பஞ்சதந்திரம் தொடர் – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு

This entry is part 38 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

ஆப்பைப் பிடுங்கிய குரங்கு

ஒரு பிரதேசத்திலே நகரம் ஒன்று இருந்தது. அதன் அருகே ஒரு தோப்பில் யாரோ ஒரு வியாபாரி கோவில் ஒன்று கட்டிக்கொண்டிருந்தான். அங்கு வேலை செய்யும் ஆட்கள் மேஸ்திரி எல்லோரும் உச்சி வேளையில் சாப்பிடுவதற்காகத் தினந் தோறும் நகரத்துக்குச் செல்வது வழக்கம். ஒருநாள் அவர்கள் இல்லாத நேரத்தில் ஒரு குரங்குக் கூட்டம் பாதி கட்டப்பட்டிருந்த அந்தக் கோவிலை அடைந்தது. அங்கு தச்சன் பாதி பிளந்து போட்டிருந்த ஒரு பெரிய கட்டை கிடந்தது. அதன் உச்சியிலே வேலமரத்தினால் செய்த ஆப்பு ஒன்று அடிக்கப்பட்டிருந்து. குரங்குகள் தங்களிஷ்டம் போல் மரத்தின் உச்சிகள், உயர்ந்த கட்டிடங்கள், மரத்தூள் குவியல்கள், எல்லாவற்றின் மீதும் ஏறி விளையாடத் தொடங்கின. அப்பொழுது கேடுகாலம் நெருங்கிய ஒரு குரங்கு ஆசையோடு அந்தக் கட்டையின் மேல் ஏறி, ”வேண்டாத இடத்தில் யார் இப்படி ஆப்பு அடித்திருக்கிறார்கள்?” என்று சொல்லி அதைக் கைகளால் பிடித்துப் பிடுங்கத் தொடங்கியது. பாதி பிளக்கப்பட்டிருந்த மரத்தின் இடைவெளியில் இறங்கியிருந்த அதன் விரைகள் ஆப்பு விடுபட்டதும் அதனிடையில் சிக்கிக் கொண்டன. பிறகு என்ன நடந்திருக்கும் என்பது உனக்கு விவரிக்காமலே தெரியும்.
அதனால்தான், ‘புத்திசாலிகள் அனாவசியமான விவகாரத்தில் தலையிடலாகாது’ என்று சொல்கிறேன். சிங்கம் சாப்பிட்டு மிச்சமான ஆகாரம் நமக்கு இருக்கவே இருக்கிறது; இதெல்லாம் நமக்கெதற்கு?” என்று கரடகன் சொல்லிற்று.

தமனகன்: ”சாப்பாட்டை மட்டும் விரும்பி, பெருமையை விரும்பாத நீ, எப்படி உயர்வான காரியங்கள் செய்வாய்?”

மித்திரர்களுக்கு உபகாரமும், சத்ருக்களுக்கு அபகாரமும் செய்து புத்திமான்கள் அரசனைத் திருப்தி செய்கிறார்கள். வயிற்றை நிரப்புகிற வேலை யாருக்குத்தான் முடியாது?

என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

மேலும், யாருடைய வாழ்க்கையை நம்பி அநேக உயிர்கள் வாழ்கின்றனவோ அவன் வாழ்க்கையே வாழ்க்கை; அலகு உள்ள காக்கை கூடத்தான் தன் வயிற்றை நிரப்புகிறது. குருவுக்கும், உறவினருக்கும், ஏழைக்கும், வேலைக்காரர்களுக்கும், யார் தயை காட்டுவதில்லையோ அவன் இந்த உலகத்தில் வாழ்ந்தென்ன பயன்? பலியாக வைக்கிற அன்னத்தைத் தின்று காக்கை கூடத்தான் வெகு நாள் ஜீவிக்கிறது!

தசையும் பசையுமின்றி சில நரம்புகள் மட்டுமுள்ள அழுக் கடைந்த வெள்ளெலும்பைக் கடிப்பதிலேயே நாய் திருப்தியடைந்து விடுகிறது. ஆனால் அதன் பசி அதனால் தணிகிறதில்லை.

தன் காலடியில் அகப்பட்டுக்கொண்ட நரியைச் சிங்கம் பொருட்படுத்துவதில்லை. யானையை அடித்துக் கொல்வதிலேதான் அது குறியாயிருக்கிறது. அதுபோல, எவ்வளவுதான் கஷ்டமான நிலைமை ஏற்பட்டாலும், அவனவன் தன்தன் நிலைக்கேற்ற பலனைத்தான் அடையப் பார்க்கிறான்.

உணவளிப்பவனிடம் நாய் வாலையாட்டி குழைந்து குழைந்து வந்து விழுந்து புரண்டு வாயையும் வயிற்றையும் காட்டுகிறது. ஆண்யானையோ என்றால், சுயகௌரவத்தை விட்டுக் கொடுப்ப தில்லை. ரொம்பவும் வேண்டிக்கொண்டபிறகுதான் யானை தின்ன ஆரம்பிக்கிறது.

சிறிய அருவியில் சீக்கிரத்தில் நீர் நிரம்பும்; சுண்டெலியின் கையும் சீக்கிரம் நிரம்பிவிடும். அதுபோல, சின்னப் புத்தி படைத்த மனிதர்கள் அற்ப விஷயத்திற்கும் சந்தோஷம் அடைகிறார்கள்.

பல வேததர்ம சாஸ்திரங்களையும் கைவிட்டு, நன்மை தீமை களை ஆராய்வதிலும் புத்தியைச் செலுத்தாமல், வயிறு நிரப்புவதிலேயே விருப்பங்கொள்ளும் மனித மிருகத்துக்கும், மிருகத்துக்கும் என்ன வித்தியாசம்?

சமதரையிலும் கரடுமுரடான நிலத்திலும் ஏர் இழுத்தோ அல்லது கழுத்தைக் குனிந்து பாரமான வண்டியை இழுத்துக் கொண்டோ செல்கிற மாடுகள் நல்லவை, புனிதப் பிறவி பெற்றவை. புல்மேய்ந்து திருப்தியடைகிற அவற்றுடன் மனித மிருகத்தை எப்படி ஒப்பிடமுடியும்?”

என்றது தமனகன்.

இதற்குக் கரடகன், ”நமக்கோ இப்பொழுது வேலை கிடையாது. இதில் நாம் தலையிடுவானேன்?” என்று கேட்டது.

”வேலையற்றிருப்பவனுக்கும் கொஞ்ச காலத்தில் வேலை கிடைக்கும். பேச்சு வழக்காய் இதைக் கேட்டதில்லையா?

அரசனுக்கு ஊழியம் செய்தால் வேலையற்றவனுக்கும் வேலை கிடைக்கிறது. வேலையிருந்தும் அதைச் செய்யாதவன் வேலையற்ற வனாகிறான்.

பிறருடைய விருப்பினாலோ வெறுப்பினாலோ ஒருவன் உயர்வு தாழ்வு அடைவதில்லை; அவன் அவன் செய்கையின் விளைவாகத்தான் மதிப்போ அவமதிப்போ அடைகிறான்.

மலையுச்சிக்குக் கற்களைக் கொண்டு போவது மிகவும் சிரமம். ஆனால், மலையிலிருந்து கற்களைக் கீழே தள்ளிவிடுவது ரொம்பச் சுலபம். அதுபோலத்தான் குணமும் தோஷமும் ஒருவனை வந்தடைகின்றன”

என்றது தமனகன்.

”சரி, விஷயத்துக்கு வா! நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?” என்றது கரடகன்.

”இதோ பார்! எஜமானரும் அவர் பரிவாரங்களும் பயந்துபோய் ஒன்றும் செய்யத் தோன்றாமல் நிற்கின்றனர்” என்றது தமனகன்.

”அது எப்படி உனக்குத் தெரியும்?” என்று கரடகன் கேட்டது.

”தெரிவதற்கு அதில் என்ன இருக்கிறது?”

வெளிப்படையாகச் சொன்ன வார்த்தையின் அர்த்தத்தை மிருகம்கூடப் புரிந்து கொள்ளும். குதிரைகளும், யானைகளும் தூண்டிய பிறகுதான் பாரத்தைச் சுமக்கின்றன. ஆனால், வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் பண்டிதன் ஊகித்தறிந்து விடுவான். பிறர் இங்கிதத்தை அறிய முடியாவிட்டால் புத்தி இருந்து என்ன பயன்?

முகக்குறி, அங்க அசைவு, நடை, செய்கை, வார்த்தை ஆகியவற்றாலும், கண்களிலோ முகத்திலோ ஏற்படும் மாறுதலாலும் ஒருவன் மனதில் நடப்பதை நாம் அறிகிறோம். ஆகையால், இன்றே என் புத்தி சாதுரியத்தால் எஜமானரை வசப்படுத்தப் போகிறேன்”

என்றது தமனகன்.

”உனக்கு ஊழியம் செய்யவே தெரியாதே! எஜமானரை எப்படி உன் வசமாக்குவாய்?” என்றது கரடகன்.

”ஊழியம் புரிவதென்பது எனக்குத் தெரியாத விஷயமா? பாண்டவர்களின் விராடநகரப் பிவேசத்தின்போது வியாச மாமுனிவர் சேவகர்களின் தர்மத்தைப் பற்றிச் சொன்னதெல்லாம் எனக்குத் தெரியுமே!

பலசாலிக்குப் பாரம் என்று ஒன்றில்லை; முயற்சியுடையவர் களுக்குத் தூரம் என்று ஒன்றில்லை; கல்விமான்களுக்கு அந்நிய பூமி என்று ஒன்றில்லை; அன்புடன் பேசுபவர்களுக்கு அந்நியன் என்று ஒருவருமில்லை

என்று சொல்லக் கேட்டதில்லையா?” என்று பதிலளித்தது தமனகன்.

”உனக்குத் தகுதியற்ற இடத்தில் நீ நுழைந்தால் எஜமானர் ஒருவேளை உன்னை அவமதிக்கலாம்” என்றது கரடகன்.

”நீ சொல்வதும் உண்மைதான். ஆனால் நான் சமய சந்தர்ப்பத்தை அறிந்து நடப்பேன்.

சமயாசமயம் அறியாமல் பிருகஸ்பதியே பேசினாலும் அவன் சன்மானம் பெறாது போவதுமட்டுமல்ல, வெறுப்பையும் தேடிக் கொள்கிறான். அரசன் யோசனை செய்யும் பொழுதும், ரகசிய வேலை நிமித்தமாயச் செல்லும் பொழுதும், ஓய்வு எடுக்கும் பொழுதும், மந்திராலோசனை செய்யும் பொழுதும், அறிவாளி (வாய்ப்பு இருந்த போதிலும்) திடீரென்று அரச சந்நிதானத்தில் நுழைவதில்லை.

இன்னும்,

பேசும்பொழுதும், விவாதித்துக்கொண்டிருக்கும் பொழுதும், சாப்பிடும்பொழுதும், மனைவியுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கும் பொழுதும், மலஜலம் கழிக்கும்பொழுதும் (யாரும் தடுக்காமற் போனாலும்) இங்கிதமறிந்தவன் இடையே நுழையக் கூடாது.

அரசமாளிகையில் ஒருவன் தினம் தினம் பயந்து நடக்க வேண்டும். குருவின் இல்லத்தில் தங்களைக் குருவின் வேலையாட்களாக நினைத்துக் கொண்டு மாணவர்கள் நடக்க வேண்டும். அப்படியில்லாமல், பயபக்தியின்றி நடக்கிறவன் துரிதமாகவும் நிச்சயமாகவும் நாசமடைவான். சந்தோஷ நேரத்தில் ஏழை வீட்டில் ஏற்றிய விளக்கு சீக்கிரமே எரிந்து அணைந்து விடுவது போல் அழிந்து போவான்.

மன்னன் மாளிகையில் நுழையும்பொழுது தலைகுனிந்து, ஆடை திருத்திக் கொண்டு, போ! அந்தந்த நேரத்தில் அரசனுடைய மனோநிலையையும் சித்தத்தின் போக்கையும் அறிந்து தக்கபடி நட!

கல்வியுமின்றி, குலமுமின்றி, புகழுக்குத் தகுதியுமின்றி இருந்தாலும் சரி, அரசன் அருகில் ஒருவன் இருந்தால் போதும்; அரசன் அவனை ஆதரிக்கிறான். அரசர்கள், ஸ்திரீகள், கொடிகள் இவை மூன்றும் அருகில் எது இருக்கின்றதோ அதைப் பற்றிக் கொள்கின்றன.

அரசனின் அருகிலிருந்து அவனது கோபத்தையும் காருண்யத்தையும் அறிந்து நடக்கிற சேவகர்கள், அந்த அரசனின் கடுகடுப்பையும் சமாளித்து மேலேறிக் கொள்கின்றனர்.

வீரன், வித்வான், பணிவிடை செய்யத் தெரிந்தவன்- இம்மூவர் மட்டுமே பூமியில் பொன்மலரைப் பறிக்கிறார்கள்.

ராஜசேவை எப்படிச் செய்வது என்பதைக் கேள்!

