பட்டறிவுகளின் பாடங்கள் – [எஸ்ஸார்சியின் ‘தேசம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

”ஜரகண்டி”எனும் தலைப்பில் ஒரு சிறுகதை. மிகவும் எள்ளலானது. அரசு விழாக்கள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுவது. ‘ஜரகண்டி’ என்ற சொல் மிகவும் பிரபலமானதாகும்.

முன்கூட்டிப் பதிவு செய்து திட்டமிட்டுத் திருமலை அடைந்து பதினைந்து மணி நேரம் அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுப், பெருமாளருகில் சென்று தரிசிக்கும் போது காதில் ஒலிக்கும் குரல் ஜரகண்டி. அதைச் சொல்லிக் கொண்டே நம்மை இழுத்து அப்புறப் படுத்தி விடுவார்கள்.

இதை அப்படியே ஒப்பிட்டு எஸ்ஸார்சி எழுத்தாளர் ஒருவர் அரசு விருது வாங்கும் விழாவுக்குச் சென்று விருது வாங்குவதுடன் பிணைத்துக் கொடுத்துள்ளார்.

”பார்வையாளர்களை அரங்கில் பட்டியாகப் பிரித்து வைத்திருந்தார்கள். ஆடு மாடுகளுக்குத்தான் பட்டிகள் வைத்து அவை அடைக்கப்படும். ஏழுமலையானைத் தரிச்சிக்கப் போகிறவர்க்ள் காத்திருப்புக் கூண்டில் அடைபட்டு வருவதில்லையா என்ன?”

என்ற அவர் எழுத்து உண்மை நிலையைப் பிரதிபலிக்கிறது.

”முதல்வர் சான்றிதழ் வழங்க சால்வையை ஒருவர் போர்த்த அடுத்த வினாடியே அவனைத் தள்ளிக் கொண்டுபோய்த் தூரமாய் விட்டனர்” என்ற எஸ்ஸார்சியின் குரலில் இருக்கும் தவிப்பை நம்மால் உணர முடிகிறது. போதாக்குறைக்குப் பையன் வந்து  “என்னாப்பா? ஜரகண்டி விருது வாங்கியாச்சா? என்றுகேட்கிறான்.

இச்சிறுகதை அப்படியே உண்மை நிகழ்வாக ஒளிர்கிறது. புனைவு, தளவருணனை ஏதும் இல்லை. ஆனால் எழுத்தாளன் நடையால் நாமும் எழுத்தாளன் மன உணர்வை உள்வாங்கக் கதை வெற்றி பெறுகிறது. இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் கதாசிரியரின் வாழ்வில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது.

ஒரு படைப்பாளன் தன் அனுபவம் ஒன்றிலிருந்து படைக்கும் படைப்பே வெற்றி பெறுகிறது. ஆனால் எந்த அனுபவத்தைத்  தேர்ந்தெடுப்பது என்பதில் அவன் மிகவும் கவனமாக இருக்க வேண்டி உள்ளது.

சில துணிச்சலான கருத்துகளையும் யார் என்ன சொல்வார்கள் என்பதுபற்றிக் கவலைப் படாமல் எஸ்ஸார்சி எழுதி உள்ளார்.

எஸ்ஸார்சி மார்க்சியத்தின்பால் ஈடுபாடு கொண்டவர். சோவியத்தின் வீழ்ச்சியை அவர் வேறு கோணத்தில் பார்க்கிறார். எழுத்தாளர்களும் மார்க்சியவாதிகளும் சோவியத் அரசை அங்குள்ள மக்களின் நிலையை மிகைபடப் புகழ்ந்ததுதான் அதன் வீழ்ச்சிக்கு அடிப்படை என்று எண்ணுகிறார். எதையுமே உள்ளபடி எழுத வேண்டும் என்கிறார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளன் கூறுவதாக ‘அவம்’ கதையில் வருகிறது.

”ஒரு மாசம் கொல்கதாவுல செங்கொடிக்காரங்க ஆட்சியில இருந்தப்ப வந்து தங்கி இருந்து நேராகவே அனுபவிச்சி இருந்தா உண்மை தெரிஞ்சி இருக்கும். உங்களைச் சொல்லிக் குத்தம் இல்ல; வங்கத்துல தேனாறும் பாலாறும் ஓடுதுன்னு மட்டும் தானே  எழுதுவீங்க; இன்னைக்கும் கூட அதெல்லாம் அங்கே ஓடலயே? மனசாட்சியைக் காயடிக்காம நேர்மையோட புகழ்ந்து இருந்தா அந்த சோவியத்தும் கூட அழிஞ்சி இருக்காது. மேலும் குறை சொன்னால் தாங்க மாட்டீர்கள்?” என்பதோடு, ”சோவியத் எனும் தியாக பர்வதத்தைத் தொலத்துவிட்டுக் குற்ற உணர்வு சிறிதும் இன்றி எப்படி நிற்கிறீர்கள்”

என்று கேட்கும் போது சுயமதிப்பீடு புலனாகிறது.

சாதாரண அனுபவங்களான எலி பிடித்தல், கட்டில் செய்தல், பதிப்பாளர் படுத்தும்பாடு, மணமகளின் தலை முடிநிலை போன்றவையும் நல்ல கதைகளாக வெளி வந்துள்ளன.

புத்தகம் நேர்த்தியாக வெளிவந்துள்ளது. பொருளடக்கம் போட்டிருக்கலாம். மொத்தத்தில் இத் தொகுப்பு சுய அனுபவங்களின் வெளிப்பாடு.

[’தேசம்’—சிறுகதைத் தொகுப்பு—எஸ்ஸார்சி;  வெளியீடு—அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்—பெரம்பூர்; சென்ன்னை 600 011; 9444640986; பக்;144; விலை; ரூ 100]

Series Navigationநீங்காத நினைவுகள் 40புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 51பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : அண்டவெளி மோதல்களில் குள்ளக் கோள் சாரிக்ளோவில் வளையங்கள் உண்டானது முதன்முதலில் கண்டுபிடிப்புசென்றன அங்கே !’ரிஷி’ கவிதைகள்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 68 ஆதாமின் பிள்ளைகள் – 3சீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​6நெய்யாற்றிங்கரை
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *