நீராதாரத்தின் எதிர்காலம்

Spread the love

தேமொழி

 

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவம்.  உலகின் பெரும்பான்மைப் பகுதி நீரினால் சூழப்பட்டிருந்தாலும் உயிரினங்கள் வாழத் தேவையான நீராதாரத்தின் பற்றாக்குறை இந்த நூறாண்டின் தலையாயப் பிரச்சனையாகவே இருப்பதை நாம் யாவரும் அறிந்துள்ளோம். இதனால் மூன்றாம் உலகப் போரும் நிகழக்கூடும் என்று எச்சரிக்கப் படுகிறது. நீராதாரத்தைத் தடையின்றிப் பெற மரம் வளர்த்தல், சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளில் தன்னார்வக் குழுக்களும் அரசுகளும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.  அத்துடன் நீராதரத்தின் தேவையை திட்டமிடத் தொழில்நுட்பமும் உதவக்கூடும் என்றால் அந்த முயற்சி வரவேற்கத் தக்கதாகவே இருக்கும்.

 

உலக ஆதாரவளங்கள்  நிலையம் (World Resources Institute / WRI) உலகில் நீராதாரத்தில் ஏற்படும் மாறுதல்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களின் தாக்கத்தை முன்னறிய உதவும் ஒரு மென்பொருள் தளத்தை உருவாக்கியுள்ளது.  அதிக வெள்ளப்பெருக்கினாலோ அல்லது நீரற்ற வறட்சி காரணமாகவோ ஏற்படக்கூடிய பாதிப்புகளை கணிக்க இத்தளம் உதவ வேண்டும் என்பது இதனை உருவாக்கிய உலக ஆதாரவளங்கள்  நிலையத்தின் குறிக்கோள். “ஆக்வடக்ட்” (Aqueduct) ‘கால்வாய்’ என்ற பொருள் படும் இந்த மென்பொருள் உருவாக்கும் வரைபடங்கள், நீர்வளத்தினால் விளையக்கூடிய  அபாயங்களை ஆய்ந்தறிய ஒரு சிறந்த கருவியாகும். இதனை உருவாக்க உதவியதில் ஜி.இ (GE), ஷெல் (Shell), ப்ராக்டர் அண்ட் காம்பிள் (Procter & Gamble) போன்ற பெருவணிக நிறுவனங்களும் பங்கு பெற்றுள்ளன.

 

இந்த வரைபடங்கள் அபாயம் குறைந்த பகுதிகளை வெளிர் மஞ்சள் நிறத்தில் தொடங்கி, அதிக அபாயத்திற்குரிய பகுதிகளை கருஞ்சிவப்பு நிறம் வரை வேறுபடுத்திக் காட்டும் வகையில் உருவாக்கப் படுகிறது.  இதுவரை உருவாக்கப்பட்டவைகளிலேயே மிகத் துல்லியமாக தகவல்களைக் குறிக்கும் வரைபபடமாகவும், அத்துடன் நிலத்தடி நீர் அளவின் தகவல்களையும் இணைத்து வழங்கும் வகையில் அமைந்திருப்பது இதன் சிறப்பு.

 

மிக சமீபத்தியத் தகவல்களை (2010 ஆம் ஆண்டு) உள்ளடக்கிய இந்த வரைபட மென்பொருள், உலக அளவில் நீரினை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு கூறுகளை அளக்க உதவுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் உபயோகத்திற்காகக் கிடைக்கும் நீரின் அளவின் வேறுபாடு, வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்பு (எத்தனை முறை வெள்ளம் ஏற்படுகிறது, அது விளைவிக்கும் பாதிப்பின் தீவிரம் போன்ற தகவல்கள்), வறட்சியின் தீவிரம் (எவ்வளவு காலத்திற்கு, எந்த அளவிற்கு தீவிரமாக வறட்சி பாதிக்கிறது), நிலத்தடி நீரின் அளவு, மாசுபடுத்தப்பட்ட நீர்நிலைகளின் தகவல்கள், நீர் சுத்திகரிப்பிற்குத்  தேவைப்படும் நீரின் அளவு, நீராதாரச் செய்திகளுக்கு ஊடகங்கள் தரும் முக்கியத்துவம், பருவநிலை மாறுதல்களினால் ஏற்படும் இடர்கள், போன்ற பல முக்கியத் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு, அவற்றினை ஆராய்ந்து, கணித்து, அதன் அடிப்படையில் கிடைக்கும் தகவல்களினைக் கொண்டு இந்த வரைபடங்கள் உருவாக்கப் படுகின்றன.

 

அத்துடன் இந்த வரைபடங்கள் மேலே குறிப்பிடப்பட்டவைகளை உள்ளடக்கிய மிக முக்கியமான 12 நீர் அபாயக் குறியீடுகளைக் (water risk indicators) கொண்டு நீராதாரத் திட்டமிடலுக்கு உதவியாகக் கணிக்க உதவுகிறது.  நீராதார பற்றாக்குறையினால்  வேளாண்மை, உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு, வேதிப்பொருட்கள் உற்பத்தி, மின்சாரம், குறைக்கடத்திகள் (semiconductor), எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி, சுரங்கத் தொழில், கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு, நெசவுத் தொழில் ஆகிய தொழில் துறைகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை அறிய முடியும். மேலும், நாட்டின் எந்தப் பகுதிகளில் நீராதார அபாயத்தின் தாக்கம் தீவிரமாகக் காணப்படும் என்பதையும் கண்டறியலாம்.

 

ஒவ்வொரு தொழில் துறை மற்றும் ஒவ்வொரு அறிகுறிகளுக்கும் எனத் தேவைகேற்ப தகவல்களைத் தனித்தனியாகவும்; இவை அனைத்தையும் அடுக்குகளாக (layers) ஒன்றன் மேல் மேல் ஒன்றாக ஒருங்கிணைத்து பொதுவான தகவல்களையும் அறிய முடியும்.  இதனால் நிகழ் காலத்திலும் எதிர்காலத்தில் நீராதாரத்தில் ஏற்படக்கூடிய மாறுதல்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.  இது போன்ற தகவல்களால் நீராதாரத்தை நம்பியுள்ள தனிப்பட்ட தொழில் துறைகளும், அரசும் தங்கள் திட்டமிடுதலை சீர் செய்து கொள்ள இயலும். தனியார் தொழில் துறைகளுக்கும், அரசாங்கங்களுக்கும், அரசுசாரா அமைப்புகளுக்கும் இத்தகவல் திட்டமிடுதலுக்கு மிகவும் உதவும். ஏனைய பெரும்பாலோருக்கு ஒன்பது தொழில்துறை அறிகுறிகளையும் ஒருங்கிணைத்து, ஒட்டுமொத்தமாகக் கருத்தில் கொண்டு முன்னிருப்பாக (default) அமைக்கப்பட்ட விளக்கப்படமே போதுமானது.

 

இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் நீர்த்தேவை என்பதே நாடுகள் சந்திக்கப் போகும் பெரிய சவால்களில் ஒன்றாகும். அத்துடன் அதிமுக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சவாலாகவும் நீராதார வளம் அமைந்திருக்கிறது என்று இந்த மென்பொருளினை வடிவமைத்த உலக ஆதாரவளங்கள்  நிலையத்தின் இயக்குனர் பெட்சி ஓட்டோ (Betsy Otto, Director of Aqueduct for WRI) குறிப்பிடுகிறார்.

 

இந்தியாவைப் பொறுத்தவரையில் நாட்டின் வடபகுதியில் இமயத்தில் இருந்து தோன்றும் வற்றாத நதிகளினால் வெள்ள அபாயம் ஒருபுறம் இருந்தாலும், நாட்டின் தென் பகுதியில் பருவ மழைகள் பொய்க்கும் பொழுது வறட்சி ஏற்படும் நிலையும் உள்ளது.  அதிலும் குறிப்பாகக் காவிரி பாசனப் பகுதியின் நீராதாரம் விவாதங்களுக்கு உட்பட்டே இருக்கிறது.  நியாயமாக, இயற்கையில் நதியின் போக்குப்படி உழவுத் தொழிலுக்கு கிடைக்க வேண்டிய நீர்பங்கீட்டினைக் கேட்டு தமிழகம் போராட, தங்களுக்கே நீர் போதவில்லை எனக் கர்நாடகம் கைவிரித்து போராட்டம் நடத்தும் நிலை யாவரும் அறிந்த ஒரு முடிவற்ற தொடர் கதை.  இந்த இரு மாநிலங்களுக்கிடையேயான  நீர்ப் பிரச்சனை நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு செல்லவேண்டிய கட்டாயமும் தொடர்ந்து வருகிறது.  நீதிமன்றத்தின் தலியீட்டுக்குப் பிறகும் நீராதாரப்  பிரச்னை இரு மாநிலங்களுகிடையிலும்  தீர்ந்தபாடில்லை.  இந்த சூழ்நிலையை ஆராயும் பொருட்டு இந்த மென்பொருளைக் கொண்டு உருவாக்கப் பட்ட தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, மற்றும் கர்நாடகா மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியப் பகுதியின் வரைபடங்களில், தென்னிந்தியாவின் தற்கால நீராதரமும், நீராதாரத்தின் எதிர்கால நிலையின் படங்களும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

watere1

 

water2

 

வரைபடங்கள் அளிக்கும் தகவலின்படி தமிழகத்தின் நிகழ்காலம் மற்றும் எதிர்கால நீராதாரத்தின் நிலை கவலைக்குரியதாகவே இருக்கிறது என்பதை நாம் அறியமுடிகிறது

 

குறிப்பு:

இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போன்ற நீராதாரத்தின் எதிர்காலத்தை ஆராய்ந்தறியும் படங்களை உருவாக்க இத்தளத்திற்குச் செல்லவும்: http://aqueduct.wri.org/

 

 

மேலும் தகவல்களுக்கு:

http://pdf.wri.org/aqueduct_metadata_global.pdf

http://www3.weforum.org/docs/WEF_GlobalRisks_Report_2013.pdf

Series Navigationமீள்தலின் பாடல்திருக்குறள் முற்றோதல் நிறைவு விழா அழைப்பிதழ்