அரசனது அன்புக்குரியவனாகி செல்வாக்குப் பெற்றுள்ளவன், அல்லது விசேஷமான நாவன்மை படைத்தவன், இவர்கள் மூலமாகத் தான் கல்விமான்கள் அரசனை அணுகுகிறார்கள். அரசனை அணுகுவதற்கு வேறு வழி கிடையாது.

பகுத்தறிவு அற்ற பிறவியிடம் பண்டிதன் உழைப்பதில்லை. கரிசல் நிலத்தை உழுவதில் பலன் சிறிதும் கிடையாதல்லவா?

பணமும் நாடு மில்லாவிட்டாலும் யோக்கியதையுள்ள அரசனுக்குச் சேவை செய்! வெகுகாலம் பிடித்தாலும், பின்னால் உன் வாழ்க்கை முழுதும் அதன் பயனை அனுபவிப்பாய்.

வேலையாள் எஜமானையே துவேஷித்தால் அதைவிட மோசமான நிலை அவனுக்கு வேறில்லை. யாருக்கு உழைக்கிறோம் என்று உணராமல் துன்பப்படுகிறவன் தன்னைத் தானே நிந்தித்துக் கொள்ள வேண்டியதுதான்.

அரசனிடம் நடந்து கொள்கிறமாதிரியே அரசனின் தாயார், ராணி, அரசகுமாரன், முக்கியமந்திரி, புரோகிதன், வாயில் காப்போன் ஆகியோரிடமும் எப்பொழுதும் நடந்து கொள்ள வேண்டும்.

ரணகளத்தில் அரசனுக்கு முன்னே செல்பவனும், நகர வீதியில் அரசனுக்குப் பின்னே போகிறவனும், அரண்மனையில் தொங்கித் திரிபவனும், அரசனுக்குப் பிரியமானவனாகிறான்.

விசாரித்தபொழுது முகஸ்துதி செய்பவனையும், கார்யா கார்யத்தை அறிந்து செய்பவனையும், சந்தேகம் கிளப்பாமல் சொன்னதைச் செய்பவனையும், அரசன் விரும்புகிறான். அரசனிட மிருந்து பெற்ற செல்வத்தை யார் பத்திரமாகத் தனியே வைத்து விட்டு அவர் அளித்த வஸ்திரத்தை மட்டும உடுத்தி நடக்கிறானோ அவனைத்தான் அரசன் விரும்புகிறான்.

குத்தலும் ஏளனமுமாக அரசன் பேசும்பொழுது யார் பதிலுரைப்பதில்லையோ, யார் அரசன் அருகில் உரக்கச் சிரிப்ப தில்லையோ, அவனை அரசன் விரும்புகிறான்.

அந்தப்புர ஆட்களுடனும், அரசனின் மனைவிகளுடனும், யார் ரகசியம் பேசுவதில்லையோ அவனை அரசன் விரும்புகிறான்.

அரசனுக்கு எப்பொழுதும் தான் வேண்டியவன் என்ற மமதையிலே, கஷ்டகாலத்தில் மரியாதைக் குறைவாக யார் நடந்து கொள்ளாமலிருக்கிறானோ அவனையே அரசன் விரும்புகிறான்.

அரசனுடைய எதிரியைத் தானம் வெறுத்து, அரசன் பிரியத்தைப் பெற்றவர்களுக்கு விருப்பமான காரியத்தைச் செய்கிறவனையே அரசன் விரும்புகிறான்.

அரசனுடைய எதிரியுடன் ஒட்டுறவும் கோள்சொல்லும் பழக்கமும் பேச்சு வார்த்தையும் யார் வைத்துக் கொள்ளாமல் இருக்கிறானோ அவனையே அரசன் விரும்புகிறான்.

யார் சண்டையையும் சமாதானத்தையும் பயமின்றி ஒன்றாகப் பாவிக்கிறானோ, – வெளியூரில் இருப்பதையும் சொந்த ஊரில் இருப்பதையும் ஒன்றாகப் பாவிக்கிறானோ – அவனையே அரசன் விரும்புகிறான்.

சூதாட்டத்தை யமனாகவும், மதுவை ஆலகால விஷமாகவும், பிறர் மனைவியரைச் சிலைகளாகவும் யார்பாவித்து நடக்கிறானோ அவனையே அரசன் விரும்புகிறான்

என்று பதிலளித்தது தமனகன்.

இதைக் கேட்ட கரடகன், ”சரி. அங்கே போய் முதலில் என்ன பேசுவாய்? அதைச் சொல்!” என்றது.

Series Navigationவாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது.ஆதிசங்கரரின் பக்தி மார்க்கம்
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *