வேங்கடேசன் நாராயணஸ்வாமி
(மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியருக்கு,
வணக்கம்.தங்களது பரிசீலனைக்காக “மனமெனுந் தோணி பற்றி – அரூப நகரின் பிங்களை” என்னும் நவீனத் தமிழ்க் கவிதையை இணைத்துள்ளேன்.
இக்கவிதை, ஸ்ரீமத் பாகவதம், பதினொன்றாம் ஸ்கந்தம், எட்டாம் அத்யாயம், 22–44 செய்யுட்களில் ஸ்ரீ வேத வியாசர் படைத்த பிங்களை கதையைத் தழுவியது. இது மூலக்கதையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு மட்டுமன்று; அதன் நிகழ்வரிசை, தத்துவ மையம், கவித்துவ முரண்கள் ஆகியவற்றுக்கு விசுவாசமாக இருந்து, அவற்றை நவீனத் தமிழ்மனத்தின் கேள்விகளுக்குள் மீண்டும் நிகழ்த்தும் முயற்சி.
விதேக நகரில் வாழும் பிங்களை எனும் வேசி, இரவுப்பொழுதில் தன் வாசலில் நின்று, செல்வமுடைய ஒருவர் வருவார் என்று எதிர்பார்க்கிறாள். பலர் வந்து கடந்து செல்கின்றனர். ஒவ்வொருவர் சென்ற பின்னரும், அடுத்தவர் மேலும் செல்வமுடையவராக இருப்பார் எனத் தன்னைத் தேற்றிக்கொள்கிறாள். காத்திருப்பு நீள்கிறது; உறக்கம் கலைகிறது; நள்ளிரவு வருகிறது. பொருளுக்கான ஆசை நிராசையாகி, நிராசை விரக்தியாகி, விரக்தி வைராக்கியமாக மலர்கிறது.
இந்த அகமாற்றத்தின் இறுதியில், பிங்களை தான் எதிர்பார்த்த ஆடவர்களை மட்டும் மறுபரிசீலனை செய்யவில்லை. எதிர்பார்க்கும் மனத்தையே ஆராயத் தொடங்குகிறாள். வெளியில் நிறைவைத் தேடிய அவள், உண்மையான நித்தியப் பிரியர் தன்னுள்ளே எப்போதும் இருந்ததை உணர்கிறாள். காதலருக்கான தாகத்தை அறுத்து, உபசமத்தில் நிலைத்து, இனிதே உறங்குகிறாள்.
இந்தக் கதையின் உச்சத்தை ஸ்ரீ வேத வியாசர் மிகச் சுருக்கமாக அமைக்கிறார்:
ஆசையே பெருந்துயரம்;
ஆசையறுதலே பேரின்பம்.என் கவிதையில் பிங்களை ஒரு தனிப்பட்ட பெண்ணாக மட்டும் வருவதில்லை. அவள் புலன்வாசலில் நின்று, ஒவ்வொரு பொருளிடமும் தன் நிறைவைக் கேட்கும் மனித மனத்தின் உருவகம். உடல் வீடாகிறது; புலன்கள் அதன் வாயில்களாகின்றன; உருவற்ற மனம் மூச்சுருவம் பூண்டு வெளியில் காத்திருக்கிறது. வெளியில் வரும் ஒவ்வொரு பொருளையும், உறவையும், வெற்றியையும், அங்கீகாரத்தையும்—
“இதுவே என்னை நிறைவாக்கும்”
என்று எண்ணுவது பிங்களையின் காத்திருப்பே.
கற்பு குறித்த அகக்கேள்வி
இந்தக் கவிதையின் முக்கியமான இலக்கிய–தத்துவ அடுக்கு கற்பு பற்றியது.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், குறிப்பாகத் தமிழ்த் திரைப்படங்களிலும் பொதுப் பண்பாட்டு உரையாடல்களிலும், கற்பு பெரும்பாலும் பெண்ணின் உடல், திருமண விசுவாசம், சமூக மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டது. “ஒருவனுக்கு ஒருத்தி”, கண்ணகி–மாதவி ஒப்பீடு, பெண்ணின் உடல் சார்ந்த தூய்மை போன்ற சட்டகங்கள் மக்கள் மனத்தில் ஆழமாக நிலைபெற்றன. தமிழ்ச் செவ்வியல் மரபிலும் கற்பு என்பதற்குத் திருமண உறவு, அக ஒழுக்கம், பெண்மையின் ஆற்றல் எனப் பல அடுக்குகள் இருந்துள்ளன.
ஆனால் பிங்களையின் பாடலில் ஸ்ரீ வேத வியாசர் முன்வைக்கும் ஒரு சொற்றொடர் இந்த விவாதத்தை வேறொரு ஆழத்திற்குக் கொண்டு செல்கிறது:
अन्यम् इच्छन्ती असती (அன்யம் இச்சந்தீ அஸதீ)
அதாவது, தன்னையே அருளும் அழிவற்ற உள்ளுறை நாயகனை – ஆத்மதேவனை விடுத்து, “வேறொருவனை விரும்பியதால்” தான் அஸதீ (கற்பிழந்த) – ஆனதாகப் பிங்களை கூறுகிறாள்.
இங்குதான் கவிதையின் மையக் கேள்வி பிறக்கிறது:
உடலைப் பலர் தொட்டதால் மட்டுமே ஒருவர் கற்பற்றவராகிறாரா?
தன் உள்ளுறை நிறைவை மறந்து, ஒவ்வொரு ஆசையிடமும் தன்னை ஒப்படைக்கும் மனம் கற்புடையதா?எனவே இக்கவிதையில் கற்பு என்பது உடலைச் சுற்றி எழுப்பப்பட்ட சமூக வேலியாக மட்டும் அமையவில்லை. அது மனம் தன் சிதைவற்ற ஆதாரத்திலிருந்து பிறழாமல் நிற்கும் அக ஒருமையாக விரிகிறது. உடல் தொடப்படாமல் இருக்கலாம்; ஆனால் மனம் பணம், புகழ், பதவி, அதிகாரம், அங்கீகாரம், உறவு, எதிர்காலம் என எண்ணற்ற பொருள்களுடன் தன்னைப் பிணைத்துக்கொண்டிருக்கலாம். அப்படியானால் கற்பின்மை உடலில் தொடங்குகிறதா—அல்லது மனத்தின் பிளவில் தொடங்குகிறதா?
இந்தக் கேள்வி இன்று தோன்றியதன்று. கலியுகத்தின் தொடக்கத்துடன் தொடர்புபடுத்தப்படும் தொன்மையான மரபிலேயே, ஸ்ரீ வேத வியாசர் பிங்களையின் வழியாக இதற்கான அகத்தெளிவை விதைத்துள்ளார். மரபுக் காலக்கணக்கின்படி சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இந்தக் கதையின் நவீனத்தன்மை வியப்பூட்டுகிறது: அது ஒரு பெண்ணின் உடலை நீதிமன்றத்திற்கு அழைப்பதில்லை; ஆசையால் அலைக்கழிக்கப்படும் மனித மனத்தையே விசாரணைக்கு அழைக்கிறது.
புலன்வேட்கை தனித்து வாழ்வதில்லை.
பொருள், வாய்ப்பு, நினைவு, மறுமொழி, தூண்டுதல் ஆகியவற்றைப் பெற்றே அது வளர்கிறது. அவற்றுக்கான வழி மறுக்கப்பட்டு, மனம் ஓடுவதற்கு இடமின்றித் தன்னிடமே திரும்பும்போது, வேட்கை முதலில் வாடுகிறது; அந்த வாட்டம் நிர்வேதமாகப் பழுத்தால், அதுவே உபசமத்தின் வாயிலாகிறது.கவிதையின் மற்றொரு முக்கிய முரண்
பிங்களை முதலில் தன் உடலை விலையாக அளித்து பொருள் பெற முயல்கிறாள். பின்னர் முழுச் சரணாகதியில் தன்னையே விலையாக அளித்து உள்ளுறை நாயகனை அடைய முனைகிறாள். இவ்வாறு வாணிகத்தின் மொழியே ஆன்மிகப் புரட்சியின் மொழியாக மாறுகிறது:
- முதலில் அவள் தன்னை விற்று பொருள் தேடுகிறாள்;
- இறுதியில் தன்னையே முழுவதுமாக அளித்து, தன்னை மீட்டுக்கொள்கிறாள்.
அதேபோல்:
- அவள் எதிர்பார்த்தவர் வராததே அவளுக்குக் கிடைத்த பேரருள்;
- ஆசை நிறைவேறாததால்தான் அவள் நிறைவடைகிறாள்;
- துன்பமே வைராக்கியத்தைப் பிறப்பிக்கிறது;
- நிராசையே பேரின்பமாகிறது;
- அவள் உறங்கும்போதுதான் அகத்தில் விழித்துக்கொள்கிறாள்.
இந்த முரண்களே கவிதையின் உயிராக அமைந்துள்ளன.
மூலத்தின் ஆன்மிக நகர்வையும் செய்யுள் வரிசையையும் மதித்து, அதே சமயம் தமிழின் செவ்வியல் கனம், நவீனப் புதுக்கவிதையின் சுருக்கம், அகத்தத்துவ விசாரணை ஆகியவற்றை இணைக்க முயன்றுள்ளேன். பிங்களையை இழிவுபடுத்தாமல், அவளையே மனித மனத்தின் ஆசிரியராகத் திருப்பிப் பார்க்கும் முயற்சியாகவும் இக்கவிதை அமைகிறது.
திண்ணையின் இலக்கிய வாசகர்களிடையே இக்கவிதை மொழிபெயர்ப்பு, மறுபடைப்பு, கற்பு, ஆசை, உடல், மனம், வைராக்கியம், உள்ளுறை நிறைவு ஆகியவற்றைப் பற்றிய ஆழமான உரையாடலை உருவாக்கக்கூடும் என நம்புகிறேன்.
கவிதையைத் தங்களது வெளியீட்டிற்காகப் பரிசீலிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தேவையான சுருக்கத் திருத்தங்களையோ ஆசிரியர் குறிப்பையோ வழங்க மகிழ்ச்சியுடன் தயாராக இருக்கிறேன்.
நன்றி.அன்புடன்,
வேங்கடேசன் நாராயணஸ்வாமிஅலகு 503, எண் 365, கேம்பிரிட்ஜ் தெரு
வெம்ப்ளி, மேற்கு ஆஸ்திரேலியா 6014
ஆஸ்திரேலியாMobile: +61 412 182 181 venkyswamy@yahoo.com )
அரூப நகரின் பிங்களை
விதேக மாநகர் வீதியின் வாயிலில்
மதிமயல் பிங்களையெனும் வேசி வசித்தனள்;
“நிதியுடை யானிவன்; நேர்விலை ஈகுவன்”
எதிர் வருவோர்தொறும் எண்ணம் வைத்தேங்கினாள்.
பதினாறு ஆசான் பயிற்றிய பாடத்தின்
மதியொளி நீங்கா மறைநெறி கண்டபின்,
பதினேழாம் ஆசானாய் பிங்களை வந்தனள்;
எதிர்பார்ப் பறுத்திடும் உள்ளொளி ஈந்தனள்.
அரசிளங் குமரனே! அறிந்தவர் தம்மினும்
பெரிதொரு பாடத்தைப் பேதையள் ஈந்தனள்;
அரிதெனத் தேடிய மெய்ப்பொருள் தன்னையே
விரிகுழற் பிங்களை வீட்டினில் காட்டினள்.
வந்தவர் போயினர்; வந்திலர் நின்றிலர்;
முந்திய செல்வரின் மிக்கவர் நேர்வரார்?
சிந்தையுள் எண்ணித் தெருப்புறம் போதலும்,
தன்மனை தன்னினுள் தாபத்துடன் ஏகலும்;
வந்தவர் வந்தனர் வாயிலைக் கடந்தனர்;
சென்றவர் சென்றனர்; சேர்ந்தவர் யாருமில்;
நின்றவள் நெஞ்சினுள் நீள்பொருள் ஆசையோ
சென்றவர் தோறுமோர் செல்வனைச் செய்ததே.
வாயிலைக் கடந்து மாந்தர்கள் போயினர்;
மாயவள் கோலத்தில் மாட்டினர் யாருமில்;
தீயென ஓங்கிய தீரா வேட்கையின்
தூண்டுதல் இன்மையே தூய மருந்தானதே.
புலனுக்கு மேய்பொருள் போற்றிட வாய்க்கா,
அலையும் அவாவுக்கு ஆக்கமும் வாய்க்கா,
உலையிடு தீயென ஓங்கிய வேட்கையும்
விறகறு தழல்போல் மெல்லெனத் தணிந்ததே.
தூக்கமதற்றுத் துடித்திடும் நெஞ்சினள்;
நோக்க மெலாம்புற நோக்கிய கண்ணினள்;
யாமம் வளர்ந்தது; யாரும் வந்தாரிலர்—
காம வேட்கை காய்ந்து கங்குலும் முற்றிற்றே.
நள்ளிருள் மீது நவின்றிருள் சூழ்ந்ததோ?
உள்ளிருள் தன்னை உணர்ந்திடும் வேளையோ?
பொருளாசை வாட்டிட உலர்ந்ததவள் முகம்;
மெல்லத் தளர்ந்தது; வேட்கையும் வற்றிற்றே!
ஆசை யென்றோர் வலை ஆயிர நூலுடை;
பாச மென்றோர் பெயர் பற்றிய முடிச்சுடை;
நேச மென்றோருரு நேர்ந்திடக் காட்டினும்
மோசமது என்றுணர் முத்திவாள் வந்ததே.
“அந்தோ! அடங்கா அகந்தையின் ஆட்சியில்
சிந்தை புலன்வழிச் சீர்கெட்டுச் சென்றதே;
வந்தவர் தம்மிடம் வாழ்வினை இறைஞ்சினேன்;
சென்றவர் சுவட்டினில் இன்பமும் தேடினேன்.
கண்டவர் கண்ணிலென் காந்தியைக் காணவும்,
கொண்டவர் நெஞ்சிலென் கோலத்தை நாட்டவும்,
தந்திடும் விலையினால் தானொரு பொருளென
என்னையே யானறியேனென ஏங்கினேன்.
ஆசை தணிப்ப ரென்றற்பரைப் பற்றினேன்;
ஆசை வளர்த்தவர் அன்றியவர் வேறலர்;
தாகம தாற்றிடத் தண்ணீர் இரந்தேன்;
ஆநெய்யினால் அணைத்த அக்கினியானேன்.
தன்னையே தந்தருள் தன்னிகரிலா அச்சுதன்
என்னகத்தே யென்றும் இருந்திட்ட வானவன்
தன்னையே நீத்துப் பிறிதினை வேண்டிய
புன்மையால் புனிதம் போக்கினேன், அந்தோ!
தேகத்தைக் காத்திடல் செம்மையின் கற்பெனில்,
ஏகத்தில் நிற்கிலா எண்ணத்தின் பேரென்ன?
பாகமாய்ப் பலபொருள் பற்றிடும் நெஞ்சினை
மோகத்தின் வேசியென் றோதுதல் பொய்யதோ?
ஒருவனில் ஒன்றிய உள்ளமே கற்பெனில்,
அருவமாய் என்னகம் ஆள்கின்ற நாயகன்
திருவடி நீங்கிடாச் சிந்தையின் நேர்மையே
பருவுடல் காவலின் பாற்படுந் தூய்மையாம்.
நிறமிலா மெய்யொளி நெஞ்சிடைத் தோன்றவும்
“நான்” எனும் செஞ்சுடர் நண்ணிய சாயலால்,
பான்மைகள் பற்பல பற்றிய பிங்களை
தானெனத் தன்னையே தாழ்த்தினள், பேதையள்!
என்பினை உத்தர மாக்கி, விலாவினை
வன்புறு சட்டம தாக்கி, நரம்பினை
நன்பிணைக் கயிறென நாட்டி, நகமயிர்
தோலினால் மூடிய புழுவழுக்கு உடலை;
ஒன்பது வாயிலு மொழுக்கறா தொழுக,
புன்புலால் நாற்றமும் பொங்கிடும் பொய்க்குடில்—
“இன்பம் இதன்கண் உளது” எனப் பேணுவாள்
என்போல் அறிவிலி எங்குளள்?” என்றனள்.
விதேக நகரினுள் என்போல் அறிவிலி
எவளுளள்? “இத்தேகம் யான்” எனப் பற்றினேன்;
தன்னையே தந்தருள் தாழ்விலா அச்சுதன்
உள்ளுறைந் தானென ஓர்ந்திலேன்—பேதையேன்!
அனைத்துயிர்க் கன்பன்; அகமெனும் ஆத்மனாம்;
வினையறு செல்வன்; என்னுயிர்க் காதலன்;
தனையளி வள்ளல்; தனிப்பெரும் நாயகன் —
நினைத்திடா நெஞ்சினேன் நீசர்பின் சென்றேனே!
இதுவரை என்னுடல் ஈந்துபொன் வேண்டினேன்;
இதுமுதல் என்னையே ஈந்தவனடி பணிவேன்;
தன்னையே தந்தருள் தாளினைச் சேர்ந்தபின்
“யான்-எனது” என்றிடும் எண்ணமும் இல்லையே.
வாங்குவோன், விற்பவள், வைக்கின்ற விலையென
ஓங்கிய முப்புடி ஓரொளி சேர்ந்திட,
நீங்கிய “யான்” எனும் நீளிருள் அற்றபின்
ஆங்கவன் தானன்றி ஆருளர் நெஞ்சிலே?
முடிமன்னர், வானவர், மூதறி வாளரும்
அடிமுதல் அந்தமொடு யாக்கைகள் தாங்கினர்;
கொடிகொளும் காலத்தின் கூரெயிற் றூடுறும்
நொடிவரை வாழ்பவர் பேரின்பம் ஈவரோ?
துன்பம் எனக்கொரு துன்னிருள் ஆயிற்றே;
துன்பம் வராமலென் துர்ப்பற்று நீங்குமோ?
துன்பம் துய்த்தது துர்மதியா ளென்னையே.
துன்ப மொழித்தது தொல்வினைப் பற்றையே.
என்றுசெய் நோன்பின் இயல்பயன் இவ்வருள்?
என்றுகொல் ஈந்த அறப்பயன் இவ்வருள்?
என்றொரு நல்வினை யான்செய்த காரணம்,
இன்றென் அகத்தினில் இந்நிலை தோன்றிற்றே!
ஆதலின் எந்தை அளித்த இந்நன்மையைத்
தீதென எண்ணாது சென்னியில் ஏற்றுவேன்;
போதுறு சிற்றின்பப் பொய்யாசை நீத்தினி
மாதவன் தாளிணை மகிழ்ந்தே ஏத்துவேன்!
என்னையே விலையென ஈந்தவன் தாளடைந்
தென்னுயிர் நாயகன் இன்னருள் பற்றுவேன்;
அன்னவன் மார்புறை அலைமகள் போலினி
மன்னிய பேரின்ப வாழ்வினில் ஏகுவேன்.
வராதவர் என்னை மறந்தனர் மருகினேன்;
வராமையே என்னருள் வாயிலென் றோர்ந்திலேன்;
வராதவர் செய்திடும் மாசறு நன்மையை
வருந்தா நாளினில் வந்தவர் செய்திலர்.
வருகை தராதவர் வாயிலைக் கடந்தனர்;
வருகை தராததோர் வள்ளருள் வந்ததே;
உருகிய வேட்கையின் உள்ளிடைத் தோன்றிய
நிர்வேத மன்றியோர் நேர்துணை யில்லையே.
கிட்டிய போதினில் பேருவகை எய்திடேன்;
கிட்டாத போதினில் சிறுமை கொள்கிலேன்;
இட்டவாறு ஏற்றிடும் ஈசனின் இன்னருள்
தொட்டவள் நெஞ்சினில் தோல்வியொன் றில்லையே.
புலனெனும் கள்வர் புத்தியைக் கெடுத்திட,
கலனிழந் தாழ்குழிக் கண்ணுயிர் வீழ்ந்திட,
உலகினை வாய்க்கொளும் ஊழியந் நாகத்தின்
வலியிடைப்பட்டனை மற்றுயார் காப்பரோ?
தீப்பொறி வாயினில் சேர்ந்திடும் பஞ்சென
மாப்பெரும் காலத்தின் வாயிடை மானுடர்;
காப்பரென் றோர்பிறர் கால்களைப் பற்றுதல்
பாம்பினை மற்றொரு பாம்பினால் விரட்டலே.
காலநாக வாயினுள் காண்கின்ற ஞாலத்தில்
யார்துணை யார்க்கென யானினி ஏங்குவேன்?
மூழ்கும் தோணியொன்று மற்றோர்தோணி காத்திடா;
ஆழியான் அணிகழலே அனைத்திற்கும் காவலன்!
உலகெலாம் காலத்தின் உக்கிர நாகத்தால்
வலியுணப் பட்டதை வாய்மையிற் கண்டபின்,
நிலையெனக் காண்பது நீங்கிடும்; நெஞ்சினில்
ஆத்மனே ஆத்மனுக்காய அரணென்று தேறுவாள்.
புறவாயிற்ப் போந்தவள் பிங்களை யாயினள்;
அகத்தே அமர்ந்தவள் அன்பினரசி ஆயினள்;
இரட்டைகள் ஓய்ந்திடும் ஏகத்தின் சாந்தியில்
“யானெனும் எண்ணமெங்கே?” என்றவள் தெளிந்தாள் .
இங்ஙனமெண்ணி எழுந்த வெவ்வேட்கையைச்
செவ்விய ஞானத் திருவாளால் வேரறுத்துக்
கவ்விய சாந்தியின் ஆழத்தில் நின்றனள்;
மெல்லணை மீதினில் மெல்ல அமர்ந்தனள்.
வீடது மாறிலை; மெல்லணை மாறிலை;
நீடிய யாமமும் நேரமும் மாறிலை;
“என்னிடம் இன்னமும் ஏதோ வரவேண்டும்” என்
றுன்னிய எண்ணமொன் றோய்ந்தது — சாந்தியே!.
என்றவள் பாடல் இசைத்திடக் கேட்டயான்
ஒன்றிய சிந்தையின் உத்தமம் கண்டேனே!
கன்றிய வேட்கையைக் கைவிட்டு உபசமம்
நின்றவள் தன்னையே நல் ஆசானெனக் கொண்டேனே!
ஆசையே மானுடர்க்குப் பேரிடர் துன்பமாம்;
ஆசையற் றார்க்கது ஆனந்த வீடுமாம்;
காதலர் மீதுறு வேட்கையை வேரறுத்
தோதிலள் பிங்களை இன்புறத் தூங்கினாள்.