பரிணாம வளர்ச்சியில் மனிதன் அடைந்த மிகப்பெருமாற்றல் மனமாகும். சில உளவியலாளர்களின் கருத்துப்படி மனமானது நமது மூளையில் உருவாகும் ஒட்டுமொத்த சிந்தனைகளின் மையமாக கருதப்படுகிறது. ஆனால் உடலில் இதன் அமைவிடத்தையோ அதன் உருவத்தையோ இதுவரை எவராலும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. மேலும் சில பெளதீகவியலாளர்களின் கருத்துப்படி மனமானது எம்மைச் சுற்றியுள்ள கோளவடிவான சிந்தனைவெளி என்றும் கொள்ளப்படுகிறது. அந்தவகையில் அவ்வெளியின் கனவளவானது அவரவர்களின் எண்ணங்களின் பரிமாணங்களிற்கேற்ப சுருங்கி விரியும் தன்மையுள்ளதென்றும் அதன் கனவளவு குறுகும்போது மனதின் ஆற்றல் பெருமளவு அதிகரிக்கின்றதென்றும் நம்பப்படுகிறது. அந்தவகையில் உருவமற்ற உணரமட்டுமே கூடிய மனதை ஒரு பேராற்றலாகவே கருதமுடியும். நம்மில் பலர் மனதின் உண்மையான ஆற்றலை அறியாது அவ்வாற்றலை தேவையற்ற விடயங்களில் விரயமாக்குகிறோம். மனதின் ஆற்றலை மிக எளிமையாக விளக்கின், ஒரு விடயத்தில் நாம் மனமொன்றி ஈடுபடும்போது அதில் நாம் கூடிய பயனடைவதைக் கொள்ளலாம். உதாரணமாக ஒரு பாடத்தை சற்று ஈடுபாட்டுடன் கற்கும்போது அது பல நாட்கள் ஞாபகத்தில் இருப்பதை உணரலாம்.
மனதை பொதுவாக நாம் இரண்டு பகுதிகளாகக் கொள்ளலாம்; நமது அன்றாட கடமைகளில் ஈடுபட உதவுவதும் எம்மை முழுமையாக ஆட்கொண்டிருப்பதுமான புறமனம், நம்மில் பலர் உணர்ந்துகொள்ளாததும் எப்போதும் ஆழ்ந்த அமைதியுடன் இருப்பதுமான ஆழ்மனம். புறமனமானது சதாகாலமும் நமது எண்ணங்களின் குப்பைக்கூடையாகவே காணப்படுகின்றதுடன் ஆழ்மனத்தை ஒரு மாயத்திரையாக இருந்து மறைக்கின்றது. நாம் சற்று அமைதியான நேரத்தில் கண்ணை மூடியிருக்கும்போது நம் புறமனதில் ஒன்றன்பின் ஒன்றாக எதோவொரு நூலிழை தொடர்பில் ஒட்டிக்கொண்டு எண்ணற்ற எண்ணங்கள் ஊற்றெடுப்பதை உணரமுடியும். அவ்வெண்ணங்களை நாம் நிறுத்த முயற்சிக்கும்போது அவ்வெண்ணவூற்று மேலும் வலுவடைவதை அறியலாம். இதனாலேயே முறையான குரு வழிகாட்டல் இல்லாமல் தியானத்தில் ஈடுபடுபவர்கள் மனதை அடக்குவதாகக் கூறிக்கொண்டு அப்பேராற்றலாலில் ஊற்றெடுக்கும் எண்ணங்களை கட்டுப்படுத்த முயன்று, முடியாமல் சினங்கொண்டு தியானப்பயிற்சியினையே வெறுத்து கைவிட்டுள்ளனர். அதற்குக் காரணம் புறமனதில் ஊற்றெடுக்கும் எண்ணங்களை புறமனதைக் கொண்டே கட்டுப்படுத்த முயன்றதேயாகும்.
இவ்வூற்றெடுக்கும் எண்ணங்களை அவற்றின் போக்கிலேயே விட்டு நாம் ஒரு சாட்சியாக இருந்து அவற்றை அவதானிக்கும்போது பலநாள் முயற்சியின் பின், திடீரென நமது ஆழ்மன அமைதி திரை விலகி மேலெழுந்து வர ஊற்றெடுக்கும் எண்ணங்கள் ஒவ்வொன்றாக அதில் கரைந்து செல்வதை உணரலாம். இவ்வாறு எண்ணவூற்றானது நிறுத்தப்பட்டு வீணாகவிரயமாகும் மனதின் ஆற்றலானது ஒருமுகப்படுத்தப்படும்போது அது எம்முள் மறைந்து கிடக்கும் குண்டலினி சக்தியை உயிர்ப்பூட்டுவதாக நம்பப்படுகிறது.
இக்குண்டலினி சக்தியை சற்று நோக்குவோமானால், இதற்கு மூலாதார சக்கரம் (Coccygeal), சுவத்ஸ்தான சக்கரம் (Sacrum), மணிப்புர சக்கரம் (Lumbar), அனாஹட சக்கரம் (Thoracic), விஷுத்தி சக்கரம் (Cervical), ஆக்ய சக்கரம் (Center of eyebrow), சகஸ்ரார் சக்கரம் (Center of head) எனும் ஏழு நிலைகள் உள்ளன. இவ்வொவ்வொரு நிலையும் தமக்கென தனித்தனி பண்புகளை உடையன. அவை முறையே உற்சாகம், உணர்ச்சி, விளக்கம் உணர்தல், காட்சி, தூரதரிசனம், இயக்கம், அடக்கம் என்பதுடன் ஒவ்வொரு நிலையாக அச்சக்தி மேலெழும்போது (முள்ளந்தண்டின் அடியிலிருந்து தலையின் உச்சிவரை) நமது ஆற்றல் பலமடங்கு அதிகரித்து முக்திநிலைக்கு வழிகோலுகிறது. இதனை பல ஞானிகள் அநுபவரீதியாக கண்டு கூறியுள்ளனர். இச்சக்தி கைவரப்பெற்றவர்கள் சாதாரண அறிவுக்கெட்டாத பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளனர். சாதாரணநிலையில் இச்சக்கரங்கள் உடலின் இயக்கத்தை முறையாக பேணுவதற்கு மாத்திரமே உதவுகிறது.
அந்தவகையில் மனதின் ஆற்றலானது ஒன்று குவிக்கப்பட்டு அது சுய விசாரணையாக (self inquiry) முன்னெடுக்கப்படும்போது ஒவ்வொருவரும் தமது ஆத்ம அறிவிற்கேற்ப பல்வேறு அநுபவங்களைப் பெறுகிறார்கள். அவ்வநுபவங்கள் புறமனதின் போலித்தோற்றங்கள் என்பதை உணராமல் அதனையே இறுதிநிலையாக பற்றிக்கொண்டவர்களுமுண்டு. ஆனால் இவற்றைக் கடந்து செல்லும்போது இறுதியில் நாம் மனமற்ற நிலையை அடைகிறோம் என்றும் அங்கே இடம், பொருள், நேரம் என்றெதுவுமற்று `எனது இருப்பு` என்ற பிரக்ஞை (consciousness) மாத்திரமே இருந்துகொண்டிருக்கும் என்றும் அந்நிலை உணர்ந்த ஞானிகள் கூறியுள்ளனர். இந்நிலையையே இந்துமதம் அத்துவைதம் (இரண்டற்ற நிலை) என்கிறது. ஞானியானவன் `நான் யார்` (self realisation) என்று அறிவதோடு மட்டுமல்லாது இச்சிருஷ்டியின் தத்துவங்களையும் விளங்கிக்கொள்கிறான்.
இம்மனஆற்றலை ஒரு கருஈர்ப்பு மையத்துடன் (black hole) ஒப்பிட்டு நோக்கின் கருஈர்ப்பு மையமானது எவ்வளவுக்கெவ்வளவு தன்னை சுருக்கிக் கொள்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதன் ஈர்ப்பாற்றல் அதிகரிக்கும். அதேபோன்றே மனமும் ஒருமுகப்படுத்தப்படும்போது அதன் ஆற்றல் அளவிட முடியாது அதிகரிக்கின்றது. அதை நாம் கருஈர்ப்பு மையத்தின் இருப்பை உணர்ந்து அறிவதுபோன்று உணரமட்டுமே முடியும்.
மனிதனானவன் தற்போது உடற்கூற்றியல்ரீதியாக பரிணாமணவளர்ச்சியின் உச்சத்திலிருப்பதாகவும் இனிமேல் ஏற்படும் பரிணாமவளர்ச்சியானது மனம் சார்ந்ததாகவே (psychometabolism) இருக்கும் எனவும் அது அடுத்த கட்டபாய்ச்சலுக்கான வாசல்படியில் (on the threshold of a change) நிற்கிறது எனவும் Julian Huxly எனும் ஆய்வாளர் நம்புகிறார். இவ்வகையில் இன்னும் சில ஆயிரம் வருடங்களிலோ அதற்கு முதலோ தற்போதய மனமாது பேர்மனமாக பரிணாம மாற்றமடையுமென நம்பப்படுகிறது. அப்போது மனிதன் இருந்த இடத்திலிருந்துகொண்டே பல செயல்களை தனது எண்ணங்கள் மூலம் செய்து முடிக்கும் மனவாற்றல் படைத்தவனாக மாற்றம்பெறுவதுடன் அவன் தனது முப்பரிமாண எல்லைகளைக் கடந்து வேறு பரிமாணங்களில் தனது இருப்பை நிறுவுவதற்கான வல்லமையுடையவனாக அதாவது கால-வெளியை கடந்தவனாக இருப்பான் என்று நம்பப்படுகிறது. சுவாமி அரவிந்தரும் தன்பெருமுயற்சியால் பேர்மன ஆற்றலை பூமியை நோக்கி இறக்கியதன் மூலம் அதற்கான அடித்தளத்தை இட்டுள்ளார் என்றே கொள்ளலாம்.
பேர்மனம் தொடர்பான கலந்துரையாடல்
குழப்பம் (1)
பரிணாமத்தை ஆராயும் நவீன ஆராச்சியாளர்கள் குறிப்பிட்ட பரிணாம எதிர்வு கூறல்களை முன் வைக்கிறார்களா? இனி பரிணாமம் மனம் சார்ந்தே இருக்கும் என்பதை ஏலவே இந்த கட்டுரை குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் குறிப்பிட்டு இந்த இந்த ஆற்றல்களை நோக்கி மனிதம் நகரும் என்று அழுத்தம் திருத்தமான பதிவுகள் ஏதும் உண்டா ? பரிணாமத்தில் புதிதாக புலன் சக்தி வரப்பெறுவதே குறிப்பிடத்தக்க கூர்ப்பாக கூறலாம் அல்லவா ? அப்படி புதிய புலனறிவுக்கு வாய்ப்பிருக்கா ?
நாங்கள் எங்களுக்கு இருக்கும் புலன்களை மட்டும் வைத்து அறிந்து கொண்டுள்ள இந்த உலகம், மேலும்சில புலனறிவுகள் பெற்றபின்னர் அறியும் உலகத்திலிருந்து முற்றாக மாறுபட்டிருக்கலாம், குருடன் யானையை விவரித்தால் போல் நம் உற்றறிவு புலன்களால் மட்டுப்படுத்தப்பட்டே உள்ளது, Matrix திரைப்படம் இந்த தர்கத்திலமைந்ததே, நாம் காணுவது எல்லாம் மாயை என்று அந்த தர்க்கத்திற்கு கடைசி பாகத்தில் கீதையை சான்று படுத்தியிருப்பார்கள். ஒரறிவு கற்பனைக்கு ஓரறிவு ஜீவன்களது உற்றறிவு கொண்டு இந்த உலகை எப்படி புரிந்துகொண்டிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆனால் ஆறாம் அறிவு ஒரு கொடை… மற்றறிவுகளைக் காட்டிலும் இது உற்றறிவின் எல்லைகளை மிகத் தொலைவிற்கு தள்ளி இருக்கின்றது. ஆறாம் அறிவினால் இனிப் பெற இருக்கும் எல்லா அறிவையும் எதிர்வு கூற முடியுமா ? இந்த தேடல் ஒரு முடிவற்ற சுழற்சியா (infinite loop) இல்லை தொடத் தொட விரியும் முடிவற்ற வலையா ?
இதனைப் பற்றி நான் இன்னொரு கட்டுரையில் விரிவாக ஆராய எண்ணியிருந்தேன். தற்போது சுருக்கமாக நோக்கின்,
கூர்ப்பியலாளர்கள் பரிணாமவளர்ச்சியில் உடற்கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியே அதிகளவில் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அதில் மனத்தினை மூளையின் ஒட்டுமொத்த தோற்றப்பாடாகவே கருதுகின்றனர். அந்த வகையில் மனித பரிணாமவளர்ச்சியில் ஏனைய உடற்கூறுகளைவிட மூளையானது அதன் பருமனில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதென்றும் அதுவே தற்போதைய மனிதனது ஆற்றல் மிக்க அறிவுவிருத்திக்கு முக்கிய காரணமென்றும் கூறுகின்றனர். எனவே மூளையின் பருமன் கூர்ப்பில் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அதன் மூலம் அறிவுவளர்ச்சியும் மனவளர்ச்சியும் ஏற்படலாம் என்றும் எதிர்வு கூறுகின்றனர். ஆனால் சில விஞ்ஞானிகள் இதற்கு எதிரான கருத்தை முன் வைக்கிறார்கள் எவ்வாறெனில் நமது மூளையானது அதனது பரிணாம வளர்ச்சியின் உச்சத்திலிருப்பதாகவும் அது ஏற்கனவே உடலில் பிறப்பிக்கப்படும் சக்தியின் 20% தினை தனது பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்வதாகவும், இதன் பருமன் பரிணாமவளர்ச்சியியில் மேலும் அதிகிரிக்கும்போது அதன் அதிகரித்த சக்திப்பயன்பாட்டை பூர்த்திசெய்ய அதிகளவு குருதி மிக வேகமாக இருதயத்தினால் கூடிய விசையுடன் குருதிக்கலன்களினுள் வெளித்தள்ளப்படவேண்டி வருவாதால் இருதயத்தின் பருமனும் அதற்கேற்றால்போல் ஏனைய உடல் அங்கங்களது பருமனும் விருத்தியடைய வேண்டுமென்கிறார்கள். எனவே மூளையின் பருமன் மேலும் அதிகரிப்பது அசாத்தியமே என்கிறார்கள். அத்தோடு நரம்புக்கூற்றியலாளர்கள் (Neurologists) மனித மூளையின் பருமனுக்கும் புத்திக்கூர்மைக்கும் (IQ) தொடர்பில்லையெனெவும் அது மூளை எவ்வளவு வினைத்திறனாக அதனது ஏனைய பகுதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது என்பதினாலும் பெற்றுக்கொண்ட அநுபவத்தினாலுமே தீர்மானிக்கப்படுவதாக கூறுகின்றனர். அந்தவகையில் ஒரு சராசரி அறிவுள்ள மனிதன் தற்போது மூளையின் 10% தையே பாவிப்பதாக அவர்கள் கருதுகின்றனர். எனவே பரிணாமவளர்ச்சியில் மூளையின் பருமனில் அதிகரிப்பு ஏற்படுவதைவிட மூளையின் 100 சதவீதத்தையும் பாவிப்பதற்கான ஆற்றல் ஏற்படவே அதிக இடமுண்டென அவர்கள் கருதுகின்றனர். அம்மனிதன் பேர்மன ஆற்றல் படைத்தவனாக இருக்க இடமுண்டு.
ஆனால் இயற்கையாக இடம்பெறும் கூர்ப்பானது மரபணுப் பொறியியல் (Genetic Engineering), மாற்று மனிதத்துவம் (Transhumanism), செயற்கை அறிவூட்டல் (Artificial Intelligence), படியாக்கம் (Cloning) போன்ற பல மனிதத் தலையீடுகள் காரணமாக எப்பாதையில் பயணிக்கும் என்றும் அதன் விளைவுகள் எவ்வாறு அமையும் என்றும் எதிர்வுகூறுவது சற்றுக் கடினம். இவை மனிதனை இலத்திரனியல் ஊடான அமரத்துவத்திற்கு (Electronic Immortality) இட்டுச்சென்றாலும் இறுதியில் மனிதன் மனிதத்தன்மையை இழந்து பிரக்ஞையுடைய ஒரு இயந்திரமாக மாறுவதற்கான சந்தர்ப்பங்கள் மிக அதிகம். சில வேளைகளில் இவை மனித இனத்தினை பேரழிவிற்கும் இட்டுச்செல்ல்லாம்..
புதிய புலனறிவை பற்றி நோக்கினால் தற்போது ஆரம்பநிலையில் காணப்படும் ரெலிபதியினைக் (Telepathy) கொள்ளலாம். ஆய்வாளர்களின் கருத்துப்படி இது காலப்போக்கில் ஏழாவது அறிவாக விருத்தியடையும் வாய்ப்பும் உள்ளது. அதன்போது உலகின் எம்மூலையில் இருந்தாலும் தமக்கு வேண்டியவருடன் மனவாற்றலால் தொடர்பை ஏற்படுத்தமுடியும். இதனால் உலக தொலைபேசி தொடர்பாடல் முறைமை முற்றாக அழிந்துபோகலாம். சிலவேளைகளில் மொழிக்கான தேவையும் அற்றுப்போகும் வாய்ப்புள்ளது. இவ்வாற்றலை அதிகளவு கைவரப்பெற்றவர்கள் தமது எண்ணங்களை மற்றவர்களின் மூளைக்குள் பலவந்தமாக ஏற்றவும் வாய்ப்புண்டு.
தற்போது எமக்கிருக்கும் புலனறிவைக் கொண்டு இப்பிரபஞ்சத்தை ஆராய முற்படுவது என்னைப் பொறுத்தவரையில் ஒரு குரங்கானது Quantum physics இனை விளங்கிக்கொள்ள முற்படுவதற்கு ஒப்பானது. ஒவ்வொரு கணமும் விரிந்து கொண்டிருக்கும் இந்தப்பிரபஞ்சத்துக்கு ஆதியேது அந்தமேது? இது விரிந்து கொண்டிருக்கும் இப்பெருவெளிக்கு ஒரு முடிவில்லையா? இம்மாய வெளிக்குள் சிதறுண்டு ஓடிக்கொண்டிருக்கும் கோடானகோடி உடுத்தொகுதிகளும் அவை கொண்டுள்ள எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் அவற்றைச் சீராக சுற்றிவரும் கோள்களும் இவற்றை ஆங்காங்கே விழுங்கி ஏப்பம் விடும் கருஈர்ப்பு மையங்களும் வெடித்துச்சிதறும் சுப்பனோவக்களும், இவையனைத்தினயும் கொண்டியக்கும் ஆற்றல் எது? இவற்றின் மத்தியிலே ஒப்பீட்டளவில் இன்மையாகக் காணப்படும் மனிதனது இருப்பும் அவனுக்கே தெரியாமல் அவன் காலில் மிதியுண்டு இறக்கும் ஒரு எறும்பின் இருப்பும் கருதுவது என்ன? இது நமது பகுத்தறிவிற்கு ஒரு முடிவற்ற சுழற்ச்சி. நம்மை நாம் அறியும்போது இவை அனைத்தும் கரைந்து நமக்குள்ளே ஒடுங்கும். அங்கே `நான்` என்ற பிரக்ஞை மட்டுமே பேரானந்தமாக எஞ்சியிருக்கும்.
குழப்பம் (2)
“நினைத்தால் வருவது அல்ல கவிதை இதயம் கனத்தால் வருவது கவிதை……” – கண்ணதாசன்
கனத்த இதயத்தை ஒருமுகப்படுத்துவது கடினம், அப்போ கவிதை புனைகிற புலவர் மனம் ஒருமுகப்படுதா இல்லை விரிந்து பறக்குமா? குறிப்பாக கற்பனை என்பது மனத்தின் வியாபகமா சுருக்கமா ?
கனத்த இதயம் ஒருமுகப்படுமா என்ன? ஒருமுகப்பட்ட மனது குறுகி (நீ சொன்ன கோளம்) சோம்பி அயர்ந்து விடும் எனும் சித்திரம் தானே வருகிறது விரியிற மனம் தானே புதிய சித்தாந்தங்களை சிருஷ்டிக்க முடியும். தான் எனும் பிரக்ஞையை மட்டும் உணரும் ஒடுக்கம் புதிய சித்தாந்தங்களை படைக்குமா ?
கவிதா உணர்வை கொண்ட மனத்தை வைரமுத்து இப்படி உவமிக்கிறாரே “இதயம் பறவை போல் ஆகுமா ? பறந்தால் வானமே போதுமா ?”
ஒடுங்குகின்ற மனது சோம்பி அயர்ந்து விடுவதில்லை. அது தனது அறிவினை ஒன்று குவித்துப் பெற்ற ஆற்றலில் திடமாக நிற்கும். விரிகின்ற புறமனம் தேவையற்ற எண்ணங்களினால் நிறைந்து தனது ஆற்றலை இழந்து அயர்ந்துவிடும். அதன்போது செய்யவேண்டிய காரியத்தில் ஒரு தெளிவான பார்வை இருக்காது. அந்தவகையில் ஒரு கவிதையை வடிக்கும்போது நாம் பல்வேறு தளங்களில் பெற்றபதிவுகள், அநுபவங்கள் (ஒரு பறவை போல) ஒரு தளத்தினை நோக்கி மையப்படுத்தப்படுகிறது. அங்கே மனமானது ஒருமுகப்படுத்தப்படுகிறது, அப்போது வடிக்கப்படும் கவிதையானது அவ்வாற்றலை முழுமையாக வெளிக் கொணரும்போது அக்கவிதையில் உள்ள கவித்துவம் உச்சநிலையை அடைகிறது. அதைத்தான் பாரதியார், ”தசையினை தீ சுடினும் சிவ சக்தியை பாடும் நல் அகம் கேட்டேன்” (அதாவது தசையினை தீ சுடும் அதீத வலியையும் பொருட்படுத்தாமல் சிவசக்தியை பாடும் ஒருமுகப்படுத்தப்பட்ட மனம் வேண்டும்) என்று பாடுகிறார்.
இங்கு நான், ஒரு கவிதையானது வெவ்வேறு தளப்பதிவுகளை எவ்வாறு ஒரு தளத்தினை நோக்கி குவிக்கிறது என்பதற்கு மு.பொ வின் `திறனாய்வின் புதிய திசைகள்’ என்ற நூலில் எடுத்துக்காட்டப்படும் தருமு சிவராமுவினதும் நீலாவணனினதும் கவிதைகளை உதாரணங்களாகத் தருகிறேன். இக்கவிதைகள் எவ்வாறு அவை எழுதப்பட்ட அகவயப்பட்ட நுண்ணுணர்வு என்ற தளத்தினை தமது ஆத்மார்த்த சொற்கள்களால் நிமிரவைக்கின்றன என்பதைப் பாருங்கள்.
தருமு சிவராமுவின் கவிதை…
”சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது”
நீலாவணனின் `ஓ வண்டிக்காரா..` கவிதையின் சிறுபகுதி..
”பனியின் விழிநீர்த் துயத்திரையில்
பாதை மறையும் முன்னே
பிணியில் தேயும் நிலவின் நிழல் நம்
பின்னால் தொடருமுன்னே
ஓ! வண்டிக்காரா ஓட்டு வண்டியை ஓட்டு……”
குழப்பம் (3)
மனதை ஒருமுகப்படுத்த ஆசையை அறுக்கச் சொல்கிறது சமயம், அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறது நவீன தத்துவங்கள் (ஜக்கி மற்றும் ஓஷோ). துய்த்தல் ஆசையை அறுக்க உதவுமா என்ன ?
எமது சமயத்தில் கூறப்பட்ட இவ்வாறான சில கருத்துக்கள் பொதுவாக சாதாரண மக்களின் தீய பழக்கவழக்கங்களை மாற்றி அவர்களை நெறிப்படுத்துவதற்காக அவர்களுக்குரிய தளத்தில் முன்வைக்கப்பட்டவையாகும். அக்கருத்துகளின் உள்ளார்ந்த்தன்மையை அது கூறப்பட்ட தளம், காலகட்டத்தை கருத்தில் கொண்டு ஆராய்ந்து உணர்ந்தபின் அடுத்த நிலைக்குச் செல்வதை விடுத்து அவற்றையே பற்றிக்கொண்டிருப்பது ஆன்ம ஈடேற்றத்திற்கு வழிவகுக்காது. அத்தவறையே பலர் இப்போதும் செய்துகொண்டிருக்கிறார்கள்.
நான் முன்னர் குறிப்பிட்டதுபோல நமது புறமனதில் ஊற்றெடுக்கும் ஆசைகளை அல்லது எண்ணங்களை அறுக்க முனையும்போதுதான் அவ்வெண்ண ஊற்று வலுவடைவகிறது, அவற்றின் மீது அதீத ஆர்வம் ஏற்படுகிறது. எனவேதான் ஓஷோ சொல்கிறார், ”அவற்றை அடக்க முற்பட்டு உங்கள் மனவாற்றலை விரயமாக்காமல் ஆசைகளையும் எண்ணங்களையும் அவற்றின் போக்கில்விட்டு எல்லாவற்றையும் கொண்டாடுங்கள், அதனை ஒரு சாட்சியாக இருந்து அவதானியுங்கள்” என்று, அப்போது நாம் இறுதியில் கொண்டாடுவது `நான்` என்ற இருப்பை மட்டுமே. பிரம்மச்சாரியாக இமயமலைக்கு போனாத்தான் ஞானம் கிடைக்கும் என்றில்லை தாம்பத்தியத்தில் ஈடுபட்டவாறேயும் அதை அடையலாம். உலக வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாத மனப்பக்குவம் உடையவர்களே அதைக்கைவிட்டு காட்டுக்கு செல்வார்கள். அங்கேயும் அவர்களுக்கு பிரச்சனை வரும். அப்போது எங்கு செல்வார்கள்?
—————-
- நேர்காணல் இதழ் நான்கு இப்போது வந்துள்ளது
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 20
- மலேசியாவில் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு விழா 2011
- கவிதைகள்: பயணக்குறிப்புகள்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 17
- காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் – 3.12.2011 (சனிக்கிழமை )
- பகிரண்ட வெளியில்…
- மணல்வீடு சிற்றிதழும் களரி தொல்கலைகள் &கலைஞர்கள் மேம்பாட்டு மையமும் இணைந்து
- இதயத்தின் தோற்றம்
- கனவும் காலமும்
- பிழைச்சமூகம்
- நினைவுகளின் சுவட்டில் (81) –
- சுஜாதாவின் சொர்க்கத்தீவு -நாவல் விமர்சனம்
- மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 2
- சஸ்பென்ஸோ சஸ்பென்ஸ்!
- செல்வராகவனின் மயக்கம் என்ன ..
- இந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா ? அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா ? கட்டுரை : 2
- யாருக்கும் பணியாத சிறுவன்
- வாழவைக்கும்[ஆ!]ஓவியக்கலை! (ஓவியர் தர்மேஷ் குறித்த ஒரு சிறு அறிமுகம்)
- வா
- பிறைகாணல்
- வள்ளுவரும் பட்டுக்கோட்டையாரும்
- சென்ரியு கவிதைகள்
- மாயை
- பேர்மனம் (Super mind)
- மூவாமருந்து
- புதுவைத் தமிழ் சங்கம்
- நானும் வல்லிக்கண்ணனும்
- காலெட் ஹொசைனியின் இரண்டு நாவல்கள்
- மனக் குப்பை
- ஓய்வு தந்த ஆய்வு
- பாரிஸ் மாநகரில் வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் வெளியீட்டு விழா..!
- முன்னணியின் பின்னணிகள் – 15 சாமர்செட் மாம்
- பஞ்சதந்திரம் தொடர் 19 ஆமையும் வாத்துக்களும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் ! (கவிதை -52 பாகம் -2)
- ஒய் திஸ் கொலவெறி கொலவெறிடி?