இரா.ஜெயானந்தன்
தமிழக தேர்தலில் வென்ற தமிழக வெற்றிக்கழகம்( த.வெ.க.,) திரு.ஜோஷப் விஜய் அவர்களின் தலைமையில் ஆட்சி நடக்கின்றது. மிக நீண்ட அரசியல் பாரம்பரிய அரசியல்வாதிகளின் கனவுக்கோட்டை கலைக்கப்பட்டது, பழைய சைக்கிள் ஓட்டுபவர்களால் நம்ப முடியவில்லை. ஐம்பதாண்டு கால திராவிட அரசியலின், கடைசி பத்தாண்டுகள் மக்களின் நம்பிக்கை
கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. திராவிட அரசியலில் இளைஞர்களின் பங்கில்லாமல், மூத்த தலைவர்களே, மிட்டா மிராசுகள் போல், குடும்ப அரசியல் செய்ததால், மக்கள் மாற்று அரசியலை தேடினர்.
இந்த இடைவெளியை, விஜய் அவர்கள் நன்கு புரிந்துக்கொண்டு
தனது அரசியல் சாசனத்தை எழுதிவிட்டார்.
இளம் தலைமுறை ரத்தம் தமிழக சட்டமன்றத்தில் பாய்ந்து மக்களின் குறைகளை தீர்ப்பதாக வாக்களித்து, வெற்றியும் பெற்று உள்ளே ஆட்சி பீடத்தில் அமர்ந்து 100 நாள்களையும் கடந்துள்ளனர்.
த.வெ.க., வின் முதல்வரோ, மற்ற மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் நீண்ட பாரம்பரிய அரசியல் பிண்ணனி கொண்டவர்கள் அல்ல. ஆனால் கொதித்துக்கொண்டிருக்கும் மக்களின் நாடி அறிந்தவர்கள். அவர்களது தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் கட்சியின் அத்துமீறல்களையும், ஆண்டு விட்டுச்சென்ற கட்சிகளின் சாயங்களை வெளுத்துக் காட்டி, இன்றைக்கு தேவையான,ஊழலற்ற, மக்களாட்சி மலர தமிழக மெங்கும் பேசியுள்ளனர். முழுக்க, முழுக்க மக்களின் இன்றைய தேவை, ஒரு ஜனநாயக, ஊழலற்ற, மக்களாட்சி அமைய வேண்டியே திரு விஜய் அவர்களும் தன்னுடைய தேர்தல் பரப்புரையில் பேசினார். அவர்களுடைய கட்சிக்கு பல மூத்த, காலஞ்சென்ற அரசியல் தலைவர்களின் கொள்ளைகளையும் ஏற்றுக்கொண்டு (பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர் )
ஒரு மக்களாட்சி மலர பல மேடைகளில் பேசினார். இவர்கள் எதுகை மோனை இலக்கிய சிலேடைகளில் பேசாமல், மக்களின் அன்றாட மொழியில் பேசினர். குறிப்பாக குடும்ப பெண்கள், இளைஞர்கள் இவர்களின் வருங்கால வாரிசுகளின் நலனுக்காக அரசியலுக்கு வருவதாக விஜய் அவர்கள் பேசினார். அவருக்கு கூடிய கூட்டத்தைப்பார்த்த திராவிட கட்சிகள் மிரண்டன. விஜய் அவர்கள் தேர்தல் பரப்புரையில் திராவிட மாடல் கட்சிகள் மக்களுக்காக உழைக்காமல் அவர்களின் குடும்பம், வாரிசு முன்னேற செய்த அட்டூழியங்களை காட்சிப்படுத்தினர்.
கட்சி பண்ட் என்ற பெயரில் கோடிக்கணக்கான பணத்தை, பல வழிகளில் சேர்த்துள்ளனர்.
அண்ணாவுடன் திராவிட கொள்கையுடன் பயணித்த எந்த தொண்டரும் இன்று திராவிட அரசியலில் இல்லை. மூத்த திராவிட அரசியல் தலைவர்கள், தங்கள் குடும்பம், அடுத்த பத்து தலைமுறைக்கான சொத்தை சேர்த்துள்ளதாக, இன்றைய தமிழக முதல்வர் சட்டசபையில் documents evidence டு பேசுகின்றார். த.வெ.க.வில் பல படித்தவர்கள் ,மந்திரிகளாக அமர்ந்து, மக்களுக்கான பணியை தொடர்கின்றனர். சமூகத்தில் மிகவும் பின்தங்கிய,கீழான(தலித்) மக்களின் குறைகளை கேட்க, அவர்கள் சமூகத்திலிருந்தே மந்திரிகளை தேர்ந்தெடுத்துள்ளனர்.
சாதாரண மக்களின் மனங்களில் புகை மூட்டத்தில் இருந்த திராவிடர்களின் மீதான வெறுப்பை த.வெ.க. மூலதனமாக்கியது.
அண்ணாவும், அம்பேத்கரும் சொன்னது , திராவிட ஆட்சியில் வெறும் ஏட்டு சுரைக்காய் போல் ஆனது என எண்ணி மக்கள் ஒருவித குடும்ப அரசியல் நடப்பதாக எண்ணினர். மக்களுக்கு மாற்று அரசியல் தேவை என அரசை மாற்றியுள்ளனர்.
தி.மு க , அதிமுக பல நல்ல திட்டங்களை தீட்டினர். ஆனால் அவைகள் மக்களின் பயன்பாட்டிற்கு செல்வதில ஏகப்பட்ட தாமதம், தடைகள், லஞ்ச லாவண்யங்கள் என அரசின் செலவீனங்கள் மலைப்போல் உயர்ந்தன. அரசு கஜானக்கள் காலியாகின. கடன் வாங்கி காலட்சேபம் செய்தனர்.
இன்றைய த.வெ.க. அரசு ஒரு 100 நாள் குழந்தையைப்போல் தவழ்கின்றது. எங்கும் எதிலும் வெளிப்படைத்தன்மை தெரிய செயலாற்ற வேண்டுமென மந்திரிகள்,அரசு அதிகாரிகள், சட்டம் ஒழுங்கு துறை, போலீஸ்,அரசு நிர்வாகம் எல்லா இடங்களிலும் கண் கொத்தி பாம்பு போல் மக்கள் பார்க்க திரு.விஜய் சொல்லிவிட்டார். தங்களது கட்சியினர் யாராக இருந்தாலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், உடனடியாக கட்சி நீக்கம், தண்டனை உண்டு என உறுதி செய்துள்ளார்.
ஏழை மக்களின் வீடுகளில் விளக்கெரிய 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்பாக சிங்கப்பெண் திட்டம்,
போதை பொருள் தடுப்புச்சட்டத்தை கடுமையாக்கினார்.ஏழை எளியவர்கள் திருமணத்தில், மணமகளுக்கு எட்டு கிராம் தங்கம், பட்டுப்புடவை.
பிறக்கும் பச்சிளங்குழந்தைக்கு தாய்மாமன் தங்கப்பரிசு 1கிராம் தங்க மோதிரம்.
ஆங்காங்கே நடக்கும் லஞ்ச லாவண்யா பேரங்களில் மாட்டிக்கொள்ளும் அரசு அதிகாரிகள் கைது செய்யப்படுகின்றனர். நாளேடுகளில் கைது செய்யப்பட்டவர்களின் படங்களைப்போட்டு அவர்கள் செய்த தில்லுமுல்லுகளையும் எழுதுகின்றனர்.
முக்கியமாக சட்டமன்ற நிகழ்வுகளை, மக்கள் பார்க்க வேண்டுமென அதனை நேரடி ஒலிபரப்ப செய்கின்றனர். இன்றைக்கு குடும்ப பெண்கள் சீரியல்களை பார்ப்பதை நிறுத்தி விட்டு, சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒலிப்பரப்பில் பார்க்கின்றனர். அவர்களுக்காக அரசு அறிவிக்கும் திட்டங்களை தெரிந்து வைத்துள்ளனர். மீடியாவில் பொதுமக்கள் கருத்து மேடையில் அன்றாடம் வாழ்வின் தேவைகளை கூறுகின்றனர். த.வெ.க.மந்திரிகள் நேரிடையாக மக்களை சந்திக்க வருகின்றனர். சட்டம் ஒழுங்கு தவறுகின்ற இடங்களில் பொதுமக்களையும் செய்தி ஊடகங்களையும் மந்திரிகள் சந்திக்கின்றனர்.
சட்டம் ஒழுங்கு போலீஸ் நிர்வாகத்தில் மக்களுக்கு நம்பிக்கையும், உடனடி நடவடிக்கையும் எடுக்க முதல்வர் அந்த துறையை அவரது நேரடி பார்வையில் வைத்துள்ளார்.
டாஸ்மாக் துறையில் புரையோடினப்போன சிடுக்குகளை களை எடுக்க அதிகாரிகளை முடுக்கிவிட்டுள்ளனர். படிப்படியாக பள்ளி,கல்லூரி, கோயில் பக்கத்திலுள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு அதனை மூடவும் செய்தனர்.
இதுபோன்ற செயல்கள் பெண்களின் மத்தியில் த.வெ க., அரசின் நிர்வாக திறனை உயர்த்திக்காட்டுகின்றது .
பெண்களுக்கு கொடுக்கப்படும் உதவித்தொகை, மாமன்முறை மோதிரம், மின்சார பயன்பாடுகளின் சலுகை போன்ற திட்டங்கள், ஏழை எளிய மக்களிடையே பேசப்படுகின்றது.
கோயில் நிர்வாக சீர்கேடுகளை களைய முயற்சி எடுக்கின்றனர்.
மந்திரியே பல பிரசித்த பெற்ற கோயில்களுக்கு சென்று நிர்வாக முறைகேடுகளை கண்டு,அதனை சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கின்றனர். கோயில் நிலங்களை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
சென்ற ஆட்சியில் ஏற்படுத்திய நல்ல பல மக்கள் நல திட்டங்களையும், தகுந்த பெயர்களை கொடுத்து நிறைவேற்றி வருகின்றனர். அம்மா உணவகம், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு, மாணவமணிகளுக்கு மடிக்கணினி, கல்வி உதவிதொகை போன்ற திட்டங்கள் தொடர்கின்றன.
சினிமா பாணியில் சில நேரங்களில் சட்டசபை அரங்கேறுகின்றது. இதுபோன்ற நிகழ்ச்சிகளையும் மக்கள் ரசிக்கின்றனர். ஆனால் அளவுக்கு அதிகமானால் அது அசிங்கமாக தெரியும். ஓமந்தூரார், பக்தவச்சலம், ராஜாஜி, காமராஜர்,அண்ணா போன்ற அரசியல் தலைவர்கள் காலத்தில் நடந்த சட்டமன்ற நிகழ்வுகள் கண்ணியத்துடன் நடந்துள்ளதாக, பல அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றைய சட்டசபை அந்த பெயரை காப்பாற்ற வேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்காகின்றனர்.
குறிப்பாக கடந்த கால ஆட்சியில் திரிந்த சில கருப்பாடுகளை, த.வெ.க., தோட்டத்தில் நுழைய விட்டுள்ளனர். இதனை கண்டு மக்கள் கொதிக்கின்றனர்.
முக்கியமாக ஒரு நடிகையின் தொடரும் நிழல், இன்றைய தமிழக முதல்வரின் இமெஜை குறைத்துள்ளது.
இதுபோன்ற தவறுகளை த.வெ.க ,
களைய வேண்டும். எதிர்கட்சிகளுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் அல்வா போன்று இனிக்கும். இதனையே ஊதி பெருக்கி பெரிதாக்கி மக்களிடம் பேசு பொருளாக்கிவிடுவர். மக்களும் இதுகுறித்து பேசிக்கொண்டும் இருக்கின்றனர்.
ஆக, த.வெ.க. போக வேண்டிய தூரம் பல மைல்கள் உள்ளன. இவர்கள் தேர்தல் பரப்புரையில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற, நேர்மையான பாதையில் செல்ல வேண்டும்.
என்றும் மக்களின் குறைகளை கேட்கின்ற காதுகள் உடைய அரசாக
தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி செய்ய கடமைப்பட்டுள்ளனர்.
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
(குறள்).
≈===============================