கான் அப்துல் கஃபார் கான் மற்றும் இஸ்லாமிய சான்றோர்கள்

This entry is part 7 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012


மகாத்மா காந்தியடிகள் உலகிற்கு அறிவித்த அஹிம்ஸைத் தத்துவம் இந்து மரபுகளுக்கே அன்னியமானது. ஜைன மதத்தில் வேண்டுமென்றால் ஓரளவு பொருத்தமான போதனைகள் கிடைக்கலாம். ஆனால் ஒரு இஸ்லாமியர் அதுவும் ஆஃகானிஸ்தானைச் சேர்ந்த ஆழ்ந்த மதப் பற்றுள்ள 19ம் நூற்றாண்டில் பிறந்த ஒருவர் அஹிம்ஸை வழி முறையைப் பின்பற்றியது மிகவும் அதிசயம். காந்தியடிகளின் அஹிம்ஸை முறையை ஒரு ஏகலைவன் போல ஏற்று ஆஃகானிஸ்தானில் ஒரு அஹிம்ஸைப் போராட்டத்தை நடத்தியவர் கான். 1985 நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்டார் (கிடைக்கவில்லை). 1987ல் பாரத் ரத்னா விருது பெற்றார். 1962 ல் அம்னெஸ்டி உலக அமைப்பின் “இந்த வருடத்துக் கைதி” என்று அறிவிக்கப் பட்டார்.

வெள்ளையரை எதிர்த்துப் போராடுவதற்காக 1928ல் ‘குதாயி கிட்மடகர்ஸ்’ என்னும் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அஹிம்ஸைப் போராட்டத்திற்கு இஸ்லாமிய இளைஞர்களை வழி நடத்தினார். கைபர் கணவாயை ஒட்டிய பஷ்துனிஸ்தான் என்னும் பகுதியின் பஷ்துஷ் இன மக்களை உரிமை உணர்வுடன் போராட அழைத்தார். அவரது போராட்டத்தை பிரிட்டிஷ் ராணுவம் இரும்புக் கரம் கொண்டு அடக்கியது. அவரது வழி நடந்த போராட்டக்காரர்கள் ‘சிகப்புச் சட்டைகள்’ என்று அழைக்கப் பட்டனர். அவர்கள் மனதில் வீரத்தை விதைப்பதற்காக அவர் கூறிய குட்டிக் கதை புகழ் பெற்றது: கர்ப்பமுற்றிருந்த ஒரு பெண் சிங்கம் ஒரு நூற்றுக் கணக்கில் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளைத் தாக்கியது. தாக்குதலைத் தொடர முடியாமல் அது ஒரு சிங்கக் குட்டியை பிரசவித்தது. பிரசவத்தின் போது மரித்து விட்டது. அப்போது பிறந்த சிங்கக் குட்டி ஆடுகளோடேயே வளர்ந்தது. இலை தழைகளைச் சாப்பிட்ட படி புலி, சிறுத்தை, ஓநாய் இவைகளைக் கண்டால் ஓடியபடி ஒரு ஆட்டின் இயல்பே அதற்கு இருந்தது. அது சிங்கமாக உருமாது ஆடுகளைப் போலவே கத்தியது. ஒரு நாள் அந்த ஆட்டு மந்தையை ஒரு சிங்கம் தாக்கியது. அது தனது இனத்தைச் சேர்ந்த ஒரு குட்டி, ஆடுகளோடு ஆடாக இருப்பதைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தது. அந்தக் குட்டியை ஒரு சுனைக்கு அழைத்துச் சென்று அதன் பிம்பத்தை அதற்கே காட்டியது. அன்பு பக்துன்களே! நீங்கள் யாவரும் சிங்கங்கள். ஆனால் அடிமைத் தனத்தில் உங்கள் வீரத்தை மறந்து விட்டீர்கள்.

ஜாலியன் வாலா பாக்கில் நடந்தது போல பெரிய மக்கள் திரள் மேல் குண்டுகள் பாய்ந்தன 1928ல். ஆனால் பயன்படுத்தப் பட்ட துப்பாக்கிகள் அந்த அளவு பயங்கரமானவை அல்ல என்பதால் பலி எண்ணிக்கையில் குறைவாக இருந்தது. ஆனாலும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடாமல் தம் நெஞ்சை நிமிர்த்திக் காட்டினார்கள். இது எல்லை காந்தி என்னும் கான் அவர்களின் மிகப் பெரிய சாதனை. அவரது இயக்கம் ஒடுக்கப் பட்ட பின் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து காந்தியடிகளின் நல்ல நண்பராகவும் ஆனார். உப்பு சத்தியாக்கிரப் போராட்டத்திலும் , வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பெரும் பங்காற்றினார்.

இந்தியா பாகிஸ்தான் என்னும் பிரிவினையை அவர் மிகவும் எதிர்த்தார். காங்கிரஸ் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு பிரிவினைக்கு ஒப்புக் கொண்டபோது அவர் மிகவும் மனமுடைந்தார். அவரது பகுதி பாகிஸ்தானுக்குக் கீழே வந்தது. போற்றி வணங்கப்பட வேண்டிய ஒரு தலைவரை பாகிஸ்தான் அரசாங்கம் பல முறை சிறைப்படுத்தி கொடுமைகளுக்கு ஆளாக்கியது. நாடு கடத்தியது. அதையெல்லாம் மீறி அவர் பக்தூனிஸ்தான் என்று பத்தான்களுக்காக ஒரு நிலம் கேட்டுப் போராடினார். 1988ல் அவர் உயிர் பிரியும் வரை அவர் தொல்லைகளுக்கு ஆட்படுத்தப் பட்டார். பின் அவரது விருப்பப்படி அவரது உடல் ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் என்னும் இடத்தில் மரியாதையுடன் அடக்கம் செய்யப் பட்டது. அன்று ஒரு நாள் ஆப்கானிஸ்தானில் அப்போது நடந்து கொண்டிருந்த உள் நாட்டுப் போர் நிறுத்தப் பட்டது.

தமது வாழ்நாளின் இறுதி நாட்களில் தாலிபான்களைக் கண்டித்தவர். தலாய் லாமாவின் திபெத் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தவர்.

1947ல் உதயமான பாகிஸ்தான் இப்போது இல்லை. ஷேக் முஜிபர் ரஹுமானின் போராட்டத்தாலும் இந்தியத் தலையீட்டாலும் பங்களாதேஷ் பிறந்தது. இஸ்லாம் பெயரில் எந்த அநீதி வேண்டுமானாலும் எத்தனை காலம் வேண்டுமானாலும் நடக்க இயலாது என்று உலகுக்கு நிரூபித்தது பங்களாதேஷின் உதயம். தஸ்லிமா நஸ்ரின் என்னும் வங்க எழுத்தாளர் பெண் விடுதலை பற்றிப் பேசி கடுமையான எதிர்ப்புக்களுக்கிடையே தொடர்ந்து வெளி நாடுகளில் இயங்கி வருகிறார். கிரிக்கெட்டில் பட்டோடி நவாப், கிர்மானி, ஜாஹிர் கான், இர்பான் பதான், யூஸுஃப் பதான்.இசையில் பிஸ்மில்லா கான், உஸ்தாத் அம்ஜத் அலி கான், ஜாகீர் உஸேன், பர்வீன் சுல்தானா என பல உலகப் புகழ் கலைஞர்கள் இஸ்லாமியர்களே. எம் எஃப் ஹுசேன் உலகமே போற்றும் ஓவியர். பெரியவர் அப்துல் கலாம் தமிழகமே தலை நிமிரும் மிகப் பெரிய ஆளுமை.

இஸ்லாம் என்றாலே, முஸ்லிம் என்றாலே ஏன் நமக்கு இந்தப் சான்றோரும் விளையாட்டு வீரரும் நினைவுக்கு வருவதில்லை? நமது கண்ணோட்டம் மாற வேண்டும்.
—————-

Series Navigationநினைவுகளின் சுவட்டில் (96)முள்வெளி அத்தியாயம் -20
author

சத்யானந்தன்

Similar Posts

14 Comments

 1. Avatar
  கருப்பசாமி says:

  உண்மையான அஹிம்சை என்பது பிணத்தை தின்னும் அகோரிகளைத் தவிர வேறு யாரும் கடைபிடிக்க முடியாத / கடைபிடிக்காத உயர்ந்த நிலை. ஹிந்துமதம் வலியுறுத்தியது தர்மத்தையொட்டிய அஹிம்சை/ஹிம்சை முறைகள். காந்திஜி தன்னுடைய தீவிர பிடிவாதத்தின் மூலம் பலவிதமான ஹிம்சைகள் நடைபெறுவதற்கு துணை புரிந்தவரானார். அன்று காந்திஜி அவர்கள் தேசப்பிரிவினையை உயிர் போனாலும் நடக்கவிடமாட்டேன் என்று சொன்னதை நிறைவேற்றியிருந்தால், சத்தியத்தை மீறாமலிருந்தால் கான் அப்துல் கபார் கான் என்ன, 33 கோடி பாரதியர்களும் மகிழ்ந்திருப்பார்கள் என்பதில் வியப்பில்லை. இன்று திரு.மன்மோஹன்சிங்-ன் கையறு நிலை அது போலவே. அதற்காக இன்னும் யாராவது மன்மோஹன்சிங்கை Mr.CLEAN (!)என்று புகழ்ந்து கொண்டிருந்தால் அது இந்த நாட்டின் சாபக்கேடல்லாமல் வேறு என்ன ? ”நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்” ”இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” – இந்த 2 குறள்களும் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

 2. Avatar
  punai peyaril says:

  அமுதமே ஆனாலும் அது பெரிய அண்டாவில் இருந்தாலும் அதில் ஒரு துளி விஷம் கலந்தால்….. பின் அமுதம் என்றா சொல்லுவோம்… அது போல் தான் இன்று அவர்கள் தங்களின் விஷ எண்ணங்களை சமூகத்தில் கலக்கும் வரை கான் அப்துல் என்றும் GONE அப்துல்கள் தான்…..

 3. Avatar
  கௌதமன் says:

  நீங்கள் குறிப்பிட வரிசையில் எம். எப். ஹுசேன் வேண்டாமே!

 4. Avatar
  Sathyanandhan says:

  எம் எஃப் ஹூஸைனைத் தாங்களும் தஸ்லீமா நஸரீனை பல முஸ்லீம்களும் ஏற்க மாட்டார்கள். காரணம் கலையும் இலக்கியமும் மதங்களைத் தாண்டும் மகத்துவம் கொண்டவை என்னும் புரிதல் இல்லாத மதவாதிகளின் பிரச்சாரமே. இன்றைய சூழலில் மதமும் ஆன்மிகமும் அதேபோல மதவாதமும் மனித நேயமும் எதிரெதிர் திசையில் நகர்பவை என்பது கண்கூடு. அன்பு சத்யானந்தன்.

 5. Avatar
  dharmaraj.A says:

  Cultural changes were/are determined by the religious heads or group.Even facts like the shape of earth were not allowed to be declared due to religious faith .But the science alone withstands overcoming such threads.Here Great scientists had full faith in god. In communist countries also religions exist. SO religions leads.

 6. Avatar
  sathyanandhan says:

  அன்புடையீர், கட்டுரையில் முக்கியமான இரு சாதனையாளர் பெயர் விடுபட்டது. ஒருவர் ஏஆர் ரஹ்மான், மற்றொருவர் சானியா மிர்ஸா. இதைச் சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி. அன்பு சத்யானந்தன்

 7. Avatar
  கௌதமன் says:

  அன்பு சத்யானந்தன்,

  திரு. ஹுசைன் அவர்களின் வாழ்க்கை பற்றி 80 களில் படித்து அவரைப் பற்றி பெருமிதம் கொண்டவன்தான் நான். ஆயினும் நீங்கள் குறிப்பிடும் “மதவாதிகளின்” பிரச்சாரங்களைப் பார்த்த பின் – அத்துடன் அவர்கள் குறிப்பிட்ட அவரின் “மதச்சார்பற்ற கலை வண்ணங்களைப் ” பார்த்த பின், என் மனம் மாற்றமடைந்ததும் உண்மைதான்.

  தங்கள் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்வது அனைவருக்குமான உரிமை. அதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை வாசகன் புரிந்து கொள்கிறான். சிலவற்றை உண்மை எனப் பார்த்து அதை ஒப்புக் கொள்வதால் நான் “மதவாதி” ஆகிவிடுவதில்லை.

  தங்கள் வரிசையில் ஒரு ஹைதராபாத் கிரிக்கெட் வீரர் பெயரைக் காணோமே? அசாருதீன் தன்னுடைய ஆட்டத் திறமையால் என்னை டிவி முன் கட்டிப் போட்டவர். கடைசியில் “நான் ஒரு முஸ்லிம் என்பதால் என்னை இழிவு படுத்துகின்றனர் ” என்று கூறியதால்தான் அவர் பெயர் தவறி விட்டதோ? அந்த ஒரு வாக்கியத்தில் என் முழு மதிப்பையும் அவர் இழந்தார். திரு. ஹுசைனும் அப்படியே.

  அன்புடன் கௌதமன்

 8. Avatar
  Sathyanandhan says:

  முதலில் அசாருதீன் பற்றி வருவோம். அவர் குறித்து நேர்மை பற்றிய ஆதாரமிகுந்த குற்றச்சாட்டுகள் எழுந்ததால் குறிப்பிடவில்லை. ஒரு நல்ல கலைஞனும் இலக்கியவாதியும் இயல்பாகவே மதங்களுக்கு மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவராகவே இருப்பார். உள் நோக்கத்துடன் தமது திறமையைப் பயன்படுத்தும் பட்சத்தில் கண்டிப்பாக ஐயத்துக்கும் கண்டனத்துக்கும் இடம் உண்டு. ஹூஸைனின் மிக நீண்ட போற்றப்பட்ட கலைப் பாதையில் அவர் கலையைத் தவிர எதையும் கண்டதில்லை. அதனாலேயே மாதுரி தீட்சித் பற்றிய அவரது அழகுணர்வு சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டது. ஹிந்து வழிமுறைகள் மதவாதத்துக்கு ஒப்பாதவை. பிள்ளையார் தண்ணீரில் கரைவார். லட்சும் உருவப் படம் வெடியில் சிதறுண்டு போகும். சௌந்தர்யலஹரி அழகுணர்வும் மிக்க பக்தி இலக்கியம் என்பதாலேயே இன்றும் போற்றப்படுகிறது. ஒரு பண்பாட்டின் உண்மையான மகத்துவம் புரியாதோர் மட்டுமே பேத உணர்வுடன் அதைச் சொந்தம் கொண்டாடுவர். கலை, இலக்கியம், மனித நேயம் இவை வாழும் வரை மத வாதம் மீண்டும் மீண்டும் தோல்வியையே தழுவும். அன்பு சத்யானந்தன்.

 9. Avatar
  balaiyer says:

  There are many who follow Islam have been contributing positively to the welfare of our society. why we only refer to M.F. Hussain or Azzarudin? They are many unsong heroes in every part of our country and in every-field of human life. Even today, if we want to listen to someone who can speak Tamil with ‘nayam’ it is Abdul Rahim. Some great cricket commentators in Tamil happen to be Muslims.Abdul Jabbar of Tamilnadu is a great name, but unfortunately neglected both at national and state-level. Tamil actor Naazar has a versatily that very few fellow-artists possess; the Tamil film-world has not given the recognition that he deserves. There were great many Muslim professors who served with universities in north India, particularly in Delhi and U.P. in the yesteryears made great contribution both to their subjects and in the lives of their students. Relegion per se cannot be blamed for people’s wrong doings. The ‘goat story’ referred in the above article was, in fact, referred to by Swami Vivekananda in 1890s itself in his well known ‘Lectures from Colombo to Almora’.

 10. Avatar
  suvanappiriyan says:

  மிகச் சிறந்த ஆக்கம். பாகிஸ்தான் பிரிவினையை கான் அப்துல் கபார் கானைப் போலவே மௌலானா அபுல் கலாம் ஆசாத்தும் கடுமையாக எதிர்த்தார். இவர்கள் இருவரும் இஸ்லாமிய சட்டங்களை முழவதுமாக தங்கள் வாழ்க்கையில் கடைபிடிப்பவர்கள்.

  ஆனால் இஸ்லாமிய சட்டங்களை சிறிதும் மதிக்காத மேற்கத்திய கலாசாரத்தை விரும்பும் ஜின்னா தனக்கு காங்கிரஸில் சரியான மரியாதை இல்லை என்ற காரணத்தைக் கொண்டு பாகிஸ்தான் பிரிவினையை கையிலெடுத்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராஜாஜி, பட்டேல், நேரு போன்றவர்களும் உறுதுணையாய் நின்றனர். முஸ்லிம்கள் தனி நாடு கேட்டு பிரிந்து சென்றால்தான் இவர்களின் அரசியல் வாழ்வு பிரகாசிக்கும் என்று நினைத்திருக்கலாம். இந்திய முஸ்லிம்களை நட்டாற்றில் விட்டு விட்டு பாகிஸ்தானை எடுத்துக் கொண்ட ஜின்னா ஒரு சுயநலப் பேர்வழி என்றால் மிகையாகாது.

  மற்றபடி ஹூசைன் தனது ஓவியத் திறமையை வேறு வடிவங்களில் காண்பித்திருக்கலாம். இந்துக்கள் புனிதமாக வணங்கும் உருவங்களை ஆபாசமாக வரைவது கண்டிக்கத்தக்கது. இஸ்லாமும் இதனை அனுமதிக்கவில்லை. ஜின்னாவும், ஹூசைனும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும.

  அடுத்து தஸ்லிமா கர்ப்பப்பை சுதந்திரம் அதாவது திருமணம் ஆகாமலேயே குழந்தை பெறலாம், சேர்ந்து வாழலாம் என்ற கொள்கை கொண்டவர். இதனை இந்துக்களும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே தஸ்லிமாவும், ஹூசைனும் இஸ்லாத்தை விட்டு வெளியில் சென்று தங்கள் கருத்துக்களை பரப்பினால் எவருக்கும் ஆட்சேபணை இல்லை என்பதே முஸ்லிம்களின் நிலைப்பாடு.

  1. Avatar
   paandiyan says:

   last pinoottam. August 15, 2012 at 10:39 pm
   next; December 17, 2013 at 7:16 pm
   டக்குன்னு திரும்ப சொன்ன இப்படியா? இதான ஒங்க டக்கு?

  2. Avatar
   sathyanandhan says:

   நன்றி திரு.சுவனப்ரியன். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கழித்து ஒரு பின்னூட்டம் காண்பது மனதுக்கு உற்சாகம் அளிப்பது. அதே சமயம் ஹுஸைன், நஸரீன் இயங்கும் தளம் கருத்துச் சுதந்திரமும் கற்பனையும் ஆளும் தளம். இதை இந்து அல்லது இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் காண்பது சரியில்லை. அவர்கள் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் அல்லர். கருத்துச் சுதந்திரத்தை இந்திய சமூகம் போற்ற வேண்டும் என நினைவூட்டும் ஆளுமைகள். திண்ணை பழைய இதழ்களில் பல அரிய கட்டுரைகளை வாசிக்கிறோம். நம் சமூகம் பற்றி இலக்கியம் பற்றி மேலான புரிதலுக்கு நம்மை இட்டுச் செல்லும் பதிவுகள் அவை. அன்பு சத்யானந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *