பிரீத்தி சரவணன்
சில பெயர்கள்
கரும்பலகையில்
வெற்றியின் வெளிச்சமாய் எழுதப்பட்டன.
சில பெயர்கள்
ஆசிரியரின் குரலில்
கண்டிப்பாய் ஒலித்தன.
என் பெயர் மட்டும்—
வருகைப் பதிவேட்டில்
ஒருமுறை அழைக்கப்பட்டு,
பிறகு
மறக்கப்பட்ட பெயராக இருந்தது.
ஒளிர்ந்தவர்களுக்கும்
ஒளியைத் தேடியவர்களுக்கும் நடுவே
நிழலாய் அமர்ந்திருந்தேன் நான்.
என்னை யாரும்
தோல்வியென்று நினைக்கவில்லை—
வெற்றியென்றும் நினைக்கவில்லை.
அதனால் தான்
என்னைப் பற்றிய
எந்த எதிர்பார்ப்பும் எனக்கே இல்லை.
ஆனால்—
ஒரு நாள்
ஓர் ஆசிரியரின் முயற்சி
என் அமைதியின் மீது
ஒரு கேள்வியை எழுதிச் சென்றது—
“நீ முயற்சி செய்தால்?”
அந்தக் கேள்விக்கான பதிலை
அன்று நான் சொல்லவில்லை.
ஆண்டுகள் கடந்தும்
இன்றும்
என் வாழ்க்கை எழுதும் ஒவ்வொரு பக்கத்திலும்
அதற்குப் பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
ஏனெனில்—
சில பாடங்கள்
புத்தகங்கள் மூடப்பட்ட பிறகுதான்
உண்மையில் தொடங்குகின்றன.
– பிரீத்தி சரவணன்