செம்பி நாட்டுக்கதைகள்……

author
0 minutes, 1 second Read
This entry is part 38 of 40 in the series 26 மே 2013

மஹ்மூது நெய்னா

உங்க ஊருக்கு எத்தனை பேருதான்யா? நீங்க பாட்டுக்கு வகை தொகை இல்லாம சொல்லிக்கிட்டே போனா எப்படி? நான் லீவுக்கு ஊருக்கு வந்ததை எப்படியோ அறிந்து, புதுக்கோட்டையிலிருந்து , என்னை பார்க்க, கீழக்கரை வந்த வீரசிங்கம் இப்படித்தான் கேள்வியை தொடுத்தான்.
இது என்ன கேள்வி….. என கடுப்பாகி…..நெளிந்தேன்… ………வந்தாரை வாழ வைப்பது மட்டுமின்றி, விருந்தாளிகளை அன்புடன் உபசரிக்கும் அருங்குணம் கொண்ட ஊர் கீழக்கரை என்ற சரித்திர உண்மை நம்மால் சந்தி சிரித்து விடக் கூடாது என்று கவனமாய், காடையை வசக்கி சாப்பாடு போட்டால் …………..சாமிக்கு மாலை போட்டிருக்கேன்… சைவ சாப்பாடு இருந்தா போடுங்கய்யா…. என்றான்.
கீழக்கரைக்கு பணி நிமித்தமாக வருவோரை எல்லாம் ஊரிலேயே சிறப்பாக வாழ வைத்து, தன் சொந்த மக்கள் தொகையில் பெரும் பகுதியை மட்டும் வளைகுடா வெயிலின் உக்கிரத்தில் வாட்ட தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும் கீழ்க்கரைக்கு வந்து சைவ சாப்பாடு கேட்கும் வீரசிங்கத்துக்கு என்னத்த.. கொடுக்குறது……. என்ற சிந்தனை பெரும் மண்டைக் குடைச்சலாகிவிட்டது.
அபயம்… என்று கன்மனியிடம் அடி பணிந்ததில் கை கொடுத்தது தேங்காப்பூ சேர்த்த முருங்கை கீரை அவியலும், பப்படமும், புளியாணமும்தான்….
சாப்பிட்டு முடித்து திருப்திப்பட்டவனை, ஐயப்ப சாமிக்கு மாலை போட்டு மலை ஏறப்போகிறானே… என்ற உணர்வில் அவனின் ஆண்மீக பசியையும் தீர்க்கும் கடமையோடு கீழக்கரை – இராமனாதபுரம் சாலையில் இருக்கும் திருப்புல்லாணியில் உள்ள புரதான வைணவக் கோயிலான ஜெகநாதர் சுவாமி கோயிலுக்கு அழைத்து செல்லும் போதுதான், ………………..கீழக்கரையின் பண்டைய பத்து பெயர்களை கூறினேன். அதனை தொடர்ந்துதான் சிங்கம் தொடுத்த “ மில்லியன் டாலர்“ கேள்வியும்.

கொற்கை, கீழச் செம்பி நாடு, பொளத்திர மாணிக்க பட்டனம்… எனத் தொடங்கி கிர்கிரா… கீழக்கரை என தொடர்ந்து சொல்லி முடித்தால் என்னைவிட சிங்கத்துக்கு அதிகமாகவே மூச்சு வாங்கியது………………. கொஞ்சம் மெல்லமா சொல்லுங்கய்யா… என்றான்.

என்ன செய்வது “ சிங்கம் பஸ் ஏறிய புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு மன்னராக விஜயரகுனாத தொண்டைமானை பதவியில் அமர்த்திய கள்ளர் குல அரசன் கிழவன் சேதுபதி ஆண்ட சேது சீமையின் பிரதான துறை முகத்தினை பற்றியும் , இந்த திருப்புல்லானி ஆலயத்தில் இருக்கும் 800 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் காணப்படும் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் ‘கீழச் செம்பி நாட்டுப் பவுத்திர மாணிக்கப் பட்டணத்துக்கு, (கீழக்கரைக்கு) கீழ்பால் சோனகச் சாமந்த பள்ளிக்கு (ஏர்வாடி தர்ஹா) இறையிலிவரி விலக்குடன் மானியம் ஆகக் கொடுக்கப்பட்ட நிலங்கள்’ பற்றியும் சிங்கத்துக்கு ஒரு சரித்திர பாடம் எடுக்க வேண்டியதாகிவிட்டது.
நாகமலை ம. நா. உ. (மதுரை நாடார் உறவிண்முறைக்கு பாத்தியமான) ஜெயராஜ் நாடார் பள்ளியில் படித்த காலத்தில், சேது சீமை, மற்றும் பாண்டிய மண்ணர்கள் குறித்து சரித்திரம் அறிந்த தமிழய்யா இருதயராசு என்னை “கிழுவை பாய்” … என வித்தியாசமாகவே விளிப்பார்.
ஏதோ கிண்டலில்தான் சொல்கிறார். என முதலில் நானும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை…. நாட்கள் கடந்தது. பள்ளி இறுதித் தேர்வுகள் நெருங்கும் வேலையில், மதுரை டவுனில் இருந்து பள்ளி விடுதிக்கு செல்லும் வழியில், கீழக்குயில்குடி பேருந்து நிறுத்ததில் இறங்கியபோது, வாக்கிங் போய் கொண்டிருத்த தமிழய்யாவை தற்செயலாக சந்தித்துவிட்டேன்….. நீண்ட நாட்கள் மனதில் உறுத்திய கேள்வியை அய்யாவிடம் நேரடியாகவே கேட்டேன்….. அய்யா….அது என்ன கிழுவை?
பாய்… நீ கீழக்கரைதானே…. கீழக்கரைக்கு கிழுவை நாடு என்ற பெயர் இருந்தது தெரியுமா….. கிழுவைநாடு என்பது கிழக்கு கடற்க்கரை பிரதேசமான உங்க ஊருதான். கிழக்கு கடற்கரை என்ற வார்த்தை தான் கிழுவை என்று பொருள் தருகிறது. இராமநாதபுரம் பகுதி சேது என்றும் பாண்டியனின் கிழக்கு பிரதேசமான கீழக்கரை கிழுவை நாடு என்று அழைக்கபட்டது…. அப்ப நீ கிழுவை பாய்தானே ….. என நான் முற்றிலும் எதிர்பாராத விளக்கம் அய்யாவிடம் கிடைத்தது., வகுப்பறையில் பாடம் நடத்துவதை விட அதிகமாகவே விளக்கினார், கீழக்குயில்குடி வளைவில் நின்று வாயை பிளந்தபடி ஆச்சரியத்தில் சமன மலையின் உச்சிக்கு ஜிவ்வென போய் வந்து ….. தமிழய்யாவை நோக்கி வியப்படைந்தேன்.
தமிழகத்தில் பருவ மழை கைகொடுக்காமல், வறட்சியினால் கடன் வாங்கி சாகுபடி செய்து கடன் சுமைக்கு ஆளாகி அகதியாய் தன் சொந்த நாட்டிலேயே இடம் பெய்ர்ந்த ஏராளமான விவசாயிகளில் சிங்கமும் ஒருவன்.
சென்னை அவனுக்கு கூலி வேலை கொடுத்தது….. ஆனால் கூடவே அவனின் குறுக்கையும் முறித்து போட்டது. ஆதரவற்று நுங்கம்பாக்கம் புஷ்பா நகரையும் ஜெயலட்சுமிபுரத்தையும் சுற்றி அலைந்தவனுக்கு அபயம் அளித்தார் ஆருயிர் நன்பர் முஹைதீன்…
கூலி வேலையில் தொடங்கி அரபிக் கடலையே தன் வசமாக்கிய பனைக்குளம் ஹாஜி மஸ்தான் போலவோ அல்லது கரீம் லாலா மற்றும் யூசுப் பட்டான்கள் வகையறாக்களை குப்புறத் தள்ளி பம்பாயின் நிழலுலக வர்த்தகத்தில் முடி சூடா தாதாவாக விளங்கிய விழுப்புரம் வரதராஜ முதலியார் போலவோ, வங்கக்கடலையும், சென்னை பட்டணத்தையும் தன் வசமாக்கும் ஐடியா சிங்கத்துக்கு இருந்திருக்கலாமோ?
சமீபத்தில் ஏக்தா கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கான் நடிப்பில் வெளிவந்த ”ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மும்பாய்” என்ற திரைப்படத்தை அபுதாபி நேஷனல் தியேட்டரில் காண நேர்ந்தது” 1970 களில் அரசாங்கத்துக்கே தண்ணி காட்டி வந்த ஹாஜி மஸ்தான் மிர்ஸா வின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட கதை. அனுராக் காஷ்யாப்பின் நிழலுலக திரைக்காவியங்கள் போல உயிர்ப்பில்லாமல் எடுக்கப்பட்ட படமாகவே தோன்றியது.
பிரிட்டிஷ் இந்திய இராஜ்யத்தில், 1940 களில் துவக்க காலங்களில் கீழக்கரை எஸ்.வி.எம். – கே.டி.எம். சங்கு கம்பெனி தெற்கே தூத்துக்குடி முதல் வடக்கே கடலூர் வரை ஐந்து மாவட்ட கரைகளிலும் சங்கு குளிப்பில் கோலோச்சியது, கடலில் குளிக்கப்பட்ட சங்குகள் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு டன் கணக்கில் கல்கத்தாவுக்கும், கராச்சிக்கும் இன்னும் பிற மாகாணங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பிய காலத்தில், ஆயிரக்கணக்கான கடல் தொழிலாளர்க்ள் சங்கு சுத்திகரிப்பில் நியமிக்கப்பட்டிருந்தனர். பனைக்குளத்தில் இருந்து கீழக்கரைக்கு சங்கு வேலைக்கு வந்தவர்தான் மஸ்தான் தெரியுமா? நானும் அவரும் ஒன்னா கடலூர்ல ரெம்ப நாளு சங்கு வேலை பார்த்தோம்….. என வடக்குத் தெரு சேட்டு காக்கா சொல்லியதை பதிவு செய்தே ஆக வேண்டும்…. இதுவும் அய்யா இருதயராசு கூறியது போன்றே வரலாற்று குறிப்பாகலாம்…
குழி தோண்டுற வேலையா இருந்தா கூட பரவாயில்லை,….. துபாயிக்கு ஒரு விசா கொடுங்க….. என்கிறான் சிங்கம்….
விவசாயிகள் வயிற்றுப் பிழைப்புக்காக சென்னையில் கூலி வேலை பார்த்து சம்பாதிப்பதில் 70 சதவீதத்தை நகரிலேயே செலவழித்தது போக, மிஞ்சும் அற்பத் தொகைதான் அவர்களது குடும்பத்திற்கு உணவுக்குச் செலவிடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. கூலி வேலையில் தொடங்கி இராட்சத கொடுப்பினைகள் பெற்றவர்களும் இருக்கிறார்கள்…. நீ ஊருலேயே… வேற ஏதாவது தொழிலாப் பாரு… என்றேன்…..
சியான் கோலிவாடா ரயில் நிலையம் வந்திறங்கி, கூலி வேலை செய்து, பம்பாயை ஆட்டுவித்து, காவல்துறை அதிகாரி ஒய்.சீ பவாரால் தகர்க்கப்பட்ட பம்பாயின் நிழலுலக கோட்டையின் நாயகன் வரதாபாயின் நிழலில் சிலரால் வஞ்சகமாய் ஏமாற்றப்பட்ட என் தந்தை ஒதுங்கி இருந்த சில காலம் , பள்ளி விடுமுறை நாட்களில் பம்பாய்க்கு சென்று கோலிவாடா சர்தார் நகரில் தங்கி இருந்த 1982 ஆம் வருடம், சலித்துப் போய் கோலிவாடா கேம்ப், மாதுங்கா, தாராவி பகுதிகளில் சுற்றி அலைவேன்… வரதராஜ முதலியாரின் வலது கரமான அன்ணன் பரமசிவத்தின் முயற்சியால் துவக்கப்பட்ட பம்பாய் தமிழர் பேரவையின் சர்தார் நகர் கிளையில் அமர்ந்து மராட்டிய முரசு நாளிதழை ஒரு வரி விடாமல் படிப்பதும், வர்தா வீடியோ தியேட்டரில் சினிமா பார்ப்பதும், அவ்வப்போது கோலிவாடா சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் விசேடங்களில் கலை நிகழ்ச்சிகளை கண்டு கழிப்பதும் பொழுது போக்காய் இருந்தது.. செம்பூரில் வரதராஜ முதலியார் தமிழர்கள் மத்தியில் சக்கரவர்த்தியாக கருதப்பட்டார். சாது ஷெட்டி, பரமசிவம் போன்றவர்கள் கூட வர வெள்ள சஃபாரி பாடிகார்டுகளுக்கு மத்தியில் பந்தாவாய் வலம் வருவார்…..
செம்பியன் மாதேவியின் பெயரில் மராட்டிய மன்னில் தமிழர்களால் இந்த செம்பூர் உருவாகி இருக்குமோ? என்னவோ? சேது சீமையில் பாண்டியனை வென்ற சோழனைப்போல், பம்பாயில் பட்டான்களை வென்ற வரதாபாய்க்காக செம்பூர் உருவாகி இருக்குமோ? எண்ணம் ஏழு குதிரை வேகத்தில் தறிகெட்டுதான் ஓடுகிறது…. 1912 முதல் விவசாயம் கைகொடுக்காமல் விவசாயிகள் பம்பாய்க்கு குடிபெயர்ந்து கூலிகளாக இடம் பெயர்ந்திருக்கிறார்கள். அவர்கள் முதலில் குடியமர்ந்தது செம்பூர் பகுதிதான…..
இங்கே தெற்கே கீழக்கரை பகுதியில் நடைபெற்ற போரில் சோழன், பாண்டியனை வென்ற பின் இப்பகுதியை செம்பிநாடு அல்லது. கீழச் செம்பிநாடு என்று மாற்றினான்… சோழர் குலத்தை சார்ந்த ஆறு மாமன்னர்களையும் வழி காட்டி அடுத்தடுத்து அரியணை ஏற்றிய பெருமை கொண்ட செம்பியன் மாதேவியாரின் புகழை பறைசாற்றும் முகமாகவே கீழக்கரை பகுதி செம்பி நாடு என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.. இன்றும் செம்பியன் மாதேவியின் கோட்டை கீழக்கரை பழைய குத்பா பள்ளிக்கு அருகில் சிதிலடைந்த நிலையில் இருப்பதை காணலாம், நெடுந்தேசப் பயனி இபுனு பதூதா இந்த கோட்டையின் கல் மண்டபத்தில் வந்து இளைப்பாறியதாகவும் சரித்திர சாண்றுகள் உறுதிப்படுத்துகிறது.

தொலைந்த காலங்களுக்குள் மறைந்த செம்பி நாடு மற்றும் சேதுச்சீமையின் புகழினை உலகறிய வைக்கும் பணியை கீழக்கரை தொடர்ந்து செய்து வருவதை யாரும் மறூக்க இயலாது , நடுத் தெருவில் செம்பி நெய்னா காக்காவை தெரியாதவர் இருக்க முடியாது, தமிழக சினிமாத் துறையில் சின்னப்பத் தேவர், எம்.ஜீ.ஆர், பலாஜி போன்ற பிரபலமானவர்களுக்கு மட்டுமே நிதி உதவி செய்து வந்த செம்பி டிரேடர்ஸ் & பப்ளிசிட்டீஸ் நிறுவனத்தின் மேலாளர். இந்த நிறுவனம் மதுரை, திருச்சி, கோவை என தமிழகத்திலுள்ள முக்கிய நகரங்களில் முறையே சேது பிலிம்ஸ், வளநாடு பிலிம்ஸ், வச்சிர நாடு பிலிம்ஸ் என சினிமா விநியோக அலுவலங்களும் வைத்திருந்தனர். எம்.ஜி.ஆர். சிவாஜி, படங்களைத் தவிர வேறு நடிகர்கள் நடித்த படங்களை வாங்க மாட்டார்கள்.
என் பால்யத்தில், ரமலான் மாதங்களில் தராவிஹ் தொழுகை முடித்து.. பின் இரவில், மல்லிகை கொடிகள் அடர்ந்து , நறுமனம் கமழும் ஜும்மா பள்ளியின் தெற்கு வாயிலின் முன் பகுதியில் நடக்கும் ஹிஸ்பு ( குர் ஆன் ஓதும் ) நிகழ்ச்சியில், செம்பி நெய்னா காக்கா தும்பை நிற தூய வெண்ணிறடை அணிந்து ஒவ்வொரு வருடமும் தவறாமல் கலந்து கொள்வார். சிறுவர்கள் தவறாக ஓதுவதை திருத்தி, ஹர்பு பிசகாமல் ஓத ஊக்குவிப்பதில் அலாதி பிரியம் கொண்டவர். ரமலான் பிறை 27ல் லைலத்துல் கத்ரு இரவன்று ஹிஸ்பு ஓதியதற்காக அண்பளிப்பாக தரப்படும் 20 ரூபாய் சலவை நோட்டுக்காக மட்டுமில்லாமல், செம்பி நெய்னா காக்காவின் கண்டிப்பான திருத்தலுக்கும் பயந்துதான் சரியாக ஓத முயற்சிப்போம்.
செம்பி டிரேடர்ஸ் நிறுவனத்தின் முக்கிய தூனாக இருந்து செயல்பட்டவர் அதன் பங்காளிகளில் ஒருவரான மறைந்த ஆவனா மூனா யாசீன் காக்கா, 1970 கள் மற்றும் 1980 களின் தொடக்க காலங்களிம் கோடம்பாக்கத்தில் இவர் தொடர்பில்லாது எந்த சினிமா பூஜைகளும் நடைபெற்றதில்லை. கீழக்கரை சமூகத்தில் மங்கா புகழ் கொண்ட பலரில் யாசீன் காக்காவும் ஒருவர். சினிமா வினியோக முறைகள், ஏரியா வசூல், மினிமம் கியாரண்டி போன்ற அனைத்து விசயங்களும் அத்துப்படி, முறையே பெரிய நடிகர்கள் இல்லாத போதும், எழுத்தாளர் ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் கதையை ஜெயகாந்தனின் இயக்கத்திலேயே திரைப்படமாக தயாரித்தவர், படம் வசூலில் படுகுழியில் வீழ்ந்து இலட்சங்கள் நஷ்ட்டப்பட்ட போதும் அலட்டிக்கொள்ளாமல் அடுத்த வேலையை தொடங்கியவர்.
அன்னாரை பற்றி எப்பொழுது கதைத்தாலும் நன்பன் யாஸீன் அழுவான்.. ஏம்பா… அழுவுறா…. என்றால் …
யாஸீன் காக்கா பேருதான் எனக்கு வச்சிக்கிது என்பான்… உண்மைதான் நன்பன் யாஸீனின் வாப்பா செம்பி யாஸீன் காக்காவிடம் நீண்ட நாட்களுக்காக வேலை பார்த்த்தாகவும், இவன் குடும்பத்திற்கு அவர்கள் காலத்தால் செய்த உதவிகள் மறக்கவே முடியாது என்றும் கூறுவான்.
செம்பியுடன் தன்னை இறுக்கமாய் பினைத்துக் கொண்ட இன்னொருவர் செம்பி சேகு நூருதீன் காக்கா. 1980 களின் தொடக்கத்தில் பிரபலமாகி புகழுச்சியின் எல்லைகளை தொட்டவர். துபாய் நாசர் சதுக்கத்தில் இருக்கும் செம்பி நகைக்கடை தமிழர்கள் மத்தியில் பரவலாய் அறியப்பட்ட்து, கல்வித் துறையிலும் செம்பி சேகு நூருதீன் காக்காவின் சேவைகள் அழியா புகழ் கொண்டது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநில கிளையின் மனிச்சுடர் பத்திரிக்கையை அந்த நிர்வாகிகள் பிரசுரித்து வெளியிட முடியாத நிலையில், பத்திரிக்கையினை பிரச்சனைகளில் இருந்து மீட்டு மீண்டும் மறுபதிப்புக்கு கொண்டு வந்தவர்.
செம்பி நாட்டின் அருங்குணங்களை மீட்டு மீள்படுத்துவோர் மூலம் செம்பி நாட்டுக் கதைகள்… நெடுந்தொடராகிப் போகலாம்………………

naina1973@gmail.com

Series Navigationநீங்காத நினைவுகள் -4விஸ்வரூபம் – கலைஞன் எதைச் சொல்வது எதை விடுவது ?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *