பாலமுருகன்.லோ
எதக் கேட்டாலும் உடனே வாங்கித் தருவது. உடனுக்குடன் கேட்ட விஷயத்தைப் பூர்த்தி செய்யறாங்க. கொஞ்சுனாலும் சரி, அழுதாலும் சரி, அவனுக்குன்னா ஒரு தனிச் சலுகைதான். இதுவே நான் ஒண்ணு கேட்டா, “இருடா, பார்க்கலாமுன்னு” தான் பதில் வரும்.
நான் என்ன பாவம் செய்தேன்? முதலில் பிறந்தது குத்தமா? நான் கேட்டேனா முதலில் வரணுமுன்னு? கடவுளா போட்ட முடிச்சு, அதற்கு நாம என்னச் செய்ய முடியும்? புது சட்டைத் தொடங்கி, சைக்கிள், ஷூ வரை எல்லாத்தையும் பத்து முறை கேட்டப்பிறகே கிடைக்கும். அது என்னவே தெரியலை, நான் கேட்டப்பத்தான் ஏதாவது வேற செலவு வந்து நிக்கும்.
அப்ப சொல்லுவாங்க, “நீ சொல்லுப்பா, எது முக்கியமுன்னு. உனக்கு ஷூ வாங்குறது முக்கியமா, இந்த வீட்டு செலவு முக்கியமான்னு?” என்னையே கேட்பார்கள் அம்மாவும் அப்பாவும்.
ஒரு நாளு கிழமை வந்துட்டா போதும், “கண்ணு, நீ போயி சாமிக்கு தேங்காய், வாழைப்பழம், வெத்தலைப் பாக்கு, சூடமெல்லாம் வாங்கிட்டு வாப்பா” என்பார்கள். இல்ல, அவன் சும்மாதான் உட்கார்ந்து டிவி பார்த்துட்டு இருக்கான்; ஏன் அவனை அனுப்ப வேண்டியதுதானே என்றால்—
“அட, சின்னப் பையன்டா, எல்லாத்தையும் உன்னைப் பார்த்துக் கத்துப்பான் படிப்படியா. நீதான் அவனுக்கு சொல்லித்தரனும்” என்பார்கள்.
இந்த மாதிரி நேரங்களில் நினைப்பதுண்டு, நாம அவனா இருந்திருக்கக் கூடாதான்னு! என்னத்தச் சொல்லி என்ன பிரயோஜனம், அது நடக்கப் போகுதா என்ன? இல்லையே! ஆனா மனசுல ஒரு நப்பாசை…
நாம அவனை மாதிரி ஷோபாவில் சம்மணம் போட்டு உட்கார்ந்துகிட்டு, இந்த அப்பா அம்மாவை அதட்டிக்கிட்டு நல்லா வேலைவாங்கனுமுன்னு. ஆனா, இது நடக்குறதுக்கு சாத்தியமே இல்ல.
அப்படித்தான் பாருங்க, தீபாவளி வந்தது. ஊர்ல உள்ளவங்க, பக்கத்து வீட்டில் உள்ளவங்கல்லாம் நிறையவே பட்டாசு வாங்கினாங்க. இங்க மட்டும், “ஏண்டா, நீதானே வளர்ந்துட்ட, இப்ப நீ பசுமை தீபாவளி கொண்டாடேன். அவன் போனாப் போறான், சின்னப் பையன், அவன் மட்டும் வெடிக்கட்டும்” என்ன நாங்க சொல்லுறது? “உனக்கு இப்ப பதினைஞ்சு வயசாச்சு, ஆனா அவனுக்கு இப்பத்தான் எட்டு ஆகுது” என்பார்கள்.
அப்பெல்லாம் வரும் பாரு கோபம்! மூஞ்சியை திருப்பிக்கிட்டு வெளியே வர்றதுதான் வழக்கம். இதை அவங்களும் என்னுடைய சம்மதம்னு நினைச்சுகிட்டு, அவனுக்கு நிறையவே வாங்கிக் கொடுப்பார்கள். அவனைக் காட்டிலும் எனக்கு ரொம்பவே கம்மியாதான் வாங்கிட்டு வருவாங்க. ஏன்னா, அவங்க தரப்பு வாதம் என்னன்னா, நான் பொக்குன்னு (உடஞ்சு போயிடுவேன்னு) போயிடுவேனா, அதனால கொஞ்சம் மட்டும் வாங்கியாருவாங்க.
இந்த அப்பா அம்மாவுக்கு புரியுதா, இல்ல புரியலையான்னு தெரியல. இன்னும் எவ்வளவு வருஷம் நான் பட்டாசு வெடிக்கப்போறேன்? மிஞ்சி மிஞ்சிப்போனா இன்னும் இரண்டு வருஷம். அதுக்குப் பிறகு கல்லூரியில சேரப்போறேன். அப்புறம் நீங்க வெடிக்கச் சொன்னாலும், நான் வெடிக்கற மனப்பக்குவத்தில் இருக்க மாட்டேன்.
ஒண்ணு மட்டும் நல்லா தெரியிது, பெரியவங்க அவங்க என்ன நினைக்கிறார்களோ அதை செஞ்சு முடிச்சடனும், இல்ல அவங்களுக்கு என்னமோ போல இருக்கும். அதில ஒரு ஆத்ம திருப்தி அவங்களுக்கு.
அதாவது பாருங்க, நான் கிழியுற வரைக்கும் துணி போடணும், ஆனா எனக்குப் பத்தாம போன துணிகளுடன், அவனுக்குப் புதுத் துணி நிறையவே கிடைக்கும். “ஏம்மா, அவனுக்கு மட்டும் விதவிதமா வாங்கிக் குவிக்கிறீங்க?”ன்னு கேட்டா, “ஏண்டா, இந்த வயசுல போடாம வேற எந்த வயசுல போடப்போறான்?” என்பார்கள்.
எனக்கு என்ன, நாற்பது வயசா ஆச்சு? பெரியவங்க நினைப்பை முதல்ல மாத்த வேணும். சின்னப் பையன்தான் இல்லைன்னு யாரு சொன்னா? அதுக்குன்னு தல மேல தூக்கி வச்சுக்கிட்டு ஆடக்கூடாது.
மேலும், எப்பப் பார்த்தாலும், “டேய், அவனைப் பார்த்துக் கத்துக்கோ”ன்னா, அப்ப அவன் பெரியவனா, நான் சின்னவனா? எல்லாம் அவங்களுக்கே அடுக்குமா.
இதுல வேற, பெத்தவங்க என்ன சொல்லுறாங்கன்னா, “டேய், உனக்கு இது மாதிரி பலமடங்கு நாங்க செஞ்சுருக்கோம். நீ சின்னப் பையனா இருக்கறப்போ, உன்னை வச்சு விதவிதமா அழகு பார்ப்போம். நீ பையனா போயிட்டே. ஆனாலும் உனக்குத் தலை பின்னிவிட்டு, ரெட்டை ஜடையெல்லாம் போட்டு, நெத்தியில் சின்ன பொட்டு வச்சு, கவுனெல்லாம் போட்டுட்டு எப்படி அழகுப் பார்ப்போம்னு தெரியுமா? இதெல்லாம் இவனுக்கும் பண்ணிப் பார்க்கிறோம். இப்ப அவனும் வளர்ந்துட்டான்மா. வயசு எட்டுமாச்சு. அதனால் அவனுக்குக் கவுனெல்லாம் போட முடியலேன்னு, விதவிதமா சட்டை, பேண்ட் போட்டு அழகுப் பார்க்கிறோமுங்கிறாங்க.”
போன தீபாவளிக்கு என்ன ஆச்சுன்னா, பட்டாசு வெடிக்கிறப்ப அவனோட கையில பட்டுடுச்சு. பார்த்துக்கிட்டு சும்மா இருக்கத் தோணுதா என்ன? புத்தியும் மனசும், “ஒண்ணேதான் சொல்லுச்சு, உடனே ஓடிப்போயி, என்னானுச்சுன்னுதான் பாரு” என்றுதான். தம்பியா போயிட்டானே, என்ன செய்யறது? இந்தத் தீபாவளிக்கு என்ன கலவரம் செய்யப் போறானே, கடவுளே…
இப்ப நினைச்சுப் பார்த்தா, அவங்கச் சொல்லுறதுலையும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது. புத்திக்கு எட்டுது, மனசு சட்டுன்னு அதுல இருந்து வெளிய வர மாட்டேங்குது.
இதுல இருந்து ஒண்ணு நல்லாவே புரியுது. “மெச்சூரிட்டி”ன்னு சொல்லுறாங்களே, அது இன்னும் நமக்கு வரல போல…
-பாலமுருகன்.லோ ✍️