This entry is part 3 of 8 in the series 28 ஜூன் 2026

– முகமது கதீர்பாபு

தெலுங்குக் கதை மொழியாக்கம்  : அவினேனி பாஸ்கர்

‘முதியோர் இல்லத்தில்’ என் அம்மாவையோ, உங்கள் அம்மாவையோ, நண்பனின் அம்மாவையோ அல்லது நம் தெருவில் நமக்கு தெரிந்த ஒருவரின் அம்மாவையோ கொண்டு போய் சேர்த்த பிறகு… அது ஓரளவுக்கு வசதியான இல்லமாக இருந்தால், தங்குவதற்கு ஒரு தனி அறையைக் கொடுத்து, வெளியே அமர்வதற்காக இதுபோல ஒரு நாற்காலியையும் போட்டு வைப்பார்கள்.

அம்மாவால் நாள் முழுவதும் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்க முடியாது அல்லவா?

அதனால்தான், சிலநேரம் வெளியே வந்து இந்த நாற்காலியில் அமர்ந்து கொள்கிறாள்.

அம்மாவுக்கு எவ்வளவு வயதிருக்குமோ! உடல்நிலை கூட சொல்லிக்கொள்ளும்படியாக எல்லாம் இருக்காது. சுறுசுறுப்பாய் அவளால் நடமாட முடியாது. மெதுவாக, அடிமேல் அடி வைத்தபடி நடந்து எப்படியோ இந்த நாற்காலியில் வந்து அமர்ந்து விடுவாள்.

சிறு வயதில் அம்மாவுக்கு ஒரு குடும்பம் இருந்தது. திருமணத்திற்குப் பிறகும் இருந்தது. இப்போதும் இருக்கிறது… ஆனால், அது இருந்தும் இல்லாதது போல் தான் இருக்கிறது.

சற்றுத் தொலைவில் இன்னொரு நாற்காலி இருக்கிறது அல்லவா? அங்கேயும் ஒரு அம்மா அமர்ந்திருக்கிறாள். மற்றொரு நாற்காலியில் வேறொரு அம்மா. யாரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை. அவர்கள் அப்படி என்னதான் பேசிக் கொள்ள முடியும்? பேசத் தொடங்கினாலே அதே பழையக் கேள்விகள்தான் வரும் –

– உங்கள் மகன் போன் செய்தானா?

– உங்கள் மகள் எப்போது வருவதாகச் சொன்னாள்?

– பேரக்குழந்தைகள் வீடியோ கால் செய்கிறார்களா?

– இந்த முறை போனால் ஒரு பத்து நாளாவது தங்கிவிட்டு வருவீர்களா?

பதில்கள் எதுவும் நம்பிக்கையூட்டுவதாக இருக்காது. இருக்காது என்று நமக்கும் தெரியும். கேட்டு ஏன் அவர்களின் மனதைக் கஷ்டப்படுத்த வேண்டும்?

அதனால்தான் அவர்கள் யாரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொள்வதில்லை. எங்கும் அமைதி. துணைக்கென்று வார்த்தைகளற்ற நாற்காலிகள் மட்டுமே இருக்கின்றன. பரவாயில்லை, அவை மட்டுமாவது இவர்களின் சுமையைத் தாங்குகின்றனவே!

இந்த வயதில் நினைவுகள் என்பவை எதிரிகள். அவை நினைவூட்டப்படாமலேயே திரும்பத் திரும்ப அவை வந்து கொண்டே இருக்கும். அம்மா வெறுமையை உற்று நோக்கியபடி சும்மா அமர்ந்திருக்கிறாளா? இல்லை, இல்லை! வேண்டாம் என்றாலும் அலைமோதும் நினைவுகளுடன் அவள் போராடிக் கொண்டிருக்கிறாள்.

தன் மீது பாசம் பொழிந்த அப்பா, கன்னத்தைக் கிள்ளி விளையாடிய அம்மா, கடைத்தெருவிலிருந்து பகோடா பொட்டலம் வாங்கி வந்து ‘சாப்பிடம்மா’ என்று கொடுத்த அண்ணன், பெல் இல்லாத சைக்கிளில் கல்லூரிக்குச் செல்லும்போது கேரியரைப் பிடித்து நிறுத்தி, தன் பங்குக்கு கிடைத்த பாக்கெட் பணத்தில் அதை ரிப்பேர் செய்து கொடுத்த சின்ன அண்ணன்… இவர்கள் எல்லாம் நினைவில் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

“என்னம்மா… உன்னை உன் மகன் அங்கே கொண்டு போய் போட்டுவிட்டானா?” என்று யாரோ ஒரு சொந்தக்காரர் போன் செய்து அழுவார்.

“உன்னை நான் எப்படிப் பார்த்துக் கொண்டேன் தெரியுமா?” என்று நினைவுகளைக் கிளறிவிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

அப்பப்பா… அம்மா இந்த வீட்டை ஒரு ராணியைப் போலத் தாங்கிப் பிடித்தவள். கணவன் சம்பாதித்துக் கொண்டு வரும் ஒவ்வொரு பைசாவையும் மிகவும் கராராக கையாண்டு, குடும்பத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவள். நான்கு பிள்ளைகளை எப்படி வளர்த்தாளோ, அதேபோல பதினாறு மரங்களை வளர்த்துத் தன் வீட்டுப் புழக்கடை முழுவதையும் தன் ஆளுமையின் கீழ் வைத்திருந்தவள். தயிர் உறை ஊற்றுவதற்குக் மோர் கேட்க ஒருவரும், பண உதவிக்காக ஒருவரும் அம்மாவிடம் வந்தால், ‘இல்லை’ என்று சொல்லி வெறுங்கையோடு அனுப்பியப் பாவத்தை ஒருபோதும் செய்தவள் இல்லை. திருமணங்களில் உறவினர்களுக்குத் தோள் கொடுத்து நின்றிருக்கிறாள். எல்லா பண்டிகை கொண்டாட்டங்களிலும், குடும்ப நிகழ்வுகளிலும் அவளுடைய அதிகாரம்தான் கொடிகட்டிப் பறந்தது. பெற்ற பிள்ளைகளைப் பொத்திப் பொத்தி வளர்த்து, திருமணம் செய்து வைத்து, அவர்களின் மகிழ்ச்சியை மட்டுமே விரும்பியவள்…

இத்துணை நெடிய வாழ்வில் ஒருநாளும் எவருடைய உதவியையும் நாடாத அம்மாவை, இன்று அனாதையாக்கிவிட்டு… வயதாகிவிட்டது என்றும், சரியாக நடக்க முடிவதில்லை என்றும், கண்கள் சரியாகத் தெரிவதில்லை என்றும், வீட்டில் இடமில்லை என்றும், ‘அங்கே’ என்றால் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள் என்றும் சொல்லி… நன்கு பேசத் தெரிந்த அம்மாவை வார்த்தைகளே இல்லாத ஒரு இடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்து, அனுபவங்களின் மூட்டையாக இருக்கும் அம்மாவைச் செயலற்ற நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள்…

சனி, ஞாயிறு வந்துவிட்டால் அம்மா அறைக்குள் போவதே இல்லை. நாற்காலியிலேயே அமர்ந்திருப்பாள். அவை பார்வையாளர்கள் வந்து செல்லும் நாட்கள். வாசலைப் பார்த்துக் கொண்டே இருப்பாள்… பிள்ளைகள் வருவார்கள் என்று… பார்த்துக் கொண்டே இருப்பாள் நலம் விசாரிக்க யாராவது வருவார்கள் என்று… “நான் கர்ப்பமாக இருக்கிறேன், துணையாக இரு அம்மா” என்று மகள் கூப்பிட்டபோது, மூட்டு வலி இருந்தாலும் பொருட்படுத்தாமல் போய், ஆறு மாதங்கள் அங்கே ஒரு வேலைக்காரியைப்போல கடினமான உடலுழைப்பைக் கொடுத்துவிட்டு வந்தாள். இன்று அந்த மகளுக்கு ஒரு நிமிடம் கூட நேரமில்லை. “எனக்கு அந்தப் பெண்ணைத்தான் பிடித்திருக்கிறது” என்று மகன் சொன்னபோது, கணவனைச் சம்மதிக்க வைத்துத் திருமணம் செய்து வைத்தாள். இன்று அந்த மகன் வீட்டின் மூலையில் அம்மாவுக்கு ஒரு சின்ன இடம் கூட மிச்சமில்லை.

“முதியோர் இல்லத்தில் நன்றாக இருக்கும் அம்மா” என்று கொண்டு வந்து சேர்த்தான். உண்மைதான், இந்த இல்லத்தில் ஒரு ‘டைம் டேபிள்’ இருக்கிறது. பலகாரம் காலை எட்டு மணிக்கு, மதிய உணவு ஒரு மணிக்கு, தேநீர் மாலை ஐந்து மணிக்கு… இந்த கால அட்டவணை சிறிதும் பிசகாமல் கட்டாயமாகப் பின்பற்றப்படும் . ஆனால், ‘மகன் வந்து பார்க்கும் நேரம்’ என்பது மட்டும் கட்டாயமில்லை.

அம்மாவுக்கு இருக்கும் ஒரு சிக்கல் என்னவென்றால், சில சமயம் அதிகாலையில் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் போது ஒரு பிரமை ஏற்படும். “நான் மகள் வீட்டில் இருக்கிறேனா?” அல்லது “மகன் வீட்டிலா?” என்று! இரண்டு மூன்று நிமிடங்கள் தான். அதற்குள் யதார்த்தம் புரிந்துவிடும். ‘ஓஹோ… நான் முதியோர் இல்லத்தில்தான் இருக்கிறேன்’. ஏனென்றால், அவளை இங்கே கொண்டு வந்து சேர்த்துப் பல நாட்கள் ஆகிவிட்டன அல்லவா?

அம்மாவின் போனில் ‘தொடர்பு எண்கள்’ நிறையவே இருக்கின்றன. ஆனால் அழைப்பவர்கள்தான் யாருமில்லை.

இப்படி முதியோர் இல்லங்களில் இருக்கும் தந்தையர்களின் துயரம் அது தனி வகை. இருபத்தைந்து கோடி மதிப்பு சொத்துள்ள ஒரு தந்தை, ஒரு அறையை வாடகைக்குப் பிடித்துக்கொண்டு தங்கியிருக்கிறார். அவர் தினமும் செய்யும் ஒரே பிரார்த்தனை இதுதான்: “இறைவா… யாரிடமும் கையேந்த விடாமல் என்னை உன்னிடம் அழைத்துக்கொள்”. அவர் சிவபக்தராம். தினமும் சிவபெருமானிடம் வைக்கும் முறையீடு இதுதான். மூன்று மகன்கள் இருக்கிறார்கள்; ஆனால் யாரும் வந்து பார்ப்பதில்லை. மருமகள்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அன்றைய நாள் அதிகாலையிலேயே எழுந்தார். தலைக்குக் குளித்தார். நல்ல ஆடைகளை உடுத்திக் கொண்டார். பூஜைக்காக நெற்றியில் விபூதி அணிந்து கொண்டார். கைகளைக் கூப்பிக் கும்பிடுவதற்குள் அவருடைய உயிர் பிரிந்தது. பெற்ற பிள்ளைகளைப் போலக் கல்நெஞ்சக்காரன் அல்ல இறைவன். அன்று திங்கட்கிழமை, அதுவும் கார்த்திகை மாதம்.

இருந்தாலும், முதியோர் இல்லத்தில் இருப்பதில் ஒரு நன்மை இருக்கிறது. நாம் இறக்கும் போது நம்மைச் சுற்றிலும் நான்கு பேர் கண்டிப்பாக இருப்பார்கள். இன்னார் அறையில் இருந்தவர் இறந்துவிட்டார் என்று தெரிந்தால், அனைவரும் அந்தப் பூத உடலின் அருகே வந்து அஞ்சலி செலுத்துவார்கள். வருத்தப்படுவார்கள். தாங்களே உறவினர்களாக மாறி அழுவார்கள். ஆனால், அன்றைய நாள் முழுவதும் ஒருவிதத்தில் பாரமாகவே இருக்கும். அடுத்துத் தங்களுடைய முறைதானோ என்ற கவலை தொற்றிக் கொள்ளும். மரணத்தைக் கண்டு பயமில்லை… ஆனால், அந்த நேரத்தில் பிள்ளைகள் எங்கே இருப்பார்களோ? அவர்கள் அப்போதாவது வருவார்களா மாட்டார்களா என்ற பயம்தான்.

நாற்காலிகள்… நாற்காலிகள்… நாற்காலிகள்….

எங்கும் நிறைந்திருக்கும் இந்த நாற்காலிகள் கேட்ட கதைகளின் பாரத்தை, இந்த பூமியால் இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் தாங்க முடியும் என்று தெரியவில்லை.

அது வெடித்து சிதறுவதற்குள் இந்த நாற்காலி காலி செய்யப்பட வேண்டும். அம்மா தன் சொந்த வீட்டிற்குச் சென்று சேர வேண்டும்.

இல்லையென்றால், நாளை இந்த நாற்காலி நமக்காகக் காத்துக் கொண்டிருக்கும்… வட்டியோடு சேர்த்து… கண்டிப்பாக நமக்காகத்தான்!

***

*புகைப்படம்: ஹைதராபாத், மெட்ச்சலில் (Medchal) உள்ள ஒரு முதியோர் இல்லம்.

மொழியாக்கம்: அவினேனி பாஸ்கர்

கதை மூலம்:

https://www.facebook.com/mohammed.khadeerbabu/posts/pfbid035uwwqqPV91EUSFTDQxbkJWjM4g8iFZznmTkHUUXERzZuUdBChAxVuvQUPqoe2QJGl?__cft__[0]=AZZr89WNhp7AljD6uOUGMxC3pfrNS1dapiRpF0DP1e8OHCc688R0O4VGhdF2zQisc896j3Js6oNbhYBG_C5Xgv-AznsL-FMIyF9ZgTR1LCRSipESHYZVy_pInMO2UFc7pt7UuXh0mlSpfKoJL0pHzBN1AHfLFXsYlKyMq6fj5EMeJxD40NqFaQbXY7tZWmbACOA&__tn__=%2CO%2CP-R

ஆசிரியர் குறித்து:

முகமது கதீர் பாபு (பிறப்பு: ஏப்ரல் 28, 1972) புகழ்பெற்ற தெலுங்கு எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், திரைப்பட எழுத்தாளர். ஆந்திரப் பிரதேசம், நெல்லூர் மாவட்ட வட்டார வழக்கு மொழியை தன் கதைகளில் கையாள்வதிலும், முஸ்லிம் சமூகத்தின் பண்பாடு, வாழ்வியல், பால்யகால நினைவுகளை நகைச்சுவையும் எதார்த்தமும் கலந்து எழுதுவதிலும் இவர் மிகவும் பிரசித்தி பெற்றவர். தற்போது ஹைதராபாத்தில் உள்ள ‘சாக்ஷி’ நாளிதழில் சிறப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இளமைக் காலமும் கல்வியும்:

ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்திலுள்ள காவலி என்னும் ஊரில் ஒரு நடுத்தர வர்க்க முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். அங்குள்ள ஜவஹர் பாரதி கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். 1995-ஆம் ஆண்டு ‘ஆந்திரஜோதி’ வார இதழில் வெளியான ‘புஷ்பகுச்சம்’ (Pushpagucham) இவருடைய முதல் கதையாகும்.

முக்கிய படைப்புகள் :

இவருடைய கதைகள் எதார்த்தமான வாழ்வியலையும் பிராந்திய மொழியின் அழகையும் பிரதிபலிப்பவை. அவற்றுள் சில முக்கிய தொகுப்புகள்:

தர்காமிட்டா கதலு (Dhargamitta Kathalu) & போலேரம்மபண்டா கதலு (Polerammabanda Kathalu) – இவருடைய சிறுவயது அனுபவங்களை நெல்லூர் வட்டார வழக்கில் விவரிக்கும் இவ்விரண்டுக் கதைத்தொகுப்புகள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

மெட்ரோ கதலு (Metro Kathalu): நவீன நகரமயமாக்கல், தனிமை வாழ்வின் உளவியல் சிக்கல்கள், குறிப்பாகப் பெண்களின் வாழ்வியலை மையமாகக் கொண்ட கதைகள்.

நியூ பாம்பே டெய்லர்ஸ், புப்புஜான் கதலு, பியாண்ட் காபி போன்ற பல புகழ்பெற்ற கதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.

இவருடைய கதைகள் ஆங்கிலம், இந்தி, உருது ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (ஆங்கிலத்தில்: That’s a Fire Ant Right There).

திரைத்துறை மற்றும் ஓடிடி (OTT) பங்களிப்பு:

திரைப்படத் துறையிலும் கதை/வசன எழுத்தாளராகப் பணியாற்றியுள்ளார்.

திரைப்படங்கள்: ஓனமாலு (Onamalu – 2012), பிரம்மோற்சவம் (2016), மனமந்தா (2016) ஆகிய திரைப்படங்களில் இவர் பங்காற்றியுள்ளார்.

ஓடிடி (OTT): இவருடைய ‘மெட்ரோ கதலு’ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு ‘ஆஹா’ (Aha) ஓடிடி தளத்தில் ‘மெட்ரோ ஸ்டோரிஸ்’ (Metro Stories) என்ற தெலுங்கின் முதல் வெப் ஆந்தாலஜி (Web Anthology) தொடர் வெளியானது.

விருதுகளும் கௌரவங்களும்:

சர்வதேச ஃபெலோஷிப்: இவருடைய ‘நியூ பாம்பே டெய்லர்ஸ்’ புத்தகத்திற்காக, பிரிட்டனின் எடின்பரோ பல்கலைக்கழகத்தின் மதிப்புமிக்க ‘சார்லஸ் வாலஸ் ஃபெலோஷிப்’ (Charles Wallace Fellowship) இவருக்குக் கிடைத்தது. இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் தென்னிந்திய எழுத்தாளர் இவராவார்.

டெல்லியின் புகழ்பெற்ற ‘கதா விருது’ (Katha Award) – இரண்டு முறை (1998 மற்றும் 2000 ஆண்டுகளில்) பெற்றுள்ளார்.

இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம், மைசூர் வழங்கிய ‘பாஷா சம்மான் விருது’ (2004).

ராவிசாஸ்திரி விருது (2005), சாஸோ விருது (2006), மதுராந்தகம் ராஜாராம் ‘கதாகோகிலா’ விருது (2012) உள்ளிட்ட பல இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

தெலுங்குச் சிறுகதை உலகில் முஸ்லிம் வாழ்வியலையும், நெல்லூர் மண்ணின் மணத்தையும் மிக அழகாகப் பதிவு செய்தவர்களில் முகமது கதீர் பாபு மிக முக்கியமான ஆளுமையாவார்.

Series Navigationவிற்கப்பட்ட நவீனமயம்தேவையான தனிமை