This entry is part 6 of 7 in the series 13 செப்டம்பர் 2026

ஏ.நஸ்புள்ளாஹ்

​கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக அந்த நிலத்தின் தொப்புள் கொடியாக இருந்தது அந்தச் செங்கல் கிணறு. கோடை வெயில் உச்சத்தில் ஏறத் தொடங்கினால் ஊரிலுள்ள அத்தனை கிணறுகளும் மூச்சுத் திணறித் தற்கொலை செய்துகொள்ளும். இந்த வட்டக் கிணறு மட்டும் தன் அடியில் ஏதோ ஒரு மறைந்த ஊற்றின் பலத்தில் தற்காத்துக்கொள்ளும். அதன் கரைகளில் முளைத்திருக்கும் கல்வாழைச் செடிகள் கூட காய்ந்துபோகும். கிணற்றுக்குள் மட்டும் ஒரு மெல்லிய ஈரம் பாசிப் பச்சையோடு உயிர்பெற்றுத் தொங்கும்.

​இந்த முறை கோடை அப்படி இல்லை. அது வானத்திலிருந்து நெருப்பைக் கொட்டியது. வேப்ப மரங்களின் இலைகள் காய்ந்து, வண்டு அரித்த சருகுகளாகக் கீழே விழுந்தன. ஊரிலிருந்த எல்லாக் குளங்களும் செங்கற்கள் வெளியே தெரியும் அளவுக்கு வற்றிவிட்டன. நிலத்தடி நீர் எங்கோ பாதாளத்தின் ஆழத்திற்குப் பயந்து ஓடிவிட்டது.

​அப்துல் மஜீதுக்கு வயது எழுபது தாண்டியிருந்தது. அவரது இளமைக்காலத்தின் அத்தனை வியர்வையையும் இந்த நிலம்தான் உறிஞ்சிக் கொண்டது. அவரது அஞ்சு நேரத் தொழுகைகளும், சுபஹ் தொழுதுவிட்டு அவர் ஓதும் குர்ஆன் ஓசையும் இந்த வீட்டின் சுவர்களுக்கும் அந்தப் பின்னிரவுத் தோட்டத்திற்கும் அத்துபடி. இப்போது அவருக்கு மிஞ்சியிருப்பது இந்த வறண்ட வீடும் வீட்டின் பின்னாலிருக்கும் அந்தக் கிணறும்தான்.

​காலை ஒன்பது மணியாகும்போதே வீட்டின் சிமெண்ட் தளம் சுடத் தொடங்கிவிடும். வெயில் காலத்தில் மஜீதுக்குச் சோம்பேறித்தனம் அதிகமாகும். என்றாலும், அவர் தினமும் தவறாமல் செய்யும் ஒரு சடங்கு உண்டு. லுஹர் தொழுகைக்கு முந்தைய நேரத்தில் முற்றத்தில் வெயில் கடுமையாகக் காயும்போது, அவர் ஒரு மரத் தடியை ஊன்றியபடி பின்வாசல் வழியாக அந்த கிணற்றுக்கரைக்கு நடப்பார்.

​கிணற்றுச் சுவரில் கைவைத்தால் தீப்பற்றும். ஆனாலும் அவர் ஒவ்வொரு நாளும் அங்கு செல்வார். எதற்காக? கிணற்றின் விளிம்பில் குனிந்து, அதனுள் எட்டிப் பார்ப்பார்.

​முன்பெல்லாம் எட்டிப்பார்த்தால் அவருக்குள்ளிருந்தே ஒரு குளிர்ந்த முகம் நீருக்குள்ளிருந்து அவரை வாழ்த்திப் புன்னகைக்கும். அந்தத் தண்ணீரின் ஆழத்தில் ஆகாசம் தலைகீழாகத் தொங்கும். வெயிலில் அலுத்துப்போய், அல்லாஹ் நாடினால் என்று திக்ர் செய்துகொண்டு வரும் அவருக்கு அந்த நீரின் குளிர்ச்சி ஒரு நல்வார்த்தை சொல்லும். இப்போது நிலைமை மாறிவிட்டது.

​இந்த வருடம் கிணறு தன் ஒட்டுமொத்த நீரையும் பல மாதங்களுக்கு முன்பே கைவிட்டுவிட்டது. உள்ளே சொட்டு நீர் கூட இல்லை. சுவரோடு சுவராக ஒட்டிக் கிடந்த பாசிகள் கூட வெயிலின் உஷ்ணம் தாங்காமல் காய்ந்து தூசியாகிப் பறந்துவிட்டன.

​மஜீது தடியை ஊன்றியபடி கிணற்றுச் சுவரில் குனிந்தார். அவரது தளர்ந்த முகத்தின் சுருக்கங்கள் கிணற்றுக்குள் விழுந்தன. அவரது வெளுத்த தாடியும், தொப்பியும், தோள் தளர்ந்த உடலும் எல்லாமே அந்த வட்டக் கல்லின் விளிம்பில் அரைகுறையாகத் தெரிந்தது.

​கிணற்றுக்குள் தண்ணீர் இல்லைதான். எனினும் அது காட்டிய காட்சியில்தான் எத்தனை கொடூரமான ஏளனம் இருந்தது.

​தண்ணீருக்குப் பதிலாக அந்த வறண்ட கிணற்றின் அடி ஆழத்திலிருந்து நிமிர்ந்து பார்த்தால் அதனுள் ஒரு சிறு துண்டு வான்வெளி மட்டுமே எஞ்சியிருந்தது. வெளியே விரிந்து கிடக்கும் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அந்த வட்டக் கிணற்றின் குறுகிய விளிம்புகளுக்குள் சுருங்கி, ஒரு தீர்க்கதரிசியின் கண்கள் போல விழித்துக் கொண்டிருந்தது.

​மஜீது தன் முகத்தை மேலும் தாழ்த்தினார். கிணற்றின் ஆழத்திலிருந்து அவருக்கு எந்தக் குரலும் கேட்கவில்லை. ஒரு காலத்தில் சுப்ஹானல்லாஹ் என்று இறைவனைத் திக்ர் செய்துகொண்டு வரும் அந்த நீரின் வாசம் இருந்த இடத்திலிருந்து இப்போது மண்ணின் வெந்த வாடையும், பாறைகளின் உஷ்ணமும் மட்டுமே வெளியேறி முகத்தில் அறைந்தன.

​”யா அல்லாஹ்… இன்னும் உன்னைக் காப்பாற்ற யாருமில்லை என்கிறாயா?” என்று மஜீது தனக்குத்தானே முணுமுணுத்தார். அவரது தொண்டை வரண்டு போயிருந்தது.

​அந்த கிணறு தனக்குத் தண்ணீர் தர மறுக்கிறது என்பதற்காக மஜீதுக்கு அதன் மீது கோபமில்லை. ஒரு காலத்தில் தன் மடியில் ஊர்களைத் தாங்கிய அந்தப் பெருமைமிக்க கிணறு, இப்போது தன்னிடம் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் கேட்க ஆளில்லாமல், வெறும் காற்று மட்டுமே நிறைந்த ஒரு பெருமூச்சாக மாறிவிட்டதை நினைத்து அவருக்குப் பரிதாபமாக இருந்தது.

​மஜீதின் மனைவி ஆயிஷா வீட்டிற்குள்ளிருந்து குரல் கொடுத்தாள்.

“ஹாஜியார்… வெயில் சுடுகிறது உள்ளே வாருங்கள். என்ன அங்கேயே நிற்கிறீர்கள்?”

அவள் குரலில் கோடைகாலத்தின் சோர்வு இருந்தது. அவளுக்கும் அவருக்கும் இடையிலான ஐம்பது வருடத் தம்பதிய வாழ்க்கை, இந்தக் கிணற்றைப் போலவேதான் வற்றிப் போயிருந்தது. இளமையில் இருந்த அந்தத் துடிப்பும் சச்சரவுகளும் பரஸ்பர அன்பும் இப்போது வெயில் பட்டுத் துகள்களாக உதிர்ந்துவிட்டன. மிஞ்சியிருப்பது பழக்கம் என்கிற பெயரிலான ஒரு மெல்லிய நூலிழை மட்டும்தான்.

​மஜீது உடனே உள்ளே செல்லவில்லை. அவர் கிணற்றுச் சுவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கீழே பார்த்தார்.

​இப்போது அந்தச் சுவரில் ஒரு சிறு காகம் வந்து அமர்ந்தது. அதுவும் மஜீதைப் போலவே கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது. அதற்குத் தெரியும் எப்போதுமே இங்கே தண்ணீர் இருக்கும் என்று. அது தனது அலகைத் திறந்து வைத்துக்கொண்டு கீழே எதையோ தேடியது. எனினும் அங்கே நீருக்குப் பதிலாகக் கிடக்கிற வறண்ட களிமண் தரை அதற்குக் கிடைத்தது. காகம் ஏமாற்றத்துடன் ஒருமுறை கத்திவிட்டு தன் சிறகுகளை விரித்து வானத்தில் பறந்து மறைந்தது.

​மஜீது அந்தப் பறவையைப் பார்த்துச் சிரித்தார்.

“ஏமாந்துட்டாயா? இது சோதனைகளின் காலம் பறவையே. இங்கே யாருக்கும் எதும் மிச்சமில்லை. கிணறு கூடத் தன்னைத் தானே விற்றுவிட்டது” என்று அவர் அந்த வெற்று வெளியில் தன் குரலைப் புதைத்தார்.

​மதிய வேளையின் உச்சம் அந்த நிலத்தை அமுக்கியது. தெருவில் ஆள் அரவமே இல்லை. நாய்கள் கூட வெயிலுக்குப் பயந்து ஏதோ ஒரு மர நிழலில் வாயைப் பிளந்து படுத்திருந்தன. மஜீது அப்படியே அந்த கிணற்றுச் சுவரிலேயே சாய்ந்து உட்கார்ந்துவிட்டார். அவரது கால்கள் விறைத்துப்போயின.

​அந்தக் கிணற்றின் விளிம்பில் அவரது கைகள் பதிந்திருந்தன. ஐம்பது வருடங்களுக்கு முன்பு இந்தக் கிணற்றை வெட்டிய தொழிலாளியின் கைகள் எப்படி இருந்திருக்கும்? பிஸ்மில்லாஹ் என்று சொல்லித்தானே அவர் மண்வெட்டியைத் தூக்கியிருப்பார்? அவரது வியர்வை இந்த மண்ணுக்குள் இறங்கித்தானே நீராய் மாறியிருக்கும்? இன்றைக்கு அந்தத் தொழிலாளியும் இல்லை அவர் வியர்வையும் இல்லை.  காய்ந்த செங்கற்களும், வெடித்த பூமிப் பிளவுகளும் மட்டுமே மிச்சம்.

​மஜீது தன் கண்களை மூடிக்கொண்டார். அவரது நினைவுகள் பின்னோக்கி ஓடின.

​இதே கிணற்றின் கரையில் நின்றுதான் அவர் தன் முதல் மகனின் காதுகளில் பாங்கு சொன்னார். இதே கிணற்றுத் தண்ணீர்தான் அவர் தன் வீட்டின் நோன்பு கஞ்சித் தயாரிப்புக்கும் பெருநாள் சமையலுக்கும் உதவியது. ஊரில் யார் வீட்டுத் கல்யாணம் அல்லது ஜனாஸா என்றாலும் இந்தக் கிணற்றின் நீர் கொதிக்கும் பாத்திரங்களில் பொங்கி வழிந்தது. அன்றைக்கு இந்தக் கிணறு ஒரு தாய் போல எல்லோரையும் ஊட்டியது. இன்று அது தன் தாகத்தைத் தீர்க்கக் கூட வழியில்லாமல், தன் சொந்த வயிற்றுக்குள் தானே தீ மூட்டிக்கொண்டு கிடக்கிறது.

​”யா அல்லாஹ்… நீயாவது ஒரு மழைத் துளியைக் கீழே இறக்கக் கூடாதா? உன் ரஹ்மத்தை இந்த பூமி மீது பொழியக் கூடாதா?” என்று மஜீது முணுமுணுத்தார்.

​வானம் அவருக்குப் பதில் சொல்லவில்லை. இருப்பினும் அவருக்குத் தெரியும் வானம் நீல நிறக் கூரை அல்ல அது மனிதர்களின் பிரார்த்தனைகளின் விடையைத் தன் விதிப்படி நடத்தும் ஒரு பிரம்மாண்ட வெளி.

​மஜீது மெல்லத் கண்களைத் திறந்தார். மீண்டும் கிணற்றுக்குள் பார்த்தான். இந்த முறை சூரியனின் ஒளி நேரடியாக அந்த ஆழத்தின் மையத்தில் விழுந்தது. அந்த வட்டமான கிணற்றின் உட்பகுதி ஒரு பெரிய எரிமலையின் வாய் போலப் பிளந்து கிடந்தது.

​தன்னை எட்டிப்ப பார்க்கும் முகங்களுக்கெல்லாம் அது என்ன காட்டுகிறது? இந்த வறண்ட வானத்தைத்தான் பார்… உன் தலையின் மேல் விரிந்திருக்கிறதே அந்த நீல நிறக் கனா, அது ஒரு பொய். அங்கே மேகங்கள் இல்லை. அங்கே இரக்கமில்லை. அங்கே சோதனை மட்டுமே இருக்கிறது என்று அந்த கிணறு தன்னைப் பார்ப்பவர்களுக்குத் தன் ஆழத்தின் மூலமாகச் சொல்வது போல அவருக்குத் தோன்றியது.

​மனிதர்கள் எப்போதுமே தங்களின் துயரங்களை மறக்க இறைவனை நாடுகிறார்கள் உலகத் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள கிணற்றை நாடுகிறார்கள். கிணற்றுக்குத் தாகம் எடுத்தால் அது யாரிடம் செல்லும்? அது யாரிடம் தன் வறட்சியைச் சொல்லி அழும்? அது தன் வராண்டாச் சுவர்களையே தின்று தீர்க்கிறது.

​மஜீதுக்குத் தன் உடலிலும் அதே வறட்சி தெரிந்தது. அவரது ரத்தம் குறுகிப்போய்விட்டார்போல ஒரு பிரமை. அவரது எலும்புகள் இந்தக் கிணற்றின் செங்கற்களைப் போலவே ஒன்றோடு ஒன்று உரசிச் சத்தம் எழுப்பின.

​”ஏய் கிணற்றுக் கிழவி…” என்று அவர் மெல்லிய குரலில் அழைத்தார்.

​கிணறு அதற்குப் பதில் பேசவில்லை.  அதிலிருந்து ஒரு மெல்லிய காற்று வீசியது. அந்தக் காற்றில் ஈரமில்லை. ஆனாலும் அதில் ஒரு விசித்திரமான ஆறுதல் இருந்தது. எல்லாம் அழிந்துபோன பின்பும் எஞ்சியிருக்கிற அந்தச் சின்னக் காற்று, மஜீதின் வியர்வை படிந்த நெற்றியைத் தடவிக் கொடுத்துவிட்டு நகர்ந்தது.

​ஆயிஷா மீண்டும் வாசலுக்கு வந்தாள். கணவன் வெயிலில் ரொம்ப நேரம் உட்கார்ந்திருப்பது அவளுக்குப் பயத்தை ஏற்படுத்தியது. அவள் வேகமாக நடந்து வந்து மஜீதின் தோளைத் தொட்டாள்.

“எழுந்திருங்கள் ஹாஜியார்… பைத்தியக்கார மாதிரி எப்போது பார்த்தாலும் இந்தக் கிணட்டையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதில் என்ன இருக்கிறது இப்போது?”

​மஜீது தன் மனைவியின் முகத்தைப் பார்த்தார். அந்த முகத்திலும் வெயிலின் களைப்பும் வருடங்களின் தாக்கமும் தெளிவாகத் தெரிந்தன. அவள் சொல்வது உண்மைதான். இதில் இப்போது ஒன்றுமில்லை. காய்ந்த சுவரும் வறண்ட வானமும் தவிர வேறு என்ன இருக்கப் போகிறது?

​ஆனால் மஜீது அவளிடம் சொன்னார்.

“இல்லை ஆயிஷா… இந்தக் கிணறு பொய் சொல்லவில்லை. நம்மைப் போல இதுவும் நடிக்கத் தெரியாமல் மாட்டிக்கொண்டது. நாம் வெளியே ஊருக்குள் முகமூடி போட்டுத் திரிகிறோம். இந்தக் கிணறு யாருக்காகவும் தன் முகத்தை மாற்றிக் கொள்ளவில்லை. வறண்டால் வறண்டதுதான் என்று தன் அடியில் இருக்கும் வானத்தை அப்படியே நமக்குக் காட்டுகிறது.”

​ஆயிஷா அவரது பேச்சைப் புரிந்து கொள்ளாமல் அவரை விசித்திரமாகப் பார்த்தாள். அவளுக்கு மஜீதின் இந்தத் தத்துவங்கள் புதிதல்ல என்றாலும் இந்த வயதில் எதற்கு இந்தத் தத்துவப் பேச்சு என்று தோன்றியது.

“வாருங்கள் உள்ளே… போய் மிஸ்மில்லாஹ் என்று சொல்லி விட்டு ஒரு வாய் தண்ணீர் குடியுங்கள்” என்றாள் அவள்.

​மஜீது தடியை ஊன்றியபடி மெல்ல எழுந்து கொண்டார். அவர் எழுந்ததும், கிணற்றின் விளிம்பில் அவரது நிழல் மறைந்தது.

​அவர் அங்கிருந்து நகரும் போது கடைசித் தடவையாகத் திரும்பி அந்த கிணற்றைப் பார்த்தார். அந்த வெயில் நேரத்தில், யாருமற்ற அந்தப் பின்னிரவு முற்றத்தில், அந்த வட்டக் கிணறு மட்டும் தன் கரைகளில் ஒட்டிக் கிடந்த எஞ்சிய மண்ணோடு வானத்தின் சோதனையைத் தனக்குள் தாங்கியபடி அப்படியே நின்றிருந்தது. அது யாரிடமும் எதையும் கேட்கவில்லை. யாரிடமும் கையேந்தவில்லை. தன் இருப்பின் மொத்தச் சுமையையும் தானே தாங்கிக்கொண்டு, அந்தச் சுட்டெரிக்கும் மதியத்தின் முகத்தில் நேராக விழித்துக் கொண்டிருந்தது.

…..

​அப்துல் மஜீது ஆயிஷாவோடு உள்ளே சென்றுவிட்டார் என்றாலும் அவரது நிழல் மட்டும் இன்னும் அந்தக் கிணற்றின் கரையை விட்டு விலகவில்லை போலிருந்தது. சமையலறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த அலுமினியக் குடத்திலிருந்து ஆயிஷா ஒரு சொம்புத் தண்ணீரை அள்ளி அவரிடம் நீட்டினாள். மஜீது பிஸ்மில்லாஹ் கூறி அதை வாங்கி ஒரே மூச்சில் குடித்து முடித்தார். தொண்டையை நனைத்த அந்தத் தண்ணீர் அவருக்கு உடனடி நிவாரணம் தந்தாலும் அவரது மனதின் ஆழத்தில் கிணற்றின் வறட்சி அப்படியே தங்கியிருந்தது.

​மதியத்து உறக்கம் அந்த வீட்டின் மேல் ஒரு போர்வையைப் போர்த்தியது போல் அமைதியைக் கொண்டுவந்தது. வீட்டின் கதவுகள் அனைத்தும் சாத்தப்பட்டிருந்தன. ஓடுகளின் மேல் பட்டுத் தெறித்த வெயில், அந்த வீட்டின் வர்ணங்களை உரித்துத் தள்ளிக் கொண்டிருந்தது. மஜீதால் தூங்க முடியவில்லை. கண்களை மூடினால் அந்த வட்டக் கிணற்றின் ஆழமும் அதில் தலைகீழாகத் தெரியும் அந்தச் சிறிய நீல வானமும் அவரது இமைகளின் உள்சுவற்றில் வரைந்தது போல நின்று நிலைத்தது.

​மஜீதின் வாழ்க்கை  இந்த வீட்டைப் போலவும் கிணற்றைப் போலவும்தான். அவரது இளமைப் பருவம் எவ்வித ஆடம்பரமும் இன்றி இந்த வறண்ட நிலத்தின் மடியில் ஒவ்வொரு நாளும் வியர்வையைச் சொட்டித் தன் குடும்பத்தைக் காப்பாற்றிய காலம் அது. அவரது மூத்த மகன் நகரத்திற்குச் சென்று பல வருடங்களாகிவிட்டன. அவன் அங்கே ஒரு பிளாட் வீட்டின் எட்டாவது மாடியில் வாழ்கிறான். அங்கே கிணறுகள் கிடையாது. குழாயைத் திருப்பினாலே தண்ணீர் கொட்டும். ஆனால் அங்கே வாழும் மனிதர்களின் மனங்கள் இந்தக் கிணற்றைவிடக் கொடூரமான வறட்சியால் வெடித்திருக்கின்றன என்பதை மஜீது அறிவார். கடந்த வருடம் அவர் மகனின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கே ஒரு வாரம் கூட அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. காற்றில் தூசு இல்லை, வெயில் இல்லை, அங்கே மனிதர்களின் குரல்களில் ஈமானின் குளிரோ, பாசத்தின் ஈரமோ இல்லை. எல்லாமே இயந்திரத்தனமான கணக்கீடுகள்.

​”இங்கேதான் வாழ்க்கை கடினமானது. இது சோதனையான நிஜம்” என்று மஜீது அப்போது நினைத்துக் கொண்டதுண்டு.

​பிற்பகல் மூன்று மணியைத் தாண்டியபோது, வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவது போலிருந்தது. அனல் காற்று மட்டும் வீட்டைச் சுற்றியுள்ள மரங்களின் இலைகளைக் கசக்கிக் கொண்டிருந்தது. மஜீது மெல்ல எழுந்து மீண்டும் பின்வாசல் வழியாக வெளியே வந்தார். ஆயிஷா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளது லேசான குறட்டைச் சத்தம் சமையலறையைத் தாண்டி முற்றத்தில் கேட்டது.

​மஜீது மீண்டும் அந்தச் செங்கல் கிணற்றின் அருகில் வந்து நின்றார்.

​இந்த முறை சூரியன் மேற்குத் திசையை நோக்கிச் சாய்ந்து கொண்டிருந்தது. அதனால் கிணற்றுக்குள் விழுந்த ஒளியின் கோணம் மாறியிருந்தது. முன்பு மத்தியானத்தில் எரிமலை போலப் பிளந்து கிடந்த அந்த ஆழம் இப்போது ஒரு மெதுவான மஞ்சள் நிறச் சாயலைப் பெற்றிருந்தது. கிணற்றின் சுவரில் பாசிகள் இல்லை என்றாலும் பல வருடங்களாக அந்தச் செங்கற்களில் படிந்திருந்த உப்பும் மண்ணும் ஒரு விசித்திரமான சித்திரத்தை உருவாக்கியிருந்தன.

​மஜீது குனிந்து பார்த்தார். இந்த முறை அவருக்குள் ஒரு வினோதமான எண்ணம் தோன்றியது. மனிதர்கள் ஏன் கிணறுகளை வெட்டுகிறார்கள்? நீருக்காகத்தான். நீர் தீர்ந்துபோன பிறகு அந்த கிணற்றை ஏன் தூக்கி எறிந்துவிடுவதில்லை? ஏன் அதை அப்படியே விட்டுவிடுகிறார்கள்?

​ஏனென்றால் கிணறு நீரைச் சேமிக்கும் தொட்டி மட்டுமல்ல அது ஒரு நிலத்தின் கூட்டு நினைவகம். மனிதன் தான் கண்டெடுத்த நீரின் வழியே பூமிக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதைத் தேடினான். படைத்தவனின் அருளை நம்பி நீரைத் தேடிச் சென்றால் அங்கே பாறைகளும், இன்னும் ஆழத்தில் ஊற்றும் இருக்கிறது.

​மஜீது தன்னைத் தானே கேட்டுக்கொண்டார். “என்னிடமிருந்து அத்தனை இளமையும், தொழுகையின் வீரியமும் பேச்சுகளும் வடிந்துவிட்ட பிறகு என்னிடம் என்ன மிஞ்சியிருக்கிறது?”

​அவரது விடை அவருக்கே கிடைத்தது. அவரிடம் அவரது தனிமையும், இறைவனுடனான மௌனமான ஆன்மீக தொடர்பும் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. இந்தக் கிணற்றைப் போலவே அவரும் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு இப்போது எஞ்சியிருக்கும் வெறும் தோலும் எலும்பும் கொண்ட கூடுதானே?

​அப்போது, தொலைவில் எங்கோ ஒரு பள்ளிவாசலின் பாங்குச் சத்தம் மெல்லக் காற்றுடன் கலந்து வந்தது. அஸர் தொழுகை நெருங்குகிறது என்பதற்கான அடையாளம் அது. ஊரே சற்று உசுப்பிக் கொள்ளத் தொடங்கும் நேரம். ஆடு மாடுகள் தொழுவத்திற்குத் திரும்புவதற்கான தூரத்துச் சத்தங்கள் கேட்டன. ஆனாலும் இந்த வீட்டின் முற்றம் மட்டும் இன்னும் அதே அமைதியில் உறைந்து கிடந்தது.

​மஜீது கிணற்றின் விளிம்பில் உட்கார்ந்தார். அவரது கால்கள் தொங்கிக்கொண்டிருப்பதிற்கு மாறாக அவர் தரையில் அமர்ந்து தனது கைகளை அந்தச் செங்கல் சுவரில் பதித்தார்.

​”உனக்குத் தெரியுமா கிணறே…” என்று அவர் உரக்கவே பேசத் தொடங்கினார். அவரது குரல் அந்த வெட்டவெளியில் கரகரப்பாக ஒலித்தது.

 “நாங்கள் இருவரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள். உன்னை இந்த நிலத்தில் வெட்டியபோது எனக்கு வயது இருபது இருக்கும். பிஸ்மில்லாஹ் சொல்லி வெட்டி என் கைகளில் கொப்புளங்கள் வந்தன. உன்னைச் சுற்றியுள்ள செங்கற்களை அடுக்கியது என் கைகள்தான் என்பதை இந்த ஊரில் யாருமே இப்போது நம்ப மாட்டார்கள். எல்லோரும் என்னை ஒரு முதியவராக, எதற்கும் உதவாதவனாகப் பார்க்கிறார்கள். உன்னை வெறும் பாழடைந்த கிணறு என்று ஒதுக்குவது போலத்தான் அவர்களும் என்னை ஒதுக்கப் பார்க்கிறார்கள்.”

​கிணறு அமைதியாக இருந்தது.  அதன் உள்ளிருந்து எழுந்த காற்று மஜீதின் நரைத்த தாடியை மெல்ல வருடிக் கொடுத்தது.

​”அவர்களுக்குத் தெரியாது… இந்த நிலத்தின் அடியில் என்ன ஓடுகிறது என்பது படைத்தவனுக்கும் நமக்கும்தான் தெரியும். நீ வற்றிவிட்டாய் என்று சொல்கிறார்கள். உண்மைதான் இந்த மேல்மட்டத்தில் நீர் இல்லை.  பல நூறு அடிகளுக்குக் கீழே யாராலும் தொட முடியாத அந்தப் பாதாளத்தில், பூமி தன் ஈட்டத்தை இன்னும் ரகசியமாகத்தான் வைத்திருக்கிறது. நாமும் ஒருநாள் இந்த உலகத்தை விடுத்து அந்த நிரந்தர உலகத்திற்குத்தானே போகப் போகிறோம்.”

​மஜீதின் கண்களில் சட்டென்று ஒரு ஈரம் படர்ந்தது. அந்த வயதான காலத்தில் அவருக்கு அழுவதற்குப் ஒரு நீண்ட பயான் தேவையில்லை. தன் அமல்களின் குறைபாடுகளையும் கடந்த கால நினைவுகளின் சுமையையும் நினைத்தாலே போதும், கண்கள் குளமாகிவிடும். அவர் தன் வறண்ட கைகளால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

​அப்போது, அவரது பேரன் அவருக்கு அனுப்பிய குரல் பதிவு ஒன்று நினைவுக்கு வந்தது. நகரத்தின் நெரிசலில் படித்துக்கொண்டிருக்கும் அந்த இளைஞன்,

 “வாப்பப்பா, இங்கே எல்லாமே வேகமாய் ஓடுகிறது.  நாம் எங்கு போகிறோம் என்று யாருக்கும் புரியவில்லை” என்று பேசியிருந்த வரிகள் மஜீதின் நெஞ்சில் சுரீர் என்று ஏறின.

​ஆம். அதுதான் உண்மை. மனிதர்கள் வேகமாக ஓடுகிறார்கள். எங்கு செல்வது என்று தெரியாமல் திக்கித் திணறுகிறார்கள். இந்தக் கிணறு எங்குமே ஓடவில்லை. அது ஒரே இடத்தில் நின்று, இந்த உலகத்தின் அத்தனை வேகத்தையும் அவசரத்தையும் அமைதியாக வேடிக்கைப் பார்க்கிறது. வேடிக்கைப் பார்த்துவிட்டு, தன் உள்ளே எஞ்சியிருக்கும் அந்தச் சின்ன வானத்தை மட்டும் காட்டுகிறது.

​ஆயிஷா வெளியே வந்தாள். அவள் கையில் ஒரு கப் சூடான தேநீர் இருந்தது. அவள் மஜீது கிணற்றின் அருகே உட்கார்ந்து தனியாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு சற்று நின்றாள். அவள் முகத்தில் ஒரு மெல்லிய கவலை நிழலாடியது. இந்த வயதில் இவருக்கு நினைவு தப்பிவிட்டதா அல்லது சோதனையின் பாரம் அதிகமாகிவிட்டதா என்ற பயம் அவளுக்கு ஏற்பட்டது.

​அவள் மெதுவாக நடந்து வந்து, தேநீர்க் கோப்பையை மஜீதிடம் நீட்டினாள்.

“எதற்காக இப்படி வெயிலில் உட்கார்ந்து பேசிட்டிருக்கிறீர்கள்? வாருங்கள், உள்ளே போய் தேநீர் குடியுங்கள்” என்றாள்.

​மஜீது திரும்பிப் பார்த்தார். அவள் கண்களில் இருந்த அந்தத் தவிப்பு அவருக்குப் புரிந்தது. அவர் அவளைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தார்.

“நான் யாருடனும் பேசவில்லை ஆயிஷா. என்னுடன்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்தக் கிணறு எனக்கு நம் வாழ்க்கையின் கண்ணாடி மாதிரி இருக்கிறது.”

​ஆயிஷாவும் ஒரு கணத்திற்கு அந்தக் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தாள். அங்கே அவளுக்கு எந்த அழகும் தெரியவில்லை. வறண்ட சுவரும் மங்கிய ஒளியும் மட்டுமே தெரிந்தது. அவளுக்கு அந்த முதியவளின் நடைமுறைப் புத்தி வேலை செய்தது.

“கண்ணாடி என்றால் அது முகத்தைக் காட்டும். இது என்னத்தைக் காட்டும்? வெறும் குப்பையும் வறட்சியும்” என்று முணுமுணுத்தாள்.

​”இல்லை ஆயிஷா…” மஜீது தேநீர்க் கோப்பையை வாங்கிக்கொண்டு எழுந்து நின்றார். 

“இது முகத்தைக் காட்டவில்லை. நம் வாழ்வின் அடிப்படையைக் காட்டுகிறது. நாம் எதை எதையோ தேடி ஓடினோம். இறுதியில் எஞ்சியிருப்பது இந்த மௌனமும் இறைவனின் அருளுக்காகக் காத்திருக்கும் பொறுமையும்தான்.”

​அவர்கள் இருவரும் அந்தப் பின்மதியத்தின் சாய்ந்த வெயிலில் வீட்டிற்குள் திரும்பினர். மஜீது உள்ளே செல்லும் போது, வாசலில் நின்று மீண்டும் ஒருமுறை அந்த கிணற்றைப் பார்த்தார்.

​சூரியன் முழுமையாக மறைந்து மேற்குத் திசை செந்நிறமாக மாறியிருந்தது. அந்த நிறம் அப்படியே இந்தக் கிணற்றின் சுவர்களிலும் பட்டுத் தெறித்தது. பல வருடங்களாக மனிதர்களின் தாகத்தைத் தீர்த்து, இன்று தன் சொந்தத் தாகத்தினால் வறண்டுபோயிருக்கும் அந்த வட்டக் கிணறு, எந்தவொரு புகாரும் இல்லாமல், அல்லாஹ்வின் விதியை ஏற்றுக்கொண்டு, அந்த இரவின் அமைதிக் குளிர்ந்த காற்றுக்காகக் காத்திருந்தது.

​வாழ்க்கையும் அப்படித்தான். அது தரும் சோதனைகளையும் அருளையும் நாம் தாங்குகிறோம் அது வற்றும் போது அதன் வறட்சியையும் சப்ருடனும் (பொறுமையுடனும்) எதிர்கொள்ளக் கற்றுக்கொள்கிறோம். கோடைகாலத்து கிணறு நமக்குச் சொல்லும் பாடம் அதுதான் எல்லாமே தீர்ந்துவிட்டதாகத் தோன்றும் கணத்தில்தான், அதனுள் ஒடுங்கியிருக்கும் அந்தப் பிரம்மாண்டமான வானத்தின் ஆழமும், நம் படைத்தவனின் ரஹ்மத்தும் நமக்குப்புரிகிறது.

​மஜீது கதவைச் சாத்தினார். வெளியே அந்த கிணறு நட்சத்திரங்கள் உதிக்கும் அந்த இரவின் மௌனத்தை நோக்கித் தன் கண்களைத் திறந்து வைத்திருந்தது.

Series Navigationஒன்று புரிந்தது – உண்மைச் சம்பவம்சிலுவை – சுப்ரபாரதி மணியன் எழுதிய நாவல்