வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்

This entry is part 5 of 48 in the series 15 மே 2011

insurance எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு பல் முளைத்தது. ஒரு வயதில் முளைக்கும் பாற்பல்லல்ல. பதின்ம வயதில் முளைக்கும் ஞானப்பல். தாமதமாக முளைக்க நேர்ந்த கோபத்திலோ என்னவோ அந்தப் பல் நேராக முளைக்காமல், வாயின் கீழ்த் தாடை எலும்புக்குள் முளைத்து, வெளியே வராமல் மறைந்து கொண்டது. அதற்குள்ளும் சும்மா இருக்காமல், எலும்பை அரித்து அரித்து, முட்டைக் கோது போல ஆகும் வரை எந்தவித வலியையும் கூடக் காட்டவில்லை. பிறகு, அவருக்கு வலிக்க ஆரம்பித்த பிறகுதான் தாங்க முடியாமல் பல் வைத்தியரிடம் போயிருக்கிறார். தொடர்ந்த மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் பல மருத்துவர்களின் இறுதி முடிவாக, ஒரு சத்திர சிகிச்சைக்கு அவர் உள்ளாக வேண்டியிருந்தது. பாதிக்கப்பட்ட கீழ்த் தாடையை முற்றாக அகற்றி விட்டு, அந்த இடத்தில், அவரது காலிலிருந்து இரத்த நாளங்களோடு எடுக்கப்பட்ட எலும்பொன்றைப் பொருத்த, சுமார் பன்னிரண்டு மணி நேரம் சத்திர சிகிச்சை செய்தனர் மருத்துவர்கள். சுமார் நான்கு இலட்சம் இந்திய ரூபாய்களுக்கும் அதிகமாகச் செலவாகிய இச் சத்திர சிகிச்சை, வெற்றிகரமாக நிறைவுற்ற போதிலும், பிரச்சினை பிறகுதான் ஆரம்பித்தது.

 

சிகிச்சைக்கு முன்னதாக நண்பர், இந்தியாவிலும் இலங்கையிலும் மிகவும் புகழ்பெற்ற, முகத் தாடை எலும்பு சிகிச்சை மருத்துவ நிபுணரொருவரை மருத்துவ சிகிச்சைக்காக அணுகியிருக்கிறார்.

‘ இது எனக்கு ஒரு பெரிய விஷயமேயில்ல..ஒரு பத்து லட்சம் செலவாகும்.’

‘ பத்து லட்சமா?’

‘ சரி..ஏழு லட்சத்துக்குப் பண்ணிக் கொடுக்கிறேன்’

‘ ஏழு லட்சமா?’

‘ ம்ம் உங்களுக்காக வேணும்னா ஐந்து லட்சத்துக்குப் பண்ணலாம்’

‘ஐந்தா?’

‘ சரி விடுங்க..உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம்..மூணு லட்சத்துக்கே பண்ணிக் கொடுக்கிறேன்’

இவ்வாறு ஏதோ காய்கறிக் கடையில் பேரம் பேசுவது போலப் பேசி, ஒரு முடிவுக்கு வந்த மருத்துவர், அடுத்து சொன்னதுதான் நண்பரை அவ்விடத்தை விட்டும் ஓட வைத்திருக்கிறது. ‘உங்களுக்கு நாப்பது வயசாயிடுச்சு… இந்த சிகிச்சை சக்ஸஸ் ஆகலைன்னாலும் கவலைப்படாதீங்க..நாப்பது வயசுக்கு மேல பல்லிருந்தா என்ன? இல்லாட்டி என்ன?’

பிறகு நண்பர் வேறு மருத்துவர்களை அணுகி, சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டது தனிக்கதை. பிரச்சினை அதுவல்ல. இந் நண்பர், ஆயுள் காப்புறுதி நிறுவனமொன்றில், ஒரு காப்புறுதித் திட்டமொன்றுக்கு இலட்சக்கணக்கான பணத்தினைக் கட்டி இணைந்திருந்தார். அக் காப்புறுதித் திட்ட ஒப்பந்தத்தில், மருத்துவச் செலவுகளை அந் நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் சொல்லப்பட்டிருந்தது. அதனை நம்பிய அவர், இந்தச் சத்திர சிகிச்சைக்காக தான் செலவழித்த கணக்கு விபரங்களை, சிகிச்சை நடந்து முடிந்து, வீட்டுக்கு வந்த உடனேயே அந் நிறுவனத்துக்கு அனுப்பி, அப் பணத்தை மீளக் கேட்டிருக்கிறார். அந் நிறுவனத்திடமிருந்து உடனடியாக ஒரு பதில் வந்திருக்கிறது ‘நீங்கள் குறித்த நேரத்தில் அனுப்பவில்லை. ஆகவே பணம் தர இயலாது’ எனக் குறிப்பிட்டு.

ஒருவர் தனது பணத்தினைக் கட்டி, காப்புறுதித் திட்டங்களில் இணைவது ஏன்? தனக்கு இயலாமல் போகும் நிலையொன்றில் அந் நிறுவனமானது தனது பணத் தேவையை, தனது சார்பில் ஈடு செய்யக் கூடும் என்ற நம்பிக்கையில்தான். இது சரியா தவறா என நான் விவாதிக்க வரவில்லை. ஆனால் அவ்வாறாக ஒரு மனிதரை நம்பச் செய்து, அவரது பணத்தை புன்னகையோடு வாங்கிக் கொண்டு, பிறகு பிரச்சினை என்று வரும்போது கை கழுவி விட்டு விலகிப் போகும் நயவஞ்சகத்தனம், இக் காப்புறுதி நிறுவனங்களில், இக் காலங்களில் மிகைத்திருக்கிறது. உலக அளவில் பெயர் பெற்ற நிறுவனங்கள், தன்னை நம்பிய, நம்பிக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களை இவ்வாறு நம்ப வைத்து ஏமாற்றுவது நியாயமா? சட்டத்தில் இதற்கு இடமிருக்கிறதா என்ன?

நண்பர் இதனை எளிதில் விட்டுவிடவில்லை. நிறுவனத்தை அணுகி வாதித்தார். தலைமை நிறுவனத்துக்குப் போய்க் கேட்கச் சொல்லி அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள். அங்கும் போய் முறையிட்டு, கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கழிந்தன. பதிலெதுவும் வரவில்லை. நிறுவனம் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தது. ‘ஒரு அழைப்புப் போதும்..உடனே உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து விடுகிறோம்’ என, காப்புறுதித் திட்டங்களில் இணையச் சொல்லி இனிக்க இனிக்கப் பேசி அழைக்கும் விளம்பரங்களுக்கும், அந் நிறுவனங்களின் உண்மையான நடைமுறைகளுக்கும் சம்பந்தமேயில்லை. மீண்டும் நண்பர் அந் நிறுவனத்தை அணுகியதில் இன்னுமொரு கடிதம் அந் நிறுவனத்திடமிருந்து வந்தது. அதில் ‘நீங்கள் அழகுக்காக செய்துகொண்ட சிகிச்சையாதலால் பணம் தர இயலாது’ என்றிருந்தது.

நண்பரின் மனது புண்பட்டுப் போனது. யாராவது அழகுக்காக, தனது முகத்திலிருக்கும் கீழ்த் தாடையை ஏழு பற்களோடு சேர்த்து அகற்றி, நன்றாக இருக்கும் தனது காலிலிருந்து எலும்பை உருவித் தாடையில் பொருத்தி, நடக்க முடியாமல், சாப்பிட முடியாமல், குழாய் மூலம் உணவருந்தியபடி, ஆடாமல் அசையாமல், ஆறு மாதமாகப் படுக்கையில் கிடக்க விரும்புவார்களா என்ன? அந்த நிறுவனம் அப்படித்தான் சொன்னது. மீண்டும் அணுகி விசாரித்ததில் அக் காப்புறுதி நிறுவன மருத்துவர்கள் சொன்ன பதில் ‘நாங்கள் முகத்தில் உள்ள எலும்புகளுக்கு ஏதேனுமென்றால்தான் பணம் கொடுப்போம்.. தாடை எலும்புகள் முகத்தில் இல்லை’ என்பதுதான். முகத்திலுள்ள வாய்க்குள் இருக்கும் தாடை எலும்புகள் மட்டும் முகத்தை விட்டுத் தனியாகவா இருக்கின்றன?

நண்பருக்குத் தாங்க முடியவில்லை. புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தார். நுகர்வோர் குறைதீர் மன்றத்துக்குச் சென்று, தனக்கு நிகழ்ந்த அநீதிகள் எல்லாவற்றையும் கூறி ஒரு வழக்கினைத் தாக்கல் செய்தார். விசாரணைக்கு வந்த அந் நிறுவன வக்கீல் அங்கு, சிகிச்சையானது மேல் தாடையில் நடந்திருந்தால் மட்டுமே காப்பீட்டுத் தொகையை வழங்க முடியுமென வாதித்தார். வழக்கு தொடர்ந்து நடந்தது. இரண்டு வருடங்களாக நண்பரும், அவரது குடும்பமும் அனுபவித்த மன உளைச்சலுக்கும், அலைச்சல்களுக்கும் பலனாக, இறுதித் தீர்ப்பு நண்பருக்கு சாதகமாகவே வந்தது. காப்பீட்டுத் தொகை, நஷ்ட ஈட்டுத் தொகை, வழக்குச் செலவு என அனைத்துச் செலவுப் பணத்தையும் அந் நிறுவனத்திடமிருந்து நண்பருக்கு வாங்கிக் கொடுத்தது.

நண்பர் நன்கு படித்தவரென்பதால், இறுதி வரை போராடி தனது பணத்தினை மீளப் பெற முடிந்தது. ஆனால் இது போன்ற காப்புறுதி நிறுவனங்களில் இணைந்திருக்கும், இந்தளவுக்குப் போராட முடியாதவர்கள் என்ன செய்வார்கள்? ஏன் இந்தக் காப்புறுதி நிறுவனங்கள் இப்படி ஏமாற்றுகின்றன? அவர்களது விளம்பரங்களும், இனிய குரல்களில் பேசும் தொலைபேசி அழைப்புக்களும், நிறுவன முகவர்களின் நேரடி வருகைகளும் உரையாடல்களும் அனேகமானவர்களை இவ்வாறான காப்புறுதித் திட்டங்களில் இணையச் செய்துவிடுகின்றன. எனினும் எல்லோருக்குமே அவர்கள் அத் திட்டத்தில் இணையும்போது சொல்லப்பட்ட எல்லாக் காப்பீடுகளும், எந்தவிதப் போராட்டங்களுமின்றி உடனடியாகக் கிடைத்துவிடுகின்றனவா என்ன?

நான் இங்கு குறிப்பிட்ட மருத்துவரைப் போலத்தான், காப்புறுதி நிறுவனங்களும் கூட. இவர்கள் எல்லோருமே பொதுமக்களின் துயரங்களில், பிரச்சினைகளில், வலிகளில் வாழ்பவர்கள். ஏமாந்து ஏமாந்து, தொடர்ந்தும் ஏமாந்து இவர்களை வாழ வைத்துக் கொண்டிருப்பது பொதுமக்கள் என்பது மட்டும்தான் நூற்றுக்கு நூறு சதவீதமான கசக்கும் உண்மை, உலகெங்கும் !

– எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigationபிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்இந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *