This entry is part 5 of 7 in the series 6 செப்டம்பர் 2026

இன்னும் எத்தனை இடத்துல இவனைத் தேடுவது? ஒண்ணு இல்ல மூணு நாலு டாஸ்மாக்ல தேடியாச்சு; ஆனா, அவனை எதிலையும் காணோமே என்றான் மணி. செங்கல்பட்டுல இருக்கிற டாஸ்மாக்ல எல்லாதையும் தேடியாச்சு. இதுதான் கடைசி, இங்காவது இருக்கானான்னு பார்ப்போம் என்றான் மணி குருவிடம்.

“சரிடா மணி, வண்டிய நேரா அங்கே விடு; அங்கயும் ஒரு பார்வை பார்த்துடலாம்” என்றான் குரு.

“டேய் குரு, இந்த பாரு, இதுதான்டா இங்கே இருக்கிற கடைசி டாஸ்மாக். இறங்கு, சிவா இருக்கானான்னு பாரு. அதுக்குள்ள நான் வண்டிய ஓரங்கட்டிட்டு வர்றேன்.”

அப்பப்பா, எவ்வளவு வண்டி, சைக்கிள் எல்லாம் கண்ட இடத்தில நிறுத்திட்டுப் போயிருக்கானுங்க! எப்படித்தான் இந்தக் கருமத்தைக் குடிக்கிறானுங்களோ தெரியல. உள்ள நுழையிறப்பவே கப்புன்னு வாடை தூக்குதே! இந்தக் குறுகலான சந்துல நடந்து போயித்தான் உள்ளே குடிக்கப் போகணும். கும்முனு இருட்டு, சிவப்பு கலர் 5 வாட்ஸ் பல்பு இங்கொன்னும் அங்கொன்னுமா தொங்க விடப்பட்டிருந்தது அந்தச் சந்தில்.

நடக்கும் நடைபாதையில வாந்தி எடுத்து வச்சிருக்கானுங்க, பார்த்துத்தான் போகணும், இல்லேனா வாந்தியிலேயே கால் வைக்க வேண்டியதுதான். இரு பக்கச் சுவத்துல, காலி பாட்டிலோடு ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரைப் பாட்டிலில் இருந்து எடுத்து இருபுறம் இருக்கும் சுவரில் ஒட்டுவது வழக்கம். அந்த இருட்டுல சிவப்புப் பல்பு வெளிச்சத்துல மினு மினுன்னு மின்னும் அந்த ஸ்டிக்கர்கள்.

சந்து கடந்து உள்ளே நுழைந்தான் குரு. 30 அடிக்கு 30 அடி சதுர வடிவத்தில் இருந்த காலியான இடத்துல வட்ட வடிவில் மேஜை மற்றும் அதைச் சுற்றி மூணு நாலு நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு மேஜை மேல மஞ்சள் நிற குண்டு பல்பு தொங்க விடப்பட்டிருந்தது.

ஒவ்வொரு மேஜையிலும் சுமார் நாலு அல்லது ஐந்து பியர் பாட்டில்கள் மற்றும் சரக்கு பாட்டில்கள் குவார்ட்டர் அல்லது அரை ஓல்டு மாங்கு, இல்லேனா சிக்னேச்சருன்னு இருந்துச்சு.

போடப்பட்டிருந்த மேஜை அனைத்தும் நிரம்பி வழிந்தது. மேஜையில் இடம் இல்லையின்னு சுவரோரம் வேற ஆங்காங்கே நின்னுகிட்டே குடிக்கும் ஆசாமிகள் தண்ணியைப் போட்டுக்கிட்டு இருந்தாங்க.

இந்த சிவா, ஏன் இப்படி குடிக்கிறானே தெரியல. குடிகாரனா ஆயிட்டானே, நல்லாத்தானே இருந்தான் என்ன மாதிரி… என்று குரு நினைக்கலானான்.

“டேய் மணி, வாடா! இதோ சிவா இங்கே இருக்கிறானு பாரு, டேய் சீக்கிரம் வாடா” என்றான் குரு.

“வரேன்டா, எங்கே அவன்?”

“இதோ பாரு, ஃபுல் மப்புல இருக்கான், கண்ணு மூஞ்சியெல்லாம் வீங்கிப்போயி இருக்கு.”

“டேய் சிவா, என்னடா இது? ஏன்டா இவ்வளவு கண்ணுமண்ணு தெரியாம குடிச்சிருக்க? இது உனக்கே அடுக்குமா? ஏன்டா, உன் பொண்டாட்டி என்னடான்னா ஓவுன்னு ஒப்பாரி வைக்கிறா எங்ககிட்ட; ‘அண்ணே, நீங்க கொஞ்சம் போய் எங்கன்னு பார்த்துச் சித்த இழுத்துட்டு வாங்கண்ணே’ன்னு. தினம் இதே ரோதனையாப் போச்சு!”

“யாரு, குருவா? வா, வாடா… வந்து என்னோட ஒரு பெக் போடு!”

“டேய்…”

“அட மணியும் வந்திருக்கிறானா? வாடா மாப்பிள்ளை, வந்து இப்படி உட்காரு. ஒரு பெக் போடு. நான்தான் கம்பெனி இல்லாமல் மூணு மணி நேரமா குடிச்சுட்டு இருக்கேன்.”

“அதான் நீ குடிக்கிற லட்சணத்தைப் பார்த்தாலே தெரியுதே!” என்றான் குரு.

“ஏன்டா சிவா, உன் பொண்டாட்டி அங்கே ஓவுன்னு ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்கிறா; நீ என்னடான்னா ஒண்ணும் தெரியாம உம்பாட்டுக்குக் குடிச்சுக்கிட்டு இருக்க!”

“என்ன ஆயிப்போச்சுன்னு நீ இப்ப தலைகீழ் தெரியாம குடிச்சுட்டு இருக்கிற” என்றான் குரு.

“டேய் நீ ஏண்டா பேச மாட்ட? உனக்கு உன் பேச்சைக் கேட்கிற பொண்டாட்டி அமைஞ்சுட்டா, எனக்கு அப்படியா? சண்டை சச்சரவு எல்லாம் சகஜம்தான்டா. ஆனா இந்த சந்தேகம் இருக்குதே! வீட்டையே இரண்டாக்கிடுமுடா.

அப்படி என்னடா உன் பொண்டாட்டி உன்மேல சந்தேகப்படுறா? விவரத்தைச் சொல்லேன்” என்றான் மணி.

“ஏண்டா நான் வேலை செய்யுறதோ தொழில் பேட்டையில, மூணு ஷிப்ட் இருக்கும் சுழற்சி முறையில. முதல் ஷிப்ட் முடிஞ்சா ஓவர் டைம் பார்க்கச் சொல்லுவாங்க. சரின்னு நானும் பார்ப்பேன். அதுல வாங்குற சம்பளத்துக்கு ஓவர் டைம் செய்தா மட்டுமே குடும்பத்தை ஓட்ட முடியும். அவங்க பெரும்பாலும் மாசத்துல பத்து நாளு ஓவர் டைம் பார்க்கச் சொல்லுவாங்க.

நானும் சரின்னு பார்ப்பேன். நாலு மணிக்கு ஷிப்ட் முடியுதுன்னா ஓவர் டைம் சுமார் நாலு மணி நேரம், அதாவது எட்டு மணிக்குத்தான் முடியும். வீட்டுக்கு வரவே ஒன்பது பத்து ஆயிடும்.

வீட்டுக்கு வந்தா இவ பாட்டுக்கு வசவு பாட ஆரம்பிச்சுடுவா. ‘எங்க போயிட்டு வர்றீங்க மாப்பிள்ளை? குத்துக் கல்லு மாதிரி இங்க நான் ஒருத்தி இருக்கிறப்ப வேற எங்கு போயிட்டு வர்றீங்க?’ என்பாள். நானும் எவ்வளவோ முறை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். ஆனா அவ கேட்கிற மாதிரி இல்லை. சந்தேகம் என்கிற பேய் அவளது மனதைப் போட்டு ஆட்டுது.”

“எனக்கென்னமோ அவ இப்படியெல்லாம் நடந்துக்கிறதுக்கு அவ வளர்ந்த முறையேன்னுதான் நினைக்கத் தோணுதுடா!”

“என்னடா சொல்ற? ஒண்ணும் புரியலையே!”

“இல்லடா, அவ எப்பவாவது அவங்க வீட்டுப் பக்கத்துல குடித்தனம் இருந்த தம்பதியரைப் பத்திப் பேசிக்கிட்டே இருப்பா. ஒருவேளை இவளது மாற்றத்திற்குக் காரணம் இதுவாவே இருக்குமோ?”

“ஏண்டா மணி, குரு நீங்களே சொல்லுங்கடா! சும்மா சும்மா ஒருத்தி என்கிட்ட, ‘எங்காவது போயிட்டு வர்றியா?’ன்னு கேட்டுக்கிட்டே இருந்தா எப்படிடா?

ஒரு நாள் இல்ல, ஒரு நாள் போயித்தான் பார்ப்போம்னு தோணாது? இதுல வேற இவ கர்ப்பமா இருக்கா, அதுக்கோசரம் தான்டா நான் பொறுமையா இருக்கேன். என் புள்ளையோ பொண்ணோ பத்துப் மாசத்துல வந்து என் கையில் விழப் போகுது. இந்தத் தருணத்துல அவ மனசு தடுமாறக் கூடாதுன்னுதான், இந்தக் கஷ்டத்தைக் குடிச்சுப் போக்கிட்டு இருக்கேன்.

டேய், உங்களுக்குச் சொன்னா புரியாதுடா! நீங்க என் மனநிலையில இருந்தா மட்டும்தான்டா உங்களுக்குப் புரியவரும்.”

“சரி வாடா, போலாம்.”

“டேய் குரு, போயி மட்டும் என்ன ஆகப்போகுதுடா? இன்னும் அவ கத்தத்தான் போறா. சும்மா ஒரு லாஸ்ட் பெக் அடிச்சுட்டுப் போலாமுடா.”

“டேய் மணி, தொலைஞ்சு போவட்டும்டா, அவன் அதை அடிக்கலைன்னா சும்மா இருக்க மாட்டான்; பேசாம ஒரு லாஸ்ட் பெக் அடிக்கட்டும், பிறகு அவனை இங்கிருந்து கூட்டிக்கிட்டுப் போகலாமுடா.”

“சரி, குரு நீ சொல்றதும் சரிதான், அப்படி ஆகட்டும்” என்றான் மணி.

“அப்பா தம்பி, இங்க வாப்பா! இவரு என்ன கடைசியா குடிச்சுட்டு இருந்தாரு?”

“சார், அவரு ஓல்டு மாங்குல ஒரு கட்டிங்கு வாங்குனாரு.”

“அப்படின்னா, அதே மாதிரி ஒரு கட்டிங் கொண்டுவாப்பா, போதும்” என்றான் மணி.

“வாரப்ப சாப்பிட்டதற்கு மொத்தமாப் பில்லு போட்டு கொண்டுவாப்பா, நேரம் ஆச்சு” என்றான் குரு.

“சார், இந்தாங்க சாப்பிட்டதுக்கு பில்லு” என்றான் சப்ளையர்.

“கொடுப்பா. டேய் குரு, காசு இருக்காடா? எவ்வளவு? முந்நூறு கொடு, நான் பர்ஸை வீட்ல வச்சுட்டு வந்துட்டேன்” என்றான் மணி.

“இந்தா பிடி, முதல்ல செட்டில் பண்ணு. இங்கிருந்து வெளியே போனாத்தான் மூச்சு விடமுடியும் போல இருக்கு. இவனோட இன்னும் என்னென்னலாம் பார்க்கப் போறேனோ!” என்று புலம்பினான் குரு.

எப்படியோ ஒரு வழியா சிவாவை அவனது வீட்டில் இறக்கிவிட்டுட்டு அவர்கள் இருவரும் தங்கள் வீட்டிற்குச் சென்றனர். செல்லும் முன்னர் குருவும் மணியும் சிவாவின் மனைவியிடம்…

“அம்மாடி தங்கச்சி, இப்ப அவன்கிட்ட எதுவும் கேட்காத. எது ஆனாலும் விடிஞ்சதும் கேளு.”

“சரிங்கண்ணே” என்றாள் சிவாவின் மனைவி.

அடுத்த நாள் காலையில குளித்துவிட்டுப் பட்டையும் கழுத்துல ருத்ராட்சக் கொட்டையுடன் கம்பெனிக்குக் கிளம்ப ரெடியானான் சிவா.

அவனது மனைவி அவனிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை. அதுவே அவனுக்கு ஏனோ போல இருந்தது. டிபன் கேரியரை எடுத்துக்கிட்டு, வண்டியை எடுத்துக்கிட்டுக் கிளம்பி கம்பெனிக்கு வந்தவன் மனசு அங்கு இல்லை.

‘ஏன் அவள் எதையும் கேட்கவில்லை? வழக்கமா ஏதாவது கேட்டுச் சண்டையிடுவாளே! நேத்து அவ ஒண்ணும் கேட்கலையே, ஏதோ நெருடலா இருக்கே’ என்று கம்பெனியில் பர்மிஷன் சொல்லிட்டு வீட்டுக்குப் போய் பார்த்தப்பதான் தெரிந்தது, அவள் தன் கையை அறுத்துக்கிட்டு இரத்த வெள்ளத்தில் கிடக்கிறாள் என்று. பதறிப்போய் அவளைக் குண்டுகட்டாகத் தூக்கி ஆட்டோவில் போட்டுட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான் சிவா.

“ஏண்டி இப்படிச் செஞ்சுகிட்ட? நான் என்னடா உனக்குத் துரோகம் செஞ்சுட்டேன்? உன்னோட வீனாப்போன சந்தேகத்தாலத்தானே நான் குடிக்கவே ஆரம்பிச்சேன்?

உன்னைவிட்டா எனக்கு யாரு இருக்கா? சும்மா மனசைப் போட்டு குழப்பிக்காம இருந்தாலே பாதிப் பிரச்சனை போயிடும்.”

ஆஸ்பத்திரி வந்தவுடன் அவளை அலேக்காகத் தூக்கிக்கிட்டு அவசரப் பிரிவுக்குச் சென்றான் சிவா. டாக்டரிடம், “சார், என் பொண்டாட்டி அவ கையை அறுத்துக்கிட்டா, உடனே சிகிச்சை செய்யுங்க டாக்டர். மாசமா வேற இருக்கா, இந்த நேரத்துல போய் இப்படிச் செஞ்சுகிட்டா?” என்று அழுது புலம்பினான் சிவா.

“கொஞ்சம் பொறுப்பா, என்னன்னு பார்க்கிறோம்; நீ கொஞ்சம் வெளியில் இரு. பரிசோதிச்சுட்டுச் சொல்றோம்” என்றார் டாக்டர்.

சரின்னு வெளியே வந்து, மருத்துவமனை வெளியில் உள்ள கோயிலில் வீற்றிருக்கும் விநாயகனைச் சேவிக்கச் சென்றான் சிவா.

“அப்பனே, ஆனைமுகத்தோனே, எப்படியாவது என் பொண்டாட்டியைக் காப்பாற்றிக் கொடுத்துடுப்பா! அவளைச் சொல்லித் தப்பில்லை, அவ வளர்ந்த இடத்துல இந்த மாதிரி ஒரு தம்பதியரைப் பார்த்திருக்கக் கூடும்.

கல்யாணம் கட்டின புதிதுல அவள் பல முறை என்னிடம் அவர்களைப் பற்றிய கதைகளையெல்லாம் சொல்லியிருக்கிறா.

இதுவே அவளிடத்துல ஒரு புரிதலின்மையை கொடுக்கவில்லையோன்னு இப்ப எனக்குத் தோணுது. அப்பனே விநாயகனே, அவளை மட்டும் காப்பாற்றிக் கொடுப்பா! இனிமே நான் குடிக்கிறதையுமே விட்டுவிடுறேன். இது அவள் மீதும் பிறக்கப்போற எங்க குழந்தை மீதும் சத்தியம்” என்றான்.

-பாலமுருகன்.லோ

Series Navigationமழை புராணம் : 46நடுவில் மறைந்த பெயர்