றி வந்தான்.

வந்தவுடன் சித்தப்பாவின் நிலையைப் பார்த்து அதிர்ந்து போனான். டியூட்டி நர்ஸிடம், “டியூட்டி டாக்டர் எந்த நேரத்தில் வருவாங்க?” என்றான்.

“சார், இப்போ வர நேரம்தான், சார்,” என்றாள் செவிலியர்.

பேசிக்கொண்டிருக்கும்போதே அருகில் டியூட்டி டாக்டர் தன் அசிஸ்டென்ட் படையுடன் வந்தார்.

“ஏன் இங்க இவ்வளவு கூட்டமா இருக்கு? யாராவது இரண்டு பேர் இருங்க. மத்தவங்க வெளியே இருங்க,” என்றார்.

“நீங்கள் யார்? பேஷண்டுக்கு என்ன உறவு?” என்று கேட்டார்.

“என் சித்தப்பா,” என்றான் கார்த்திக்.

அவன் சித்தப்பாவின் கைகளையும் கால்களையும் பார்த்தான்.

“டாக்டர், கையிலையும் காலிலும் எடிமா இருக்கே. ஐ.சி.யூவில் பிஸியோ ரிஃபர் செய்திருக்காங்களா?”

“சார், பேஷண்டு நேற்று இரவுதான் வார்டுக்கு வந்துருக்காரு. நான் டியூட்டிக்கு இப்பதான் வந்தேன். ரிப்போர்டைப் பார்க்கிறேன்,” என்றார் டாக்டர்.

சில வினாடிகள் பரபரப்பாகச் சென்றன. ரிப்போர்ட் வந்தது. டியூட்டி டாக்டர் அதைப் பார்த்தார். முகத்தில் பதற்றம் பட்டது. ஐ.சி.யூவில் ஒரு மருத்துவர் பிஸியோ ரிஃபர் செய்திருந்தார். ஆனால் மூன்று தினமாக பிஸியோ கொடுக்கப்படவில்லை என்று புரிந்தது மருத்துவருக்கு.

“சார்… ரிஃபர் செய்திருக்கிறாங்க,” என்றார் மருத்துவர்.

“அப்புறம் ஏன் கொடுக்கல?” கார்த்திக்கின் குரல் இறுக்கமானது. “சரி. இப்போதே கொடுக்கச் சொல்லுங்க.”

“சொல்கிறேன், சார்.”

“மேலும் ஒரு சந்தேகம்,” என்றான் கார்த்திக். “பல்ஸ் ஆக்ஸி மீட்டரில் நார்மலாத்தான் காட்டுது. அப்புறம் ஏன் இன்னும் ஓ₂ சப்போர்ட்?”

“ஜி.சி.எஸ். கவுண்ட் ரொம்பக் கம்மியா இருக்கு. அவரால் தன்னால் முழுங்க முடியல. உணவுக் குழாய் மூலம்தான் உணவு செலுத்தப்படுகிறது. எப்ப வேணுமானாலும் ஆஸ்பிரேஷன் வரலாம். அதற்காக ஓ₂ சப்போர்ட் தந்திருக்கிறோம்.”

“தேவைப்பட்டா திரும்பத் தரலாம். இப்போ ஒருமுறை விடுவிச்சுப் பார்த்தா என்ன?”

டாக்டர் தன் ஜூனியரை நோக்கிப் பார்த்தார்.

“சரி. விடுவிங்க. மூன்று முறை செக் பண்ணுங்க. சின்ன மாற்றம் இருந்தாலே உடனே ஓ₂ சப்போர்ட் கொடுங்க,” என்றார்.

அந்த இரவு அப்படியே நிறைவடைந்தது.

விடிந்ததும் செவிலியர் தனது அன்றாட வேலையைச் செய்யத் தொடங்கினார். வைட்டல்ஸ் எடுக்கப்பட்டது. காலை உணவும் மருந்தும் வழக்கம்போல கொடுக்கப்பட்டது. நிலை மேலும் மோசமடையவில்லை. உணவு மட்டும் இன்னும் குழாய் மூலமே சென்றது.

சாயந்திரம் செவிலியர் ஒருவர் கார்த்திக்கிடம் ஒரு கன்சென்ட் லெட்டரை எடுத்துவந்தாள்.

அதைக் படித்த கார்த்திக் செவிலியரைப் பார்த்தான்.

“என்ன சிஸ்டர், இதுல எப்படி கையொப்பம் போடுவது? என் அப்பாதான் நேத்தே ஒரு கன்சென்ட் லெட்டர்ல கையொப்பம் போட்டுட்டு வந்திருக்கார். தேவைப்பட்டா ஐ.சி.யூவில் வைக்கலாம் என்று. அதுக்கு அப்புறமாவது ஏன் இந்தக் கடிதம்? அதிலும் எல்லாத்தையும் மிகைப்படுத்தி எழுதியிருக்கீங்க. என் சித்தப்பாவை ஐ.சி.யூவில் வைத்தால் இப்ப இருக்கிற நிலையிலிருந்து முன்னேற்றம் அடையுமா? இதை உங்க டாக்டரிடம் கேளுங்க.”

பேசிக்கொண்டிருக்கும்போதே டியூட்டி டாக்டர் உள்ளே வந்தார்.

“என்ன சார், உங்க சித்தப்பா எப்படி இருக்காரு?”

“சார், நீங்கதான் சொல்லணும்.”

“சார், அவருடைய ஜி.சி.எஸ். கவுண்ட் குறைஞ்சிருக்கு. நார்மலா பதினைந்து இருக்கணும்.”

கார்த்திக் அவரை நேராகப் பார்த்தான்.

“ரிப்போர்டைக் காட்டுங்க.”

“சார், எடுத்துவரச் சொல்லுங்க,” என்றான் மீண்டும். “சும்மா அவரை ஐ.சி.யூவில் வைக்கச் சொல்லி கன்சென்ட் லெட்டர் கொடுக்கிறீங்க. அதுல எங்க விருப்பத்துக்கு ஏற்ப வார்டில் வைத்து சிகிச்சை செய்துவருவதாக கையொப்பம் செய்யச் சொல்லுறீங்க. அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.”

“டாக்டர், இந்தாங்க ரிப்போர்ட்,” என்றாள் செவிலியர்.

ரிப்போர்டைப் பார்த்த டியூட்டி டாக்டரின் முகம் முழுவதும் வியர்வையால் நனைந்தது. தன் கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டார்.

கார்த்திக் ரிப்போர்டைப் பார்த்தான்.

“ஜி.சி.எஸ். கவுண்ட் 12 என்று எழுதியிருக்கு. பிறகு ஏன் அவசர சிகிச்சை தேவையா? நீங்க சொல்லுறதை மருத்துவம் தெரியாத ஒருவன் நம்பலாம். மருத்துவம் தெரிந்த ஒருவனால் ஏற்றுக்கொள்ள முடியாது.”

டாக்டர் எதுவும் பேசாமல் தரையைப் பார்த்தபடி இருந்தார்.

“டாக்டர், இன்னும் இரண்டு நாளில் என் சித்தப்பாவை டிஸ்சார்ஜ் செய்யுங்கள். நாங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு போய் பார்த்துக்கொள்கிறோம். எந்த ஒரு முன்னேற்றமும் உடனடியாக இருக்காது என்று சொன்ன பிறகு அவருக்கு ஏன் ஐ.சி.யூ.?”

மெல்லிய குரலில், “சீனியரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு நான் சொல்கிறேன்,” என்று வார்டை விட்டு வெளியேறினார் டியூட்டி டாக்டர்.

வேணுகோபால் தன் மகன் கார்த்திக்கைப் பார்த்து, “ஏன்டா இப்படி பண்ணுறாங்க?” என்றார்.

கார்த்திக் உடனே பதில் சொல்லவில்லை. சித்தப்பாவின் முகத்தைப் பார்த்தான். அவர் பாதி கண்கள் திறந்தும் மூடியும் காணப்பட்டார்.

“என்ன சித்தப்பா, வீட்டுக்கு போகலாமா?” என்றான்.

“ஊம்,” என்ற பதில் பட்டும் படாமலும் வந்தது.

வேணுகோபாலின் கையில் இருந்த கன்சென்ட் லெட்டர் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.

Series Navigationமழை புராணம் -37அம்மாவின் நாற்காலி