—வளவ. துரையன்
”என்னாடா இப்படி செஞ்சிருக்க?” என்று கேட்டார் வரதராசு.
“ஏம்ப்பா” என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்து உட்கார்ந்தான் முருகசாமி.
அதற்குள் அழைப்பு மணி ஒலித்தது. ”கொஞ்சம் இருங்கப்பா” என்று சொல்லிவிட்டு வாசற்கதவைத் திறக்கச் சென்றான் அவன். கதவைத் திறந்துவிட்டு அதற்கு வெளியில் இருந்த கிரில் கதவையும் திறந்தான். அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் பாதுகாப்பு கருதி இதுபோல இரண்டு கதவுகள் வைப்பது வழக்கமாகி விட்டது.
வாசலில் நின்றவர், ”சார், கேபிள் கனெக்ஷன் கேட்டீங்களாமே”
“சரிப்பா உள்ள வா”
”இங்கல்லாம் கேபிளுக்கு எவ்ளோ வாங்கறீங்க” என்று கேட்டான் சாமி.
“இருநூத்தம்பதுங்க”
”ரொம்ப அதிகமாயிருக்கப்பா”
”சார், இந்தக் குடியிருப்பு எல்லாத்துக்குமே நாங்கதான் போட்டிருக்கோம்; நீங்க வேணா விசாரிச்சுப் பாருங்க”
”என்னா சேனல்லாம் குடுக்கறீங்கப்பா?”
“தமிழ்ல எல்லாச் சேனலும் குடுக்கறோம்; பக்தி சேனல் அப்பறம் ஸ்போர்ட்ஸ் எல்லாச் சேனலும் குடுக்கறோம்”
“சரி, போயி வேலையைப் பாரு; டிவி அதோ இருக்கு” என்று காட்டினான் சாமி”
“ஏண்டா டிஷ் எடுத்துக்கிட்டு வரலியா” என்று கேட்டார் வரதராசு.
”வாடகை வீட்டுக்குதாம்பா வந்திருக்கோம்: அதாலதான் எடுத்துக்கிட்டு வரல; அப்பறம் எங்கயாவது வீடு மாறணும்னா கழற்றணும்ல”
வரதராசு ஒன்றும் பேசாமல் உள்ளே பார்த்தார். அவர் மனைவி சாரதா கட்டிலில் படுத்துக்கொண்டு இருந்தாள். ”எல்லாம் அவளால் வந்ததுதான். அதுசரி, இப்படியெல்லாம் வரும்னு யார் நெனச்சாங்க?” என்று நினைத்தார் அவர்.
கடலூரை விட்டு வரவே அவருக்கு மனமே இல்லை. அதுவும் அவர் இருந்த இடம் புறநகர்ப்பகுதியாகும். அந்தப் பாதிரிக்குப்பத்தில் நகரச் சந்தடிகளே கிடையாது. அமைதியான இடம். சுற்றிலும் வயல்கள், அருகிலேயே பால் காய்கள் வாங்க வசதியாக இருந்தது. நகரப்பகுதியும் ஒரு கிலோமீட்டரில்தான் இருந்தது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல பாதிரிக்குப்பத்தில் கிட்டத்தட்ட எல்லாருமே அவருக்குத் தெரிந்தவர்கள்தாம்.
அங்கிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த கிருஷ்ணாபுரம் என்னும் கிராமத்திற்கு வரதராசுவும் சாரதாவும் வேலைக்கு இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்கள். இருவருக்கும் ஒரே பள்ளியில் பணி இருந்தது வசதியாக இருந்தது. காலையில் எட்டரைக்குக் கிளம்பினால் மாலையில் ஐந்து மணிக்கெல்லாம் வந்துவிடுவார்கள்.
நகரப்பேருந்து வசதியில்லாத கிராமம் அது. சாலையும் அப்போது ஒரே மேடுபள்ளம்தான். ஏழெட்டு முறை வண்டியிலிருந்து விழுந்து லேசான அடியும் பட்டிருக்கிறது. பணிக்காலத்தின் கடைசி ஆறு ஆண்டுகள்தாம் அவர்கள் கடலூரிலிருந்து போய்வரத் தொடங்கினர். வரதராசுவின் நெருங்கிய நண்பர் அவனுடன் ஆசிரியர் பயிற்சியில் ஒன்றாகப் படித்தவர்; அவர்தான் கடலூரில் மனை வாங்கி வீடு கட்டிக்கொடுத்தார்.
பணம் கொடுத்ததுதான் வரதராசுக்குத் தெரியும் மற்றபடி நண்பரே எல்லாவற்றுக்கும் முன்னிருந்து கட்டிக்கொடுத்தார். இப்பொழுது நினைத்தால் கூட வரதராசுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. பார்த்துப் பார்த்துக் கட்டிய அந்த வீட்டை விற்க அவர் நண்பருக்கே விருப்பமில்லை. வரதராசுவும் கடலுரை விட்டுக் கிளம்ப திடீர் முடிவுதான் எடுத்தார். ஓய்வு பெற்றபின்னரும் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் அங்கேதான் இருந்தார்.
காலையில் ஆறு மணிக்கு எழுந்திருப்பார். வீட்டிலிருந்து ஐம்பது மீட்டர் அருகிலிருக்கும் பெட்டிக்கடைக்குப் போய் பால் வாங்கி வருவார். காப்பி குடித்தபின் சற்று நேரம் தினமணி படிப்பார். வாசல் போர்டிகோவில் உட்கார்ந்து தினமணி படிக்கும்போதே பேச இரண்டு மூன்று பேர் வந்து விடுவார்கள். பேசி முடித்து அதன்பின் குளியல்; கேழ்வரகுக் கஞ்சி முடித்தல்; பின் நூலகத்திற்கோ அல்லது ஏதேனும் வாங்க வேண்டி இருந்தால் கடைவீதிக்கோ செல்வார். இதுதான் பணி ஓய்வுக்குப்பின் அவரின் காலை அட்டவணை.
நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒரு நாள் காலை. வரதராசு செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தார். சுற்றுச் சுவர்க் கதவைத் திறந்துகொண்டு யாரோ வருவது தெரிந்தது. வந்தவர் இரண்டு வீடு தள்ளிக் குடியிருக்கும் சிவராமன்.
வந்தவர் உடனே, “என்னா வீட்டை விக்கறீங்களாமே?” என்று கேட்டார். இவருக்கு யார் சொல்லி இருப்பார்கள் என வரதராசு நினைத்தார். கேட்கவும் கேட்டார்.
“ஆமாங்க; ஒங்களுக்கு யாரு சொன்னது?”
“யாரு சொன்னதா? பாதிரிக்குப்பம் பூரா தெரிஞ்சிருக்கு; ரெண்டு மூணு பேரு வந்துப் பாத்தாங்களாமே; புரோக்கர் டைலர் பூராசாமிதான் சொன்னான்.
“ஆமா, விக்கப்போறது உண்மைதான். முடியட்டுமே அப்பறம் சொல்லலாம்னு இருந்தேன்”
”உண்மைதாங்க; மொதல்லயே தெரிஞ்சா யாராவது கலைச்சுக் கொடுத்துடுவாங்க”
”யாரு மூலமா; கட்டிக்குடுத்தாரே, ஒங்க நண்பரு அவர் மூலமாத்தானா?”
“சரியாக் கேக்கறீங்களே! எப்படி?”
“ஒங்களுக்கு இந்த வெவரம்லாம் தெரியாதுன்னு தெருவுக்கே தெரியுமே! மேடையில வேணா பேசுவீங்க” என்று சிரித்தார் சிவராமன்.
கால் முட்டிவலி அதிகமாகிவிட்டதால் கடந்த மாதம் சாரதாவை அழைத்துக் கொண்டு எலும்பு மருத்துவரிடம் போக நேர்ந்தது. மனைவியைப் படுக்க வைத்து முட்டியின் மீது தட்டித் தட்டிப் பார்த்தார் மருத்துவர். பின்னர் உயரமான பெஞ்சின் மீது குப்புறப் படுக்க வைத்தார்.
“வலிச்சா சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு இடுப்பின் இரு புறங்களிலும் கைவைத்து லேசாக அழுத்தினார்.
”சார், வலிக்குது” என்று மனைவி கத்தினார்.
“சரி, கீழே இறங்குங்க” என்று கூறி விட்டு ஒரு தாளை எடுத்து ஏதோ எழுதி அவனிடம் கொடுத்தார். “போயி ஒரு எக்ஸ்ரே எடுத்துக்கிட்டு வந்திடுங்க” என்றார். அந்த மருத்துவமனையிலேயே எக்ஸ்ரே வசதி இருந்தது சௌகரியமாய் இருந்தது.
எக்ஸ்ரே முடிவு வரும்முன் வரதராசுவும் சாரதாவும் வெளியே உட்கார்ந்திருந்தனர். எலும்பு மருத்துவரிடம் அவ்வளவு கூட்டமில்லை. இதய நோய் மருத்துவரிடமும் சர்க்கரை நோய் மருத்துவரிடமும்தான் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. ”இந்த இரண்டு நோய்களும்தாம் இப்பொழுது மனிதரைப் பாடாய்ப் படுத்துகின்றன” என நினைத்துக் கொண்டான் அவன். அரை மணிநேரம் ஆகி இருக்கும் எக்ஸ்ரே எடுத்தவர் வந்தார். உள்ளே போய் மருத்துவரைப் பார்த்தார். வெளியே வந்த அவர் ”ஐயா, ஒங்களை வரச் சொல்றாரு” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
உள்ளே மருத்துவர் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். இவர்களைப் பார்த்ததும் “வாங்க, ஒக்காருங்க, ஒங்களுக்கு இப்ப முட்டிவலி பிரச்சனையில்ல, இடுப்புலதான் சிக்கல்” என்றார்.
உடனே வரதராசு “இல்லீங்க; கால் முட்டிவலிதான இவங்களுக்கு?” என்றார்.
”இதோ பாருங்க” என்று எக்ஸ்ரேவைக் காட்டினார். மேலும் அவர் சொன்னார். “இதுதான் பிரச்சனைக்குக் காரணம். தண்டுவடத்துல கடைசியில லேசா ரெண்டு எலும்புங்க நகர்ந்திருக்கு. அதால இடுப்பு வலி வந்து அதுதான் முட்டியையும் பாதிக்குது’.
அவர் காட்டிய இடத்தில் இரு எலும்புகளுக்கும் லேசாக இடைவெளி இருப்பது தெரிந்தது. சாரதாவின் முகத்தில் கவலைக் கோடுகள் தெரிந்தன. வரதராசுவும் ”என்னாங்க செய்யலாம்” என்றார்.
”நீங்க எங்க இருக்கீங்க?”
”இங்கதாங்க பாதிரிக்குப்பத்துலதான்” என்று சொன்னவர் தொடர்ந்து ”சென்னைக்குப் போயிடலாம்னு பாக்கறோம்”
”அதான் சொல்ல வந்தேன். இனிமே நீங்க தனியா ரெண்டு பேரும் இருக்க வேண்டாம். இவங்க இனிமே ரொம்ப குனியக்கூடாது. கட்டில்லதான் படுக்கணும். பட்டுனு எழுந்திருக்கக் கூடாது. கனமானதெல்லாம் தூக்கக் கூடாது. நான் சொல்றபடி இருப்பீங்களா”ன்னு கேட்டார்.
”சொல்லுங்க” என்றார் வரதராசு.
“ஒரு பத்து நாளைக்குப் படுக்கையிலேயே மல்லாந்து படுத்துக்கிட்டு இருக்கணும். காலை வேலையெல்லாம் முடிச்சிக்கிட்டு வந்து படுத்திடணும். அதிகமா ஒக்காரக் கூடாது”
“சரிங்க அப்படியே இருக்கறேன்” என்றார் சாரதா.
”நீங்க சென்னையில போயி இப்பக் காட்டினா ஒடனே ஆப்பரேஷந்தான். இடுப்பு எலும்புல செய்யணும்னு சொல்வாங்க; நான் சொல்றபடி இருந்தீங்கன்னா கொஞ்சம் சரியாயிடும். கொஞ்சம் பலமாவே மாத்திரை எழுதித்தரேன். இருபது நாளைக்கு எடுத்துக்குங்க”
வெளியே வந்த இருவருக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. முப்பதாண்டுகளாக இருசக்கரவாகனத்தில் உட்கார்ந்துகொண்டு போனதுதானோ? வயதானதுதான் காரணமோ என்றெல்லாம் நினைத்துப் பார்த்தார் முருகசாமி.
வீட்டிற்குப் போனதும், “ஏங்க புதுக்கோட்டைக்குப் பேசி வெவரம் சொல்லுங்க. அத்தோடு ஒரு இருபது நாளைக்குப் பொண்ணை வரச்சொல்லுங்க” என்றாள் சாரதா.
பெண் மறுநாளே புறப்பட்டு வந்துவிட்டாள். இருபது நாள்களும் போனதே தெரியவில்லை. மறுபடியும் மருத்துவரிடம் போய்க் காட்டியதும், அதேபோல அழுத்திப் பார்த்தார். ”வலிக்கிறதா” என்று கேட்டார். ”இல்லை” என்று சொன்னதும், “பரவாயில்ல; நான் சொன்னமாதிரி இருந்துட்டீங்க. இந்த மாத்திரையை இன்னும் ஒரு மாசத்துக்குப் போட்டுக்குங்க; சென்னைக்குப் போயி எப்ப வருவீங்க?” என்ரு கேட்டார் அவர்.
”ஒரு பத்து நாளு இருக்கலாம்னு பாக்கறோம்” என்றார் சாரதா.
“அதுக்கப்பறம் இங்க வந்து தனியா இருக்கப் போறீங்களா? ஏம்மா நான் சொன்னது ஒங்களுக்குப் புரியலியா? அதுக்கப்பறமும் நீங்க தனியா வேலை செய்யறது, குனியறது இதெல்லாம் கூடாது” என்றார் அவர் கண்டிப்பான குரலில்.
வீட்டுக்கு வந்ததும் இரவு முழுதும் யோசனை செய்துதான் வீட்டை விற்றுவிடுவது என்று முடிவு செய்தோம். ”சென்னை சென்றுவிட்டால் பூட்டி வைக்கும் இந்த வீடு வீணாகப் போயிடும்; நமக்குப் பிறகு பிள்ளைகளுக்கு வீட்டை இங்கு வந்து விற்கவும் தெரியாது. வாடகைக்கு விடலாம் என்று பார்த்தாலும் நல்லவர்கள் கிடைக்க வேண்டும். வாடகை ஒழுங்காக வரவேண்டும். காலி செய்யச் சொன்னால் காலிசெய்யக்கூடியவர் கிடைக்க வேண்டும்” என்றெல்லாம் கலந்து பேசினார்கள்.
மறுநாள் நண்பரிடம் சொல்ல இருபது நாள்களுக்குள் வீடும் விற்றுவிட முழுப்பணமும் கைக்கு வந்துவிட்டது. அதுவே தெருவில் எல்லாருக்கும் ஆச்சரியம்; சீக்கிரம் முடிந்துவிட்டதே என்று நினைத்தார்கள். மகனிடமும் பேசி எல்லாம் சொல்லி விட அவனும் நல்ல முடிவென்றே சொன்னான்.
சின்னதாக ஒரு லாரி பேசிக் கொடுத்தார் ஒரு நண்பர். அதிகம் சாமான்கள் என்று ஏதும் இல்லை. இரு சக்கரவாகனம், ஒரு பீரோ, கட்டில், அன்றாடம் புழங்கும் சாமான்கள் அவ்வளவுதான்.
நல்ல நாள் பார்த்துக் கடலூர் விட்டுக் கிளம்பியாயிற்று. வழியெல்லாம் பார்த்துக் கொண்டு வரும்போது வரதராசுவுக்கு மனம் வலிக்கத்தான் செய்தது. இருந்தாலும் கால மாற்றத்தை ஏற்கத்தான் வேண்டும் அன்றோ? என்று எண்ணினார். முன்பக்கம் உட்கார்ந்து மகன் வழி காட்ட லாரி சென்றது. அப்போதே இது சரியான வழி இல்லையே என்றுதான் வரதராசு நினைத்தார். எல்லார் எதிரிலும் ஒன்றும் கேட்கக் கூடாதென்று சும்மா இருந்து விட்டார்.
இறங்கும்போது மகனிடம் கேட்டார். “ஏம்பா இது எந்த இடம்?”
“நம்ப வீட்லேந்து ரெண்டு தெரு தள்ளி இருக்குப்பா, நடந்து போனா பத்து நிமிஷம்தான்” என்று சொன்னான் அவன்.
அந்த இடம் நகரத்திலிருந்து கோபித்துக் கொண்டது போல சற்றுத் தள்ளி இருந்தது. ஆனால் நகர வாசனை இருந்தது. பால் காய்கறி விற்கும் எல்லாக்கடைகளும் அருகிலேயே இருந்ததை வரும்போதே பார்த்தார் அவர்.
சாமான்களை எல்லாம் இறக்கி ஓரளவுக்கு சரி செய்து வைத்தாகி விட்டது. அப்போதுதான் வரதராசு முருகசாமியிடம் கேட்டார். “என்னாடா இப்படி செஞ்சிருக்க?”
“ஏம்பா; என்னா கேக்கறீங்க?”
“இப்படித் தனியா வீடு பார்த்திருக்கறதைத்தான் சொல்றேன்”
“இதுல என்னாப்பா? நாங்க இருக்கற வீடு அடுத்தத் தெருவுல இருக்கு; நடந்து போனா பத்து நிமிஷம்தான்”
“அதான் ஏன்னு கேக்கறேன்? இப்படித் தனியா இருக்கணுமா?”
“அப்பா; ஏன் தனின்னு நெனச்சுக்கறீங்க; தெனம் ரெண்டு வேளையும் நானாவது ஒங்க மருமகளாவது இல்லன்னா பேரன் பேத்தி யாராவது வந்து பாத்துட்டுப் போறோம்”
“இல்லடா; சொந்த வீடு இருக்கச்சே தனி வீடு ஏன்னு கேக்கறேன்?”
“தனி வீடுன்னா செலவு அதிகமாகும்னு நெனக்கறீங்களாப்பா?”
“இல்லடா; நான் செலவுக்குன்னு சொல்லல; பென்ஷன் போதும்ற அளவுக்கு வருது.”
”அப்பறம் என்னாப்பா?”
“வயசான காலத்துல புள்ள மருமவ பேரன் பேத்திங்களோட இருக்கலாம்னு வந்தேன்: நீ எங்கிட்ட இதமாதிரின்னு சொல்லவே இல்லியே?” என்று குறை சொல்வது போலக் கேட்டார் வரதராசு.
முருகசாமிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அப்பா இந்த அளவுக்கு மனம் வருந்துவார் என அவன் நினைக்கவில்லை. அவன் வேறொரு கோணத்தில் நினைத்துப் பார்த்துத்தான் மனைவியுடன் கலந்து இந்த முடிவை எடுத்திருந்தான். முடிவின் காரணங்களையும் சொல்லிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தான்.
“என்னாடா யோசிக்கறே” என்றார் அப்பா.
”அப்பா; நான் சொல்றதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க; அம்மா, நீயும் கேளு” என்றான் அவன்.
“கொஞ்சம் ஒரக்க சொல்லு” என்று சொல்லிக் கொண்டே அவன் அம்மாவும் உள்ளிருந்து கூடத்திற்கு வந்து உட்கார்ந்தார்.
“நானும் ஒன் மருமவளும் ஏன் இன்னும் சொல்லணும்னா பேரன் பேத்தியும் சேர்ந்துதான் இந்த முடிவுக்கு வந்தோம். அதுவும் வீடு கிட்டக்கேயே கெடச்சிட்டுது; சென்னையில எல்லாருக்கும் நேரம்தாம்பா முக்கியம்; அதுவும் காலைல யாராவது விருந்தாளிங்க வீட்டுக்கு வந்தா அவங்கள ஒக்காரச் சொல்லக்கூட நேரம் இருக்காது. காப்பி குடிக்கிறீங்களான்னுதான் கேக்க முடியும்; கொடுக்க முடியாது. நானும் ஒன் பேரன் பேத்தியும் காலைல எட்டு மணிக்கிக் கண்டிப்பா கெளம்பணும். எங்களுக்கு டிபன் போட்டுட்டு மதியத்திற்கு டப்பா கட்டறதுக்குள்ள இவங்க அம்மாவுக்கு நேரம் ஓடியே போயிடும்”
“சரி; அதுக்கும் இதுக்கும் என்னா சம்பந்தம்?” என்றார் அப்பா.
“எனக்கு ஓரளவுப் புரியுது; நீசொல்லுடா” என்ரார் அம்மா.
“அம்மாவுக்குக் காலைல ஆறுமணியிலேந்து எட்டுமணி வரையிலும் பக்தி சேனல்ல வர எல்லாத்தையும் பாத்தாகணும்; அதேபோல சாயந்திரம் அஞ்சரையிலேந்து ஏழு மணிவரைக்கும் கேட்டாகணும்; அந்த நேரங்கள்தாம் வீட்ல புள்ளைங்க படிக்கற நேரம்; டிபன் செய்யற நேரம்; அப்ப போயி டிவி வைக்காதேன்னு நாம சொல்லக்கூடாதுன்னு இவதான் சொன்னா என்று மனைவியைக் காட்டினான்.
“இதுதான் காரணமா?”
“இல்லப்பா; கிட்டத்தட்ட முப்பது வருஷமா தனியாவே இருந்திட்டீங்க: இப்பவும் அதேபோல இருந்தீங்கன்னா ஒங்களுக்கு வேண்டியதை நீங்க செஞ்சு சாப்பிட்டுக் கொள்ளலாம். எங்கக்கிட்ட கேட்டா செய்ய மாட்டோம்னு சொல்லல; கேக்க வேணாம்ல; நீங்க செய்யறதை எங்களுக்கும் கொடுக்கத்தான போறீங்க”
“ஆமாண்டா; இப்ப என்னாலயும் ஓரளவுக்கு வாலை செய்ய முடியுது; முடியற மட்டும் இப்படி இருப்போம்” என்று கூறி முடித்தார் அம்மா.
”இந்தக் காலத்துப் பிள்ளைங்க நம்மைவிட நன்றாகவே யோசிக்கறாங்க” என்று நினைத்தார் வரதராசு.