”செல்வப் பெண்டாட்டி”

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

 

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்,

குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே,

புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,

சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்து,

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி,நீ

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!

திருப்பாவையின் பதினோராவது பாசுரம் இது. இந்தப் பாசுரத்திற்கும் இதற்கு அடுத்த பன்னிரண்டாம் பாசுரத்திற்கும் தொடர்பு உண்டு. இப்பாசுரம் கடமையைச் செய்வதைக் காட்டுகிறது என்றால் அடுத்த பாசுரம் தன் கடமையைச் செய்யாததைக் காட்டுகிறது.

ஆயர்பாடிப் பெண்கள் இப்பாசுரத்திலும் தன் இல்லத்தின் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை எழுப்புகிறார்கள். உறங்கிக் கொண்டிருப்பவள் கண்ணனைப் போலவே மிகவும் சிறப்பு உடையவள். எல்லாராலும் விரும்பக் கூடியவள்.

”கிருஷ்ணன் ஊருக்காக ஒரு பிள்ளையாய் எல்லாராலும் கொண்டாட வளரந்தார்போலே, ஊருக்காக ஒரு பெண்பிள்ளையாய் என்னும்படி பருவத்தை உடைவளாய், அவனைப் பெறுகைக்கு நோற்பேன் நானோ அவன்தானே வேணுமாகில் நோற்று வருகிறான் என்று கிடப்பவளை எழுப்புகிறார்கள்” என்பது வியாக்கியானம்.

கன்று + கறவை = கற்றுக்கறவை என்றாயிற்று.

இரும்பு + பாதை = இருப்புப்பாதை என்றாகும்.

செப்பு + குடம் = செப்புக் குடம் என்பது ஆகும்.

“மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற்றெல்லாம் வல்லொற்று இறுதி கிளையொற்று ஆகும்” என்பது இதற்கான புணர்ச்சி விதியாகும்.

மேலும் கற்றுக் கறவை என்பதை இரண்டாம் வேற்றுமைத் தொகையாகப் பொருள்கொண்டால் கன்றுகளை உடைய பசுக்கூட்டங்கள் என எண்ணலாம். பண்புத் தொகையாக்க் கொண்டால் கன்றாகிய பசுக்கள் என்றும் கொள்ளலாம்.

ஆயர்பாடியில் கன்றில்லாத பசுக்களைப் பார்க்க முடியாதாம். மேலும் பசுக்கள் கூட கன்றுக்கு ஆகும் வயதே ஆகியிருந்தாலும் அவை கன்றுகள் போலவே இளமையாகவே காட்சி தரும்.

நித்ய சூரிகள் எப்பொழுதும் பகவானின் ஸ்பரிசத்தால் இருபத்தைந்து  வயதானவரைப் போலவே இருப்பார்கள். அதுபோல இக்கறவை மாடுகள் கண்ணனின் கைபட்டதாலே வயது கீழ் நோக்கிப் போய் இளமையாகிவிடும்..கண்ணன் பார்த்தாலோ அவன் கை பட்டாலோ அவை வயது குறைந்தவை போல ஆகிவிடுமாம்.

”தேவகுமாரனைப் போல உருவமுள்ளவனும், அலங்கரிப்பட்டு வருபவனுமான ராமனை மனக் கண்ணால் கண்டபோதே இன்பம் அடைகிறேன். நேரே கண்டாலோ நான் வாலிபனாக ஆகிவிடுகிறேன்”

என்று தயரதன் கூறுவது இவ்விடத்தில் நினைவு கூறத்தக்கது.

பசுக்கள் நித்யசூரிகளுக்கும் கன்றுகள் பக்குவப்படாதோருக்கும் இங்கு மறைபொருளாக உவமையாகின்றன. நித்ய சூரிகள் மற்றவறைப் பக்குவப்படுத்துவார்கள். எப்படியென்றால் புல்லின் மீது தன் கோமியம், சாணம் பட்டால் அந்தப் புல்லைத் தின்னாத பசு அதன் கன்றின் மேல் அவை பட்டிருந்தால் நாவால் அவற்றை நக்கித் தன் கன்றைச் சுத்தப் படுத்துவதைப் போலவாம்.

கண்ணனுக்கு ஆயர்குலப் பெண்களை  மிகவும் பிடிக்கும். அப்பெண்களைவிட ஆயர் சிறுமிகள் மீது அவனுக்கு விருப்பம் அதிகம். அவனே பசுக்களைக் கண்டால் அச்சிறுமிகளைப் பாரான். கன்றுகளிடம் அப்பசுக்களைவிட அன்பு காட்டுவானாம். எனவே அவை மிகவும் இளமையானவையாகவே இருக்கின்றன.

மேலும் இந்த ஆநிரை மேய்த்தல் என்பது கண்ணனுக்கு மிகவும் பிடித்தமான காரியம். பரமபதம் சென்ற பிறகும் தூக்கத்தின்போது அவன் ‘ஹேய், ஹேய்’ என்று மாடு மேய்ப்பதை நினவில் கொண்டு புலம்புவானாம்.

”திவத்திலும் பசு நிரை மேய்ப்புவத்தி செங்கனி வாயெங்கள் ஆயர்கோவே” என்பது நம்மாழ்வார் அருளிச் செயலாகும்.

திருமங்கை ஆழ்வாரும் கண்ணனின் ஆசையை,

“கன்று மேய்த்து இனிதுகக்கும் காளாய்” என்று அறிவிப்பார். அதுவும் சாதாரண உகப்பு அன்று. இனிது உகப்பு என்பார் அவர்.

“கன்றுகள் ஓடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டு’ என்று அவன் குறும்பை அனுபவிப்பார் பெரியாழ்வார்.

ஆயர்பாடியில் பசுக்கூட்டடங்கள் மிக அதிகம். அவையே கணங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அவனுக்கு எதுவுமே தனியாக ஒன்று என்று கிடையாது. எல்லாமே பலப்பல தான். நம்முடைய பாவங்களை எண்ண முடியாததுபோல அவனின் கல்யாண குணங்களை எண்ண முடியாது.  அவை பல பலவாம். அவனுக்கு ஆபரணங்கள் பல. அவனுடைய திருநாமங்கள் பல. அவன் வடிவங்களும் பல. அதனால்தான் நம்மாழ்வார்,

‘பல பலவே ஆபரணம் பேரும் பலபலவே

பல பலவே சோதிவடிவு பண்பெண்ணில்

பலபல கண்டுண்டு கேட்டிற்று மோந்தின்பம்

பலபலவே ஞானமும் பாம்பணை மேலார்க்கேயோ”

என்று அருளிச் செய்கிறார்

பெரிய திருமொழி 5—7—2 லும் அவனுடைய என்ணில் பல் குணங்களின் பெருமை பேசப்படுகிறது.

’இந்திரன் பிரமன் ஈசன் என்றிவர்கள்

எண்ணில் பல் குணங்களே யியற்ற

தந்தையும் தாயும் மக்களும் மிக்க

சுற்றமும் சுற்றிநின் றகிலாப்

பந்தமும் பந்தமறுப்பதோர் மருந்தும்

பான்மையும் பல்லுயிர்க்கெல்லாம்

அந்தமும் வாழ்வும் ஆய எம்பெருமான்

அரங்க மாநகர் அமர்ந்தானே”

கணக்கற்ற அந்த எல்லாப் பசுக்களிடத்திலும் கண்ணன் ஒருவனே கறக்கிறான். அவன் ஒருத்தனே கறக்கவல்ல சாமர்த்தியம் உடையவன். ஏனெனில் அவன் ஆயர் குலத்திலன்றோ அவதரித்திருக்கிறான்.

”ஈஸ்வரன் ஒருவனே ஸர்வாத்மாக்களுக்கும் நியமநாதிகளைப் பண்ணூமாப் போலே பசுக்கள் அநேகமாகிலும் ஜாதியின் மெய்ப்பாட்டால் செய்யவல்ல சாமர்த்தியம் உடையவன்”

என்பது வியாக்கியானம் ஆகும்.

ஆயர்குடிப் பெண்கள் கண்ணனிடம்,

”கண்ணா! நீ சாமர்த்தியம் உடையவன்; அரிய பல காரியங்களைச் செய்ய வல்லவன். ஆனால் எங்களுக்கு உன்னையன்றி வேறு ஒன்றும் தெரியாது. இந்த அபலைகளிடமா உன் சாமர்த்தியத்தைக் காட்டுவது? உன்னைப் பிரிந்து வாடுகின்ற எங்களிடம் உன் அரிய காரியங்களைக் காட்டாதே”

என்கிறர்கள்.

அதற்குக் கண்ணன்

”அப்படியானால் நான் என் அருங்காரியங்களை யாரிடம் காட்டுவது?” என வினவுகிறான்.

”உன் எதிரிகளிடம் காட்டு” என்கிறார்கள்.

கண்ணனுக்குப் பகைவர்கள் உண்டா? அவனுக்கு என்று தனியாக எதிரிகள் என்று யாரும் இல்லை

இராவணனின் சகவாசத்தில் இருந்ததாலே வீடணனை எதிரி என்று அங்கதன் குறிப்பிட்டது போலே ஆண்டாள் நாச்சியார் இவ்வூர் சகவாசம் இல்லாதவர்களை எதிரிகள் என்றும், கிருஷ்ணனின் மினுக்கம் பெறாதவர்களை எதிரிகள் என்றும் கூறுகிறார்.

ஸ்ரீ வைணவ சம்பிரதாயத்தில் பகவத் சம்பந்தம் பெறாதவர்கள் பாகவதர்க்கு எதிரிகள்; தன்னுடைய உயிர் நிலையான பாகவதர்களுக்கு துன்பம் செய்பவர்கள் பகவானுக்கு எதிரிகள் ஆவார்கள். இந்த இரண்டு குற்றங்களும் செய்தவன்தான் கம்சன். அதனால்தான்  அவன் ‘தீய புந்திக் கஞ்சன்’ என்றும் ‘சாதுசனத்தை நலியும் கஞ்சன்’ என்றும் பெரியாழ்வாரால் குறிப்பிடப்படுகிறான். அவனும், அவனைச் சேர்ந்தவர்களுமே இங்கு ‘செற்றார்’ எனப்படுகின்றனர்.

“செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்” என்பதில் வீரம் பேசப்படுகிறது.  பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளியுள்ள திருவரங்கக் கலம்பகத்தில் ’மறம்’ என்ற பிரிவில் அரங்கன் மீது அன்பு வைத்தவர்கள் கொண்ட வீரத்தைக் காட்டுவார்.

பள்ளிகொண்ட பெருமாளிடத்தில் பக்திகொண்ட மறவர் குலப் பெண்ணை மணம் கேட்டு ஒரு தூதன் ஓலை கொண்டு வருகிறான். அவனிடத்தில்,

“தூதனே, எங்கள் பெண்ணை வேண்டி ஓலை கொண்டு வந்திருக்கிறாயே; எங்கள் குலத்தின் வீரம் பற்றி உனக்குத் தெரியுமா அல்லது பெண் கேட்டு வந்தவர்கள் பட்ட பாடு நீ அறிவாயா? எம் வாசலுக்கு நாங்களிடும் படல் எது தெரியுமா? தோற்ற எம் எதிரிகளின் பல்லக்கு அகும். எங்கள் இல்லத்தில் தினை போன்ற தானியங்களை அளக்க நாங்கள் பயன்படுத்துவது தோற்றோடிப் போன பகைவர்களின் மகுடங்களாகும். அவர்களுக்கு வீசப்பட்ட சாமரங்களே எங்கள் குடில்களின் மீது கூரையாக வேயப்பட்டிருக்கின்றன. தோல்வி கண்ட அவர்களின் வில்லையும், வாளையும், வேலையுமே நாங்கள் சுற்றிலும் வேலியாக அமைத்துள்ளோம்.”

என்று வீரம் பேசுகின்றனர். இதோ பாடல்:

“பேச வந்த தூத! செல்லரித்த ஓலை செல்லுமோ?

பெருவரங்கள் அருளரங்கர் பிள்ளை கேள்வர் தாளிலே

பாசம்வைத்த மறவர்பெண்ணை நேசம்வைத்து முன்னமே

பட்டமன்னர் பட்டதெங்கள் பதிபுகுந்து பாரடா;

வாசலுக்கு இடும்படல் கவித்து வைத்த கவிகை மா

மகுடம்கோடி தினையளக்க வைத்த காலும் நாழியும்

வீசுசாமரம் குடில்தொடுத்த கற்றை சுற்றிலும்

வேலியிட்டது அவர்களிட்ட வில்லும் வாளும் வேலுமே!

பகைவர் இடத்திற்குச் சென்று போர் செய்வதே ’சென்று செருச் செய்வது’ ஆகும். இராவணனின் இலங்கைக்கே சென்று இராமன் போரிட்டதும், கம்சனின் வடமதுரைக்கே சென்று கண்ணன் போரிட்டதும் இங்கு நினைவு கூறத்தக்கது ஆகும்.

பகைவர்கள் வரின் அவர்களை எதிர்த்துப் போரிடத் திறமையற்று அவர்களிடமே அடைக்கலம் புகுவது அதம வீரனுக்கு இலக்கணம். எதிரிகள் இவ்விடம் வரட்டும் அவர்களுடன் போரிடுவோம் என்றிருப்பது மத்யம வீரனுக்கு இலக்கணம். ஆனால் அவர்கள் வரும்வரை காத்திருக்காமல் தாங்களாகவே அவர்களிடம் சென்று அவர்களுடன் போரிட்டு வெல்வதே உத்தம வீர இலக்கணம்.  இவர்கள் உத்தமமான வீர்ர்கள்.

மேலும் இவர்கள் எதிரிகளை அழிக்க எண்ணுபவர்கள் இல்லை. அவர்கள் திறன், வலிமை, பலம் ஆகியவற்றைப் போக்கினால் போதும் என்று நினைப்பவர்கள்.

மேலும் அவர்கள் குற்றமொன்றும் இல்லாதவர்கள். ஏனெனில் வீர்ர்களுக்கும் ஒரு சில குற்றங்களுண்டாம். பகைவர்கள் படையெடுத்து வருதலைப் பார்த்துச் சும்மா இருத்தல்; போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடி வருதல்; கையில் ஆயுதங்கள் ஏதுமில்லாதவனிடம் போர் புரிதல்; என்பன அக்குற்றங்களாம். அக்குற்றங்கள் ஏதும் இல்லாதவர்கள் அவர்கள்.

அவர்கள் எம்பெருமானுடைய அருளுக்கு ஆட்பட்டவர்கள் ஆதலாலே

அவன் பார்வை பட்டதாலும் குற்றமற்றவர்கள்.

”பழங்காலந்தொட்டே கெட்ட குணங்களை உடையவனாக இருந்தாலும், கண்டதையெல்லாம் உண்பவனாய் இருந்தாலும், செய்ந்நன்றி மறந்தவனாய் இருந்தாலும், கண்ணனைச் சரணடைந்தால் அவன் குற்றமற்றவனாகிறான் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

அவன் அடியார்களின் குற்றங்களைக் காணாதவன். அவர்களின் நன்மைகளை ஆயிரம் மடங்கு அதிகமாகக் காண்பவன். அதனால்தான் பெரியாழ்வாரும்

”குன்றனைய குற்றம் செய்யினும்

குணம் கொள்ளும்”      என்றும்

“தன்னடியார் திறந்தகத்துத்

தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்

என்னடியார் அதுசெய்யார்

செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்”

என்றும் அருளிச் செய்தார்.

அழைத்தவுடன் வராத கடலரசன் மீது கோபம் கொண்டு தொடுத்த அம்பை மருகாந்தரத்திலே இராமன் விட்டதும், மகாபாரதப் போரில் பகதத்தனுடைய அம்பைத் தன் கண்ணன் தன் மார்பில் ஏற்றதும் நாலாயிரப்படி வியாக்கியானத்தில் இங்கு எடுத்துக் காட்டப் பட்டுள்ளது.

அடுத்து ஆயர்குலத்தில் தோன்றிய அவள் பெருமை ‘கோவலர்தம் பொற்கொடியே’ என்று காட்டப் படுகிறது.

’என்னுடைய குலத்திற்கே இவள் கீர்த்தியைத் தரப் போகிறாள்’ என்று ஜனகர் கொண்டாடிய சீதையைப் போல உள்ளே இருப்பவள் ஆயர் குலத்தில் தோன்றிய அணிவிளக்காக விளங்குகிறாள்.

அவள் பொன் போன்று அழகியவளாயும், கொடி போல இளமையாயும் இருக்கிறாள். எனவே அவளைப் ’பொற்கொடி’ எனக் கூப்பிடுகிறார்கள்.

அவள் கொடி போன்றவள்; பகவான் அவள் பற்றக்கூடிய கொம்பு போன்றவன்.

’ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னல்லால் அறிகின்றிலேன் யான்”

என்றும்

”கோல்தேடியோடும் கொழுந்ததே போன்றதே மால் தேடிஓடும் மனம்” என்றும்

ஆழ்வார்கள் அருளிச் செய்திருக்கிறார்கள்.

”அப்படிப்பட்ட நீ தரையிலே கிடக்கலமா? ஒரு பற்றுக் கொம்பான கண்ணனைப் பற்ற எழுந்து வர வேண்டாமா? அவனைப் பிரிந்தாலும் உங்களை நான் பிரியேன் என்று சொன்னாயே; அதுவும் பொய்த்ததோ?”

என்று கேட்கிறார்கள்.

பிறகு சாளரம் வழியாய்ப் பார்க்கிறார்கள். அவள் மிக அழகாகப் படுத்திருக்கிறாள். இப்போது ;புற்றரவு அல்குல் புனமயிலே” என்கிறார்கள்.         ”வெளியில் உலவுகின்ற நாகம் மண்புழுதி படிந்தும், அழகிழந்தும் காணப்படும் அதுபோன்று இல்லாமல் புற்றிலே உள்ள நாகம் போல ஒளி பொருந்திய மேனியை உடையவளே! தன் நிலமான வனத்திலே உள்ள அழகான மயிலின் தோகை போன்ற அளகபாரத்தையும், மயிலைப் போல அழகான தோற்றத்தையும் உடையவளே! எழுந்து வா! உன் நடையழகைக் காட்டி எங்களை உயிர் தரிக்கப் பண்ணுவாயாக. தன் அழகு ஒளியாலே தண்டகாரணியத்தையே  சோபிக்கச் செய்த சீதாபிராட்டியைப் போல உன் ஒளியாலே எங்களுக்கு மகிழ்ச்சி தருவாயாக” என்றழைக்கிறார்கள்.

அவள், “மற்றெல்லாரும் வந்தார்களோ?” என்று கேட்கிறாள்.

”உன்னையே மிகவும் விரும்பிக் கொண்டிருக்கும் இவர்கள் உன் போன்று கண் உறங்குவார்களா? உனக்குத் தோழியாகவும் உறவினராயும் இவ்வூரில் இருப்பவர்கள் எல்லாரும் இங்கே உன் முற்றத்திற்கே வந்துவிட்டனர். உன்முற்றம் கண்ணனுக்குப் பிடித்த முற்றமன்றோ? அதனால் எமக்கும் பிடிக்கும்”

”சேஷியானவளுக்குப் ப்ராப்யமான முற்றம் சேஷபூதைக்கும் ப்ராப்யம்’ என்பது இங்கே வியாக்கியானம்.

”முற்றத் தூடுபுகுந்து நின்முகம் காட்டிப் புன்முறுவல் செய்து

சிற்றிலோடு எங்கள் சிந்தையும் கதைக்கக் கடவையோ?”

என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் வேண்டுவது குறிப்பிடத் தக்கது. சிற்றிலைத்தான் சிதைப்பாய்; எங்கள் சிந்தையையுமா சிதைக்கவேண்டும் எனும் நயம் இங்கே தெரிகிறது.

”சரி நீங்கள் இம்முற்றத்தில் புகுந்து செய்ய வேண்டியகாரியம் என்ன?” எனக் கேட்கிறாள்

”மேகத்தைப் போன்ற நிறத்தையும், கருணையையும் கொண்ட கண்ணனின் திரு நாமங்களைப் பாடுவோம்.” என்று சொல்லிப் பாடுகிறார்கள்.

அவள் அப்படியும் எழவில்லை.

”நாங்களெல்லாம் இப்படிப் பாடியும் நீ அசையாமல் பேசாமல் கிடக்கிறாயே? ஒருவேளை அவனின் கல்யாண குணங்களை எண்ணிக் கொண்டு மயங்கிக் கிடக்கிறாயோ?  நீ அவனுக்குச் செல்வப் பெண்டாட்டியானவள். அதாவது கிருஷ்ணனுக்கும் எங்களுக்கும் எல்லாச் செல்வமுமாய் இருக்கின்ற பெண்பிள்ளை போன்றவள். க்ருஷ்ணானுபவமான செல்வத்தைப் பெற்ற பெண்பிள்ளை நீ; உனக்கு விருப்பமான  கிருஷ்ணனைப் பெற்று விட்டாய்; நாங்கள் எங்களுக்கு விருப்பமான உன்னைப் பெற வில்லையே”

 

உள்ளே இருப்பவள்,

”இங்கே கிருஷ்ணன் இருக்கிறான்; நான் கிருஷ்ணானுபவம் பெற்றேன் என்று உங்களுக்கு யார் சொன்னது?’என்று கேட்கிறாள்.

பின் நீ எதற்காகத் தூங்கிக் கொண்டிருக்கிறாய்? எங்கள் கூக்குரலைக் கேட்ட பிறகும் இப்படி இருக்கலமா? காரணம் ஏதேனும் உண்டா? முன்பு ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்றுகொலோ?’ ‘தொண்டீரெல்லாம் வாரீர்’ என்றெல்லாம் அனுஸந்தித்தாயே; எழுந்து வா” என்கிறார்கள்.

இப்பாசுரத்தின் மூலம் முதலாழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் எழுப்பப் படுகிறார்.

குற்றம் ஒன்றும் இல்லாத கோவலர்கள் என்பது முதலாழ்வார்களே யாவர்.

பூதத்தாழ்வார் கடல் மல்லை எனும் மகாபலிபுரத்தில் தோன்றியவர். அங்கு சோலைகள் நிறைய இருக்குமாம். “கடிபொழில் சூழ் கடல் மல்லை” என்பார்கள். சோலையில் மயில்கள் குடிகொண்டிருக்கும். பாசுரத்தில் வரும் புனமயிலே என்பது இவர்க்குப் பொருந்தும்.

பொற்கொடியே——–பூதத்தாழ்வார் தன்னையே கொடியாகக் கூறுவார்.

‘கோல்தேடியோடும் கொழுந்து அதே போன்றதே மால் தேடி ஓடும் மனம்’ என்பது அவர் பாசுரம்.

”உலகேழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் ஏத்தும் நெஞ்சு’ என்று இப்பாசுரத்தில் வரும் முகில் வண்ணனைப் பாடியவர் பூதத்தாழ்வார்.

’சுற்றத்துத் தோழிமார்’ என்பது பொய்கையாழ்வாரும், பேயாழ்வாரும் பூதத்தாழ்வாருக்குச் சுற்றம் என்றும், மற்றஆழ்வார்கள் அவருக்குத் தோழிமார் என்றும் பொருந்தும்.

எனவே இப்பதினோராம் பாசுரம் பூதத்தாழ்வாரை எழுப்பும்பாசுரம் ஆகும்.

Series Navigation
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *