சொல்லத்தவறிய கதைகள் தமிழ்நாடு ஶ்ரீவைகுண்டம் கோட்டைப்பிள்ளைமார் சரித்திரம்

author
0 minutes, 4 seconds Read
This entry is part 6 of 15 in the series 3 ஜூன் 2018

சுதந்திரப்போராட்டத் தியாகி வாழ்ந்த மண்ணில் பறிக்கப்படும் மக்களின் சுதந்திரம்

                                    முருகபூபதி – அவுஸ்திரேலியா

ஊடகங்களில் சமகாலத்தில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் தூத்துக்குடி இன்று மட்டுமல்ல,  சுதந்திர போராட்ட காலத்திலும் பிரசித்திபெற்று விளங்கியது. அங்குதான் ஓட்டப்பிடாரம் என்ற பிரதேசத்தில்  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரப்பிள்ளை பிறந்தார். இந்திய சுதந்திரத்திற்காக போராடியதுடன் சுதேசி கப்பலை ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக செலுத்தினார்.

பாளையங்கோட்டை சிறையில் வாடினார். செக்கிழுத்தார். அடிபட்டார். அவ்வாறு இரத்தம் சிந்தி சுதந்திரம் பெற்றுக்கொடுத்தவரின் மண்ணில் வாழும் மக்கள் இன்று பேச்சுச்சுதந்திரத்திற்காகவும் உயிர் வாழும் உரிமைக்காகவும் போராடும்போது துப்பாக்கி முனையில் அடக்கப்படுகிறார்கள்.

ஒரு சுதந்திரவிடுதலைப்போராளி வாழ்ந்த மண்ணில் மக்களின் சுதந்திரத்தை இன்றைய தமிழக அரசு பறித்துள்ளது! அப்பாவி மக்களை கொன்றுள்ளது!

எனது அப்பாவின் பூர்வீகம்  பாளையங்கோட்டை. அவரது உறவினர்கள் அங்கும் திருநெல்வேலி, மதுரை, சாத்தூர், தூத்துக்குடி, ஶ்ரீவைகுண்டம், சென்னை ஆகிய நகரங்களிலும் வசிக்கிறார்கள். அவர்களைத்தேடி 1984 இல் அங்கெல்லாம் பயணித்தேன். அப்பா உயிரோடு இருக்கும்போது இந்த ஊர்கள் பற்றியெல்லாம்

(கலாநிதி விதாலி பூர்ணிக்கா)

கதைகதையாகச் சொல்லியிருந்தார். ஆனால், ஒரு கதையை மாத்திரம் என்னிடம் ஏனோ சொல்ல மறந்தார். அந்தக்கதைதான் இதில் இடம்பெறும் சொல்லத்தவறிய கதை!

தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின்  பெயர்தான்  சூட்டப்பட்டிருக்கிறது.  அங்கிருக்கும்  தொழில் நுட்பக்கல்லூரியில் எனது அப்பாவின் அக்கா மகன் சந்திரசேகரன் பணியிலிருந்தவேளையில் 1984 இல்  சென்றிருக்கின்றேன். சாத்தூரிலிருந்த அவரது அண்ணன், ஆண்டபெருமாள் என்னை அங்கு அழைத்துச்சென்றார்.

ஆண்டபெருமாளும், அவர் தம்பி சந்திரசேகரனும் அவர்களின் ஊர்வழக்கப்படி என்னை மாப்பிள்ளை என்றுதான் அழைப்பார்கள். அவர்களின் தாய்மாமனாரான எனது அப்பா இலங்கை வந்து பெண் எடுத்ததுபோன்று நான் அவர்கள் ஊர்வந்து பெண்எடுக்கவில்லை என்ற மனக்குறையை போக்குவதற்கோ என்னவோ, என்னை என்றென்றும் மாப்பிள்ளை என்றே அழைத்து அன்பு பாராட்டினர்.

ஆண்டபெருமாள் மச்சான், என்னை எட்டயபுரம் அழைத்துச்சென்று பாரதி வாழ்ந்த வீடு, அவர் ஏதும் செய்யாமல் சும்மா இருந்து சில நாட்கள் காலம் கடத்திய  அரண்மனை, அமர்ந்து கவிபுனைந்த தெப்பக்குளம்,  மனைவி செல்லம்மாவுடன் நடமாடித்திரிந்த மாடவீதி, அவர் நினைவாக அமைந்துள்ள மணிமண்டபம் யாவும் காண்பித்தார்.

எட்டயபுரத்தில் ஒருதடவை நடந்த பாரதி விழாவுக்கு வந்திருக்கும் நடிகையர் திலகம் சாவித்திரி, அங்கிருந்த மக்களின் குடிநீர் தேவைக்காக சில ஊற்றுக்கிணறுகளை அமைத்துக்கொடுத்துள்ளார்.

( ஆனால், இரக்கமுள்ள அந்த  நடிகைதான் பின்னாளில் வேறு ஒரு நீருக்கு அடிமையாகி, கோமாவில் கிடந்து மறைந்தார் என்பது வேறு  ஒரு கதை)

மச்சான் ஆண்டபெருமாள், அப்பாவின் உறவினர்களின் வீடுகளுக்கெல்லாம் அழைத்துச்சென்றார். அவ்வேளையில் அவரது உறவினர் பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. எனக்கும் அந்தப்பெண்ணின் தந்தையார் திருமண அழைப்பிதழ் தந்தார். அவர் மச்சானுடன் சாத்தூர் பாடசாலையில் பணியாற்றிய ஆசிரியர்.

மணமகன் யார் தெரியுமா? திரைப்பட நடிகர் செந்தில்.

அவர்களின் திருமணம் 1984 இல் நடந்தது. அதுநடக்கும் திகதியில் நான் இராமேஸ்வரத்திலிருந்து இராமானுஜம் கப்பலில் மன்னார் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தேன்.

அன்று தூத்துக்குடி துறைமுகம் பார்த்தபின்னர் சந்திரசேகரன் மச்சான் பணியாற்றிய தொழில்நுட்பக்கல்லூரிக்குச்சென்றோம். அவர் அச்சமயம் ஶ்ரீவைகுண்டத்தில் வசித்தார். தனது குடும்பத்தினரையும் நான் பார்க்கவேண்டும் என்று அவரும் அங்கே அழைத்துச்சென்றார்.

அவர்களின் வீட்டில் மொட்டை மாடியிலிருந்து பேசிக்கொண்டிருந்தபோது,  வெளியே எட்டிப்பார்த்தேன். ஶ்ரீவைகுண்டத்தின் கோயில் கோபுரமும் அந்த ஊரும் அழகாக காட்சியளித்தன.

அவற்றை ரஸனையுணர்வுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, ஓரிடத்தில் எனது பார்வை நிலைகுத்தியது! கோட்டை போன்ற தோற்றத்துடன் சுற்றிலும் மதிலால் சூழ்ந்த ஒரு மக்கள் குடியிருப்பு தென்பட்டது. சந்திரசேகரன் மச்சான் பல சுவாரஸ்யமான கதைகளை சொன்னார். எப்பொழுதும் தேடல் மனப்பான்மையுடன் வாழும் எனக்கு, அவர் சொன்ன கதைகளினால் அதனை நேரில் சென்று பார்க்கவிரும்பும் எனது எண்ணத்தைச் சொன்னேன்.

” வேண்டாம் மாப்பிள்ளை. அங்கெல்லாம் நாம் போகமுடியாது, போகவும் கூடாது. எங்களைப்பார்க்க வந்த இடத்தில் உங்களுக்கேன் விபரீத ஆசை?” என்றார்.

” மச்சான், பத்திரிகையாளனாகவும் இருக்கின்றேன். நேரில் சென்று பார்த்தால்,  புதிதாக ஏதும் எழுதமுடியும்” என்றேன். அவர் அழைத்துச்செல்ல மறுத்தேவிட்டார். அதனால் அந்தக்கோட்டையையோ, அதனுள் வாழும் மனிதர்களையோ பார்க்கும் ஆசை நிறைவேறவில்லை.

அந்தக்கோட்டைக்குள் வசிப்பவர்களை ” கோட்டை வீட்டுப்பிள்ளைமார்” என அழைக்கிறார்கள். இவர்கள் அந்த ஶ்ரீவைகுண்டத்தில் வெளியுலக பரிச்சியம் அற்ற தனித்துவமான வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், இந்தப்பிள்ளைமார் சமூகத்தினரின் மூதாதையர்கள் காஸ்மீரில் வாழ்ந்ததாகவும், அவர்களில் பலர் அமைச்சர்களாகவும் அமைச்சு அதிகாரிகளாகவும் இருந்துள்ளனர் எனவும் அறியமுடிந்தது.

இவர்கள் ஶ்ரீவைகுண்டம் வந்து எவ்வாறு தமக்கென ஒரு கோட்டை அமைத்துக்கொண்டார்கள், இவர்களின் வரலாற்றுப்பின்னணி குறித்தெல்லாம் மச்சானிடம் ஓரளவு கேட்டுத்தெரிந்துகொண்டேன்.

எனினும் அந்தப்பயணத்தில் எந்தவொரு கோட்டைப்பிள்ளைமாரையும் சந்தித்துப்பேசுவதற்கான வாய்ப்பினை தருவதற்கு அந்த மச்சான் மறுத்துவிட்டார். மனிதன் சந்திரனிலும் கால் பதித்துவிட்டான். செவ்வாய்கிரகத்திற்கும் செல்லத்தயாராகின்றான். ஆனால், அந்த கோட்டை வாசிகள் வெளியே வராமல் எப்படி இந்த உலகத்தை தெரிந்துகொள்ளப்போகிறார்கள்? என்ற கவலை என்னை நீண்ட நாட்கள் அரித்துக்கொண்டிருந்தது.

நான் ஶ்ரீவைகுண்டம் சென்றது 1984 ஆம் ஆண்டில்.

அதன்பின்னர், 1985 இல் மாஸ்கோவில் நடந்த அனைத்துலக இளைஞர், மாணவர் விழாவுக்குச்சென்றிருந்தபோது,  அங்கு முன்னேற்றப்பதிப்பகத்தில் ( Progressive Publication) நான் சந்தித்த தமிழ் அபிமானி கலாநிதி விதாலி பூர்ணிக்கா, தான் ருஷ்ய மொழியில் எழுதியிருந்த ஒரு நூலை எனக்கு பரிசளித்தார்.” எனக்கு அந்த மொழிதெரியாது” என்றேன்.

” கவலையை விடுங்கள் தோழரே! விரைவில் இந்தப்புத்தகம் தமிழிலும் வெளியாகவிருக்கிறது. வந்ததும் கிடைக்கச்செய்கின்றேன்” எனச்சொன்னவர், அதன் உள்ளடக்கம் குறித்தும் சொன்னார்.

அவரது வாயிலிருந்து ஶ்ரீவைகுண்டம் உதிர்ந்தது! அவரும் கோட்டைப்பிள்ளைமார் பற்றி சொல்லத்தொடங்கினார். அதன்பின்னர் அந்த கோட்டையின் ரிஷிமூலம், நதிமூலம் ஆராயும் எண்ணமும் என்னிடமிருந்து மறைந்துவிட்டது.

1987 இல் அவுஸ்திரேலியா வந்துவிட்டேன். வித்தாலி ஃபூர்ணிக்கா எழுதிய அந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ” பிறப்பு முதல் இறப்புவரை”. ( மொழிபெயர்த்தவர் நா. முகம்மது செரீபு) அதனை சென்னை நியூ செஞ்சுரி புக்ஸ் பதிப்பகம் வெளியிட்டது. நண்பர் கே. கணேஷ் இலங்கையில் கண்டி தலாத்து ஓயாவிலிருந்து தபாலில் அனுப்பியிருந்தார்.   மாஸ்கோவில் முகம்மது செரீபு அவர்களுடனும் தொலைபேசியில் பேசியிருக்கின்றேன். பல சோவியத் இலக்கியங்களை தமிழுக்கு வரவாக்கியவர்.

இந்தச்சொல்லத்தவறிய கதைகளை எழுதும் வேளையில் எம்மை விட்டுப்பிரிந்துவிட்ட இந்த இலக்கிய நண்பர்களையும் சில தமிழக உறவினர்களையும் நினைத்துப்பார்க்கின்றேன்.

அந்தக்கோட்டைப்பிள்ளைமாரின் கதையை விதாலி ஃபூர்ணிக்கா எப்படித்தான் தேடி எடுத்தாரோ தெரியவில்லை. 1940 இல் உக்ரேயினில் சாதாரண விவசாயக்குடும்பத்தில் பிறந்து ஒரு கட்டிடத்தொழிலாளியானவர். உக்ரேயினில் ஒரு புத்தகக்கடையில் மகாகவி பாரதியின் கவிதைகளின் ருஷ்ய மொழிபெயர்ப்பை படித்துவிட்டு, தானும் தமிழ்படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழகம் வந்து அறிஞர் மு. வரதராசனிடம் தமிழ் கற்றவர்.

ஜெயகாந்தனின் அருமை நண்பர். ஃபூர்ணிக்காவின் நினைவாக ” நட்பில் பூத்த மலர்” என்ற நூலையும்  ஜெயகாந்தன்  எழுதியுள்ளார்.  ஃபூர்ணிகா ஈழத்து – தமிழக எழுத்தாளர்களின் பல படைப்புகளை ருஷ்யமொழிக்குப்பெயர்த்தவர். தமிழகப்பித்தன் என்ற புனைபெயரில் எழுதியவர். தமது பட்டப்படிப்பு  ஆய்விற்காக தமிழக கிராமங்களுக்குச்சென்று களஆய்வுமேற்கொண்டவர்.

சோவியத்தில் பாரதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட வேளையில் அதில் இணைந்து ஆக்கபூர்வமாகச்செயற்பட்டு, சோவியத்தின் தங்கப்பதக்கம் விருதும் பெற்றவர்.

வித்தாலி ஃபூர்ணிக்காவின் அந்த நூல் கிடைத்தமையால் அந்த கோட்டைப்பிள்ளைமார் பற்றி மேலும் அறியமுடிந்தது.

காஷ்மீரத்தில் அரசவையில் வாழ்ந்த அந்த குடிமக்களின் மூதாதையர்கள், பாண்டிய நாட்டின் அரண்மனையில் சேவையாற்ற அழைக்கப்பட்டிருக்கிறார்கள். பாண்டிய மன்னனுக்கும் தென்னவராயனுக்கும் இடையே போர் மூண்டபோது, அந்த மக்களுக்கும் ஆபத்து வந்துள்ளது. ஆனால், எத்தகைய நெருக்கடிகளை சந்திக்கவும் கூட்டுச்சாவினை ஏற்கவும் அவர்கள் தயார் நிலையிலிருந்தபோது, புதிய மன்னன் பராக்கிரமன் அவர்களுக்கு அடைக்களம் தருவதற்கு முன்வந்திருக்கின்றான்.

மதுரையை அடுத்து, ஐந்து ஹெக்டயர் நிலமும் முன்னூறு வீடுகளும் தருவதாக வாக்குறுதி அளித்து, அவர்களை குடியமர்த்திய இடம்தான் அந்த கோட்டைப்பிரதேசம்!

ஶ்ரீவைகுண்டத்தில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் பற்றி வெளியே வாழ்ந்தவர்களிடம் கதை கேட்டிருக்கிறார் அந்த சோவியத் அறிஞர்.

அதில் அதிர்ச்சியான கதையொன்றும் இருக்கிறது. ஶ்ரீவைகுண்டம் கோயிலின் திருவிழாவின்போது அதனைப்பார்ப்பதற்காக ஒரு இளம்பெண் அந்த கோட்டை மதில் சுவரில் ஏறி எட்டிப்பார்த்திருக்கிறாள். அதனால், அவளைத்தண்டித்த அந்த பிற்போக்குச்சமூகம் அவளை தீயிட்டுகொளுத்தியிருக்கிறது!  ஏனையவர்களுக்கு இச்சம்பவம் ஒரு பாடமாகப் புகட்டப்பட்டிருக்கிறது.

அந்தக்கோட்டைக்குள்ளிருந்த ஆண்களுக்கு மாத்திரமே வெளியே சென்றுவருவதற்கு அனுமதி இருந்திருக்கிறது. பெண்கள் கோட்டையை தாண்டிச்செல்ல முடியாமல் அடைபட்டு வாழ்ந்திருக்கிறார்கள். அவ்வாறு வாழ்ந்தாலும், ஆண்கள் வெளியே சென்றபின்னர்தான் பெண்கள் நேருக்கு நேர் சந்தித்துப்பேசிக்கொண்டனர். அவர்களிடையே நடந்திருக்கும் திருமணங்களும் பேராச்சரியம் தருபவை.

அந்தக்கோட்டைக்குள் வாழும் பெண்ணுக்கு மணமகன் கிடைக்கவில்லையென்றால் அவளது மூத்த சகோதரியின் கணவனுக்கே இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படுகிறாள்.  By one get one என்ற இந்தத் திருமண நடைமுறை அந்த மாப்பிள்ளை மாருக்கு கொண்டாட்டமா? திண்டாட்டமா? என்பதுதான் தெரியவில்லை!

பெண்கள் கர்ப்பம் தரித்தாலும் வெளியே சென்று மருத்துவம் பார்க்கமுடியாது. அவர்கள் மத்தியிலேயே பெண் மருத்துவச்சி இருப்பாள். வெளியே இருக்கும் ஆண் மருத்துவர்கள் அங்கு வரவே முடியாது?

அந்தக்கோட்டைக்குள் அவ்வாறு புனிதம் போற்றப்பட்டிருந்தாலும் 1973 இல் அங்கு ஒரு கொலைச்சம்பவம் நடந்திருக்கிறது. அதற்கான காரணங்கள் தெரியவில்லையாம். பொலிஸாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லையாம்! அதனையடுத்து சில குடும்பங்கள் வெளியேறியிருக்கின்றன.

அதில் ஒரு மூதாட்டி வெளியே செல்லும் பஸ்வண்டிகளை கண்டுவிட்டு அதிர்ச்சியினால் நினைவிழந்திருக்கிறாள். எப்படி இருக்கிறது கதை?

வாகனங்களையே வாழ்க்கையில் கண்டிராத பெண்கள் அந்தக்கோட்டைக்குள் எப்படி வாழ்ந்திருப்பார்கள்? என்பதை இதுவரையில் எவரும் கண்டுபிடித்து எழுதவில்லை. 18 – 19 – 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் இப்படியும் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற செய்தியை சோவியத் அறிஞர்தான் களஆய்வுசெய்து பதிவுசெய்துள்ளார்.

சுஜாதாவும் கணையாழி இதழின் கடைசிப்பக்கத்தில் ஶ்ரீவைகுண்டம் கோட்டைப்பிள்ளைமார் பற்றி ஒரு குறிப்பு எழுதியுள்ளார். தமிழக படைப்பாளிகள் இந்த கோட்டையை தரிசித்தால், அற்புதமான நாவல் ஒன்று எழுதமுடியும் என்ற சாரப்பட சுஜாதா எழுதியிருந்தார்.

எமது முன்னோர்களின் வாழ்வைச்சித்திரித்து திரைப்படம் எடுக்கும் தமிழ் இயக்குநர்கள்,  திரைப்பட கதாசிரியர்களின் கண்களுக்கு இதுவரையில் தென்படாத அந்தக்கோட்டையும் அந்த மாந்தரும் சோவியத்தின் உக்ரேயினிலிருந்து சென்றிருக்கும் விதாலி பூர்ணிக்காவுக்கு தெரிந்திருக்கிறது.

இணையம் உலகை சுருங்கவைத்துக்கொண்டிருக்கும் இக்காலத்தில், மாந்தர்களை கோட்டைக்குள் சுருங்க வைத்த அந்தக்கால  காஸ்மீரத்து சந்ததியினர் நினைவுக்கு வருகிறார்கள்.

letchumananm@gmail.com

 —0— 

Series Navigationஅந்த நாளை எதிர்நோக்கிமாறும் அளவுகோல்களும் மொழிப்பயன்பாடுகளும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *