ஜாக்கி சான் 26. மாபெரும் வெற்றிக்கான முதற்படி

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

 

லோ  வெய் ஜாக்கியை வைத்து எடுத்த மற்ற படங்களைப் போலல்லாது, ஜாக்கிக்குத் தகுந்த பாத்திரமாக நாயகன் இருந்ததால், யாரும் எதிர்பாராத அளவிற்கு வெற்றியைத் தந்தது கழுகின் நிழலில் பாம்பு படம்.

 

ஒவ்வொரு வாரமும் தயாரிப்பு அலுவலகத்தில் என். ஜி. யூன், ஜாக்கி மூவரும் சந்தித்து, பட விற்பனைப் பற்றி அறிந்து கொண்டனர். ஹாங்காங் தவிர தைவான், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா என்று எல்லா இடங்களிலும் வருவாய் ஏறிக் கொண்டே இருந்தது.

 

ஒரு வாரத்தின் இறுதியில், என். ஜி தன் அறையில் வருவாய் கணக்குகளைப் பார்த்துக் கொண்டு இருந்த போது, யூன்னும் ஜாக்கியும் அடுத்தப் படத்திற்கான கதையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

 

“யூன், ஜாக்கி.. உங்களிடம் ஒரு கேள்வி” என்று சொல்லிவிட்டு, “ஹாங்காங் திரை வரலாற்றில் பெரிய படம் எது?” என்று கேட்டார்.

 

“என்ன.. பிஸ்ட் ஆப் புயூரி” என்றான் ஜாக்கி.

 

“இல்லை.. இல்லை.. வே ஆப் தி டிராகன் பிஸ்ட் ஆப் புயூரியை விடவும் பெரியது.  அதனால் வே ஆப் தி டிராகன் தான்” என்றார் யூன்.

 

இருவரையும் நோக்கி புன்னகைத்து விட்டு “ நீங்கள் இருவருமே தவறு” என்று கூறி விட்டு, எண்கள் எழுதியிருந்த ஒரு சிறிய தாளைக் கொடுத்து விட்டு, “பதில் ஸ்னேக் இன் தி ஈகிள்ஸ் ஷேடோ” என்றார் மகிழ்ச்சியுடன்.

 

புரூஸை விடவும் பெரியது‚

 

ஒரு எம்பு எம்பி  மகிழ்ச்சியால் யூன்னின் முதுகில் தட்டிக் கொடுத்து, அப்படியே கரணம் போட்டு எழுந்தான் ஜாக்கி.

 

தன்னை நட்சத்திரம் நட்சத்திரம் என்று சொல்லிச் சொல்லி ஆறுதல் படுத்திக் கொண்டு வாழ்ந்த நேரங்கள், கனவுலக நாயகனாக வலம் வந்த நாள்கள், அன்று நிஜமாகிப் போனது. புகழும் பணமும் சொத்துள்ள அழகான மற்றவர்களுக்கு. தன்னைப் போன்ற ஏழை, சமையல்காரனின் மகன், கல்வியறிவில்லாத, அழகற்ற சிறுவனுக்கு இல்லை என்று எண்ணிய எண்ணம் பொய்த்தது.

 

“விழா கொண்டாட நேரமில்லை.  நாம் விநியோகஸ்தர்களுக்கு நம் இந்த வெற்றி ஜாக்கி சானின் முத்திரை. சும்மா வரவில்லை என்பதைக் காட்ட வேண்டும். அதனால் இன்னொரு படத்தை பொடுத்து நிருபிக்க வேண்டும்” என்றார் என். ஜி மிகுந்த வேகத்துடன்.

 

யூன் ஜாக்கியைப் பார்க்க, ஜாக்கி நகைத்தான். “பிரச்சினையேயில்லை.  நாங்கள் அடுத்த படத்திற்குத் தயார்.  இதைக் கேளுங்கள்..” என்று ஜாக்கி தன் அடுத்தத் திட்டத்தை வேகத்துடன் விளக்க ஆரம்பித்தான்.

 

இந்தக் கதை முந்தைய கதையின் தொடராக படத்தின் வெற்றி முத்திரையைப் பதிக்கும் வண்ணம் இருந்தது.  அடுத்த படம் மேலும் வேகமானது.  அதிக வேடிக்கை.  பாரம்பரியத்தை மாற்றும் வண்ணம் அமைந்தது.

 

சீன வரலாற்றில் சகாப்தத்தை ஏற்படுத்தியவர் வாங் பெய் ஹ_ங். அவர் மருத்துவர். வீரர்.  நோயாளிகளை குணமாக்குபவர். பலமற்றவர்களைக் காப்பவர்.  அவர் காலத்தில் தலை சிறந்த வன்மக்கலைஞராக இருந்தவர்.  கேன்டன் பகுதியின் பத்து புலிகளில் ஒருவர் என்று பெயர் பெற்றவர்.  சிங் பேரரசர்களே கண்டு பயப்படும் போராளியாக இருந்தவர்.  மக்களால் விரும்பப்படுபவர்.  அவரது கதை கேன்டன் படங்களின் இதயம் என்று சொல்லும் அளவிற்கு, அவரைப் பற்றிய படத் தொடர்கள் அனைத்தும் ஹாங்காங் திரையில் பிரமலமாகி வெற்றியும் பெற்றன.

 

யூன்னும் ஜாக்கியும் வாங் பற்றிய புதிய படம் எடுக்கலாம் என்று கருதினர். அவரை வயதான நாயகனாகக் காட்டுவதற்கு மாறாக அவரை இளைஞனாக, சோம்பேறியாக, அமைதியான முட்டாளாக, வீம்பு பிடிப்பவனாகக் காட்டி, பிறகு எப்படி நாயகனாக ஆனார் என்பதைக் காட்ட விரும்பினர்.

 

“நல்ல கதைக் கரு.. பிடிச்சிருக்கு.. “ என்று உடனே ஆமோதித்தார் என். ஜி.

 

டிரன்கன் மாஸ்டர் – குடிகார குரு என்று பெயரிட்டனர்.

 

நாமும் கதையைத் தெரிந்து கொள்ளலாமா?

 

நாயகன் பிரெடி மிகவும் விளையாட்டுப் போக்கானவன். பல குறுப்புகளைச் செய்து தந்தையிடம் மாட்டிக் கொண்டு முழிப்பவன்.  கடைசியில் அவன் செய்வதைப் பொறுக்க மாட்டாமல் தண்டனைத் தரச் தயாராகும் போது, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள ஓடுகிறான். அவனை ஆட்கள் துரத்தி வரும் போது, எந்தக்  குடிகார குருவிடம் அனுப்ப வேண்டும் என்று தந்தை எண்ணியிருந்தாரோ, அதே குருவின் வீட்டிற்கு முன்னால் தவறி வந்து விழுகிறான். குரு அவனை சீடனாக ஏற்று, குடித்துக் கொண்டே எட்டு குடிகார யுத்திகளைச் செய்து காட்டுகிறார்.  கடுமையான பயிற்சி காரணமாக, அதை விட்டுச் செல்கிறான்.  வெளியே சென்ற போது அவனை எதிரி சண்டையிட்டு அவமானப்படுத்துகிறான்.  அதற்கு வஞ்சம் தீர்க்க எண்ணி மறுபடியும் குருவிடமே வந்து, அவரிடமிருந்து வன்மக்கலையை மிகவும் கவனமாகக் கற்றுத் தேர்கிறான்.  இந்த முறை கடுமையான பயிற்சியை மிகுந்த உறுதியுடன் மேற்கொள்கிறான்.  எதிரி பிரெடி குடும்பத்தினரின் சொத்தை பக்கத்து வீட்டுக்காரனின் பொறாமையால் அபகரிக்க எண்ணி சண்டையிடுகிறான். தந்தையைக் காக்க, சொத்தைக் காக்க எதிரியுடன் சண்டையிட்டு தோற்கடித்து வெற்றி வாகை சூடுகிறான் நாயகனான பிரெடி என்பதே கதை.

 

விரைவிலேயே படப்பிடிப்பை ஆரம்பித்தனர்.  அது தான் ஜாக்கியின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றப் போகிறது என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.

 

கழுகின் நிழலில் பாம்பு படத்தின் நல்ல அம்சங்களையெல்லாம் எடுத்துக் கொண்டனர்.  குடிகாரக் குருவாக சைமன் யூன்.  எட்டு குடிகாரக் கடவுளர்களின் வன்மக்கலை என்று புதிய குங்பூ யுத்திகளைக் கண்டுபிடித்தனர்.  அது வாங் பெய் ஹ_ங்கின் ரகசிய ஆயுதமான குடிகார யுத்தி குங்பூவை அடிப்படையாகக் கொண்டது.

 

இது முந்தைய படத்தை விடவும் மிகப் பெரிய அளவில் எடுக்கப்பட்டது.

 

படத்தில் வரும் பயிற்சி செய்யும் காட்சிகள் எல்லோர் மனதையும் சங்கடப்படுத்தக் கூடியதாக இருந்தது.  இத்தனையும் செய்ய முடியுமா என்று ஆச்சரியப்பட வைக்கும்படி அமைந்தன.  ஒரு காட்சியில் ஜாக்கி தலைகீழாகத் தொங்கிக் கொண்டே, காலருகே இருக்கும் காலியான குடுவையில், கீழே வைக்கப்பட்டிருக்கும் நீர் நிறைந்த குடுவைகளிலிருந்து, இரண்டு சிறு கோப்பைகளின் மூலமாக நீரை எடுத்து நிரப்பும் காட்சி பார்ப்போரை பிரமிக்க வைக்கும் காட்சி.

அந்தப் பயிற்சியெல்லாம் ஜாக்கி நாடகக் கழகத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களின் ஆதாரமே என்பதை அவரது வாழ்க்கைக் கதையை அறிந்தவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும். காட்சிகள் மிகவும் நகைச்சுவையுடனும் சுவாரசியமாகவும் அமைக்கப்பட்டன.

 

படம் மாபெரும் வெற்றியைக் கொடுத்தது.  இதுவரை ஹாங்காங் திரை வரலாற்றில் ஏற்படாத சாதனை‚ எண்பது இலட்சம் வெள்ளிகளை ஈட்டியது.  முந்தைய படத்தை விட அதிக வருமானத்தை ஈட்டியது. குடிகார குரு நகைச்சுவை குங்பூ என்ற  புதிய சகாப்தத்தின் ஆரம்பமாக அமைந்தது. ஜாக்கி சான் நகைச்சுவை குங்பூவின் முடிசூடா மன்னனாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

 

மூன்று மாத ஒப்பந்தம் முடியும் தருவாயில், வில்லியிடமிருந்து அழைப்பு வந்தது.

 

சான் லோவைச் சந்திக்கச் சென்ற போது, “நல்வரவு குழந்தாய்‚” என்று கண்ணாடி அணிந்த புத்தரைப் போன்று கனிவுடன் அழைத்தார். “உன்னிடம் திறமை இருக்கிறது என்று எனக்கு முன்பே தெரியும்” என்று பாராட்டினார்.

 

அலுவலகத்தின் முழு நேர ஊழியர்களும் பகுதி நேர ஊழியர்களும் ஜாக்கி சானைக் காண ஆவலுடன் காத்திருந்தனர். அனைவரும் சானை கை தட்டி வரவேற்றனர். லோ ஜாக்கியை ஆரத் தழுவி உச்சி மோர்ந்தார்.  திருமதி லோவும் ஜாக்கியை அன்புடன் அழைத்து, கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்தினார்.  கதாநாயகனாக அனைவரும் அவரை நடத்தினார்கள்.  வில்லி அவருக்கு அழகிய மலர்க்கொத்தொன்றை வழங்கினார்.

 

ஜாக்கிக்கு அனைத்தும் அதிகப்படியாகத் தோன்றியது.  மூன்று மாதங்களுக்கு முன்பு தான், திறமை போதவில்லை என்று மற்றொரு அலுவலகத்திற்கு கடனாக அளிக்கப்பட்டார். ஆனால் இன்று புகழால் போர்த்தித் திரும்பி வந்ததும், ஏதோ தான் சாதிக்கப் பிறந்தவன் என்று முன்பே அறிந்தது போன்று நடந்து கொள்வது ஜாக்கிக்கு சற்றும் பிடிக்கவில்லை.

 

வில்லியும், திருமதி லோவைத் தவிர யாருக்குமே ஜாக்கியின் திறனில் நம்பிக்கை இருந்ததில்லை என்பது மறுக்கவே முடியாத உண்மை. அதுவும் முக்கியமாக லோ.

லோ வருங்காலத் திட்டங்கைளப் பற்றி நிறைய பேசிய வண்ணம் இருந்தார்.  ஜாக்கிக்கு அதைக் கேட்க ஆர்வமேயில்லை.  இறுதியில் ஜாக்கியின் நடத்தையைக் கண்ட லோ, அவரைச் சற்றும் கோபிக்காமல், தன் பேச்சை முடித்துக் கொண்டார். இதே போல் ஜாக்கி முன்பு நடந்திருந்தால், நடந்ததே வேறாக இருந்திருக்கும்.

 

“ஜாக்கி.. உனக்கு என்ன வேண்டும் என்று சொல்.. நீ எங்கள் நட்சத்திரமாயிற்றே..” என்று எங்கள் என்ற வார்த்தையில் அதிக அழுத்தம் கொடுத்தார் லோ.

 

அவர் சொன்னதைத் தலையாட்டி ஆமோதித்து விட்டு, லோவின் கையில் சிக்கியிருக்கும் தன்னுடைய வருங்காலம் எப்படி இருக்கப் போதிறது என்று எண்ணினார்.

 

அவரின் இன்றைய மாபெரும் வெற்றிக்கு பின் வேறு பல போராட்டங்களும் இருந்தன.

 

—-

 

Series Navigationஜோதிர்லதா கிரிஜாவின் “மாறாத மனிதர்கள்”சூரிய மண்டலத்தில் பூமியை நெருங்கச் சுற்றித் திரியும் மூர்க்க முரண் கோள்கள் [Rogue Asteroids]வால்ட் விட்மன் வசனக் கவிதை – 60 ஆதாமின் பிள்ளைகள் – 3சீதாயணம் நாடகப் படக்கதை – 18
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *