பீதி

author
1
0 minutes, 10 seconds Read
This entry is part 6 of 40 in the series 26 மே 2013

 

டாக்டர் ஜி.ஜான்சன்

நான் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்றபோது விடுமுறையில் சிங்கப்பூர் சென்றேன்.அங்கு அப்பா பாரதிதாசன் தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியராகப் பணி புரிந்தார்.

பிரிந்து வந்த பால்ய நண்பர்களுடன் மீண்டும் ஒன்று கூடி இரண்டு வாரங்கள் மகிழ்ந்திருந்தேன்.தினமும் இரவில் நண்பர்களுடன் சீனர் சாப்பாடும் டைகர் பீர்தான் ( Tiger Beer )

என் நண்பர்களில் மூவரை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். அப்போது எங்களுக்கு இருபத்தோரு வயதுதான்.இந்த மூவரும் பிற்காலத்தில் சிங்கப்பூரில் பெரும் சாதனைப் புரிந்துவிட்டனர். நா. கோவிந்தசாமி சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியதோடு,, என்னைப் பின்பற்றி தமிழ் எழுத்தாளராக மாறிவிட்டான்.( நான் 16 வயதிலேயே சிங்கப்பூரிலும் மலாயாவிலும் எழுத ஆரம்பித்துவிட்டேன்.) இந்த கோவிந்தசாமிதான் முதன்முதலாக கணினியில் தமிழில் விசைப் பலகை ( Tamil Key Board ) கண்டு பிடித்தவன்!( இப்போது இவன் உயிருடன் இல்லை ).

இரண்டாவது நண்பன் தமிழ்ச் செல்வன். இவன் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் ( Political Science ) படித்துவிட்டு, சில காலம் உள்துறை அமைச்சில் பணியாற்றியபின், பணியை இராஜினாமாச் செய்துவிட்டு, ஆஸ்திரேலியா சென்று விட்டான். அங்கிருந்து சிங்கப்பூர் பிரதமர் திரு லீ குவான் யூ ( Lee Kuan Yew ) பற்றி ” தி அல்டிமேட் ஐலண்ட் ” ( The Ultimate Island – The Untold Story of Lee Kuan Yew ) எனும் ஆங்கில நூல் எழுதி மலேசியா எம்.பி .எச் ( MPH ) மூலம் வெளியிட்டான்.அது முழுக்க முழுக்க திரு லீ குவான் யூ வின் அரசியலை விமர்சித்திருந்ததால், சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டது.

மூன்றாவது நண்பன் ஜெயப்பிரகாசம். இவன்தான் சிங்கப்பூரிலேயே முதன்முதலாக கூரியர் சேவை ( Courier Service ) துவங்கி பெரும் தொழில் அதிபர் ஆகிவிட்டான்.” ஊரு விட்டு ஊரு வந்து ” எனும் திரைப்படம் இவன் பங்களாவில்தான் படமாக்கப்பட்டது.

.எங்கள் வட்டாரத்தில் வசித்த தமிழ் மக்களிடையே அப்போது நான் ஒருவன்தான் மருத்துவம் பயிலச் சென்றிருந்தேன். அதோடு முதன்முதலாக விமானப் பயணம் மேற்கொண்ட பெருமையும் என்னையே சாரும்.அப்போதெல்லாம் தமிழர்கள் ” ஸ்டேட் ஆப் மெட்ராஸ் ” ( State of Madras ) கப்பலில்தான் சென்னைக்குச் செல்வர். அந்தக் கடல் பிரயாணம் ஏழு நாட்கள் ஆகும்.

நான் மருத்துவம் பயில சென்னை சென்றபோது ” ஏர் இந்தியா ” விமானத்தில் சென்றேன். சீருடையில் சந்தன மணம் கமகமக்க என்னை வரவேற்ற பணிப்பெண்களை மறக்க சில நாட்கள் ஆயின!

அப்பா ” பாகிஸ்தான் சர்வதேச விமானச் சேவையில் ” ( Pakistan International Airlines ) பயணச் சீட்டு எடுத்துவிட்டார். அப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு மிடையே போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனால் அவர்கள் நாட்டு விமானங்கள் இந்தியாவில் இறங்காது. நான் கொழும்புவில் இறங்கி ” இந்தியன் ஏர்லைன்ஸ் ” மூலம் சென்னை சென்றாக வேண்டும்.

வழக்கம்போல் நண்பர்களை விட்டுப் பிரிய மனமில்லைதான். என்ன செய்வது? படித்து டாக்டர் ஆகவேண்டுமே? கவலையுடன்தான் புறப்பட்டேன்.

விமானம் பழையது என்பதை உள்ளே நுழைந்ததுமே தெரிந்துவிட்டது. பணிப்பெண்கள் நல்ல நிறத்தில் இருந்தபோதிலும் அவர்களிடம் அந்த மங்களகரமான சந்தன மணம் இல்லை.

என் அருகில் வைரவன் என்பவர் அமர்ந்திருந்தார்.அவர் ஒரு வியாபாரி.என்ன வியாபாரம் என்று கூறவில்லை. வெறுமனே ” பிஸ்னஸ் ” என்று மட்டுமே கூறினார். நானும் அவரைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ளும் மனநிலையில் அப்போது இல்லை.

விமானம் ஓடுபாதையில் ஓடியபோதே ஒருவிதமாகக் குலுங்கியது! அது எனக்குப் பிடிக்கவில்லை.ஆரம்பமே சரியில்லாததுபோல் தோன்றியது.முதலாவது பணிப்பெண்கள் .இப்போது இந்த குலுங்கல்!

மேலே ஏறியதுதான் தாமதம்.அருகில் இருந்தவர் பணிப்பெண்ணை அழைத்து விஸ்கி வேண்டும் என்றார். அது பாகிஸ்தான் விமானம் என்றாலும் மது பரிமாறப்பட்டது. அழகிய கண்ணாடிக் கோப்பையில் ( ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ) தங்க நிறத்தில் மின்னிய விஸ்கியைக் கையில் ஏந்தியபடி ” நீங்கள் ? ” என்று மரியாதைக்குக் கேட்டார் வைரவன்.

” இல்லை . தேங்க்ஸ் ” என்றேன் நான் நல்ல பிள்ளையாட்டம். பீர் குடித்த நான் விஸ்கி குடிக்க எவ்வளவு நேரமாகும்! இது விமானப் பிரயாணம். குடித்துவிட்டு தூங்க வீடு அல்ல. கொழும்பில் இறங்கி சென்னை செல்லும் விமானம் ஏறியாகவேண்டும். நிதானமாக இருக்கவேண்டும் அல்லவா? விஸ்கி அருந்தினால் ஒரேயடியாகே தூக்கிவிடுமே! அதோடு நானும் தூங்கிவிடுவேனே! இந்த மூன்று மணி நேரப் பிரயாணத்தில் விழித்திருப்பதே நல்லது என்ற முடிவுடன்தான் இலவசமாகக் கிடைக்கும் விஸ்கியையும் தியாகம் செய்தேன்.

ஆனால் வைரவனோ ஒன்றபின் ஒன்றாக விஸ்கியில் மூழ்கிக் கொண்டிருந்தார்.

விமானம் இருளைக் கிழித்துக்கொண்டு வங்கக் கடலின்மேல் மின்னல் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்தது. அதன் இயந்திரங்களின் இரைச்சல் உள்ளே சீராகவே ஒலித்தது.ஆனால் அவ்வப்போது ஒருவித ஆட்டம் கண்டது. சில சமங்களில் எதோ அதை இடிப்பது போலவும், வேறு சமயங்களில் கீழே இறங்குவது போலவும் உணர்ந்தேன்!

ஒரு மணி நேரம் ஓடிவிட்டது. வைரவன் உட்பட பிரயாணிகளில் பெரும்பாலோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.உள்ளே விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. அப்போது மணி பின்னிரவு ஒன்று. நான் தூங்காமல் சிங்கார சிங்கப்பூரின் நினைவுகளில் ஆழ்ந்திருந்தேன்.

திடீரென்று ஒலிப்பெசியில் விமானத்தின் கேப்டனின் குரல் ஒலித்தது.

” பிரயாணிகளுக்கு ஓர் அவசர அறிவிப்பு. நான் கேப்டன் அமீர் கான் பேசுகிறேன். விமானத்தின் ஒரு ஜெட் பழுதடைந்துள்ளது. கொழும்பு செல்ல இரண்டு மணி நேரமாகும். அதனால் விமானத்தைத் திருப்பி நான் கோலாலம்பூருக்கு கொண்டுசெல்கிறேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கு தரை இறங்கிச்விடுவோம். பிரயாணிகள் தயவுசெய்து பீதி கொள்ள வேண்டாம்..உங்கள் இருக்கை வார்களை அணிந்துகொள்ளுங்கள்.நன்றி.”.

இப்படி ஓர் அறிவிப்பை நள்ளிரவுக்குப் பிந்திய நேரத்தில் , இருண்ட வானுக்கும் கொந்தளிக்கும் ஆழ்கடலுக்கும் நடுவில் பரந்துசெல்லும்போது கேட்க நேர்ந்தால் எப்படியிருக்கும்!

அப்போது எனக்கு உண்டான மனநிலையை நான் யாரிடம் பகிர்ந்துகொள்வது? அருகில் இருந்த வைரவனைத்தான் பார்த்தேன். ஆனால் அவரோ விஸ்கி மயக்கத்தில் ஆழ்ந்த கனவுலகில் மூழ்கியிருந்தார்.

சுற்றுமுற்றும் பார்த்தேன். பெரும்பாலோர் இன்னும் நல்ல நித்திரையில்தான் இருந்தனர். கேப்டனின் அறிவிப்பை அவர்கள் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

தனியே என் மனம் பதறியது. அப்பாமீதுதான் முதலில் கோபம் வந்தது. பேசாமல் ” ஏர் இந்தியா ” விமானத்திலேயே என்னை அனுப்பியிருக்கலாமே!

ஒரு மணி நேரத்தில் ஒரு ” ஜெட்டில் ” ஓடும் விமானம் பத்திரமாக கோலாலம்பூர் போய்ச் சேர்ந்துவிடுமா அல்லது ? விழுந்தால் கடலில் எப்படி தத்தளிப்பது? யார் வந்து காப்பாற்றப் போகிறார்கள்?

மிதக்கும் சாதனத்தைப் பயன்படுத்திக் கொண்டு கடலில் அந்த இருட்டிலும் குளிரிலும் மிதந்தாலும் கடல் மீன்களிடமிருந்து தப்பிக்கணுமே! உயிர் பிழைப்பது என்ன சாதாரணக் காரியமா?

விமானம் கடலில் விழுந்தால் அவ்வளவுதான்! உயிர் பிழைப்பது சிரமமே!

ஒருவேளை இதுவே வாழப்போகும் கடைசி ஒரு மணி நேரமா? இந்த ஒரு மணி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.!

ஐயோ! இப்படி ஒரு சாவா? இனி இந்த அழகிய உலகைப் பார்க்க முடியாதா? அப்பா,அம்மா, அண்ணன் , அண்ணி, தங்கைகள், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் அவ்வளவுதானா ? இதோடு நான் மாயமாய் மறைந்து போவேனா? இப்படி கடல் மீன்களுக்கு இரையாகவா இத்தனை காலம் வளர்ந்தேன். வாழ்க்கையில் எப்படி எப்படியோ வாழவேண்டும் என்று கனவு கண்டிருந்தேனே . எல்லாமே வீணா?. இவ்வளவு நிரந்த்ரமற்றதா மனித வாழ்க்கை!

தமிழகத்தை இனி பார்க்க முடியாதா ? சிங்காரச் சிங்கப்பூரில் இனி வாழ முடியாதா? உயிரே போகும் நிலையில் எந்த நாடாக இருந்து என்ன பயன். நிரந்தரம் இல்லாத மனித வாழ்க்கையில்தான் எத்தனை நிச்சயமான நம்பிக்கைகள்!

இனி எதை எண்ணி என்ன பயன்? தலை சுற்றியது. மூளை குழம்பியது.

அந்த வேலை பார்த்து விமானப் பனிப் பெண் ஒருத்தி வந்து , ” sir want whisky ? ” ( சார், விஸ்கி வேண்டுமா? ) என்று ஆசை காட்டினாள். அப்போதிருந்த மரண பீதிக்கு அதுவே மாமருந்து என்று நினைத்து சரி என்று தலையாட்டினேன். மறு நிமிடமே கையில் மதுக்கிண்ணம்!

விஸ்கி உள்ளே போனதும் உடல் சூடேறி ஒருவித அசட்டுத் துணிச்சல் எழுந்தது. ” போனால் போகட்டும் போடா ” என்ற டி .எம். எஸ்.பாடல் பாடணும்போல் தோன்றியது.

அப்போது கடவுள் ஞாபகமும் வந்தது. நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மனித உடலை அறுத்துப் பார்த்தபின்புதான் அதன் நுணுக்கம் கண்டு கடவுள் மீது நம்பிக்கை கொண்டேன். இப்போது அந்த என் கடவுளிடம் என்னைக் காக்கும்படி மன்றாடினேன்.

விமானம்கூட அதன் உயிரைக் காத்துக்கொள்ள ஓடுவதுபோல் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்ததது. இயந்திரத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டிருந்த பிரயாணிகள் அது பத்திரமாக தரை இறங்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் நிலைக்கு உள்ளானோம்.

காலத்தை எதிர்த்து ஓடும் போராட்டம் அது! இன்னும் முப்பது நிமிடங்களே ! உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். வைரவனோ உரக்க குறட்டை விட்டார்.

திடீரென விமான குலுங்கி அவரின் குறட்டைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது. விழித்துக் கொண்டதும் , ” என்ன இப்படி குலுங்குது. கொழும்பு வந்து விட்டோமா? ” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

” இல்லை இன்னும் கொஞ்ச நேரத்தில் கோலாலம்பூரில் இறங்குகிறோம்.” என்றதும் குழப்பமுற்றவராக , ” கோலாலம்பூரா? நான் கொழும்புக்கு டிக்கட் எடுத்தேனே! ” என்றார்.அவரால் நம்ப முடியவில்லை.

” ஒரு ஜெட் பழுதாகிவிட்டது. அதனால் அவசரமாக கோலாலம்பூர் செல்கிறோம் ” நான் விளக்கினேன்.

” அட ஆண்டவா! இது என்ன சோதனை! ” என்றவவர் கண்களை மூடி பிரார்த்தித்தார்.

விமானத்தின் கேப்டனின் குரல் மீண்டும் ஒலித்தது. ”

” பிரயாணிகளின் கவனத்திற்கு. இன்னும் பத்து நிமிடத்தில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் நாம் இறங்கிவிடுவோம். விமானம் நின்றதும் உடைமைகள் எதையும் எடுக்காமல் உடன் வெளியேறிவிடவும்.இது மிகவும் அவசியம். தயவு செய்து ஒத்துழையுங்கள். நன்றி. நான் கேப்டன் அமீர் கான் .”

வெளியில் விமான ஓடு பாதை தெரிந்தது. எவ்வித தடையுமின்றி விமானம் தரை தட்டியது. வெளியில் தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் நின்றன .

கையில் எதையும் எடுக்காமல் நாங்கள் வெளியேறினோம். பலர் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே தூங்கி எழுந்து எங்களைப் பின்தொடர்ந்தனர்.

வெளியில் காத்திருந்த விமானப் பேருந்துகளில் நாங்கள் ஏறினோம். உடன் விமான நிலைய கட்டிடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டோம்.

பழுதடைந்த ஜெட் சரிபார்க்கப் பட்டபின் பயணம் தொடரும் என்று தகவல் தரப்பட்டது. பழுது பார்க்கப்பட்ட ஜெட்டை நம்பி பயணத்தைத் தொடரலாமா என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.

விடியும்வரை அங்கேயே காத்திருந்தோம். காலைக் கடன்களை முடித்துவிட்டு அங்குள்ள உணவகத்தில் பசியாறினோம்.

பழுது பார்த்தும் பயன் இல்லையாம். ஆகவே சிங்கபூரிலிருந்து வேறொரு விமானம் வருகிறது என்ற செய்தி கேட்டு பெருமூச்சு விட்டோம்.

காலை முழுதும் அங்கேயே கழிந்தது.. மதிய உணவும் வழங்கப்பட்டது. அதன் பின்புதான் சிங்கப்பூரிலிருந்து வேறொரு பழைய விமானம் வந்து சேர்ந்தது.

பெட்டிகளும் சாமான்களும் மாற்றப்பட்டபின் கொழும்பு நோக்கிப் புறப்பட்டோம்!

( முடிந்தது )

Series Navigationநாள்குறிப்புகாந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்
author

Similar Posts

Comments

  1. Avatar
    கவிஞர் இராய செல்லப்பா says:

    அடிக்கடி விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு இத்தகைய அனுபவங்கள் இன்னும், இன்றும் நேர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பழுதான விமானத்தைச் சீராக்கியபின்னும் அதில் பயணம் செய்ய அஞ்சும் மனது, வேறொரு விமானத்தில் ஏறி (அது பழுதாகாது என்று) அமரும் நம்பிக்கைக்குக் காரணம் என்ன என்பதை ஜான்சன் போன்ற மருத்துவர்கள் தாம் கூற வேண்டும். –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *